தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 7 september 2014

அல்-கொய்தா - இலங்கைக்கும் அச்சுறுத்தலா?

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் தாஹிர் ராபிக் பட் மூன்று நாள் பயணமாக, கடந்த 28ஆம் திகதி அதிகாலை கொழும்புக்கு வந்திருந்திருந்தார்.
இந்தப் பயணத்தின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட முக்கிய அரசியல், இராணுவத் தலைவர்களை அவர் சந்திப்பாரென்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், கொழும்பு வந்திருந்த பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சந்திக்கவில்லை. பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்‌ஷ அவரை சந்தித்துப் பேசினார்.

இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்திக்கொள்வது குறித்து பேசப்பட்டது, அதில் இணக்கம் காணப்பட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின.

பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியின் இந்தப் பயணத்துக்கு, கொழும்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதற்குக் காரணம், இந்தியத் தரப்பின் அதிருப்தியை விலை கொடுத்து வாங்க விரும்பாமையே என்று கருதப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும், சீன படை அதிகாரிகள், வழமைக்கு மாறாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது குறித்தும், இலங்கைப் படை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவது குறித்தும், இந்தியா அதிக கவலை கொண்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த ஆண்டில், ஏற்கனவே பாகிஸ்தான் இராணுவ உயர்மட்டத் தளபதிகள் இருவர் இலங்கைக்கு வந்திருந்தனர். பாகிஸ்தான் இராணுவத் தளபதியும், இலங்கை வரவிருந்த போதும், திடீரென அவரது பயணம் இரத்துச் செய்யப்பட்டது.

இலங்கையுடனான பாகிஸ்தானின் அதிக நெருக்கமும், சீனாவுடன் விரிவ டையும் நல்லுறவும் இந்தியாவுக்கு எரிச்சலூட்டும் விடயமாக மாறியிருந்த நிலையில் தான், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு அலகு விரிவாக்கப்பட்டது. புதிதாக பிரதிப் பாதுகாப்பு ஆலோசகராக லெப்.கேர்ணல் குரிந்தர் எஸ்.கிளேயர் என்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி நியமிக்கப்பட்டார்.

இதையடுத்தே, பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியின் கொழும்பு பயணம் கடந்த மாத இறுதியில் இடம்பெற்றது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து வரும் உயர்மட்ட அதிகாரிகள், இப்போது திருகோணமலைக்கான பயணத்தை தவிர்ப்பதேயில்லை.

சீனக்குடாவில் உள்ள விமானப்படைப் பயிற்சிக் கல்லூரியை அல்லது டொக்யார்ட்டில் உள்ள கடற்படைத் தளத்தை பார்வையிடுவது என்ற சாக்கில், திருகோணமலையின் கேந்திர முக்கியத்துவத்தை அவர்கள் அளவிட்டுச் செல்கின்றனர்.

இந்தியாவின் கேந்திர மற்றும் பொருளாதார நலன்கள் அதிகமுள்ள திருகோணமலைக்கு, பாகிஸ்தான் விமானப்படைத் தளபதியும் சென்றிருந்தார்.

சீனக்குடா விமானப்படைத் தளத்துக்குச் சென்ற அவர், திருகோணமலைத் துறைமுகத்தையும், கடந்த 29ஆம் திகதி சுற்றிப் பார்வையிட்டிருந்தார். ஆனால், அதுபற்றிய தகவல்களுக்கு ஊடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. அரசாங்கமே அந்த தகவல்களை கிட்டத்தட்ட இருட்டடிப்பு செய்துவிட்டது.

இதற்கு இந்தியா கொண்டுள்ள கரிசனையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அதேவேளை, விமானப் பராமரிப்பு நிலையத்தை சீனாவுடன் இணைந்து ஆரம்பிக்கும் முடிவில் அரசாங்கம் உறுதியாகவே உள்ளது.

அது எங்கு அமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்படவில்லை என்று அரசாங்கம் கூறி வந்தாலும், இம்மாத நடுப்பகுதியில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கொழும்பு வரும் போது, இது தொடர்பான உடன்பாடும் கையெழுத்திடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமானப்படையிடம் அதிகளவிலான சீனத் தயாரிப்பு விமானங்களே இருப்பதாகவும், அவற்றை சீனாவுக்கு அனுப்பி பழுது பார்க்க அதிகம் செலவு ஏற்படுவதாகவும், எனவே தான் விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த வாரமும் தெரிவித்திருந்தார் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய. இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே, சீனப் பொறியியலாளர்கள் அந்த விமானப் பராமரிப்பு நிலையத்தில் இருப்பர் என்றும், உள்ளூர் அதிகாரிகளுக்குப் பயிற்சியளித்த பின்னர், அவர்கள் வெளியேறிவிடுவர் என்றும், பிரிகேடியர் ருவன் வணிகசூரிய விளக்கமளித்துள்ளார்.

