[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 01:14.16 PM GMT ]
களுத்துறையில் சங்கிலி திருடியவர் இன்று அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே மங்கள இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்ஷ தலைமையின் கீழ் ஒரு நாட்டுக்குள் இரண்டு உலகம் உருவாகியுள்ளது.
எனவே தற்போதைய காலத்திற்கு “ஒரே நாடு இரண்டு உலகம் என்ற கோஷமே பொருத்தமானதாகும்.
ராஜபக்ஷவின் தலைமை உறவுகள், நண்பர்கள், அடியாட்கள் போன்றோர் முதலாம் உலகத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். இவர்கள் கொழும்பில் இரவு வேளைகளில் வீதிகளை மூடி லெம்போகினி வர்க்க கார்களில் ஓட்ட பந்தயம் செல்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகத்தில் வாழ்வோர் தமது பாரம்பரிய இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.
இவர்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாது கஸ்டப்படுவதாகவும் பெற்றோர் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் குடும்பத்துடன் ஆறு அல்லது கடலில் சென்று விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலை காணப்படகின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 1997ஆம் ஆண்டு பிரதேச சபைக்குத் தெரிவான நபர் இன்று கோடீஸ்வரனாக உள்ளதாகவும் மங்கள தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகியோர் மீது தனக்கு தனிப்பட்ட கோபம் கிடையாது என்றும் ஆனால் அவர்களது கொள்கையில் முரண்பாடு காணப்படுவதாகவும் இதன்போது மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgp1.html
இம்முறை 24,540 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி
[ புதன்கிழமை, 10 செப்ரெம்பர் 2014, 01:40.45 PM GMT ]
2013/ 2014 ஆம் பல்கலைக்கழக கல்வியாண்டில் இம்முறை 24,540 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
கடந்த கல்வி ஆண்டில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கபபட்ட மாணவர் தொகையை விடவும் இவ்வாண்டில் 1000 மாணவர்கள் அதிகப் படியாக உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களை அந்தந்த கற்கைத் துறைகளுக்கு இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் கடந்த சனிக்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டன.
மாவட்ட மட்டத்திலான, தேசிய மட்டத்திலான புள்ளிகளின் அடிப்படையில் கற்கை நெறிகளைத் தொடர்வதற்காக மாணவர்களுக்கான அனுமதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியின் முதற்கட்ட பயிற்சி நடவடிக்கைகள் கடந்த 7ஆம் திகதி ஆரம்பித்துள்ளது. 7ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இந்த முதல் கட்டப் பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
இரண்டாம் கட்டப் பயிற்சிகள் ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையும், மூன்றாம் கட்டப் பயிற்சிகள் ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 21ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளது. இப்பயிற்சி நெறிகளில் 23,500 மாணவர்கள் பங்குகொள்வர்.
உயர்கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் இந்த தலைமைத்துவப் பயிற்சிகளுக்கு பல்கலைக்கழ மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஒத்துழைப்பும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmsyJSUKUgp3.html
Geen opmerkingen:
Een reactie posten