தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 6 september 2014

இலங்கை அரசாங்கத்திற்கு கிரந்தம் முற்றிப் பெளந்திரமாக்குகிறது!

[ valampurii.com ]
கிரந்தம் முற்றிப் பெளந்திரமாக்குதல் என்பது நம் தமிழ் மொழியில் இருக்கக்கூடிய கிராமத்துப் பழமொழி.
கிரந்தம் பெளந்திரமாக்கினால் அதன்விளைவு பாரதூரமானதாக இருக்கும். இத்தகையதொரு நிலையை நோக்கி இலங்கை அரசு செல்கிறது என்பதை இவ்விடத்தில் சொல்லித்தான் ஆகவேண்டும்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுமதி வழங்க முடியாது என்று அறிவித்த இலங்கை அரசு இப்போது இன்னுமொரு அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது.
அதாவது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திக்க முடியாது, அவ்வாறு சந்திப்பதாக இருந்தால் இலங்கை அரசின் அனுமதி பெற்றே சந்திக்க முடியும் என்பதாகும்.
அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இவ்வாறு கூறியதில் இருந்து பல்வேறு அனுமானங்களை ஊகிக்க முடியும்.
அதில் ஒன்று, இரண்டரை இலட்சம் விருப்பு வாக்குகளைப் பெற்று வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர் தமிழர் என்ற அடிப்படையின் காரணமாக இந்தியப் பிரதமரை சந்திக்க முடியாது.
ஆக, இலங்கையில் சிறுபான்மை இனத்தின் தலைவர் கூட ஒரு நாட்டின் பிரதமரை சந்திப்பதாக இருந்தால் அவர் இலங்கை அரசின் அனுமதியைப் பெற வேண்டும்.
அரசு அனுமதி வழங்கவில்லையாயின் அவர் சந்திப்பை மேற்கொள்ளமுடியாது. இதில் இருந்து இலங்கை அரசு சிறுபான்மை இனத்தை எந்தளவு தூரம் தனது அதிகாரத்தின் கீழ் அடக்க முற்படுகின்றது என்பது தெளிவாகின்றது.
இரண்டாவது விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்தியப் பிரதமரைச் சந்தித்ததை பெரிதாக பொருட்படுத்தாத இலங்கை அரசு, வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன், பிரதமர் மோடியைச் சந்திக்கப் போகின்றார் என்றவுடன் அமைச்சர் ஹெகலிய நிபந்தனை விதிப்பது எதற்கானது என்ற கேள்வி ஏற்படும்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இந்தியப் பிரதமர் மோடியும் சந்தித்தால் அது ஈழத்தமிழர்களுக்கு சாதகமாக அமையும் என்று அரசு கருதுகிறது.
எனவே பிரதமர் மோடியுடன் வடக்கின் முதல்வர் சந்திப்பதை எப்படியாவது தடுத்தாக வேண்டும் என்ற நோக்கிலேயே இலங்கை அரசின் அனுமதியை பெறாமல் பிரதமர் மோடியை வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சந்திக்க முடியாது என அமைச்சர் ஹெகலிய அறிக்கை விடுத்துள்ளார்.
இதுதவிர பிரதமர் மோடியை வடக்கின் முதலமைச்சர் சந்திப்பதற்கு இலங்கை அரசின் அனுமதியைப் பெறவேண்டும் எனக் கூறுவதன் மூலம் வடக்கு மாகாண அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை தெரியப்படுத்தப்படுகிறது.
இவையாவற்றுக்கும் மேலாக, இந்தியப் பிரதமர் மோடி விரும்பினாலும் வடக்கின் முதலமைச்சரை சந்திக்க இலங்கை அரசு அனுமதிக்காது என்பதை நாசூக்காக இந்தியாவுக்குத் தெரியப்படுத்துகிறது.
இவ்வாறு தெரியப்படுத்துவதனூடாக வடக்கின் முதலமைச்சரை சந்திக்க விரும்பம் கொண்டுள்ளேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்த பிரதமர் மோடிக்கு ஒரு பதிலடி கொடுப்பது என்றவாறாக அமைச்சர் ஹெகலியவின் கருத்து அமைந்துள்ளது.
அறுபது நாளைக்கு எழுபது கந்தை என்றொரு பழமொழி நம் ஊர்களில் உண்டு. அறுகின்ற நாளுக்கு எழுவது அகந்தை என்ற பழமொழியே மேற்குறிப்பிட்டவாறு திரிபடைந்தது.
என்ன செய்வது! கிரந்தம் முற்றிப் பெளந்திரமாக்குவது தவிர்க்க முடியாதெனில் யார்தான் என்ன செய்ய முடியும்?
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUip3.html

Geen opmerkingen:

Een reactie posten