[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 08:05.57 AM GMT ]
இது நேரம் கிடைத்தால் மாதாந்தம், இல்லாவிட்டால், இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடக்கின்ற வழக்கமான சந்திப்புத்தான்.
வெளிநாட்டுச் செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது, மூன்றாவது பதவிக் காலத்துக்கும் தான் தெரிவு செய்யப்படுவேன் என்று உறுதிபடத் தெரிவித்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
தான் இங்கேயே இருப்பேன் என்றும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தாம் திட்டமிட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், தமது அரசாங்கம் 2020ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு செயற்படுவதாகவும் கூறியிருந்தார்.
அப்போது, செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு, 2020ஆம் ஆண்டு ஓய்வு பெறப் போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது, அதனை 2020ஆம் ஆண்டு கேளுங்கள் என்று பதிலளித்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட அந்தக் கருத்துகளிலிருந்து, அடுத்தாண்டில் ஜனாதிபதி தேர்தலை அவர் நடத்தப் போகிறார் என்பது உறுதியாகியது.
இன்னும் ஐந்தாண்டுகளுக்குத் திட்டமிடுவதாகவும், 2020ஆம் ஆண்டை இலக்கு வைத்துச் செயற்படுவதாகவும் அவர் கூறியதிலிருந்து திடீர் தேர்தல் ஒன்றுக்குத் தயாராகிறார் என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.
அதுமட்டுமன்றி, 2020ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி பதவியில் தானே இருப்பேன் என்ற உறுதியுடன் அவர் இருப்பதையும் உணர முடிகிறது. அதற்குப் பின்னர் கூட, பதவியிலிருக்கும் வாய்ப்புகளை அவர் நிராகரிக்கவில்லை.
அதாவது, 2020ஆம் ஆண்டு ஓய்வு பெறுவது குறித்து அப்போதே முடிவு செய்யப்படும் என்பதையும் அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று முன்னர் செய்திகள் வெளியாகின. பின்னர், மார்ச் மாதம் நடத்தப்படுமென்றும் கூறப்பட்டது.
அதற்கிடையில், வரும் ஜனவரி மாதம் 13ஆம் திகதி தொடக்கம், 15ஆம் திகதி வரை பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ், இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவு ள்ளதால், அவரது வருகைக்குப் பின்னர், தேர்தலை நடத்துவதில் சிக்கல்களுள்ளன.
எனவே, அதற்கு முன்னதாக, வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்துக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது.
அரசியல் சூழல் மற்றும் ஜோதிடக் கணிப்புகள் என்பன இந்த தேர்தலுக்கான நாள் மற்றும் காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தவகையில் வரும் ஜனவரி 3ம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 20ம் திகதி நடத்தப்படவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதித் தேர்தல் பற்றிய உறுதியான செய்திகள் வெளியாகுமென்று எதிர்பார்க்கலாம்.
எதிர்வரும் நவம்பர் 19ம் திகதிக்கு முன்னதாக, ஜனாதிபதி தேர்தல் பற்றிய முறைப்படியான அறிவிப்பு எதுவும் வெளியிடப்பட முடியாது. ஏனென்றால், ஜனாதிபதி ஒருவர் பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே, மீண்டும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட முடியும். என்றாலும், ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை அரசாங்கம் வரும் 21ம் திகதிக்குப் பின்னர் தீவிரப்படுத்தலாம்.
மூன்றாவது பதவிக்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே, ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலுக்கு அழைப்பு விடுக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனென்றால், இவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்வதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன.
அதைவிட, இந்தப் பதவியை கைவிட் டுச் செல்வதற்கான காரணங்களும் அவரிடம் ஏதுமில்லை, அதற்குரிய வாய்ப்புகளும் இல்லை.
2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை பதவியில் இருக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருக்கிறார்.
ஆனாலும், இரண்டு ஆண்டுகள் முன் கூட்டியே அடுத்த ஜனாதிபதி தேர்தலை நடத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதற்குக் காரணம், 2016ஆம் ஆண்டுக்கு முன்னர், தமது அரசியல் செல்வாக்கு பறி போய் விடுமோ என்ற அச்சம் தான்.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழியை அப்படியே அவர் கைக்கொள்கிறார்.
