அரசின் பிரதான கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இக்கருத்தை கூறியுள்ளார்.
இது விக்னேஸ்வரனை நோக்கி சொல்லப்பட்ட கருத்து என்பதைவிட, மோடியை நோக்கி சொல்லப்பட்ட கருத்தாகவே இருக்கின்றது. எங்களிடம் சொல்லிவிட்டு, எங்கள் அனுமதியுடன் எங்கள் நாட்டு மாகாண முதல்வரை அழையுங்கள் என மோடிக்கு இந்த அரசாங்கம் மறைமுகமாக சொல்கிறதா? இதன்மூலம் அரசாங்கம் மோடி அரசுடன் மோதலுக்கு தயாராகிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இலங்கையில் ஒரு அரசியலமைப்பு இருக்கின்றது. அதன்படி நடக்க இலங்கையின் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பேதமில்லாமல் கடமைப்பட்டுள்ளார்கள் என தினேஷ் குணவர்த்தன கூறுகிறார்.
இதை நான் ஏற்றுகொள்கிறேன். வெளிநாடு செல்வதாயின் நடைபெறவேண்டியது சட்ட அனுமதியா அல்லது சம்பிரதாய அறிவித்தலா என்பது எனக்கு தெரியாது. ஆனால், சட்டமேதையும் கனவானுமான விக்னேஸ்வரன் சட்டத்தையும், சம்பிரதாயத்தையும் மீற மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
ஆனால், இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இந்நாட்டில் அரசியலமைப்பு ஒன்று உள்ளது என்றும், அதை மீறக்கூடாது என்றும் கூறுவது வியப்பை தருகிறது. இதை உண்மையில் நாங்கள்தான் அவருக்கு சொல்லி ஞாபகப்படுத்த வேண்டும்.
இந்த நாட்டில் அரசியலமைப்பில் இருக்கும் சட்டங்கள் அமுல் செய்யப்படுவது இல்லை. வடக்கு முதல்வருக்கு 13ம் திருத்தம் என்ற அரசியலமைப்பு சட்ட விதிகளின்படியிலான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. இது ஊரறிந்த உண்மை. எனவே தமக்கு தேவையான போது அரசியலமைப்பை ஞாபகப்படுத்துவதும், தேவையில்லாதபோது அதை மீறுவதும் இந்த அரசின் கொள்கையாக இருக்கின்றது.
எங்கள் இல்லத்தில் நடைபெற்ற சோக நிகழ்வில் கலந்துகொண்டு வருத்தம் தெரிவிக்க ஆளும்தரப்பு, எதிர்த்தரப்பு பிரமுகர்கள் வந்திருந்தார்கள். அனைவருக்கும் நன்றி. இதில் கலந்துகொண்ட பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, முதல்வர் விக்னேஸ்வரனுடன் இணைந்து செயல்படும்படி, வடமாகாண பிரதி போலிஸ் மா அதிபருக்கு, தான் அறிவுறுத்தல் வழங்கியதாக சொன்னார்.
நடைமுறைப்படுத்தப்படாத போலிஸ் அதிகாரங்களை பற்றி பேசுவதற்கு முன், விக்னேஸ்வரனுக்கு நிர்வாக அதிகாரங்களே வழங்கப்படவில்லை என்றும், மேல்மாகாண முதல்வர் பிரசன்ன ரணதுங்கவுக்கு இருக்கின்ற அதிகாரங்கள் வடமாகாண முதல்வருக்கு கிடையாது என்றும், இவை பற்றி தெரியுமா என்றும் நான் அவரிடம் கேட்டேன்.
இந்த வேளையில் ஹெல உறுமயவின் மேல்மாகாண அமைச்சர் உதய கம்மன்பிலவும், ஐதேக எம்பி யோகராஜனும் அங்கே இருந்தார்கள். நடைமுறை சிக்கல்களை தீர்க்க, விக்னேஸ்வரனை சந்தித்து உரையாட தான் விரும்புவதாகவும், அதை ஏற்பாடு செய்து தரும்படியும், பாதுகாப்பு செயலாளர் என்னிடமும், யோகராஜனிடமும் கோரிக்கை விடுத்தார்.
கலந்துரையாடல்கள் நடத்தலாம். ஆனால், இந்த கோரிக்கைகள், பிரகடனங்கள், உரையாடல்கள் இவற்றிலேயே மாத்திரம் காலம் கடத்தும் முறைமை இப்போது முடிவுக்கு வந்துகொண்டிருக்கின்றது.
சட்டத்தில் உள்ளவற்றை நிறைவேற்றவும், புதிய சட்டங்களை உருவாக்கவும் வேண்டிய காலம் இப்போது உதயமாகிக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்திய அரசுடன் பேச வேண்டியுள்ளது.
இந்த சட்டங்களை நிறைவேற்ற இலங்கை அரசை வலியுறுத்தும் கடப்பாட்டை இந்திய அரசுக்கு உள்ளதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தும் காலமும் வந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இந்திய அரசுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேசுவதை, குற்றமாக கருதாமல், அதன் பின்னணியை கண்டறிந்து, இந்திய அரசுடன் மோதலுக்கு செல்லாமல், செயல்படவேண்டிய கடப்பாடு இலங்கை அரசுக்கு இருக்கிறது. என தெரிவித்தார்.
கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது மோடி ஏன் கைகளைக் கட்டியபடியே இருந்தார்?
http://www.tamilwin.com/show-RUmsyJTXKUkuz.html
Geen opmerkingen:
Een reactie posten