[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 02:37.27 AM GMT ]
இந்தநிலையில் ஊவாவில் மூன்று இடங்களில் ஆளும் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் பலத்த போட்டி இருக்கும் என்று தேர்தல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி பதுளையில் பசறை, பதுளை மற்றும் ஹப்புத்தளை ஆகிய தொகுதிகளில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பலத்த போட்டி இருக்கும் என்று அவதானிகள் சுட்டுக்காட்டுகின்றனர்.
இதனையடுத்து குறித்து மூன்று தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரப் பணிகளை ஆளும் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்து விடப்பட்டார் தேர்தல்கள் ஆணையாளர்
ஊவா மாகாணசபை தேர்தல் காலத்தின்போது மொனராகலை மாவட்டத்தில் 2500 ரூபா வறட்சி நிவாரணம் வழங்கப்படும் விடயத்தில் தாம் சட்டமா அதிபரிடம் விளக்கங்களை எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சிக்கான நிவாரண நிதித் தொகையை பொருளாதாரத்துறை அமைச்சு மொனராகலை மாவட்டத்துக்கு வழங்க தீர்மானித்தது.
இதனையடுத்து தமக்கு கிடைத்த முறைப்பாட்டின்கீழ் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, குறித்த நிதி வழங்கலை ரத்து செய்தார்.
தேர்தல் பிரச்சாரக் காலத்தில் வழங்கப்படு;ம் இந்த நிதித் தொகை தேர்தலுக்கான லஞ்சமாக இருக்கும் என்று கருதியே அவர் குறித்த கொடுப்பனவை ரத்து செய்தார்.
எனினும் மொனராகலை விவசாயிகள் சிலர் தாக்கல் செய்த மனுவின் கீழ் உயர்நீதிமன்றம் குறித்த நிதித்தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த தீர்ப்பு குறித்து பொருளாதார அமைச்சின் செயலாளர் தமக்கு அறிவிக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு எனில் தாம் குறித்த வழக்கின் பிரதிவாதியாக குறிப்பிடப்படவில்லை என்றே கருதவேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இது தொடர்பில் சட்டமா அதிபரின் விளக்கத்தை கோரவுள்ளதாக ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfw5.html
இராணுவத்தின் உடல்மொழி ஆய்வு தலைவர்களுக்கான அச்சுறுத்தலா?
[ ஞாயிற்றுக்கிழமை, 14 செப்ரெம்பர் 2014, 03:23.07 AM GMT ]
தான் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு வரும் இராணுவப் புலனாய்வாளர்கள் பல்வேறு கோணங்களில் தன்னைப் படம் பிடிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரிடமும் அவர் இதுபற்றி எடுத்துக் கூறியிருந்தார்.
அதற்கு அவர் தன்னையும் இராணுவப் பலனாய்வாளர்கள் பின்தொடர்வதாகவும், அதனை தான் நேரில் கண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இஸ்ரேலிய பாணியில், தனது உடல் மொழியைப் படம் பிடிக்கும், இராணுவத்தின் செயல் தனது உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணும் நோக்கம் கொண்டதாக இல்லாவிட்டாலும், அது தனக்கு ஒரு மறைமுகமான அச்சுறுத்தல் என்பது போல விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
அதன் பின்னர் வவுனியாவில் நடந்த தமிழரசுக் கட்சியின் 15வது மாநாட்டில் உரையாற்றிய போதும் வடக்கு மாகாண முதலமைச்சர் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.
வடக்கில் இராணுவம் சும்மா புல்லைத் தின்று கொண்டிருக்கவில்லை என்றும், இங்குள்ள அனைவரினதும் விபரங்களையும் கணினிமயப்படுத்தி விபரம் சேகரிப்பதாகவும், முக்கியமான பிரமுகர்களின் உடல்மொழியை ஆய்வு செய்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இன்று உடல்மொழி ஆய்வு என்பது மிக முக்கியமான விடயமாக மாறியிருக்கிறது.
நடை, உடை, பாவனை என்று தமிழில் கூறும் வழக்கம் ஒன்று உள்ளது.
அதுதான், இந்த உடல்மொழி அசைவின் அடிப்படை இந்த மூன்றும் ஒருவரின் குணவியல்புகளையும், செயற்பாடுகள், எண்ணப்பாடுகளையும் குறிப்புணர்த்தக் கூடியவை.
ஒருவரின் இந்த மூன்று விடயங்களையும் தொடர்ச்சியாக ஆய்வுக்குட்படுத்தும் போது அவரைத் துல்லியமாகக் கணிக்க முடியும்.
