தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 13 september 2014

திருகோணமலையில் கடத்தப்பட்ட ஆசிரியை ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீட்பு!

தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பொய் செய்திகளை வெளியிடும் அரச ஊடகங்கள்
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 07:39.32 AM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் பாரிய பின்னடைவை சந்திக்கும் என புலனாய்வு பிரிவினர், தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பொய்யான செய்திகளை வெளியிடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
ஊவா தேர்தல் வெற்றியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் 4 பேர் அரசாங்கத்தில் இணைவு என்ற தலைப்பில் அரச ஊடகமான சிலுமின தனது பிரதான செய்தியை வெளியிட்டுள்ளது.
ஊவா மாகாண தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியை பெறும் எனவும் இதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண முக்கியஸ்தர் ஒருவரும் மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இணைய தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கம் 60 வீதமான வாக்குகளை பெறும் எனவும் 12 தொகுதிகளில் ஆளும் கட்சி வெற்றி பெறும் என சுயாதீன தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
பசறை, பண்டாரவளை தொகுதிகளின் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெறும் எனக் கூறப்பட்ட போதிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊவா விஜயத்தை அடுத்து நிலைமை முற்றிலும் மாறியுள்ளதுடன் ஆளும் கட்சிக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவுக்கு பிரதித் தலைவர் பதவியை வழங்க போவதாக அறிவித்தார்.
இதனை மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் எதிர்த்துள்ளதால், எதிர்க்கட்சியில் உள்ள பலர் வெறுப்படைந்து, ஆளும் கட்சியுடன் இணைந்துள்ளனர்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஊவா மாகாண சபையில் இருந்த ஆசனங்களை தக்க வைக்க முடியும் என்பதுடன் ஜே.வி.பி தனக்கிருந்த ஒரு ஆசனத்தை தக்கவைக்க பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறது எனவும் சிலுமின பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு பயந்து கட்சியின் பதவிகளை வழங்குவது ஜனநாயக விரோதம்: விஜயதாச ராஜபக்ஷ
 ஊடக நிறுவனங்களுக்கு பயந்து கட்சிகள் பதவிகளை வழங்குமாயின் அது ஜனநாயக விரோதம் எனவும் அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளை, பசறை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசவுக்கு பிரதித் தலைவர் பதவி வழங்கப்படும் என தெரிவித்திருந்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 பிரதித் தலைவர் பதவி தொடர்பில் முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ந்து பார்க்கப்படும் என்று மட்டுமே ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
அச்சு ஊடகம் மற்றும் இலத்திரனியல் ஊடகம் ஆகியவற்றுக்கு பயந்தா கட்சியின் தலைவர் இதனை கூறினார் என்று கட்சிக்குள் ஒரு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
ஒரு அச்சு ஊடகமும் ஒரு இலத்திரனியல் ஊடகமும் அரசாங்கத்தின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி யாருக்கு கிடைக்க வேண்டும் என்ற கருத்து கணிப்பை நடத்தி சமூகத்திற்குள் ஒரு நிலைப்பாட்டை உருவாக்கி வருகிறது.
அதன் ஊடாக கட்சிக்கும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு எதிராகவும் அந்த ஊடகம் சேறுபூசும் பிரச்சாரங்களை முன்னெடுத்துள்ளது.
பிரதித் தலைவரை கட்சியின் தலைவர் பரிந்துரைத்தாலும் நியமனத்தை வழங்கும் இறுதியான அதிகாரம் கட்சியின் செயற்குழுவிற்கே உள்ளது எனவும் விஜயதாச ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஊவா தேர்தலின் பின் இருத்தரப்பிலும் கட்சி தாவல்கள்
ஊவா மாகாண சபைத் தேர்தல் வெற்றி முடிவுகளின் பின்னர் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கட்சி மாற தயாராக இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் ஊவா மாகாணத் தேர்தலில் வெற்றிபெற்றால், அரசாங்கத்துடன் இணைவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று சிரேஷ்ட உறுப்பினர்கள் ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற பேச்சுக்களை ஆரம்பித்துள்ளனர்.
இவர்களில் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட ஒருவரும், ஐக்கிய தேசியக் கட்சியில் பதவிகளை வகித்து வரும் இருவரும் அடங்குவதாக பேசப்படுகிறது.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி ஊவா மாகாண சபைத் தேர்தலில் வென்றால், அரசாங்கத்தில் இருக்கும் இரண்டு சிரேஷ்ட அமைச்சர்களும், ஒரு பிரதியமைச்சரும் ஒரு மலையக தமிழ் அரசியல் கட்சியும் ஐ.தே.கட்சியில் இணைய தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், ஊவா தேர்தல் ஒரு முக்கிய தீர்மானகரமான தேர்தல் என்பதால், தேர்தலில் வெற்றி பெற ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தமது உச்ச பலத்தை பயன்படுத்தி வருகின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUft0.html
அரசாங்கம் கணிசமான வாக்குகளை இழக்கும்: ராஜித சேனாரத்ன
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 08:00.41 AM GMT ]
ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கணிசனமாக வாக்குகளை இழக்கும் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மொனராகலையில் 58 முதல் 60 வீத வாக்குகளும் பதுளையில் 52 முதல் 53 வீத வாக்குகளும் கிடைக்கும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த தகவல் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வாக்குகள் குறையும் என்பது தெளிவாகியுள்ளது.
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 72.39 வீத வாக்குகளை பெற்றது.
மொனராகலையில் 81.32 வீத வாக்குகளையும் பதுளையில் 67.79 வீத வாக்குகளை ஆளும் கட்சி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUft2.html
திருகோணமலையில் கடத்தப்பட்ட ஆசிரியை ஒரு மணித்தியாலத்தின் பின்னர் மீட்பு
[ சனிக்கிழமை, 13 செப்ரெம்பர் 2014, 08:37.01 AM GMT ]
திருகோணமலை அரசடி சந்திப் பிரதேசத்தில் இருந்து ஆசிரியை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு, ஒரு மணித்தியாலத்தில் மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆசிரியை அரசடி சந்தியில் உள்ள தனியார் பாடசாலைக்குள் இருந்த நிலையில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் காவலாளியை தாக்கி விட்டு ஆசிரியையை கடத்திச் சென்றுள்ளனர்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது காவலாளியின் கையடக்க தொலைபேசியும் கடத்தியவர்களால் அபகரித்து செல்லப்பட்டது.
எனினும் கைத் தொலைபேசி திருகோணமலை நகரப் பகுதியில் வைத்து வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை ஆசிரியையை கடத்திச் சென்ற வான் அடையாளம் காணப்பட்ட நிலையில், அது தொடர்பான தகவல்களும் பொலிஸாரால் உரிய இடங்களுக்கு வழங்கப்பட்டன
இதனடிப்படையில் குறித்த வான், அநுராதபுரம்- திருகோணமலை எல்லைப் புறமான பதவிய என்ற இடத்தில் வைத்து பொலிஸாரால் வழிமறிக்கப்பட்டு ஆசிரியை மீட்கப்பட்டார்.
கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் இந்தக்கடத்தல் தனிப்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் இடம்பெற்றது என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyJSXKUft3.html

Geen opmerkingen:

Een reactie posten