தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 september 2014

சீனத் தலையீடுகளை முறியடிக்க வியூகம் வகுக்கிறதா இந்தியா?

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் கொழும்பு பயணத்தை அடுத்து, இலங்கையில் சீனாவின் செல்வாக்கு உயர்ந்திருப்பதை, இந்தியா அதிருப்தியுடன் நோக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த புதன்கிழமை கொழும்பில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய இந்திய தூதுவர் யஸ்வந்த் குமார், சின்ஹா, இலங்கையில் இந்தியா மேற்கொள்ளும் திட்டங்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவதில்லை என்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக வடக்கே இந்திய பயணிகளுக்கு உள்ளூர் ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் வழங்கவில்லை என்று தெரிவித்தார்.
சாதாரணமாக அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் பரவாயில்லை. கிழக்கு குறித்தே இங்கு முக்கியமாக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். கிழக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
கிழக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக இந்திய தூதுவர் குறிப்பிட்டது, சீனாவைத் தான்.
அண்மையில் சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் கொழும்பு வந்திருந்த போது, இலங்கையுடன் கிட்டத்தட்ட 5 பில்லியன் டொலர் வர்த்தகத்துக்கான உடன்பாடு செய்து கொள்ளப்பட்டது.
இதில் பெரும்பாலானவை சீனாவின் கடன்கள் தான் கொழும்பு துறைமுக நகரத்தின் கட்டுமானத்துக்காக மட்டும், சீனா 1.4 பில்லியன் டொலரை செலவிடவுள்ளது.
ஆனால் இந்தியாவை பொறுத்தவரையில் பெரும்பாலும் தமது உதவிகள் நன்கொடைகளாகவே உள்ளன என்றும், கடன்கள் அல்ல என்பதையும் இந்திய தூதுவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல விடயங்களில் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்ற நிலையில், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நெருக்கம் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக, பாதுகாப்பு விடயத்தில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கம் இந்தியாவை கவலை கொள்ள வைத்திருக்கிறது.
இம்மாத நடுப்பகுதியில் சீன அதிபர் கொழும்பு வந்திருந்த போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளையும், ஒத்துழைப்புகளையும் மேலும் விரிவாக்கிக் கொள்வது குறித்த இணக்கப்பாடு காணப்பட்டது.
அதில் முக்கியமானது, உதவி அல்லது பிரதி அமைச்சர் மட்டத்திலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்து சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்பாடு ஆகும். இந்த இணக்கப்பாடு அமையவே கடந்த வாரம் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச சீனாவுக்குச் சென்றிருந்தார்.
கடந்த செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் சீனாவின் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் உதவித் தலைவர் ஜெனரல் சூ குய்லியாங்குடன் கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
ஜெனரல் சூ குய்லியாங் கடந்த மே மாத நடுப்பகுதியில் தான் இலங்கைக்குப் பயணம் மேற் கொண்டு இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளுக்கு புதிய அடிதளத்தை இட்டுச் சென்றிருந்தார்.
குறிப்பாக, சீனாவின் வான் பொறியியல் ஏற்றுமதி இறக்குமதி கூட்டுத்தாபனத்தின் சார்பில் திருகோணமலையில் விமான பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான திட்டம் இவருடையது தான்.
இவரது வருகைக்கு பின்னர் எட்டப்பட்ட உடன்பாட்டுக்குப் பின்னரேயே விமான பராமரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் அதற்குள் இந்தியா விழித்துக் கொண்டது.
புதுடில்லி சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் திருகோணமலையில் சீன நிறுவனத்தின் விமான பராமரிப்பு நிலையத்தை அமைக்க இடமளிக்கப்பட்டுள்ளதா? என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தியாவின் நலனுக்கு விரோதமாக துறைமுகங்களையோ விமான நிலையங்களையோ வேறு நாடுகளுக்கு வழங்க மாட்டோம் என்று 1987ம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன் கடிதமூலம் உறுதியளித்திருந்தார்.
