படுவான்கரையில் அமைச்சர் ஒருவர் உருவாகி இருந்தால், படுவான்கரை நிலத்தில் அரைவாசி நிலப்பரப்பில் சிங்களவர்கள் குடியேறி இருப்பார்கள். இதனைத்தான் தமிழ் அமைச்சர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரவேசசபைக்கு உட்பட்ட கெவுளியாமடு கிராமத்தில் நேற்று மக்களை சந்திதித்து உரையாடிய போதே இதனைக்கூறினார்.
அங்கு மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றுகையில்.
படுவான்கரை பிரதேசம் என்பது தமிழ்த்தேசியத்தினை நேசிக்கின்ற, நேசித்து வருகின்ற ஒரு பிரவேசமாகும். இங்குள்ள சிலர் அற்பசொற்ப ஆசைகளுக்காக மாற்றுக்கட்சியில் இணைந்து கொண்டார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த தமிழர்களும் அவர்கள் பின்னால் போகமாட்டார்கள் என்பதனை காலம் அவர்களுக்கு காட்டி நிற்கும் என்பதனை அனைவரும் உணர்ந்திருக்கின்றார்கள்.
இதனை புரிந்து கொள்ளாத அரசாங்கத்தில் இருக்கும் சில தமிழ் அமைச்சர்கள் படுவான்கரையில் தமிழ் அமைச்சர் ஒருவரை எதிர்காலத்தில் உருவாக்க வேண்டும் எனவும் அவ்வாறு உருவாக்கினால் பல அபிவிருத்திகளை செய்யமுடியும் எனவும் பல மேடைகளில் பேசி வருகின்றனர்.
படுவான்கரை பிரதேசத்தில் உள்ள பெயர்பெற்ற தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயம் தாந்தா கம என பெயர்மாற்றப்பட்டிருந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
இவர்கள் அரசாங்கக்கட்சியில் இருந்து கொண்டு மக்களுக்குச் செய்யும் சேவையை அனைவரும் கண்டிருப்பார்கள் தானே படுவான்கரையில் அமைச்சர் ஒருவர் இல்லாததன் காரணமாகத்தான் அந்த மக்கள் எவருக்கும் சோரம்போகாத தமிழ் உணர்வு மிக்கவர்களாக இருப்பதன் காரணமாகத்தான், இன்றைய சூழ்நிலையில் படுவான்கரை நிலம் ஓரளவு காப்பாற்றப்பட்டிருக்கின்றது.
பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட கெவுளியாமடு எனும் இடத்தில் கடந்த வருடம் மட்டக்களப்பில் இருக்கும் பௌத்த பிக்கு ஒருவர் சட்டவிரோதமாக சிங்களக்கடியேற்றத்தினை செய்ய முற்பட்டபோது, அதனை தடுத்து நிறுத்தி எமது மக்களின் பூர்வீக நிலங்களை காப்பாற்றியவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் என்பதனை யாரும் மறந்துவிட முடியாது.
அதுமட்டுமல்ல மாற்று இனங்களால் தமிழர்களது பூர்வீக நிலங்கள் எங்கெங்கெல்லாம் அபகரிக்கப்பட்டு வருகின்றதோ அங்கெல்லாம் சென்று அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்வது அதற்கான தீர்வினை வேண்டி நிற்பவர்களும் த.தே.கூட்டமைப்பினர்தான் என்பதனை இவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இலங்கை முழுவதிலும் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு எமது வரிப்பணத்தில் இருந்து 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகின்றது இச்செயற்பாடானது முழு இலங்கையருக்கும் செய்யப்படும் ஒரு நடைமுறையாகும். ஆனால் மட்டக்களப்பில் உள்ள அரசாங்கத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் இம்மாவட்டத்திற்கு மாத்திரம்தான் இந்த நிதி ஒதுக்கப்படுவதாகவும் இதற்கு தாங்கள்தான் காரணம் என்று மக்களுக்கு பிழையாக பிரச்சாரத்தினை செய்து அதில் அரசியல் இலாபம் தேடுகின்றார்கள்.
அத்தோடு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 10 இலட்சம் ரூபாயிலிருந்து 5 வீதத்தினை தாங்கள் கொள்ளையடித்து விட்டுத்தான் இவ்வாரான வீர வசனங்களைப் பேசுகின்றார்கள் என்பதனை தமிழ் மக்களாகிய நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.
எமது கட்சி அபிவிருத்திக்கு என்றுமே தடையான கட்சி அல்ல மாறாக மக்களுக்கு கிடைக்கும் அபிவிருத்தி பணத்தில் கொள்ளையடித்து அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று நினைத்தவர்களும் அல்ல. அவ்வாறுதான் கொள்ளையடித்து கட்சியை வழக்கவேண்டும் என்ற தேவைப்பாடும் எமது கட்சிக்குக்கிடையாது.
வெறுமனே அபிவிருத்தியை வைத்துத்தான் அபிவிருத்தி செய்யு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாடு எங்களிடமில்லை அபிவிருத்தி என்பது நிரந்தர சமாதானத்துடன் கூடிய அபிவிருத்திதான் எமது மக்களுக்குத்தேவை அதற்காக வேண்டித்தான் 65 வருடகாலமாக அகிம்சை என்றும், ஆயுதபோராட்டம் என்றும் போராடிக்கொண்டு வந்து தற்போது இன்று சர்வதேச ரீதியாக இராஜதந்திரப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்றோம்.
இதனைத்தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு முனைப்புக்களைக்காட்டி வருகின்றது அதில் ஒன்றுதான் இடைத்தரகர்கள் போன்று அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்குபவர்கள் சில பொய்யான பரப்புரைகளை மேற்கொள்கின்றார்கள்.
இம்மாவட்டத்தில் உள்ள மக்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பவர்களாக இருந்திருந்தால் இன்று 75 வீதமாக இருக்கும் தமிழர்களுடைய வீதாசாரம் 50 வீதமாக குறை வாய்ப்பிருந்திருக்கும் இதனை இம்மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள் புரிந்து கொள்ளவேண்டும்.
வீதாசார தேர்தல் முறை என்பது அதிகூடிய வாக்குகளை பெறும் கட்சிதான் கூடிய பிரதிநிதித்துவங்களை பெற முடியும் 25 வீதமாக இருக்கும் முஸ்லிம் சகோதரர்களுடன் தமிழர்கள் இணைந்து அரசாங்கக்ட்சியில் போட்டியிட்டால் நிச்சயமாக எந்த ஒரு தமிழனும் பிரதிநிதித்துவத்தினை பெறமுடியாது.
இம்மாவட்டத்தில் தமிழர்களது பிரதிநிதித்துவம் அதிகரிக்க வேண்டுமானால் உண்மையிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஆதாரித்தால் மாத்திரமே அது சாத்தியமாகும். அதனை விடுத்து வெறுமனே சினிமாவில் வரும் செந்தில், கவுண்டமணியின் வாழைப்பழக்கணக்கினைப் போன்று அரசாங்கத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் கூறிக்கொண்டிருப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லாமல் போய்விடும் எனவும் கூறினார்
http://www.tamilwin.com/show-RUmsyJRaKVis3.html
Geen opmerkingen:
Een reactie posten