தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 september 2014

முள் இருக்கைபோல் ஆகிவிட்ட முதலமைச்சர் ஆசனம்!

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருட்களின் விலைகள் குறையாது: செந்தில் தொண்டமான்
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 08:25.12 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சி அல்ல எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பொருட்களின் விலையேற்றத்தை குறைக்க முடியாது என ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பசறை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக அனைவரும் அரசாங்கத்தை குறைகூறுகின்றனர்.
தமக்கு வாக்களித்தால் பொருட்களின் விலைகளை குறைப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது.
எனினும், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் பொருட்களின் விலைகளை குறைப்பது சிரமமானது.
பசறை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சியிடம் உள்ளது.
பதுளை பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடம் உள்ளது.
பசறையில் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதா? எனவும் செந்தில் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUiqz.html
முள் இருக்கைபோல் ஆகிவிட்ட முதலமைச்சர் ஆசனம்!
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 08:40.48 AM GMT ]
வடமாகாண அரசு என்று பிரபல்யப்படுத்தப்பட்ட ஒரு அரசவை இலங்கையின் வடக்கே இருந்து வருகிறது. வடபகுதி மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட அரசென்ற அடையாளத்தை மட்டுமே அது கொண்டுள்ளது.
ஒரு வருடத்துக்கு முன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அந்த மாகாண அரசுக்கு முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சர் என்ற அந்தஸ்தோடு இருந்து வருகிறார்.
அவரின் தலைமையில் ஒரு சிறிய மந்திரி சபையும் உள்ளது. தமிழ் மக்களின் அங்கீகாரத்தை பெற்ற அந்த அரசு என்ன செய்கிறது? அதனால் எதை செய்ய முடிகிறது? என்பதெல்லாம் கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது.
வடமாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, திரு விக்னேஸ்வரன் அவர்களை மையப்படுத்தியதாகவே அதன் முக்கியத்துவமும் அதிகரித்திருந்தது.
அரசியல் பின்புலம் இல்லாத போதும், கல்வித் தகைமை, அந்தஸ்து, நன்மதிப்பு என்பவற்றின் அடிப்படையில் தமிழர் சார்ந்த நல்லதொரு தெரிவாக அவர் கருதப்பட்டார்.
தமிழர் கூட்டமைப்பின் அபார வெற்றிக்கு அவரது தெரிவும் ஒரு காரணமாக அமைந்தது. இலங்கை அரசுகூட அவரது தெரிவை ஓரளவுக்கு அச்சத்துடனேயே நோக்கியது. வட மகாண சபையில் தமிழ் கூட்டமைப்பின் பெரும்பான்மை, மற்றும் விக்னேஸ்வரனின் சட்டவல்லமை போன்றவற்றால், அவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் அரசுக்கு இருந்ததே அரசின் கலக்கத்துக்கு காரணம்.
வடமாகாண சபை தேர்தலையே நடாத்துவதற்கு பின்னடித்து வந்த இலங்கை அரசு சர்வதேசத்தினதும், மனித உரிமை பேரவையினதும், இந்தியாவினதும் நெருக்குதல்களால் தேர்தலை நடாத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானது.
தோல்வியென்று தெரிந்தும் தேர்தலை நடாத்தவேண்டி ஏற்பட்டது. முதலமைச்சருக்குரிய தெரிவாக விக்னேஸ்வரன் அவர்கள் அறிவிக்கப்பட்டபோது அரசிடம் பதட்டம் அதிகரித்திருந்தது.
ஆனால் தேர்தல் முடிவடைந்து விக்னேஸ்வரன் அவர்கள் தலைமையில் வடமாகாண சபை இயங்கத் தொடங்கி ஒரு வருடம் ஆகின்ற நிலையில், இலங்கை அரசு தனக்கு இருந்த அச்சங்களிலிருந்தும், நெருக்கடிகளிலிருந்தும் விடுபடும் நிலைக்கு வந்துவிட்டது என்றே சொல்லத்தோன்றுகிறது.
சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதி ஆட்சி அதிகார முறையின் மூலமும், அரசுக்கு ஆதரவான தமிழ் அதிகாரிகளின் துணையோடும், நீதித்துறை மற்றும் படைத்துறையின் பக்க பலத்தோடும் தமது திட்டமிடலுக்கு ஏற்ப வடமாகாண அரசை ஆட்டுவிக்கும் கைங்கரியத்தை இலங்கை அரசு தங்கு தடையின்றி செயல்படுத்தி வருகிறது.
