தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 5 september 2014

கொழும்பிற்கு ஆயுதம் கடத்திய மட்டு. இளைஞன் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா பலத்த வாதத்தினால் திடீர் விடுதலை !

கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை நடாத்த மட்டக்களப்பிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கடத்தியதாக பயங்கரவாத தடைப்பிரிவுப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாவின் வாதத்தையடுத்து நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார் 
மட்டக்களப்பு பெரிய போரைத் தீவை வசிப்பிடமாகக் கொண்ட பேரின்பம் கங்காதரன் என்ற இளைஞரே இவ்வாறு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோனினால் விடுதலை செய்யப்பட்டார்.
2004ம் ஆண்டு ஆடி மாதம் 10ம் திகதி மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் பேருந்தில் 13 கிளைமோர் வெடி குண்டுகளையும், ரி 56 ரக துப்பாக்கியுடன் 190 ரவைகள் நான்கு மகசின் என்பவற்றை சட்டரீதியற்ற முறையில் கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை நடாத்த திட்டமிட்டு உடமையில் வைத்திருந்ததாக மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு பொலிசார் மற்றும் இராணுவ வீரர்கள் உட்பட 13 அரச சாட்சியங்களை உள்ளடக்கி சட்டமா அதிபரினால் 2010ம் ஆண்டு ஆடி மாதம் கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது
இந்த வழக்கு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரச தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்து, எதிர்தரப்பில் குறுக்கு விசாரணையும் முடிவடைந்த பின்னர், அரச சட்டத்தரணி அரசதரப்பு சாட்சியங்கள் முடிவடைந்ததாக நீதிமன்றிற்கு தெரிவித்தார்.
எதிரி தரப்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா தனது வாதத்தில் கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை நடாத்தத் திட்டமிட்டு ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் உடமையில் வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இந்த வழக்கில் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் பேரின்பம் கங்காதரனுக்கு எதிராக சாட்சியமளிக்க 13 அரச சாட்சிகளின் பெயர்கள் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் இராணுவக் கோப்ரல் சுபசிங்க செல்டன் என்ற சாட்சியினை மட்டுமே அரச தரப்பு சாட்சியாக நெறிப்படுத்தி அரச தரப்பு வழக்கை முடித்துள்ளது.
குறுக்கு விசாரணையில் அரச தரப்பின் முக்கிய சாட்சியான இராணுவ கோப்ரல் சுபசிங்க செல்டனது சாட்சியத்தின் பல முக்கிய முரண்பாடுகள் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அரச சட்டத்தரணி எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்ட முக்கியமான தடயப்பொருளான ரி 56 ரக துப்பாக்கியின் அடையாளத்தை உறுதிப்படுத்த சாட்சியான கோப்ரல் சுபசிங்க செல்டனிடம் தடயப்பொருளான ரி 56 ரக துப்பாக்கியை காட்டிய போது சாட்சி ரி 56 ரக துப்பாக்கியின் இலக்கம் 1529691 எனவும் அதனை தான் எதிரியிடமிருந்து கைப்பற்றியதாகவும் சாட்சியமளித்தார்.
ஆனால் குறுக்கு விசாரணையில் சாட்சியான கோப்ரல் சுபசிங்க செல்டன் 2004ம் ஆண்டு ஆடி மாதம் 10ம் திகதி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய வாக்குமூலத்தில் தானும் பொலிஸ் சார்ஜன்ட் யுனைதீனும் எதிரியின் உடமைகளை பரிசோதனை செய்கையில் எதிரியின் உடமையிலிருந்து கைப்பற்றிய ரி 56 ரக துப்பாக்கியின் இலக்கம் 1259692 என்பதை ஒத்துக்கொண்டுள்ளார்.
அத்துடன், பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்தமையையும் அந்த வாக்குமூலத்தில் ரி 56 ரக துப்பாக்கியின் அடையாள இலக்கம் 1259692 என்பதையும் மறுதலிக்கவில்லை என்பதுடன், நீதிமன்றில் தான் வழங்கிய சாட்சியத்தின் முரண்பாடுகளையும் குறுக்கு விசாரணையில் ஒத்துக்கொண்டுள்ளார்.
குற்றச்சாட்டுப் பத்திரத்தில் தடயப்பொருளாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் ரி 56 ரக துப்பாக்கியின் இலக்கமான 1259692 எனக் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கமும், அரச சாட்சியான சுபசிங்க செல்டன் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய வாக்குமூலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் ரி 56 ரக துப்பாக்கியின் இலக்கமுமான 1259692ம் ஒன்றாகும்.
இந்த வழக்கின் தடயப்பொருளான ரி 56 ரக துப்பாக்கியின் அடையாளத்தை உறுதிப்படுத்த அரச சட்டத்தரணி சாட்சியான சுபசிங்க செல்டனிடம் காட்டிய ரி56 ரக 1529691 இலக்கம் கொண்ட துப்பாக்கி எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட தடயப்பொருளல்ல என்பது உறுதியாகின்றது.
அத்துடன், எதிரியிடமிருந்து கைப்பற்றியதாக கூறப்படும் 1259692ம் இலக்கத்தை கொண்ட ரி56 ரக துப்பாக்கி அரச தரப்பின் தடயப்பொருளாக இந்த நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமை உண்மையிலேயே எதிரியிடமிருந்து 1259692ம் இலக்கத்தை கொண்ட ரி56 ரக துப்பாக்கியை பொலிசார் கைப்பற்றினார்களா என்ற நியாயமான சந்தேகம் உருவாகின்றது.
இந்த வழக்கில் அரச தரப்பின் முக்கிய சாட்சியான சார்ஜன்ட் யுனைதீனது சாட்சியம் நெறிப்படுத்தப்படவில்லை, அரசதரப்பு குற்றச்சாட்டுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சகல சாட்சிகளையும் நெறிப்படுத்த வேண்டும் என்ற நியதியில்லை, சான்றுக் கட்டளைச்சட்டத்தின் பிரிவு 134ன் கீழ் ஒரு சாட்சியத்துடன் தமது வழக்கை முடிவிற்கு கொண்டு வரலாம், அதனையே அரச தரப்பு இந்த வழக்கில் கடைப்பிடித்துள்ளனர்.
ஆனால் ஒரேயொரு அரச சாட்சியான சுபசிங்க செல்டனது சாட்சியத்தில் பல முரண்பாடுகளையும்; சாட்சியத்தின் நம்பகத்தன்மையில் பலத்த சந்தேகம் உருவாகுவதையும் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து,
மேல் நீதிமன்ற நீதிபதி தேவிகா தென்னக்கோன் தனது தீர்ப்பில் அரசதரப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் வழக்கை நிரூபிக்கவில்லை என்பதுடன், அரசதரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியான சுபசிங்க செல்டனது சாட்சியத்தில் உள்ள பல முரண்பாடுகள் எதிரிதரப்பின் குறுக்கு விசாரணையில் வெளிக்கொண்டுவரப்பட்டதனையும் கவனத்தில் கொண்டு எதிரியாகிய பேரின்பம் கங்காதரனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கினார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTZKUjsy.html

Geen opmerkingen:

Een reactie posten