[ valampurii.com ]
எல்லா மாணாக்கர்களும் ஒரே வகைமைப்பாட்டை கொண்டவர்கள் என்றால் தண்டித்தல் என்ற பேச்சுக்கு இடமில்லாம் இருந்திருக்கும்.
ஆனால் மாணவர்கள் தனி ஆள் வேறுபாடுகளைக் கொண்டவர்கள். எனவே ஒரு வகுப்பறையை அல்லது ஒரு பாடசாலையை எடுத்துக் கொண்டால் வேறுபட்ட மாணவர்கள் இருக்கவே செய்வர்.
இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் மாணவர்களை முதல் மாணாக்கர், இடை மாணாக்கர், கடை மாணாக்கர் என மூன்று வகைப்படுத்தினர்.
கல்வியில் திறமையிருந்தும் ஒழுக்கத்தில் - கட்டுப்பாட்டில் எல்லை மீறியவர்கள் கடை மாணாக்கர் என்ற வகுதிக்குள் அடக்கப்பட்டனர்.
கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குபவர்கள் முதல் மாணாக்கர். ஒழுக்கத்தில் சிறந்தும் கல்வியிலும் சாதாரண நிலையில் இருக்கக் கூடிய மாணாக்கர்கள் இடை மாணாக்கர்கள் எனப்பட்டனர்.
இந்த மூன்றுநிலை மாணவர்கள் இருக்கின்ற போதிலும் வழிகாட்டல், கற்பித்தல் என்பவற்றின் மூலமாக இடை மாணாக்கரை முதல் மாணாக்கராக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களை சார்ந்ததாகும்.
இதேபோல் கடை மாணாக்கரை இடை மாணாக்கராக கொண்டுவருவதும் ஆசிரியர்களின் கடமை.
இந்தக் கடமையை செய்வதற்காகவே அந்தக் காலத்தில் அதிபர், ஆசிரியர்கள் பிரம்பைக் கையில் வைத்திருந்தனர். அடியாமல் படியாது என்ற தத்துவம் யதார்த்தத்திற்குப் பெரிதும் பொருந்தியது.
இவ்வாறு ஆசிரியரிடம் அடிவேண்டிக் கற்ற மாணவர்கள் தங்களை அடித்துக் கற்பித்த ஆசிரியர்களை தம் வாழ்நாளில் மறந்ததே இல்லை.
மாணவர்களை ஆசிரியர்கள் தண்டிப்பதென்பது அவர்களை திருத்துவதற்கு மட்டுமல்ல, திருத்தமான மாணவர்கள் தவறான பாதைக்குச் செல்லக்கூடாதென்பதற்காகவுமே தண்டனை வழங்கப்பட்டதென்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.
அன்றைய ஆசிரியத்துவம் இன்று மருந்திற்கும் கிடையாது. ஆசிரியர் அல்லது அதிபர் தங்களை எந்த வகையிலும் தண்டிக்க முடியாது என்ற தகவல் மாணவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
தாம் எவ்வளவு மோசமாக நடந்தாலும் தங்கள் மீது ஒழுகாற்று நடவடிக்கை எடுக்க முடியாதென்பதும், அவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டால் எடுத்தவர் பாடசாலையிலிருந்து இடமாற்றப்படுவார் என்பதும் மாணவர்களுக்கு நன்கு தெரியும்.
இத்தகையதொரு நிலைமை காரணமாக எங்கள் மாணவர்களின் ஒழுக்கம், அவர்களின் நடைமுறைகள் கடுமையாகப் பிறழ்வடைகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
எனவே மேற்குலகச் சட்டதிட்டங்களை அத்தியாயம் பிசகாமல் அப்படியே இங்கு நடைமுறைப்படுத்தும் போது அதன் விளைவு, ஆசிரிய - மாணவர் உறவை கடுமையாக பாதிப்பதுடன், பென்சன் வரை அமைதியாக இருந்து படிப்பிப்பது மற்றும்படி மெளனம் கலக நாஸ்தி என்ற தத்துவத்தைக் கடைப்பிடிப்பது என்ற முடிவை ஒட்டுமொத்த ஆசிரியர்களும் எடுத்து விட்டனர்.
இதன் எதிர்விளைவை இன்னும் ஒரு சில வருடங்களில் நம் மண் அனுபவிக்கப் போகின்றது என்ற எதிர்வு கூறலை இவ்விடத்தில் பதிவு செய்வது நம் கடமை.
அதே நேரம் மாணவர்களைத் தண்டித்தல் என்பது தடுக்கப்பட்டால், மாணவர்கள் மீது கடுமையான ஒழுகாற்று நடவடிக்கை எடுத்து அவர்களை சீர்திருத்தப் பள்ளிகளில் சேர்த்தல் என்ற திட்டத்தை கொண்டு வருவதும் அதனைக் கடுமையாக அமுல்படுத்துவதும் அவசியம். அப்போவதாவது மாணவர்கள் தங்களை சுயகட்டுப்பாட்டுக்கு உட்படுத்துவர்.
இதைவிடுத்து மாணவர்கள் என்றால் எதுவும் செய்யலாம் என்று உரிமை பேணுவோர் நினைத்தால், நிலைமை படுமோசமாகும் என்பது சத்தியம்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkt3.html
Geen opmerkingen:
Een reactie posten