வடமாகாண சபையானது, பெயருக்கு ஒரு அரசாகவே இயங்கி வருகிறது. போரின் மூலம் ஏற்படுத்திய பேரழிவின் பின்புகூட அதிகார வர்க்கத்தினதும், அரச படைகளினதும் பிடியிலிருந்த விடுபட முடியாத நிலையிலேயே தமிழினம் இருந்து வருகிறது. இந்தியாவின் ஒருதலைப்பட்சமான அரசியல் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஒரு வடிவமான மாகாணசபை முறைமைகூட முழுமை பெற முடியாத நிலையையே எட்டியுள்ளது.
தங்களால் அழிவுகளைச் சந்தித்த ஒரு இனத்தின் அற்ப சொற்ப அடிப்படை உரிமைகளைக்கூட அங்கீகரிக்காத ஒரு அரசின் சர்வாதிகாரப் பிடியிலிருந்து தமிழினம் எப்படித்தான் அரசியல் உரிமைகளை பெறமுடியும்?
ஜனாதிபதி, மற்றும் அவரது அதிகாரத்தை நாடெங்கும் பிரயோகிக்கும் அவரது குடும்ப அங்கத்தவர்களின் அதிகாரம், மத்திய அமைச்சர்களின் அதிகாரம், தமிழ் முஸ்லிம் அமைச்சர்களின் அதிகாரம், அரச தரப்பு அதிகாரிகளின் அதிகாரம், ஆளுனரின் அதிகாரம், படையினரின் அதிகாரம், என்று வடபகுதியில் குவிந்துகிடக்கும் சர்வ அதிகாரத்தையும் மீறி எப்படித்தான் ஒரு மாகாண அரசு இயங்க முடியும்?
சட்டத்தோடும், நீதி நியாயத்தோடும் வாழ்வைக் கழித்த விக்னேஸ்வரன் அவர்களால் சர்வ அதிகாரமும் கொண்ட ஒரு அதிகார வர்க்கத்தோடு எவ்வளவுதான் போராட முடியும்?
ஆனாலும், விக்னேஸ்வரன் அவர்களை மடக்கிப் போட வேண்டும் என்ற முனைப்போடு தொடர்ந்து முயற்சித்துவரும் இலங்கை அரசை சார்ந்தவர்கள், பலமுறை அது சாத்தியமாகாமல் போனாலும், தொடர்ந்து முயற்சித்தே வருகிறார்கள்.
வடபகுதி நிர்வாக அலகு சம்பந்தமாக மனோ கணேசன் அவர்கள் கோத்தபாயவை சந்தித்து போசியபோது, ஏதோ கரிசனை உள்ளவர்போல் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுள்ளார். படையினரின் வடபகுதி ஆக்கிரமிப்பு பற்றி எத்தனையே கோரிக்கைகள் தமிழர் தரப்பாலும், சர்வதேசத்தாலும் கேட்டுக்கொள்ப்பட்ட போதும், சிறிதுகூட மசியாத கோத்தபாய, நிர்வாக அதிகாரத்தையா பெற்றுத் தந்துவிடப் போகிறார்?
அரசின் அலட்சியப்படுத்தல்களையும், வாக்குறுதி மீறல்களையும் முதலமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாக, பகிரங்கப்படுத்தி வந்தாலும், இலங்கை அரசு அவற்றை கவனத்தில் கொள்வதே இல்லை. ஆனாலும், சர்வதேச ரீதியில் அவருக்கு இருக்கும் கௌரவமான பார்வை இலங்கை அரசை சங்கடத்துக்குள்ளாக்கவே செய்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும் விக்னேஸ்வரன் அவர்களுக்கு சர்வதேசத்தில் இருக்கும் மதிப்பு பெறுமதியானது. அதன் வெளிப்பாட்டை அண்மையில் இந்தியா சென்ற தமிழ் கூட்டமைப்பினரே தெரிந்து கொண்டுள்ளார்கள்.
