தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 september 2014

முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் காரசாரம்

முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
இன்று மாலை 3மணிக்கு ஆரம்பமாகிய இக்கூட்டம் 7.30 மணியையும் தாண்டி காரசாரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்தக் கூட்டத்தில் இணைத்தலைமையான றிசாத் பதியுதீன், முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஆகியோரது தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அத்துமீறிய குடியேற்றம்,காணி அபகரிப்பு போன்ற பல விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும், எதிர்க் கட்சியினருக்கும் இடையே கடுமையான விவாதம் இடம்பெற்று கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்கு வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை பின்வருமாறு,
இணைத் தலைவராக முல்லைத்தீவில் நான் பங்கு பற்றும் முதற் கூட்டமிது. முன்னர் எமது கட்சியானது முல்லைத்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்  பங்குபற்றாமல் இருந்தமை உண்மைதான். என்றாலும் தற்பொழுது பல காரணங்களால் இங்கு பங்குபற்ற முன் வந்துள்ளோம்.
சட்டத்திற்குப் புறம்பான பல நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டு, அரசவளங்களைப் பெருவாரியாகப் பாவித்து, ஆளுநரைத் தமது தேர்தல் கூட்டங்களில் தம் சார்பாகப் பேச வைத்து, இராணுவப் பயமுறுத்தல்களை ஏற்படுத்தி அவற்றின் மத்தியில்த் தான் வடமாகாண சபைத் தேர்தல் சென்ற செப்ரம்பர் மாதம் நடத்தப்பட்டது.
அப்படியிருந்தும் 38 பிரதிநிதிகளில் எம்மவர்கள் 30 பேர் மிகப் பெருவாரியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனவே மகிந்த சிந்தனை உள்ளடங்கிய அரசாங்கக் கொள்கைகளை எமது மக்கள் நிராகரித்து எமது கூட்டமைப்பின் கொள்கைகளையே வடமாகாணத்தைப் பொறுத்த வரையில் ஏற்றுக் கொண்டார்கள் என்பதில் சந்தேகம் எதுவும் எழத்தேவையில்லை.
ஆனால் தேர்தலின் பின்னர் ஒரு சில வாரங்களினுள் மாகாண மக்கள் நலம் கருதாது ஆளும் கட்சி நலன் கருதியும் தனிப்பட்ட அமைச்சர்கள் நலன் கருதியும் நடவடிக்கைகள் எடுத்துச் செல்லப்படுவது எம்மால் புரிந்து கொள்ளப்பட்டது.
மத்திய அரசாங்க ஆளும் கட்சி தாம் தருவதை மாகாண மக்கள் ஏற்றே தீரவேண்டும் என்ற பாணியில்த் தான் இங்கு நடவடிக்கைகள் எடுத்துச் செல்லப்படுவதை அவதானித்தோம்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இணைத் தலைவராக தலைமை தாங்க வேண்டும் என்று ஜனாதிபதி அவர்களால் அவரின் 18.11.2013ந் திகதி கொண்ட கடிதத்தால் நான் கேட்கப்பட்டிருந்தேன்.
அக் கடிதத்தின் படி வருங்காலம் சம்பந்தமான மகிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்தவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறி என்னை அதனை நடைமுறைப்படுத்த உதவும் வகையில் இணைத் தலைவராக வேண்டும் என்று கேட்கப்பட்டிருந்தேன்.
மகிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு எதுவும் எமக்கில்லை. அச்சிந்தனையை முன் வைத்த கட்சிகளைத் தான் நாங்கள் தேர்தலில்  முறியடித்திருந்தோம்.
எம்மைப் பொறுத்த வரையில் எமது மக்களுக்கு ஏற்ற புதிய சிந்தனைகளையே நாம் உருவாக்க வேண்டிய ஒரு கடப்பாடு எம் எல்லோரையும் சார்ந்துள்ளது என்பதை நாம் மறத்தலாகாது.
அப்படியிருந்துங் கூட அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைக்கலாம் என்ற எண்ணத்தில் இவ் வருடம் ஜனவரி மாதம் 2ந் திகதி மாண்புமிகு ஜனாதிபதி அவர்களைச் சென்று சந்தித்தேன். பல உறுதிப்பாடுகளை அவர் அத்தருணத்தில் தந்திருப்பினும் எதனையும் அவர் இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை.
