தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 12 september 2014

பேச்சுவார்த்தைக்குரிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும்: மாவை சேனாதிராஜா !



நாங்கள் பேச்சுவார்த்தைக்கு மாறானவர்கள் அல்ல. ஆனால் பேசுகின்ற விடயங்கள் மற்றும் பேசும் தரப்புக்கள் நியாயமானவையாக இருக்க வேண்டும் என்பதில் திடமாக இருக்கின்றோம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பாணத்திற்கு வரவேற்கும் நிகழ்வு கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்திய ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழரசு கட்சியின் தலைவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு கடந்தவாரம் வவுனியாவில் நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது. இதன் போது பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
அன்றடாம் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வருகின்ற நடைமுறைப் பிரச்சினை நிறுத்தப்பட்டு நிரந்தர அரசில் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இங்கு நில ஆக்கிரமிப்புக்கள், சிங்கள மயமாக்கல், இராணுவ மயமாக்கல் நிறுத்தப்பட்,டு அகதிகளாக இடம்பெயர்ந்திருக்கின்றவர்கள் தமது சொந்த நிலத்தில் குடியமர்த்தப்பட்டு தொழில் நடவடிக்கைகளுக்கும் அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் இதற்கு இங்கிருந்து இராணுவம் வெளியேற வேண்டுமென்றும் தீர்மானம் எடுத்திருக்கின்றோம்.
இந்நிலையில் இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் எத்தனையோ ஆண்டு காலம் எத்தனையோ அரசாங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கின்றது.
அதேவேளை மகிந்த ராஐபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடனும் பேசியிருக்கின்றோம். இந்தப் பேச்சுவார்த்தையின் போது திட்டவட்டமான நல்லெண்ணமோ திடசங்கற்பமோ எதனையும் அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கவில்லை. 
அதாவது கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அரசின் வேண்டுகோளுக்கு அமைவாக முன்வைக்கப்பட்ட பிரேரனைகள் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் குறிப்பாக ஒரு வருடத்தின் பின்னராக எந்தவிதத் தீர்வுகளும் இல்லாமல் அரசாங்கவே வெளியேறிச் சென்றது.
ஆனால் தற்போது மீண்டும் பேசுவதற்குத் தயாரென்று ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ கூறியிருக்கின்றார். இதன் போது பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனையவை தொடர்பில் பேசப் போவதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
இவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில் மக்கள் எதிர்நோக்குகின்ற அன்றாடப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதிலளித்துவிட்டு அதனை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதனூடாக பேச்சுவார்த்தைக்கான சூழல் ஏற்படுத்த வேண்டும். அந்தச் சூழல் பேச்சுக்கான சூழலாக அமைந்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இதேவேளையில் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் குறிப்பிட்டதுபோன்று அரசிற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டுமாயின், அதில் மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் அவசியமாகும்.
ஏனெனில் கடந்த காலங்களிலும் இரண்டு தரப்பினர்களுக்கும் இடையே இவ்வாறான பேச்சுக்கள் நடைபெற்றிருந்தது. அதில் அரசாங்கம் அக்கறையில்லாமல் செயற்பட்டதுடன் அதே மனோநிலையுடனே யேதற்போதும் இருந்து வருகின்றனர்.
இத்தகைய நிலைமைகள் காரணமாகவே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டுமென நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
இவ்வாறு முன்றாம் தரப்பு மத்தியஸ்துடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். இதற்குரிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டு சர்வதேச சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்றார்.
கிளிநொச்சியில் மாவை சேனாதிராஜாவுக்கு வரவேற்பு நிகழ்வு
இலங்கை தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக பதவியேற்றுள்ள மாவை. சேனாதிராஜாவுக்கு கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சிக்கிளையின் சார்பில் இன்று வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்தின் கட்சியின் அலுவலகமான அறிவகத்தில் கட்சியின் மாவட்டக்கிளையின் தலைவரும் பா.உறுப்பினருமான சி.சிறீதரன் தலைமையில் இவ் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில், தலைவர் மாவை. சேனாதிராஜாவுக்கு வடமாகாணசபை அமைச்சர் குருகுலராஜா உறுப்பினர் அரியரத்தினம் கரைச்சி பிரதேசபை உபதவிசாளர் நாவை.குகராஜா கரைச்சி பிரதேசசபை உபதவிசாளர் உறுப்பினர்கள் கட்சியின் மாவட்டக்கிளையின் இளைஞர் அணி மகளிர் அணி பிரதேசக்கிளையை சேர்ந்தவர்கள் என பெருமளவான ஆதரவாளர்கள் தொண்டர்கள் மாலைகள் அணிவித்து, பொன்னாடைகள் போர்த்தி மதிப்பளித்து வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தனர்.
நிகழ்வில் நன்றி தெரிவித்து பதிலுரை நிகழ்த்திய தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் மாவை.சேனாதிராஜா மேலும் உரையாற்றுகையில்,
தனக்கு அளிக்கப்பட்ட இந்த வரவேற்பு தனக்கு இருக்கிற மக்கள் பணியை மேலும் தெளிவுபடுத்துகின்றது என்றும், தந்தை செல்வா பாசறையிலும் சிறையிலும் தனக்கு கிடைத்த அனுபவங்கள் பற்றியும், கட்சியின் மூத்த தலைவர் உடனான அனுபவங்கள், தம்பி பிரபாகரனுடனான நட்பு அனுபவங்கள் பற்றியும் ஆழமான உணர்வுடன் பகிர்ந்துகொண்டார்.
நான் என்பதற்கு அப்பால் நாங்கள் எல்லோரும் எமது தமிழ் மக்களின் விடுதலைக்காக உழைப்போம் என வேண்டுகோள் விடுத்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyJSWKUfp7.html

Geen opmerkingen:

Een reactie posten