பிரதமர் மோடி அவர்கள் விக்னேஸ்வரன் அவர்களை சந்திக்க விரும்பியதாக வெளிவந்த செய்தி சிங்கள தேசத்தையே திகைக்க வைத்திருக்கிறது. மோடியுடனான கூட்டமைப்பின் சந்திப்பையே கொதிப்போடு பார்க்கும் இலங்கை அரசு, முதலமைச்சரின் சந்திப்பு நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதாக தெரிகிறது.
அதன் வெளிப்பாடாகவே, கெஹலிய ரம்புக்வெல்ல அவர்கள் முதலமைச்சர் இந்தியப் பிரதமரை சச்திக்கப் போவதானால் ஆளுனரிடம் அனுமதி பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.
இலங்கையின் அதிகார வர்க்கத்தினர் விக்னேஸ்வரன் தங்களோடு இணக்கமான போக்கை கடைப்பிடிக்கில்லை என சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு தொடர்ச்சியாக முனைந்து வருகிறார்கள்.
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு மகிந்தர் சென்றபோது விக்னேஸ்வரனை முன்னிலைப்படுத்தி தனது வண்டவாளங்களை மறைக்க முயற்சித்தார். அதற்கு முதலமைச்சர் மறுத்துவிட்டார் என்ற கோபம் மகிந்தாவுக்கு இருந்து வருகிறது.
அதுபோல், தனிப்பட்ட சந்திப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பை முதல்வர் மறுத்துவிட்டதால் பசில் ராஜபக்சவுக்கும் அவர்மேல் கோபம். தன்னை பதவியிலிருந்து மாற்றும்படி முதல்வர் அவர்கள் ஜனாதிபதியை கேட்டுக் கொண்டதால் ஆளுனர் சந்திரசிறிக்கும் அவர்மேல் கோபம்.
வடக்கில் முகாம்கள் அமைக்கப்படும்போது தமக்கு அறிவிக்கப்பட வேண்டும் என்று முதலவர் சொன்னதால் கோத்தபாயவுக்கு கோபம். அரசுடன் இணங்கிப் போகும் நோக்கோடு முதல்வர் அவர்கள் பலதடவைகள் தாமே சென்று அரசதரப்பினரை சந்தித்துள்ளார்.
ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட எந்த ஒரு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாத நிலையிலேயே சில சந்திப்புகளை தவிர்த்தார் என்பது வெளிப்படை. அதைப்பற்றிய பேச்சே இல்லாமல்தான் முதல்வரின்மேல் பழியை போட்டு சர்வதேசத்திடமிருந்து தப்பிக்க நினைக்கிறது இலங்கை அரசு.
வடமாகாண அரசுக்கு அழுத்தமும், நெருக்கடிகளும் கொடுப்பதன் மூலம் அதை சீர்குலையச் செய்து, மாகாண சபையையே கலைந்து போகும்படியாக செய்வதும் இலங்கை அரசின் ஒரு நோக்கமாக கருதப்படுகிறது.
சட்டம், நீதி, நேர்மை என்று கடமையாற்றிய விக்னேஸ்வரன் அவர்கள் இலங்கை அரசின் விடாப்பிடியான அழுத்தங்களால் மனம் நொந்து தானாகவே பதவியை துறக்கக் கூடும் என்ற ரீதியிலும் அரசின் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கருத இடமுண்டு.
ஆனால், தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக கருதப்படும் முதலமைச்சர் அவர்கள், தமது இனத்தின் எதிர்கால நலன் கருதி, பொறுமையை இழந்துவிடாமல் தொடர்ந்து செயலாற்றுவதோடு, அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளை சமாளிப்பதற்கு துணிச்சலான சில முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
பிரதமர் மோடி அவர்களை சந்திக்கச் செல்வதும் அதில் ஒன்றாகவே கருதுகிறோம். “பிரச்சனையை என்னிடம் விட்டு விடுங்கள்…!” என்று மோடி அவர்கள் சொன்னதை தேவ வாக்காக எடுத்து தாயகம் திரும்பியிருக்கிறது தமிழர் கூட்டமைப்பு.
ஆனால்,“எங்கு போனாலும் என்னிடம்தான் திரும்பவும் வரவேண்டும்…!” என்று மகிந்த சொல்லியுள்ளார். அதையும் மோடி அவர்களின் காதுகளில் முதல்வர் போட்டுவிட்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUiq0.html

Geen opmerkingen:

Een reactie posten