தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 september 2014

கைதி உடையில் வசதிகளற்ற சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா!



சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 23ஆம் அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 7402 என்ற கைதி எண் வழங்கப்பட்டது
பெண்கள் சிறைக்கு அருகில் இவரது அறை இருப்பதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு படுக்கை, மின்விசிறி மட்டும் கொண்ட அறையில் தனி கழிவறை வசதிகள் அதற்குள் உள்ளன.
குற்றவாளிகளுக்கான வெள்ளை உடை அவருக்கும் அளிக்கப்பட்டது.
அவருக்கு இரவு உணவாக ராகி உருண்டை, 200 கிராம் சாதம் மற்றும் 2 சப்பாத்திகள் என்பன வழங்கப்பட்டன. ஆனால் அது வேண்டாம் என்று கூறி பழங்களை வாங்கி அவர் சாப்பிட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுடன் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு முறையே கைதி எண் 7403, 7404, 7405 ஆகியன வழங்கப்பட்டுள்ளன.
மென்பொருள் பொறியாளர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சுபா என்பவருக்கு ஒதுக்கப்பட்ட சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டனர்.
சுதாகரனுக்கு முன்னாள் கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் ஜனார்தன் ரெட்டி இருக்கும் அறைக்கு அடுத்த விஐபி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் உயர் பாதுகாப்பு மத்திய சிறையான பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் மிக முக்கியமானவர்கள் அறையில் அடைக்கப்பட்டுள்ள முதல் கைதி ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு எப்போது பிணை கிடைக்கும்? பல்வேறு சட்ட ஊகங்கள்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அளிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு எப்போது பிணை கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவருக்கு முன்பாக ஊழல் தடுப்பு சட்டத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்திய தேசிய லோக் தளம் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆகியோரின் வழக்குகள் இதற்கு எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகின்றன.
முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானாவின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார்.
1999-ம் ஆண்டில் முதல்வராக இருந்தபோது ஹரியானாவின் 18 மாவட்ட பள்ளிகளுக்காக 3206 பேர் ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் ஊழல் நடந்ததாக கடந்த ஜூன் 2003-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜனவரி 22-ம் திகதி தண்டனை வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பில் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன் அஜய் சிங் சவுதாலா, இரண்டு அதிகாரிகள் உட்பட 55 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்களில் ஓம் பிரகாஷ் சவுதாலா, மகன் அஜய் சிங், ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 10 பேருக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பு வெளியான நாளில் கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் சவுதாலாவும் அவரது மகன் அஜய் சிங்கும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அந்த வழக்கில் இருவருக்கும் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வந்தது.
கடைசியாக கடந்த ஜூன் 3-ம் திகதி சகோதரரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.
இது பிறகு சவுதாலாவின் உடல்நிலையைக் கருதி செப்டம்பர் 26-ம் திகதி வரை பிணை நீட்டிக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 25-ம் திகதி ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
இதையடுத்து அக்டோபர் 17-ம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது.
பிஹார் முதல்வராக இருந்தபோது 900 கோடி ரூபா கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிக்கிய லல்லு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் மாநில சிபிஐ நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் திகதி ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் அவர் பிணை கோரியபோது மறுக்கப்பட்டது.
இதே வழக்கு தொடர்பாக மற்றொருவருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. அதன் அடிப்படையில் லாலு பிரசாத்தும் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்தார்.
அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2013 டிசம்பரில் அவருக்கு பிணை வழங்கியது.
இந்தநிலையில் சரா விடுமுறைக்குப் பிறகு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா பிணைக்கோரி மனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
அவருக்கு பிணை கிடைக்கவில்லை எனில் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்வார்.
இந்த நடைமுறைகளின்படி ஜாமீன் கிடைக்க சுமார் ஒரு மாதம் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
இடையில் தசரா விடுமுறை வருவதே தாமதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் என்று சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சொத்து வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா நேற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் உள்ள பெண் கைதிகள் தங்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அதிமுக வழக்கறிஞர்கள், சிறை அதிகாரிகளைச் சந்தித்து ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோய், இதய கோளாறு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவே அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும் என்று கோரினர்.
அதனை நிராகரித்த சிறை அதிகாரிகள், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது. பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை அல்லது டாக்டர் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யலாம் என்று தெரிவித்தனர்.
சிறை அதிகாரிகளின் கருத்தை ஏற்க மறுத்த அதிமுக வழக்கறிஞர்கள், ஜெயலலிதாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது, எனவே தனியார் மருத்துவமனையில்தான் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து நாராயண இருதாலயா மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்தனர்.
ஆனால், அந்த மருத்துவமனையில் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பிணை பெற்றுள்ள மதானி உள்ளதால் பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படும் என்று கருதி வேறு மருத்துவமனையில் சேர்ப்பது குறித்து பரிசீலித்தனர்.
இறுதியில் ஜெய தேவா மருத்துவமனையில் நேற்றிரவு 9 மணிக்கு ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.
இதேவேளை தீர்ப்பு வெளியாகி சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் நீதிமன்ற வளாகத்தைவிட்டு வெளியேற மறுத்து அங்கேயே இருந்தனர்.
பொலிஸார் வெளியேற அறிவுறுத்தியபோது, ‘எங்களையும் அம்மா இருக்கும் சிறையில் அடையுங்கள். நாங்கள் இந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம்’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னரே அமைச்சர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

Geen opmerkingen:

Een reactie posten