சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்துள்ளதுடன் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதா குற்றவாளி என தீரப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு வழங்கப்பட்டிருந்த இஸட் பிரிவு பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கோயில் அருகே உள்ள கடைகளை மூடுமாறு அ.தி.மு.க.வினர் அச்சுறுத்தியுள்ளனர். அதனையடுத்து அங்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
கோவையில் அவினாசி சாலையில் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க.வி.னர் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். அங்கு சில கார்களின் கண்ணாடியை உடைத்து வாகனங்களை சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மதுரையில் பதற்றம் கூடுதலாக இருப்பதாகவும் அ.தி.மு.க.வினர் கடைகள் மீது கல்வீச்சு தாக்குதலை நடத்தி வன்முறையில் ஈடுப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மதுரையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதுடன் மதுரையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மதுரை மீனாட்சி கோயில் அருகே உள்ள கடைகள் மூடப்பட்டுவிட்டன. தஞ்சாவூர், நாகப்பட்டிணம், கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர் மாவட்டங்களில் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டு வருவதுடன் தெற்கு மாவட்டங்களிலும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
|
Geen opmerkingen:
Een reactie posten