உலகத் தலைவர்களின் உடல்மொழியைக் கொண்டு அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறானதாக இருக்கும் என்று கணிக்கும் முயற்சிகள் இப்போது தீவிரமடைந்துள்ளன.
அவ்வாறு தான் வடக்கு மாகாண முதலமைச்சரின் உடல்மொழியை கண்காணிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
அரசியலில் இராணுவத்தில் மட்டுமன்றி, விளையாட்டிலும் கூட உடல்மொழி என்பது முக்கியமானதாக கருதப்படும்.
குறிப்பாக கிரிக்கட் போட்டிகளில் தனது அணி வீரர்களை ஊக்குவிக்கும் உடல்மொழியை வெளிப்படுத்துவதற்கு இப்போது அணித் தலைவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
வெற்றிக்கு அது முக்கியமானதாக மாறிவருகிறது. அதுபோலவே அரசியலிலும; இராணுவத்திலும் கூட உடல்மொழி ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
ஏனென்றால் வெளியில் தனது செயல்களின் மூலம் மிகப் பலமான மனிதராக உருவகப்படுத்தப்பட்டவர்கள், உள்ளுக்குள் பலவீனமானவர்கள் என்பதை உடல்மொழி அசைவுகள் பல சந்தர்ப்பங்களில் காட்டிக் கொடுத்திருக்கின்றன.
அதுமட்டுமன்றி ஒருவரின் உடல்மொழியைக் கொண்டே அவர் என்ன நினைக்கிறார், என்ன செய்யப் போகிறார், அடுத்து என்ன முடிவை எடுப்பார் என்பதையெல்லாம் கணிக்கின்ற அளவுக்கு இதுபற்றிய ஆய்வுகள் வளர்ந்திருக்கின்றன.
இஸ்ரேல்தான் இந்த உடல்மொழி ஆய்வில் ஆரம்பத்திலிருந்தே ஈடுபாடு காட்டி வந்தது.
இஸ்ரேலுக்குச் சவாலக இருந்த பாலஸ்தீனத் தலைவர் யாசீர் அரபாத் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்களின் செயற்பாடுகள் குறித்து உடல்மொழி ஆய்வு மூலம் அந்த நாட்டின் உளவுப் பிரிவான மொசாட் கணிப்பீடுகளைச் செய்து வந்தது.
அரபுநாடுகள் சூழவிருக்கும் சின்னஞ்சிறிய இஸ்ரேலின் பாதுகாப்புக்கு, எல்லா வகையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டிய தேவை அந்த நாட்டுக்கு இருந்தது.
அதற்காக உடல்மொழி ஆய்வையும் தமது பாதுகாப்பு, புலனாய்வு அம்சங்களில் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டது இஸ்ரேல்.
அமெரிக்கா இப்போது தனது பாதுகாப்பு திட்டத்தில் உடல்மொழி ஆய்வுக்கான தனி அலகு ஒன்றை உருவாக்கியுள்ளது.
இது பற்றிய தகவல் கடந்த மார்ச் மாதமே அதிகாரபூர்வமாக வெளியே அறிவிக்கப்பட்டது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் உடல்மொழியை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையகமான பென்டகனில், Body Leads என்ற பெயரில் தனியான ஆய்வுப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
யு.எஸ்.ஏ. ருடே இதழில் ராய் லொக்கர் என்பவரே புட்டின்“ உள்ளிட்ட உலகத் தலைவர்களின் உடல் அசைவுகளை அமெரிக்கா ஆய்வு செய்கிறது என்ற தகவலை முதன்முதலாக அம்பலப்படுத்தினார்.
அதன் பின்னர் பென்டகனின் ஊடகச் செயலர் றியர் அட்மிரல் ஜோன் கிர்பி அதனை உறுதிப்படுத்தினார்.
ரஷ்ய அதிபராக மீண்டும் பொறுப்பேற்ற விளாடிமிர் புட்டினின் செயற்பாடுகள் அமெரிக்காவுக்கு பல சமயங்களில் கடும் எரிச்சலைக் கொடுப்பதாக இருக்கிறது.
குறிப்பாக உக்ரேன் விவகாரத்திலும் புட்டினின் முடிவுகள் அமெரிக்காவுக்கு ஆத்தரமூட்டக்கூடிய வகையில் உள்ளன.
