தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 4 september 2014

சர்வதேசத்தில் புலிகள்: இலங்கைக்கு அச்சுறுத்தல்- ருவன் வணிகசூரிய!!



30 கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக் கொண்டு குடும்பத்துடன் தலைமறைவான வர்த்தகர்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 04:22.33 AM GMT ]
மன்னார் எழுத்தூர், பெரியகமம் பகுதியில் வசித்துவரும் பிரபல வர்த்தகர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளமை குறித்து கடந்த யூலை மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் பாதிக்கப்பட்டவர்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.
சுமார் 30 கோடி ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் வெளிநாடு ஒன்றிற்கு தலைமறைவாகியுள்ளார் என தெரியவருகின்றத.
மன்னார்- தாழ்வுபாடு பிரதான வீதியில் சிகை அலங்கரிப்பு நிலையம் (சலூன்) ஒன்றை நடத்தி வந்த அந்தோனிப்பிள்ளை கருணாகரன் (வயது-37) என்பவரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளார்.
இவரால் பாதிக்கப்பட்ட பலர் தொடர்ச்சியாக மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
குறித்த நபர், இரும்பு வாணிபம் (ஹாட்வெயார்) ஒன்றையும் நடத்தி வந்ததோடு, சீட்டு பிடிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
மக்களிடம் பணத்தை வாங்கி அதிக வட்டியும் வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் இவரை நம்பி அதிகளவான வர்த்தகர்கள், அரச தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இவரிடம் சீட்டு போட்டிருந்ததோடு இவரை நம்பி கோடிக்கணக்கான ரூபாக்களை வட்டிக்கும் கொடுத்துள்ளனர்.
பலர் நகைகளை வங்கிகளில் அடகு வைத்து பணம் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு வழங்க வேண்டிய வட்டி, சீட்டுப் பணம், கடன் காசு ஆகியவற்றை மிகவும் நம்பிக்கையான முறையில் வழங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த நபர் கடந்த யூலை மாதம் 20 ஆம் திகதி முதல் குடும்பத்துடன் தலைமறைவான நிலையில் மக்களுக்கு இவர் மேல் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, இவரது வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது. இவரை தேடிய மக்கள் கடைசியில் மன்னார் பொலிஸ் நிலையத்தில முறைப்பாட்டையும் பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
குறித்த நபர் சுமார் 30 கோடி ரூபாய் பணத்துடன் தலைமறைவாகியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களின் தகவல்களின் படி தெரிய வருகின்றது. இவரை நம்பி பணம் வழங்கிய பலர் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
குறித்த நபரால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் தலைமறைவான அந்தோனிப்பிள்ளை கருணாகரன் (வயது-37) என்பவரது புகைப்படம் மற்றும் அவர் தொடர்பான விடயங்களை துண்டுப்பிரசுரம் மூலம் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUkx6.html
இலங்கையின் மெளனத்தைக் கலைக்க வேண்டும்: நோர்வே பத்திரிகை
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 05:12.20 AM GMT ]
இலங்கைக்கு எதிராக நோர்வை அரசாங்கம் வாய்த்திறக்க வேண்டிய தருணம் வந்திருப்பதாக நோர்வேயில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
யுத்த காலத்தில் இலங்கை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நோர்வே அரசாங்கம் நேரடி தொடர்புகளை கொண்டிருந்தது.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும், இலங்கை மக்களின் நலன் தொடர்பில் நோர்வே அரசாங்கத்துக்கு அக்கறை இருக்குமாக இருந்தால், இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட வன்செயல்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பில் நோர்வை அரசாங்கம் தற்போது வாய் திறந்திருக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்சவின்  சர்வதேசத்துக்கு எதிரான பிடிவாதத்தை நோர்வே தமது அமைதியின் மூலம் மேலும் வளரவிடக் கூடாது என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

