நெடுந்தீவிலிருந்து குதிரைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப் போவதில்லை என வடமாகாண சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
1833ம் ஆண்டுக்கு முன்பு நெடுந்தீவில் இயங்கிய கச்சேரி - அலுவலர்களை நியமித்து அங்குள்ள குதிரைகளை பார்த்து பராமரித்து வந்தது. 1833ம் ஆண்டு அங்கு கச்சேரி மூடப்பட்ட பின்பு அங்குள்ள குதிரைகள் அநாதரவாக தரவைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வருகின்றன.
சப்த தீவுகளில் பெரும் தீவான நெடுந்தீவுக்கு பெருமை சேர்க்கும் அடையாளச் சின்னமாகவும் இலங்கையின் முக்கியமான மரபுரிமை சொத்துகளாகவும் வரலாற்று அடையாளங்களாகவும் சுற்றுலா பயணிகளை கவருவனவாகவும் இருக்கும் இக்குதிரைகளை பார்வையிட அண்மையில் நெடுந்தீவுக்கு, இலங்கை வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்றனர்.
நெடுந்தீவிலுள்ள குதிரைகளை பார்வையிட்டதோடு குதிரைகள் நீர் அருந்துவதற்கு வசதியாக குடிநீர்த்தொட்டிகளையும் அமைத்து குதிரைகள் மேய்வதற்கு குயின் ரவரினை அண்டிய காட்டுப்பிரதேசத்தில் நல்லின புற்களையும் உண்டாக்கப்போவதாகவும் அறிவித்தனர் இவை நல்ல விடயங்கள் தான்.
ஆனால் அண்மையில் மீண்டும் நெடுந்தீவு சென்ற வனவள ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் அங்குள்ள குதிரைகளின் இரத்த மாதிரியை பரிசோதித்த போது இவை நல்லின குதிரைகள் என நிரூபனமாகியது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடற்படையினர் தங்களின் சீ-காட் படகுகள் மூலம் இரு கட்டங்களாக ஆறு குதிரைகளை ஏற்றிக்கொண்டு வந்து யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ சுற்றுலா விடுதிகளில் விட்டுள்ளனர்.
கடற்படையின் இச்செயலால் கொதித்தெழுந்த நெடுந்தீவு மக்கள் இது விடயமாக என்னிடம் கடும் ஆட்சேபனையை தெரிவித்து முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் வடக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன சுற்றுசூழல் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஜங்கரநேசன் அவர்களின் கவனத்திற்கு நான் இவ்விடயத்தை கொண்டு வந்துள்ள நிலையில் கடற்படையின் இத்தகைய செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது என அவரும் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவிலிருந்து அனுமதி பெற்றோ அல்லது பெறாமலோ கொண்டு சென்ற குதிரைகளை அங்கேயே மீண்டும் கொண்டு சென்று விட வேண்டும் என கோருகின்றேன். அத்தோடு எதிர்வரும் 11ம் திகதி விவசாய அமைச்சரும் நானும் குதிரை கடத்தல் தொடர்பாக ஆராய்வதற்கும் இனிமேல் அங்கிருந்து குதிரைகளை கடத்த முற்படுவதை தடுப்பதற்கான ஏற்பாட்டை மேற்கொள்வதற்காகவும் நெடுந்தீவு செல்லவுள்ளோம் என விந்தன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUhpz.html
Geen opmerkingen:
Een reactie posten