இந்தச் சூழலில் தான் புட்டினின் உடல் அசைவுகள் ஆய்வு செய்யப்படும் விபரம் வெளியே கசியவிடப்பட்டது.
ஒருவகையில் இது புட்டினுக்கு விடுக்கப்பட்ட மறைமுகமான அச்சுறுத்தல் என்பதுடன் இன்னொரு வகையில் புட்டினைக் கண்காணிக்கிறோம், அவரது அடுத்தகட்ட நகர்வுகள் என்னவென்று கண்டறிந்து விடுவோம் என்று அமெரிக்கர்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடியதாகவும் இந்தச் செய்தி அமைந்திருந்தது.
நிக்ஸனின் நிர்வாகத்தின் போது இந்த ஆய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டது. அப்போது அதற்குத் தலைமை வகித்தவர் அன்றூ மார்ஷல்.
இப்போது Body Leads ஆய்வு அலகின் பணிப்பாளராக பிரென்டா கேனர்ஸ் என்ற கடற்படை போர்க்கல்லூரியின் ஆய்வாளராக இருக்கிறார்.
முன்னதாக இந்த ஆய்வுப் பிரிவு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ் இயங்கி வந்தது.
2003ம் ஆண்டுதான் இது பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
2009ம் ஆண்டிலிருந்து இந்த திட்டத்திற்காக அமெரிக்கா ஆண்டுதோறும் 3 லட்சம் டொலர்களை செலவிட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, இஸ்ரேல் பாணியில் தான் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களும் தமது உடல்மொழியை ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
விடுதலைப்புலிகளும் இந்த உடல்மொழி விவகாரத்தில் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொண்டனர் என்பது முக்கியமானது.
குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல்மொழி அசைவைக் கொண்டு அவரது குணவியல்புகளை மதிப்பிட முடியாத வகையில் ஒளிப்படங்கள் வெளியிடப்படுவதே வழக்கம்.
இயல்பில் அவர் ஒரு மென்மையான கூச்ச சுபாவமுள்ள உரத்துப் பேசாத மனிதர் என்று அவரை நேரில் செவ்வி கண்ட அனிதா பிரதாப் போன்றவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட அவரது ஒளிப்படங்கள் அத்தகைய தோற்றத்தை ஒருபோதும் பிரதிபலிப்பதாக இருப்பதில்லை.
ஆனாலும் அதையும் மீறி ஒளிப்படங்களை வைத்து பிரபாகரனின் நகர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறன் தமிழ் மக்களுக்கு இருந்தது என்பதை மறுக்க முடியாது.
யாழ்ப்பாணத்தை இழந்து வன்னியில் நிலைகொண்ட பின்னர் மீசையை மழித்துக் கொண்டிருந்த புலிகளின் தலைவர் பிரபாகரன் 2004ம் ஆண்டு போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்த போது மீண்டும் மீசையை வளர்க்கத் தொடங்கினார்.
மீசையுடன் அவரது படங்கள் வெளியான போது பிரபாகரன் போருக்குத் தயாராகி விட்டார் என்று பரவலாகவே பேசப்பட்டது.
அதாவது பிரபாகரனின் மீசை போருக்கான சமிக்ஞையாக அடையாளம் காணப்பட்டது. அது ஒருவகையில் உண்மையும்கூட.
புலிகள் 2004ம் ஆண்டு இறுதியிலேயே போருக்குத் தயாராகியிருந்தனர்.
ஆனால் சுனாமி தான் அதனைத் தடுத்திருந்தது.பிரபாகரனின் மரணத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட படங்களில் அவர் எத்தகைய இறுக்கமான சூழ்நிலைக்குள் இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியிருந்தன.
கொழும்பில் விமானம் மூலம் தாக்குதல் நடத்திய கரும்புலிகளுடன் எடுத்துக்கொண்ட படங்களில் அவரது இறுக்கமான தோற்றம் வெளிப்பட்டது.
முன்னர் புலிகளின் தலைவர்கள் தளபதிகளின் உடல்மொழியை ஆய்வு செய்து வந்த இராணுவப் புலனாய்வுத்துறை இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.
இது அவர்களின் எதிர்காலத் திட்டங்களைக் கணிப்பதற்கு அவர்களுக்கு உதவக்கூடும்.
அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள், இந்த விவகாரத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்பதையே முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரை எடுத்துக்காட்டியிருக்கிறது.
சுபத்ரா
http://www.tamilwin.com/show-RUmsyJSYKUfw6.html
Geen opmerkingen:
Een reactie posten