அதற்குப் பதிலாக மக்களின் ஜனநாயக உரிமைகளை மதியாமல் தொடர்ந்து மத்திய அரசாங்கக் கட்டமைப்புக்களே வடமாகாண நிர்வாகப் பரிபாலனத்தைக் கொண்டு நடத்தி வருகின்றன.
இங்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகின்றேன். அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கென சில விடயங்களும், மத்திய அரசாங்கத்திற்கென சில விடயங்களும், இருவற்றிற்கும் பொதுவான சில விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் காரணத்தினால் தான் ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் கூட்டப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
ஆனால் ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் ஊடாக சட்டத்தால் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருக்குந் தனியான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் தன் வசப்படுத்த இடமளிக்க முடியாது.
அந்த அதிகாரங்கள் ஊடாக அவ்வந்த விடயங்கள் சம்பந்தமாக கொள்கைகள் வகுப்பதும் அவற்றை நெறிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதும் மாகாண சபைகளையே சாரும் என்பதை இத் தருணத்தில் கூறி வைக்கின்றேன்.
எதேச்சையாக அரசாங்கமும் அரசாங்க அமைச்சர்களும் நடக்கத் தலைப்பட்டால் மக்களால் புறந்தள்ளப்பட்டவர்கள் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர்களின் தோளில் ஏறிச் சவாரி செய்பவர்களாய் ஆகி விடுவர்.
இது ஜனநாயகத்தைப் பாதிக்கும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தொடர்ந்தும் எம்மக்கள் எதேச்சாதிகாரத்தின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்க வேண்டும் என்று எண்ணுவது மனிதாபிமானமற்றது மட்டுமல்லாமல் மடமையுமாகும்.
எமது மாகாண மக்கள் மற்றைய மாகாண மக்கள் போலல்ல. அவர்கள் போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டு வந்துள்ளார்கள். அவர்களின் பிரச்சினைகளும் தேவைகளும் விசேடமானதும் தனித்துவமானதுமாவன.
எல்லோருக்கும் ஒரே அளவுப் பாதணிகள் பொருந்தும் என்று நினைப்பது முறையாகாது என்பதை அன்று ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் காட்டினேன். இன்றும் கூறி வைக்கின்றேன்.
எல்லா மாகாணங்களையும் ஒரேவாறாக நடத்துவோம், ஒரேவாறான நிதிகளையே வழங்குவோம் என்று அரசாங்கம் கூறுவது கேலிக்கிடமாக அமைகின்றது. கிழக்கையும் எங்களையும் விட வேறெந்த மாகாண மக்கள் போரின் உக்கிரத்திற்கு கிட்டேயிருந்து தொடர்ந்து முகங்கொடுத்து வந்துள்ளார்கள்?
வட கிழக்கு மக்களின் விடிவிற்காகத்தான் 13வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதனை நாடு முழுவதும் வேண்டுமென்றே நடைமுறைப்படுத்தப் போய் எமக்குத் தந்துதவப் போன சமச்சீர்மையற்ற அதிகாரப் பகிர்வானது கவனத்திற்கு எடுக்கப்படாமல் போயுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் கீழ் சகல அதிகாரங்களையும் உள்ளிழுக்கவே நடவடிக்கைகள் மத்திய அரசாங்கத்தால் தற்பொழுது முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கு திவிநெகும சட்டம் ஒரு உதாரணம். மாகாண சபைகளின் சுதந்திரத்திலும் அதிகாரங்களிலும் கை வைப்பதாகவே மேற்படிச் சட்டம் அமைந்துள்ளது.
மத்திக்குக் கட்டுப்பட்டே மாகாணம் இயங்க வேண்டும் என்பதே மத்தியில் உள்ளோரின் மனோ நிலை. ஆனால் மத்தியில் உள்ளோர் மாகாணத் தேவைகளைப் புரிந்து கொண்டிருக்கின்றார்களா என்பது மலைக்க வைக்கும் ஒரு கேள்வியாக பரிணமித்துள்ளது.