இதற்கு இந்தியாவின் பிரதிபலிப்பு எவ்வகையானதாக இருக்கும் என்பதை, இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்னர், தெரிந்துகொள்ள முடியும்.

ஏற்கனவே, இந்த விமானப் பராமரிப்பு நிலையம் அமைப்பு தொடர்பாக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் விளக்கம் கேட்டிருந்தார்.

ஆனால், அவர் சாதாரணமாகத்தான் கேட்டார் என்று அமைச்சர் பீரிஸ் பின்னர் விளக்கம் கொடுத்திருந்தார்.

கேந்திர முக்கியத்துவம் மிக்க திருகோணமலைத் துறைமுகச் சூழலில், சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தலையீடுகள் அதிகரித்து வருவதை இந்தியா அவ்வளவாக, அனுமதிக்காது.

இந்த விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை எத்தகையது என்பதை தெரிந்து கொள்வதற்கான காலம் நெருங்கி வருவதாகவே தெரிகிறது.

அதேவேளை, பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ள கட்டத் தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், எல்லையில் ஏற்பட்டு வரும் மோதல்களும் இலங்கைக்கு கவலைதரும் ஒரு விவகாரமாகவே உள்ளது. இந்த அரசியல் நெருக்கடியால், கடந்தவாரம், பாகிஸ்தான் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. 

இம்மாத நடுப்பகுதியில் இலங்கை, மற்றும் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் பாகிஸ்தானுக்கும் செல்வதற்கே திட்டமிட்டிருந்தார். அவரது பயணமும், கைவிடப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் பதற்றத்தை திசைதிருப்புவுதற்காக, பாகிஸ்தான் எல்லையில் சண்டைகளை ஆரம்பிப்பதாக, இந்தியா குற்றம்சாட்டுகிறது. நரேந்திர மோடியின் பதவியேற்பின் போது, இருந்தளவுக்கு இப்போது இந்திய - பாகிஸ்தான் உறவுகள் நல்ல நிலையில் இல்லை.

இந்தச் சூழலில், இலங்கையையும், பாகிஸ்தானுடன் நெருங்குவதை தடுக்க இந்தியா முனைவதாக தெரிகிறது.

பாகிஸ்தான் - இலங்கை நெருக்கம், தனது தென்பகுதி மாநிலங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுக்கும் என்று இந்தியா அஞ்சுகிறது.

கடந்தவாரம் அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல் - ஜவாஹிரி, தமது இயக்கத்தின் செயற்பாடுகளை தெற்காசியாவில் விரிவாக்கப் போவதாக விடுத்திருக்கும் எச்சரிக்கை இந்தியாவை இன்னும் உஷாரடையச் செய்துள்ளது.

அல்கொய்தா இயக்கத்தின் செயற்பாடுகளை இந்தியா, பங்களாதேஷ், பர்மா போன்ற நாடுகளுக்கு விரிவாக்கப் போவதாக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை, இலங்கைக்கும் ஆபத்தானதே.

இலங்கையில் அண்மைக்காலமாக பௌத்த அடிப்படைவாத அமைப்புகளின் செயற்பாடுகள், முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இதையே காரணம் காட்டி, இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கைக்குள் ஊடுருவலாம் என்ற கருத்து ஏற்கனவே இந்தியாவினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், உள்நாட்டிலோ வெளிநாட்டில் இருந்தோ எத்தகைய தீவிரவாத செயற்பாடுகளும் தலையெடுக்க அனுமதிக்க மாட்டோம் என்று, இலங்கை பாதுகாப்புத் தரப்பு கூறி வருகிறது.

அல்கொய்தாவின் எச்சரிக்கைக்குப் பின்னர் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர், தலிபான்களின் தீவிரவாத செயற்பாடுகள் இந்தியாவில் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக இந்தியா எதிர்பார்க்கிறது.