முன்னைய ஜனாதிபதிகளான, ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கோ, சந்திரிகா குமாரதுங்கவுக்கோ, மூன்றாவது தடவையும் போட்டியிடும் வாய்ப்பிருக்கவில்லை.
அதனால் அவர்கள், தமது இரண்டாவது பதவிக்காலத்தை கிட்டத்தட்ட ஆறாண்டுகள் வகித்திருந்தனர். ஆனால், கடந்த 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதும், மூன்றாவது தடவையும் போட்டியிடுவதற்கான அரசியலமைப்புத் தடைகளை நீக்கியிருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
18ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியாகப் பதவி வகிக்க ஒருவருக்கு இருந்து வந்த உச்ச மான காலவரையறை நீக்கப்பட்டது.
இந்த வழியாகவே, தனது மூன்றாவது பதவிக்காலத்துக்காக போட்டியிடும் முயற்சிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறங்கியிருக்கிறார்.
இந்நிலையில், மூன்றாவது தடவையும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவினால் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கொழும்பு அரசியலில் இதுபற்றிய விவாதங்கள் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்தச் சர்ச்சையைத் துவக்கி வைத்த பெருமை, முன்னாள் பிரதம நீதியரசரான சரத் என்.சில்வாவையே சாரும். அவர்தான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு மூன்றாவது பதவிக்காலத்துக்குப் போட்டியிடும் தகைமையில்லை என்று அரசியலமைப்பு ரீதியான விவாதத்தைக் கிளப்பி விட்டவர்.
17ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, 18ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம், ஏற்படுத்தப்பட்ட மூன்றாவது தடவையும் போட்டியிடக் கூடும் என்ற வசதி பொருந்தாது என்கிறார் அவர்.
அதுபோலவே, ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்ட நிபுணர்களில் ஒருவருமான விஜேதாச ராஜபக்ஷ, மூன்றாவது பதவிக்காலத்துக்காக, போட்டியிட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்புமனுத் தாக்கல் செய்தால் அதனை நிராகரிக்கும் உரிமை, தேர்தல் ஆணையாளருக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இன்னொரு பக்கத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையும் போட்டியிட முனைந்தால், தாம் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் என்று ஜே.வி.பி.யும் கூறியிருக்கிறது.
ஆக, மூன்றாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டுவது என்பதை விட, அதில் போட்டியிடுவதை உறுதிப்படுத்திக் கொள்வதிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிக்கல்கள் உள்ளன.
18ஆவது திருத்தச்சட்டத்தை உருவாக்கிய போது, இத்தகைய சிக்கல்களை யாரும் முன்வைத்திருக்கவில்லை.
அதுபோலவே, 18ஆவது திருத்தச்சட்டம் தமக்கான எல்லாத் தடைகளையும் அகற்றி விட்டதாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் நினைத்திருந்தார். ஆனால், கிணறு வெட்டப் பூதம் கிளம்பிய கதையாக, சட்டச் சிக்கல்கள் இப்போது முளைக்கத் தொடங்கியுள்ளன.
ஆனால், மூன்றாம் முறை போட்டியிடும் தகைமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இருப்பதாக, சட்டநிபுணர்கள் தெரிவித்துள்ளதாக, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியிருக்கிறார்.
இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறியும் முயற்சியில் இறங்கலாமென்று தெரிகிறது.
உயர்நீதிமன்றம் கூறப்போகும் கருத்து ஜனாதிபதிக்குப் பாதகமாக அமைந்தால், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்குப் பதிலாக, அரசியலமைப்பில் இன்னொரு திருத்தத்தை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கலாம். அதற்குள் அரசாங்கம் எதிர்பார்க்கின்ற நல்ல நேரம் போய்விடும் ஆபத்துள்ளது.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருந்தாலும் கூட, மஹிந்த ராஜபக்ஷக்கு, மூன்றாவது தடவை போட்டியிடுவதை அவரால் தன்னிச்சையாகத் தீர் மானிக்க முடியாத நிலையொன்றே இப்போது ஏற்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஒருவரால், எல்லாவற்றையும் செய்ய முடியுமாக இருந்தாலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், தனது நிலையைத் தானே தீர்மானிக்க முடியாத கட்டம் இப்போது தோன்றியிருப்பது அவரது துரதிஷ்டமே.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiu0.html
முல்லைத்தீவில் இராணுவத்திடமிருந்து காணியை மீட்க போராடியவர் திடீர் மரணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 செப்ரெம்பர் 2014, 08:08.11 AM GMT ]
அவர் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்ததாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை படைமுகாமிற்கு முன்னால் வைத்து, அவரின் உறவினர்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றிணை நேற்றைய தினம் முன்னெடுத்துள்ளனர்.
