தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 september 2014

அளுத்கம வன்முறை தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு (செய்தித்துளிகள்)
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 10:05.03 AM GMT ]
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 08 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.
குறித்த கையடக்கத் தொலைபேசி மீட்கப்பட்ட சிறை கூடத்தில் 12 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
சிறைச்சாலைக்குள் இடம்பெறும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து தொடர்ந்தும் சோதனை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பஸ்ஸிலிருந்து பாய்ந்த பெண் மரணம்
தனியார் பஸ்ஸிலிருந்து விழுந்த பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாவனெல்லை பகுதியிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற பஸ்ஸில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸை நிறுத்துவதற்கு முன்பாகவே குறித்த பெண் இறங்க முற்பட்டுள்ளதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபருக்கு பிணை
துப்பாக்கியுடன் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குள் பிரவேசித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பிரதான நீதவான் கியான் பிலப்பிட்டிய சந்தேக நபருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார்.
சந்தேக நபரை 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் கூறினார்.
அத்துடன் சந்தேக நபருக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிக்கான அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்யுமாறும் அவர் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு அடுத்த நவம்பர் மாதம் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjvz.html
ஊவா தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது: ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 10:49.54 AM GMT ]
எதிர்க்கட்சியினருக்கு விரைவில் அதிஷ்டம் கிடைக்காது எனவும் ஒரு நாள் அவர்களுக்கு அந்த அதிஷ்டம் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஊவா மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச அதிகாரிகளை அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கின்றோம். சில இடங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் வன்முறை சம்பவங்கள் குறித்து பொலிஸார் ஊடாக விசாரணை நடத்திய போது அவை பொய்யான குற்றச்சாட்டுக்கள் என கண்டறியப்பட்டது.
ஊவா மாகாண சபைத் தேர்தல் வெற்றிக்காக அரசாங்கம் போராட வேண்டியதில்லை. ஏற்கனவே அரசாங்கம் தேர்தலில் வென்றாகிவிட்டது.
எதிர்க்கட்சிகள் உண்மையை பேச வேண்டும். ஒரு நாள் அவர்கள் வெற்றியை ருசிப்பார்கள் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjv0.html
யாழில் முதலமைச்சரை சந்தித்த ஜேர்மன் தூதுவர்
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 11:11.02 AM GMT ]
இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜூர்கன் மொர்காட் ஒருநாள் விஜயமாக இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் இன்று பிற்பகல் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வடமாகாண சபையின் செயற்பாடுகள் குறித்தும் அபிவிருத்தி தொடர்பாகவும் இருவரும் விரிவாகக் கலந்துரையாடியதாகத்  தெரிவிக்கப்படுகிறது.
ஜேர்மன் தூதுவர் யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்வார் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் தவிர்க்கமுடியாத காரணங்களால் அவர் இன்றே யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjv1.html
அளுத்கம வன்முறை தொடர்பான மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன
[ வெள்ளிக்கிழமை, 05 செப்ரெம்பர் 2014, 11:14.36 AM GMT ]
அளுத்கம பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வன்முறை நிலைமையின் போது ஏற்பட்ட சில சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு அடிப்படை உரிமை மனுக்கள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
கே. ஸ்ரீபவன், புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.
வழக்கில், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஷவிந்த பெர்ணான்டோ,
இரண்டு மனுக்களில் ஒரு அமைப்பு சம்பந்தமாக கூறப்பட்டிருந்தாலும் அந்த அமைப்பிடம் மனுதார்கள் என்ன கோருகின்றனர் என்பது குறிப்பிடப்படவில்லை எனக் கூறினார்.
எவ்வாறாயினும் எந்த அமைப்புக்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய அத்தியாவசியமில்லை என மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா குறிப்பிட்டார்.
அளுத்கம பிரதேசத்தில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட வன்முறையின் போது தமது வீடுகளுக்கு தீ மூட்டப்படுவதை பொலிஸார் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது குறித்து தாம் கவலையடைவதாக மனுதார்கள் கூறியுள்ளனர்.
இந்த இரண்டு மனுக்களும் அடுத்த மாதம் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjv2.html

Geen opmerkingen:

Een reactie posten