அந்தக் கடிதம் இந்திய – இலங்கை உடன்பாட்டின் ஒரு அங்கமாகவே இருக்கிறது அதை மீறுவது இலங்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உன்று இராஜதந்திரிகள் பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்நிலையில் சீனாவின் வான் பராமரிப்பு நிலையத்தை திருகோணமலை தவிர வேறு எங்காவது அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பெரும்பாலும் ஹிங்குராகொடவில் இது அமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதேவேளை சீன ஜனாதிபதியின் வருகையின் போது இலங்கை கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை வழங்குவது குறித்தும் இணக்கம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அது மட்டுமின்றி எவ் 17 ரகத்தைச் சேர்ந்த தண்டர்போல்ட் எனப்படும் ஜெட் போர் விமானங்களை வழங்குவதற்கும் சீனா விருப்பம் கொண்டுள்ளது.
அதாவது இலங்கையை முற்றிலும் சீனாவில் தங்கியுள்ள நாடாக மாற்றுவதே அந்த நாட்டின் திட்டமாகும்.
கடற்படை விமானப்படை இராணுவம் என்று எல்லாவற்றிலும் சீனாவின் ஆயுத பாடங்களை புகுத்துவதன் மூலம் நிரந்தரமாகவே இலங்கையை தன் மீது சார்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்த முனைகிறது சீனா.
அதற்கு கோத்தாபய ராஜபக்சவின் அண்மைய பயணம், முக்கியமானதொரு அடிக்கல்லாகும்.
சீனாவின் இந்தத் திட்டம் நிறைவேறினால், சீனாவுக்கு இரண்டு வித இலாபம் கிடைக்கும்.
ஒன்று வர்த்தக ரீதியானது அடுத்தது பாதுகாப்பு ரீதியானது. இந்த இரண்டு நலன்களுமே இந்தியாவுக்கு ஆபத்தானது.
இவ்வாறாக சீனாவின் வியூகத்துக்குள் இலங்கை சிக்கிக் கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசல்கள் அதிகமாகி வருகின்றன.
சீனாவின் தலையீடுகளால் மட்டுமின்றி 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதற்கும் இலங்கை தவறியுள்ளது.
நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கடந்த நான்கு மாதங்களில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடமும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடமும் இதுபற்றி பேசப்பட்டுள்ளது.
ஆனால் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை. இந்தநிலையில் நியூயோர்க்கில் ஐ,நா பொதுசபைக் கூட்டத்திலன் பக்க நிகழ்வாக நடக்கும் சந்திப்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடியால் அழுத்தம் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே பெரும்பாலும் சத்தமேயில்லாமல் கொழும்பில் இருந்து ஒருவர் கடந்த வாரம் புதுடில்லி சென்றிருந்தார்.
அவர் தான் முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட. அவர் ஜனாதிபதி ராஜபக்சவின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான உறவுகளில் நெருக்கடி ஏற்படுகின்ற போது அவற்றை தீர்க்கும் மறைமுக பணிகளில் ஈடுபட்டு வருபவர்தான் மிலிந்த மொறகொட.
இவருக்கு இரு நாடுகளிலும் செல்வாக்குள்ள நண்பர்கள் அதிகம் உள்ளனர். இரு நாடுகளிலும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குகின்ற சிந்தனையாளர் குழாம் மத்தியில் இவருக்கு தொடர்புகள் உள்ளன.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் புதுடில்லி சென்ற மிலிந்த மொறகொட கடந்த 22ம் திகதி இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்குமார் டோவலை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் இந்தியாவின் வெளிவிவகார செயலர் சுஜாதா சிங் ஆகியோரும் இவரது சந்திப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். எனினும் இந்த சந்திப்புகள் நடந்தனவா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மிலிந்த மொறகொட புதுடில்லி சென்றிருந்தது சாதாரண விடயமல்ல. அதுவும் கோத்தாபய ராஜபக்ச சீனா சென்றிருந்த போதே இவர் புதுடில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
கோத்தபாயவின் சீன பயணம் பற்றிய தகவலை அரசாங்கம் அதிகார பூர்வமாக வெளியிடவில்லை.
சீன செய்தி நிறுவனங்கள் தான் அதை பகிரங்கப்படுத்தின. கோத்தபாய சீனா சென்றிருந்த நிலையில் சீனாவுடனான உறவுகள் நெருக்கமடைந்துள்ள நிலையில் மிலிந்த மொறகொட புதுடில்லிக்கு மேற்கொண்ட பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் மிலிந்த மொறகொட புதுடில்லி சென்று அப்போதைய இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை சந்தித்தார்.
அதற்கு பின்னர் தான் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்க மறுத்தது இந்தியா.
தற்போது மிலிந்த மொறகொடவை புதுடில்லிக்கு அழைத்திருப்பது இந்தியாதான். எனவே சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நெருக்கத்தை உடைப்பதற்காக இவர் பயன்படுத்தப்படவுள்ளாரா? அல்லது வேறேதும் திட்டத்துக்காக அழைக்கப்பட்டுள்ளாரா? என்று தெரியவில்லை.
ஆனால் இலங்கையின் சீன தலையீடுகளை இந்தியா விரும்பாதுள்ள நிலையில் மிலிந்த மொறகொடவை பயன்படுத்தி தனக்கு சாதகமான நிலையை உருவாக்க இந்தியா முனையலாம் ஆனால் அது எந்தளவுக்கு பயனளிக்கும் என்று தெரியவில்லை.

(ஹரிகரன்)
http://www.tamilwin.com/show-RUmsyJRcKVhs6.html

Geen opmerkingen:

Een reactie posten