அதற்கேற்ப ஆப்கானிஸ்தானின் அரசியல் மற்றும் பாதுகாப்பு உறுதிப்பாட்டை ஏற்படுத்துவதற்காக இந்தியா பெருமளவு நிதியைச் செலவிட்டும் வருகிறது.

இத்தகைய நிலையில், அல்கொய்தாவின் எச்சரிக்கையை இந்தியா சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது.

ஒட்டுமொத்த தெற்காசியாவுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இலங்கையையும் அரவணைத்துக் கொள்ளவே இந்தியா முற்படும்.

அதேவேளை, பாகிஸ்தானை இலங்கையிடம் இருந்து மேலும் அந்நியப்படுத்தும் முயற்சிகளையும், அது தொடர்ந்து முன்னெடுக்கும்.

இந்தச் சூழலில், விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த இலங்கை இராணுவத்தின் அனுபவங்களை, தனது நாட்டிலும் பிரயோகிக்கும் முயற்சிகளை நைஜீரியா தீவிரப்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில், இஸ்லாமிய போகோ ஹராம் தீவிரவாத அமைப்பின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.

அதனைக்கட்டுப்படுத்த முடியாமல் அந்த நாட்டு அரசாங்கம் திணறிவரும் நிலையில், கடந்த ஜூன் மாதம் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமையிலான உயர்மட்டப் படை அதிகாரிகளின் குழுவொன்று நைஜீரியா சென்றிருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம், போகோ ஹராம் தீவிரவாதிகள் 200 மாணவிகளைக் கடத்திச் சென்ற பின்னர், இலங்கை இராணுவத்தின் அனுபவங்களையும் உத்திகளையும் பயன்படுத்திக் கொள்ள நைஜீரியா முடிவெடுத்தது.
அதற்கமைய, இலங்கை இராணுவத்தின் ஆலோசனைகளை பெற விரும்புவதாக நைஜீரிய அரசாங்கம், இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தியதன் தொடர்ச்சியாகவே உயர்மட்டப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு அங்கு சென்றது.

இராணுவத்தைப் பலப்படுத்தி, புலனாய்வு மற்றும் நவீன ஆயுத தளபாடங்களைக் கொண்டு எவ்வாறு தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியுமென்று அவர்கள் விளக்கமளித்திருந்தனர்.

நைஜீரிய பாதுகாப்பு படைகளின் தலைவர் எயர் சீவ் மார்ஷல் அலெக்ஸ் பெட்டாவே இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்தச் செய்தி வெளியான போதே, இலங்கையின் போர்த்தந்திரங்களைக் கையாள்வது பொருத்தமற்றது என்றும் ஆபத்தானது என்றும் சர்வதேச நிபுணர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களைச் சுட்டிக்காட்டி, அதன் விளைவாக சர்வதேச விசாரணையை அந்த நாடு எதிர்கொள்வதாகவும் அதே நிலையை நைஜீரியாவும் எதிர்கொள்ள நேரிடுமென்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

அதையெல்லாம காதில் வாங்கிக் கொள்ளும் நிலையில் நைஜீரிய அரசாங்கம் இல்லை.

இந்தநிலையில், நைஜீரிய விமானப்படையின் மூத்த அதிகாரியான எயர் வைஸ் மார்சல் எம்.ஆர்.மூர்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட உயர்மட்டக்குழு கடந்தவாரம் கொழும்பு வந்திருந்தது.

நான்கு நாள் பயணமாக வந்த இந்தக் குழுவின் முக்கிய நோக்கம், இலங்கை இராணுவத்துக்கான நலன்புரி வசதிகள் குறித்து ஆராய்வதேயாகும். இராணுவ பலத்தையும், அவர்களுக்கான வசதிகளையும் அதிகரிப்பதன் மூலம் படையினரின் போரிடும் திறனை வளர்க்கலாம் என்பதே, இலங்கை இராணுவத்தின் அனுபவம்.

அதுபற்றி ஆராயவே நைஜீரியக் குழு கொழும்பு வந்திருந்தது.

இவ்வாறாக, தீவிரவாதத்துக்கு எதிரான போரில், நாட்டுக்கு வெளியே இலங்கையும் ஏதோ ஒரு வகையில் தொடர்புபடத் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், அல்கொய்தாவின் எச்சரிக்கையை, கொழும்பினாலும் உதாசீனம் செய்ய முடியாது.
 
- சுபத்ரா -
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUit7.html

Geen opmerkingen:

Een reactie posten