முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை, மற்றும் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணிகளில் பெளத்த விகாரை ஒன்றை அமைக்கும் பணி இரகசியமாக நடைபெற்று வருகின்றது என்று அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த இடத்தில் நேற்று புதன்கிழமை சிறிய புத்தர் சிலை ஒன்று புதிதாக நிறுவப்பட்டுள்ளது என்றும், அதனைவிட காணியின் உள் பகுதியில் ஆழமாகக் கிடங்குகள் வெட்டப்பட்டு அத்திவாரம் இடும் பணிகள் நடைபெற்று வருகின்றதாக அப் பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொக்கிளாய் ஆதார வைத்தியசாலை கட்டப்பட்டு, ஒன்றரை வருடங்கள் கழிந்தும் அந்த வைத்தியசாலை திறக்கப்படவில்லை. அத்துடன் வைத்தியசாலைக்கு சுற்று வேலி அமைப்பதற்கான நிதி கிடைக்கப்பெற்றுள்ள போதும் இதுவரை வேலியும் அமைக்கப்படவில்லை.
இதுகுறித்து வடக்கு மாகாண சுகாதார அமைச்சு அசமந்தம் காட்டிவருகிறது என்றும் மக்கள் குற்றம் சாட்டினர். ஏற்கனவே வைத்தியசாலைக் காணியையும் தனியார் ஒருவரது காணியையும் அபகரித்து அதில் விகாரை கட்டுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தனியார் ஒருவர், தனது காணியை விடுவிக்கக் கோரி நீதிமன்றில் வழக்குத் தெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் குறித்த இடத்தில் மீண்டும் விகாரை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அப் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விடயம் குறித்து உரியவர்களி கவனத்துக்கு தாம் கொண்டுவந்துள்ளனர் என்றும் அந்த மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
இரண்டாம் இணைப்பு
முல்லைத்தீவு கொக்கிளாயில் ஆக்கிரமிப்பு அடையாளமாக சிறீ சம்போதி மகா விகாரை அமைக்கும் பணி முழுவீச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படையினர் காவலுடன் திணிக்கப்படுகின்ற இந்த ஆக்கிரமிப்பு அடையாளத்தின் முதற்கட்டமாக இன்று மேலுமொரு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மக்களின் தகவலை அடுத்து, வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவ்விடத்திற்கு நேரில் சென்று தகவலை உறுதிப்படுத்தினார்.
இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில்,
கொக்கிளாய் பகுதியில் ஏற்கனவே புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டதை நாம் அறிந்திருப்போம். தற்போது அதற்கருகாமையில் மேலுமொரு புத்தர் சிலை அமைக்கப்பட்டு, சிறீ சம்போதி மகா விகாரை என்று சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பெயர்ப்பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இதற்காக கொக்கிளாய் ஆரம்ப வைத்தியசாலைக்கு சொந்தமான சுமார் 30 மீற்றர் அகலமும் 100 மீற்றருக்கும் மேற்பட்ட நீளமும் உடைய நிலப்பகுதி அபகரிக்கப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.
பழைய வேலிகள் அகற்றப்பட்டு புது வேலிகள் போடப்பட்டிருப்பது தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
ஏற்கனவே அமைக்கப்பட்ட புத்தர் சிலைக்காக தனியார் காணி அபகரிக்கப்பட்டிருந்தது. குறித்த பொதுமகன், தனது காணி அபகரிப்பிற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு சிலையை நிறுவி விகாரையை அமைப்பதாக தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSVKUgt4.html
Geen opmerkingen:
Een reactie posten