எனினும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டை இவ்வாறான மத்தியில் உள்ளோரின் எண்ணத்தின் பிரதிபலிப்பாகவே நாங்கள் காண்கின்றோம். மத்திய அரசாங்கத்தின் கை மாகாண சபையின் நடவடிக்கைகளில் மேலோங்கும் வண்ணமாகவே ஜனாதிபதி செயலணி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றின் நடவடிக்கைகள் அமைந்திருந்தன. ஜனாதிபதி செயலணியை வாபஸ் பெற்ற பின்னர் கூட மத்தியின் கையை ஓங்குவிக்க சதிகள் நடைபெற்று வருகின்றன. 
மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் இணைத் தலைமையில் கருமம் ஆற்றும் போது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மட்டும் எவ்வாறு தனித்தலைமையில் நடத்தப்பட்டு வருகின்றன என்ற கேள்விக்கு இது வரையில் எனக்குப் பதில் கிடைக்கவில்லை.
அண்மையில் எமது இணைத்தலைவர் கௌரவ அமைச்சர் அவர்கள் வவுனியாவில், ஒட்டுசுட்டானில் எங்கெங்கே கூட்டம் நடத்தினார், என்ன செய்தார் என்பதெல்லாம் எமக்கு உடனுக்குடனேயே இணையத்தளத்தில் தந்துதவப்பட்டுள்ளது. தேர்தலில் வாக்களித்த பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்புக்களை சீரழிக்கும் வண்ணமாகவே இப்பேர்ப்பட்ட செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
மத்தி மகுடி ஊதுவதால் “கருடா! சௌக்கியமா” என்ற குரல் எமக்கு அவர்களிடம் இருந்து கேட்கின்றது. மத்திக்கும் மலைப்புக்கள் வந்து கொண்டிருப்பதை நாங்கள் மறக்கக்கூடாது. விழுந்திருப்பவன் எந்த நாளும் விழுந்திருப்பான் என்று எதிர் பார்ப்பது மடமையாகும்.
நடப்பவற்றை அவதானித்துத்தான் மாகாண ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் நாங்கள் முன்னர் பங்குபற்றாது இருந்து வந்தோம். எனினும் எமது மக்களின் ஆக்ஞையை நாம் புறக்கணிக்கக் கூடாது. இதனால் எமது முடிவை மாற்றி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கு பற்ற முன்வந்துள்ளோம்.
எவ்வளவு தான் மத்திய அரசாங்கம் தனது முகவர்களின் ஊடாக வடமாகாண மக்களின் நலன்களுக்கு எதிராக நடக்க எத்தனிப்பினும் அவற்றை முறியடிப்பதற்கே எம் மக்களின் எதிர் பார்ப்புக்களை வீணடிக்க விடாது நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். எனினும் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கம் நடந்து கொண்டால் அவற்றிற்கு உறுதுணையாக இயங்கவும் நாங்கள் பின் நிற்க மாட்டோம். எமது மக்களின் விமோசனமே எமக்கு முக்கியம்.
முதலாவது எம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்திற்குக் கொண்டு போகக் கூடாது நாமே பேசித் தீர்க்க வேண்டும் என்ற அரச தரப்புக் கோரிக்கை. ஏற்கனவே இது பற்றிப் பல இடங்களில் நாம் பேசியுள்ளோம்.
அதாவது நாம் சட்டத்திற்கு உட்பட்டே எமது உரிமைகளைப் பெற உத்தேசித்துள்ளோம். அரசாங்கம் பற்றி அதன் கடந்த கால நடவடிக்கைகள் பற்றி எந்த வித முன் தீர்மானங்களையும் மனதில் கொள்ளாது முதலில் எமது குறைகளை எமது அரசாங்கத்திடம் எடுத்துச் சொல்ல உத்தேசித்துள்ளோம்.
எமது நல்லெண்ணங்களை அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். அவர்கள் எம்முடன் சேர்ந்து எமக்கு அனுசரணையாக நடந்து கொண்டார்களானால் புதிய ஒரு உறவு முறையை நாங்கள் உருவாக்க முடியும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தோம். ஆனால் எம்மைப் புறக்கணிக்க எமது ஆதங்கங்களைப் புறக்கணிக்க அரசாங்கம் தீர்மானித்தால் வெளிநாடுகளுக்கு எமது குறைகளை எடுத்துச் செல்வதை விட எமக்கு வேறு வழியிருக்காது என்றும் சொல்லி வைத்திருந்தோம். 