குறித்தசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதுக்குடியிருப்பு மாத்தளன் வீதியில் விடுதலைப் புலிகள் காலத்தில் இயங்கி வந்த பொன்னம்பலம் வைத்தியசாலை 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் படைமுகாமாக மாற்றப்பட்டது. இதற்காக பொன்னம்பலம் வைத்தியசாலை காணியுடன் சேர்த்து பொதுமக்களின் காணிகளும் படைமுகாமிற்காக எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களுடைய காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் பலதடவைகள் கோரிக்கை விடுத்து வந்த போதும் அவை விடுவிக்கப்படாத நிலையில் இருந்து வருவதுடன், விடுதலைப் புலிகள் அந்தப் பகுதியை பயன்படுத்தினர் என படையினர் தொடர்ச்சியாக காரணம் கூறி வருகின்றனர்.
குறித்த படைமுகாம் அமைந்துள்ள பகுதியில் கனகசபை சிங்கரட்ணம் என்பவரின், காணியும் நான்கு வீடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தன்னுடைய காணிகளை மகள்களுக்கு சீதனமாக வழங்கி விட்டதாகவும், தன்னுடைய காணியையும் வீட்டையும் தன்னிடமே வழங்குமாறும் அவர் பல தடவைகள் படையினரிடம் கேட்டு வந்ததாகவும், எனினும் அவ்வாறு வழங்க மறுத்த படையினர் அந்தக் காணி அரசுடமையாக்கப்பட்டு விட்டதாக கூறியதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தன்னுடைய வீட்டை பார்ப்பதற்கு அனுமதிக்குமாறு படையினரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கமைவாக படையினர் அவருடைய வீட்டை பார்க்க அனுமதித்ததாகவும் ,பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்து மிகுந்த கவலையுடன் அவர் காணப்பட்டதாகவும் கூறும் உறவினர்கள் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை திடீரென சுகயீனமுற்று மரணமடைந்ததாகவும் கூறினர்.
இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலத்தை இறுதியாக அவருடைய வீட்டில் சில மணிநேரம் வைப்பதற்கு உறவினர்கள் நேற்றையதினம் படையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் அவ்வாறு அனுமதிக்க முடியாது என படையினர் மறுத்து விட்டனர்.
பின்னர் நேற்றையதினம் பிற்பகல் 2 மணியளவில் அவரது சடலம் இறுதிக் கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்பட்ட போதும், உறவினர்கள் மீண்டும் அனுமதி கேட்டுள்ளனர். அதற்கும் அனுமதி மறுத்த படையினர் படைமுகாமைச் சுற்றி படையினரை நிறுத்தி பாதுகாப்பு முன்னேற்பாடு செய்திருந்தனர்.
மேலும் அனுமதியை வழங்க உறுதியாக மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் இறந்தவரின் சடலத்தை படைமுகாமின் வாயிலில் வைத்த உறவினர்கள் சடலத்திற்கு முன்பாக இருந்து ஒப்பாரியிட்டு அழுது, கேட்டபோதும் படையினர் அனுமதி வழங்க மறுத்துள்ளனர். இதனையடுத்து ஏமாற்றமடைந்த உறவினர்கள் சடலத்தை அங்கிருந்து தகனத்திற்காக எடுத்துச் சென்றனர்.
மேற்படி இறுதிச் சடங்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோதராதலிங்கம் கலந்து கொண்டிருந்ததுடன், படையினரிடம் அவர் அனுமதியும் கேட்டிருந்தார். அவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTbKUiu1.html
Geen opmerkingen:
Een reactie posten