மேலும் இலங்கையை வடகொரியாவுக்கு ஒப்பான நாடு என்றும் அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUkx7.html
திடீரென காணாமல்போன மாணவன்- கிழக்கு பல்கலையில் பகிடிவதையினால் 3 மாணவர்கள் பாதிப்பு
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 05:34.10 AM GMT ]
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுக்கலை தோட்டத்தில் வசிக்கும் 11ஆம் ஆண்டு கல்வி கற்கும் யோகநாதன் சிவதர்ஷன் எனும் மாணவன் நேற்று இரவு 11 மணியளவில் தீடிரென காணாமல் போயுள்ளார்.
இவர் வழமை போல் 11 மணி வரைக்கும் தனது வீட்டில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்திருந்த போதிலும் நேற்று இரவு அவரது அம்மா மகனே படித்தது போதும் வந்து நித்திரை கொள்ளுமாறு கூறியபோதும், இல்லை அம்மா இன்னும் 5 நிமிடங்கள் கழித்து தான் வருவதாக மாணவன் கூறியுள்ளார்.
10 நிமிடங்கள் கழித்து அவரை சென்று பார்க்கும் போது அவர் கல்வி கற்கும் அறையிலிருந்து காணாமல் போயுள்ளார்.
அதன்பின் அயலவர்களின் உதவியோடு தேடுதல் பணிகளில் ஈடுபட்டிருந்த போதிலும் அவர் கிடைக்கப்பெறவில்லை.
அதன்பின் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு தேடுதல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
இவர் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பகிடிவதையினால் மூன்று மாணவர்கள் பாதிப்பு
கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு இந்த ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட மூன்று மாணவர்கள் கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டமையினால் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று காலை 8.00 மணியளவில் குறித்த மாணவர்களின் மட்டக்களப்பில் உள்ள வீடுகளுக்கு சென்ற சிரேஸ்ட மாணவர்கள் சிலர் குறித்த மாணவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.
வீட்டில் இருந்து சென்றவர்கள் மாலையாகியும் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் மாணவர்களை தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த மூன்று மாணவர்களும் காயங்களுடன் கல்லடி இசை, நடன கல்லூரிக்கு முன்பாகவுள்ள கடையொன்றின் அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்த மாணவர்களை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து கடுமையாக தாக்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மீட்கப்பட்டவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் இன்று வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவன் தூக்கிட்டு தற்கொலை
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பியன் ஆட்லோ தோட்டத்தில்இன்று வியாழக்கிழமை காலை 8 மணியளவில் வீடொன்றில் இருந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவனின் சடலம் அப்பிரதேச பொதுமக்களால் மீட்கப்பட்டது.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் 17 வயதுடைய ரவி நதீஷன் என தெரியவந்துள்ளது.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருவதோடு, இதற்கான காரணம் இதுவரையும் தெரியவில்லை விசாரணைகளின் பின் தெரியவரும் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவனின் சடலம் அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த மாணவன் உயர் தர வகுப்பில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjoy.html
பொலிஸ் திணைக்களம் சுதந்திரக் கட்சியின் கிளை சங்கமாக மாறியுள்ளது : பாலித- சிறைச்சாலைகள் பாதுகாப்பு பொலிஸார் வசம்
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 05:59.38 AM GMT ]
இலங்கை பொலிஸ் இந்தளவுக்கு கீழ் மட்டத்திற்கு செயற்படுவார்கள் என்ற யுகம் நாட்டில் என்றும் இருக்கவில்லை, பொலிஸ் திணைக்களம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை சங்கமாக மாறியுள்ளதாக ஐ.தே கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பொலிஸ் திணைக்களத்திற்கு ஏற்பட்டுள்ள அனர்த்தமான நிலைமையானது மிகவும் கவலைக்குரியது.
148 ஆண்டு என்ற நீண்ட வரலாற்றை கொண்ட பொலிஸ் திணைக்களம் நாட்டின் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் கீழ் நிலைக்கு சென்றுள்ளது.
கண்கள் குருடாகி போன சில பொலிஸ் அதிகாரிகள் முறையற்ற செயற்பாடுகள் குறித்து தொடர்ந்தும் சுட்டிக்காட்டிய போதிலும் உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை.
பொலிஸ் திணைக்களம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளமையே இந்த நிலைமைக்கு காரணம்.
பொலிஸ் திணைக்களத்திற்கு சுதந்திரமும் கௌரவமும் வழங்கிய 17வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் ஒரே இரவில் இரத்துச் செய்யப்பட்டதன் மூலம் பொலிஸாரின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளை அமைப்பாக மாறியுள்ளது.
மக்களின் வரிப்பணத்தில் நிர்வாகிக்கப்படும் ஒன்று அவ்வாறு செயற்பட முடியுமா என்பது கேள்விக்குரியது எனவும் பாலித ரங்கே பண்டார தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கமறியல் சிறையின் பாதுகாப்பு பொறுப்பு சிறைச்சாலை பொலிஸாரிடம் ஒப்படைப்பு
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலைகளில் சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறைச்சாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இதுவரை சிறைச்சாலை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.
விளக்கமறியல் சிறையில் இடம்பெறும் பல்வேறு மோசடிகளை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே சிறைச்சாலை திணைக்களத்திற்கு 50 மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மோட்டார் சைக்கிள்கள் நேற்று திணைக்களத்திற்கு கிடைத்ததாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோட்டார் சைக்கிள்கள் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலை பொலிஸாருக்கு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjo1.html
சர்வதேசத்தில் புலிகள்: இலங்கைக்கு அச்சுறுத்தல்- ருவன் வணிகசூரிய
[ வியாழக்கிழமை, 04 செப்ரெம்பர் 2014, 06:29.55 AM GMT ]
இலங்கைக்குள் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதம் அடியோடு அழிக்கப்பட்டாலும், சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய  தெரிவித்துள்ளார்.
சர்வதேச மட்டத்தில் விடுதலைப்புலிகளின் வலையமைப்பு வேகமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் இலங்கைக்கு பாரிய அச்சுறுத்தலாகும் ஆனால் தமிழ் மக்கள் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது.
அவர்கள் தவறான பாதையை தெரிவு செய்ய மாட்டார்கள் என ருவன் வணிகசூரிய  நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இலங்கைக்குள் இல்லை. யுத்த காலக்கட்டத்தில் இலங்கை பல அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்த போதும் தற்போது தேசிய அளவில் இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகள் எவையும் இல்லை.
எனினும் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டிருப்பது இலங்கையில் மட்டுமே சர்வதேச அளவில் இவர்களின் செயற்பாடுகள் இன்னமும் நடைபெற்று வருகின்றது.
யுத்த காலக்கட்டத்தில் சர்வதேசத்தில் இருந்து இயங்கிய விடுதலைப்புலிகளின் அமைப்புகளும் அதன்பின்னர் புலம்பெயர்ந்த தமிழர்களும் இன்று மேற்கத்தேய மற்றும் மத்திய நாடுகளில் இருந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டு கொண்டிருக்கின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கையை சர்வதேச பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாக்க நாம், நாட்டில் தேசிய பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளோம். அத்தோடு சர்வதேச பாதுகாப்பு செயற்பாடுகளுடனும் நாம் நல்ல முறையில் செயற்படுகின்றோம்.
எது எவ்வாறு இருப்பினும் தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பட்ட இன்னல்களை இன்னமும் மறக்கவில்லை. எனவே, அவர்கள் இப்போது பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் செயற்படுகின்றனர். இனியொருபோதும் அவர்கள் பயங்கரவாதத்தினை ஆதரிக்க மாட்டார்கள் என ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTYKUjo2.html

Geen opmerkingen:

Een reactie posten