“வேண்டியதைக் கேளுங்கள் தருவோம்” என்றார்கள். நாம் கேட்டோம். சட்டப்படி பிரதம செயலாளர் முதலமைச்சரின் கருத்தொருமிப்புடன் நியமிக்கப்பட வேண்டும். எனவே எம் இரு தரப்பாருக்கும் ஏற்புடைத்தான ஒருவரை பிரதம செயலாளராக நியமிக்கக் கோரினேன். “சரி” என்றார் ஜனாதிபதி. இது வரையில் நியமிக்கவில்லை.
அடுத்து இராணுவப் பின்புலமற்ற ஒருவரை ஆளுநர் ஆக்குங்கள் என்றோம். “சரி” என்றார் ஜனாதிபதி. ஆனால் முன்னிருந்த இராணுவ பின்புலம் உள்ள ஆளுநருக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார் ஜனாதிபதி.
எமது பாதிப்படைந்த மக்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டிய ஜனாதிபதி இராணுவப் பின்புலமுடைய ஆளுநருக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளார். ஆகவே எமது கோரிக்கைகளைப் புறக்கணித்து மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தை நிலை நாட்டுவதிலேயே அரசாங்கம் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றது.
அரசாங்கம் தமிழ்ப்பேசும் மக்களின் ஆதங்கங்களை, அபிலாஷைகளை, ஆசைகளை, எதிர்பார்ப்புக்களை அடியோடு சாய்த்துத் தமது கரவான நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மெருகூட்ட விழைவதை எடுத்துக் காட்டுகின்றன. இதற்கு எம்மவர்களில் சிலர் ஒத்தூதுவது வருத்தத்தைத் தருகின்றது.
எனவே தான் எமது அடுத்த கட்ட நடவடிக்கையாக நாம் சர்வதேச நாடுகளுடன் எமது பிரச்சினைகளை அலசி ஆராய வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளோம் என்பதை எடுத்துக் கூற விரும்புகின்றேன். நாம் வெளி நாடுகளுடன் பேச விழைவது உள்நாட்டில் எமது குரலுக்கு மதிப்பில்லை என்ற காரணத்தினாலே தான் என்பதை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வடமாகாணசபையானது வட மாகாண மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு சபை. அம்மாகாணத்தின் தேவைப்பாடுகளை அம்மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே அறிவர்.
எனவே அவர்களிடம் சகல அபிவிருத்தி நடவடிக்கைகளையுங் கொடுத்து விட்டு அரசாங்கம் எமக்கு எம் கடமைகளைச் செய்ய உற்சாகப்படுத்த வேண்டும். ஆனால் அதுவன்று இன்று நடப்பது.
தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வானது இரு தரப்பாரும் பேசித் தீர்மானிக்க வேண்டிய ஒரு விடயம். அதை எவ்வாறு ஜனாதிபதி தர முடியும்? அவ்வாறு அவரால் தர முடியும் என்றால் எம்மிடம் எதனை எதிர்பார்க்கின்றார்கள்?
“வந்து விழுங்கள் என் கால்களில்! நான் நினைத்தால் உங்களுக்கொரு தீர்வு தருவேன்” என்பது தானா அதன் அர்த்தம். இப்பேர்ப்பட்ட மத்திய அரசாங்கச் சிந்தனைப் பின்னணியே இன்று வரை எமது தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைப் பெற முடியாது செய்துள்ளது.
இதுவரையில் எந்த ஒரு அரசாங்கமும் தேசியப் பிரச்சினைக்கு எமது தீர்வு இதுவே என்று வெளிப்படையாகக் கூற முன்வரவில்லை. தமிழர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே. ஏன் வீணாகப் பிதற்றுகின்றார்கள் என்று தான் கூறியுள்ளார்கள்.  எனவே எமது சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால்த்தான் நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkv6.html

Geen opmerkingen:

Een reactie posten