தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 29 september 2014

தும்பங்கேணி மக்களின் குறைகள் மிக விரைவில் நிவர்த்தி செய்து தரப்படும்- புலமை பரீட்சையில் சித்தி: மாணவனுக்கு கௌரவிப்பு!

பாலித ரங்கே பண்டாரவின் ஹொட்டலுக்கு துப்பாக்கிச் சூடு
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 04:05.11 AM GMT ]
ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் ஹொட்டல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
புத்தளம் கருவெலகஸ்வெவ பிரதேசத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
குறித்த ஹொட்டல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் காரணமாக ஹொட்டலின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இதுவரை சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்கள் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
கருவெலகஸ்வெவ பிரதேச சபைத் தலைவரைத் தாக்கியதாக பாலித ரங்கே பண்டார கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhw3.html

தும்பங்கேணி மக்களின் குறைகள் மிக விரைவில் நிவர்த்தி செய்து தரப்படும்- புலமை பரீட்சையில் சித்தி: மாணவனுக்கு கௌரவிப்பு
[ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2014, 04:57.01 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பிரதேசத்தின் தும்பங்கேணி இளைஞர் விவசாயத் திட்டப் பகுதிக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் விஜயம் செய்து பொது மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர் சங்காரவேல் அவர்கள் பெயரில் இயங்கி வரும் சனசமூக நிலையத்தை இயக்க தளபாடங்கள் மற்றும் நூல்கள் ஏனைய உதவிகளை வழங்குமாறும், நாவில் கல்வி அமைப்பு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நடாத்தும் பிரத்தியேக வகுப்புக்கு கல்வி உபகரண உதவிகளை தருமாறும் கேட்டுகொண்டுள்ளனர்.
இங்குள்ள பாலர் பாடசாலையில் ஆசிரியர்கள் கடந்த பல காலமாக ஊதியமின்றி கஷ்டத்தில் கல்வி ஊட்டுவதாகவும், இவ்விரு ஆசிரியர்களுக்கும் மாதாந்த ஊதியம் வழங்க ஏற்பாடு செய்து தருமாறும் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
அத்தோடு மீளக்குடியமர்ந்த மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதுடன், பல குடும்பங்கள் இன்றும் மீளக்குடியேற முடியாமல் உள்ளதால் அவர்களுக்கான மீளக்குடியமர்தல் உதவியை வழங்கி மீளக்குடியேற்ற உதவுமாறும் மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
மேலும் தமது ஆலயத்தின் புனரமைப்புக்கு நிதி உதவியும், பண்ணிசைக்காக இசைக் கருவிகளும் ,ஆலய கும்பாபிஷேகத்தை இலவசமாக நடாத்தி தருமாறும் வேண்டியதுடன் ,மேலும் தமது கிராம நிலை சார்பாக பல விடயங்களை அவரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் சங்காரவேல் சனசமூக நிலையத்தினை அவரது புதல்வர் மூலம் உதவி பெற்று வளம்படுத்தி தருவதாகவும், நாவில் கல்வி நிலையத்துக்கும் சிலரிடம் கதைத்து உதவி வழங்குவதாகவும், மீளக்குடியேறாத மக்களை மீளக்குடியேற்றும் வகையில் இயன்ற உதவிகளை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியதுடன், தற்காலிக கொட்டில் அமைத்தல் மற்றும் விதை பசளை கம்பி போன்றவைகளை வழங்கச் செய்து விவசாய பண்ணை செயற்பாட்டை ஊக்குவிப்பதாகவும் கூறியதுடன், கூட்டுப்பிரார்த்தனைக்கு இசைக்கருவிகள் வழங்கவும், ஆலயத்திற்கு 2015ம் ஆண்டு பன்முக நிதி மூலம் நிதி வழங்கவும், ஆலய கும்பாபிடேகத்தை இயன்றவரை குறைந்த செலவில் மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாவும் உறுதியளித்தார்.
இவரது சந்திப்பு தங்களுக்கு பெரும் விடயங்களை பரிமாறவும் அவற்றுக்கான உதவிகளை பெறவும் வழிவகுத்தாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதன்போது கிழக்கு இந்து ஒன்றியச் செயலாளர் கதிர்பாரதிதாசன், ஆன்மீக தொண்டரும், ஆயுள்வேத வைத்தியருமான எஸ்.விஸ்வலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு
தற்போது வெளியாகிய ஐந்தாம் தர புலமைப் பரீட்சைகள் முடிவில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்கேணி ஸ்ரீ கண்ணகி வித்தியாலயத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்களின் பின் முதல் தடவையாக ஒரு மாணவர் சித்தி பெற்றுள்ளார்.
இப்பாடசாலையானது 1962ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 52 வருடங்களின் பின் முதல் தடவையாக பு.மிருசனன் 162 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் வணக்கத்துக்குரிய ஸ்ரீ.வாலராஜ் தெரிவித்தார்.
சித்தியடைந்த மாணவனுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் திங்கட்கிழமை தனது அலுவகத்தில் வைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவித்தார்.
அத்தோடு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முதல் தடவையாக சித்தி பெற வைத்தமைக்காக பாடசாலை அதிபர் வணக்கத்துக்குரிய ஸ்ரீ.வாலராஜிக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தும், கற்பித்த ஆசிரியரான திருமதி.பி.ராஜரெட்ணத்தையும் பாராட்டினார்.
இப்பாடசாலையில் இருந்து ஐந்து மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.
சித்தி பெற்ற மாணவனுக்கு துவிச்சக்கரவண்டி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவேன் என பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.
அத்தோடு ஏனைய மாணவர்கள் மற்றும் சித்தி பெற்ற மாணவனின் பெற்றோர்களையும் பாராட்டினார்.
இதன் போது பாடசாலை அதிபர் வணக்கத்துக்குரிய ஸ்ரீ.வாலராஜ், கற்பித்த ஆசிரியரான திருமதி.பி.ராஜரெட்ணம், பிரதி அதிபர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJRdKVhw4.html

Geen opmerkingen:

Een reactie posten