தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 8 september 2014

ஐ.நா விசாரணை குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்கவும்! வைகோ தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்!

ஜனாதிபதி மஹிந்த - கியூபா வெளிவிவகார அமைச்சர் இன்று சந்திப்பு
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 02:19.20 PM GMT ]
இலங்கை வந்துள்ள கியூபா வெளிவிவகார அமைச்சர் புரூனோ எட்வாடோ பரில்லாவுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் நடைபெற்றது.
இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது, கியூபா இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
கியூபா, அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஆதரவளிக்க விருப்பத்துடன் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் புரூனோ எட்வாடோ குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUhq1.html

இரு கால்களை இழந்த முன்னாள் போராளியின் இசைத்தட்டு வெளியீடு
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 02:30.24 PM GMT ]
முன்னாள் போராளியான நிமால் என்பவரின் “வலியின் வரிகள்” காணொளி இசைத்தட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி. சிவமோகன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.
இன்று செல்வபுரத்தில் நடைபெற்ற வலி சுமந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் இந்த இசைத்தட்டு வெளியிடப்பட்டது.
காணொளி பேழையின் முதல் பிரதியை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பெற்றுக்கொண்டார்.
இரண்டு கால்களையும் இழந்த ஒருவரால் இந்த சாதனை முயற்சி இசைத்தட்டாக வடிவம் பெற்றமைக்கு நிகழ்வில் கலந்து கொண்ட பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும் நிமாலின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றதால் இன்று செல்வபுரம் கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மதிப்புரை வழங்கிய யோ.புரட்சி, நிமாலின் வலிகள் பற்றியும், இசைத்தட்டு தயாரிப்பாளர் நிமால் அடைந்த வேதனைகள் பற்றியும் விபரித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற வலி சுமந்த மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வு
இலங்கை இந்து பேரவையின் ஆதரவுடன் வலிசுமந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் செல்வபுரம், யூதா கோவிலில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், ந.சிவசக்தி ஆனந்தன், இலங்கை இந்து பேரவையின் தலைவர் வி. ராஜேந்திரா, இலங்கை இந்து பேரவையின் வவுனியா மாவட்ட இணைப்பதிகாரி நடராசா சுதாகரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் து.ரவிகரன், தியாகராசா, இந்திரராசா ஆகியோருடன் மேலும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
போரின் கொடூரத்தினால் பாதிக்கப்பட்டு, பெற்றோரை இழந்து, பாடசாலைக் கல்வியை தொடர முடியாது வலி சுமந்த 122 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தினால் அபிஷா தனியார் வைத்தியசாலையின் அனுசரணையுடன்  வட்டுவாகல் பெண்கள் கிராமிய அபிவிருத்தி சங்கத்திற்கு  கணினியும் வழங்கப்பட்டது.
மேலும், வன்னி குறோஸ் சுகாதார நிறுவனத்தால் சுய தொழில் ஊக்குவிப்பு நன்கொடையாக 25,000.00 ருபாய், மாமூலை சுயதொழில் குழுவிற்கு வழங்கப்பட்டதுடன்  செல்வபுரம் விளையாட்டு கழகத்திற்கா 40,000 ருபாய் அன்பளிப்பும் வழங்கப்பட்டது.
வட மாகாண சபை உறுப்பினரான வைத்திய கலாநிதி சி;. சிவமோகன் அவர்கள் ஊடான பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து ரூபா 135,000.00, ரூபா 50,000.00, ரூபா 25,000.00 முறையே செல்வபுரம் அந்தோனியார் கோவில், துர்க்கை அம்மன் கோவில், முன்பள்ளி ஆகியவற்றுக்கு நிகழ்வு ரீதியாக பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,
யுத்தம் முடிந்து ஐந்து வருடங்கள் முடிந்து விட்ட நிலையிலும் எமது குழந்தைகள், எமது பிள்ளைகள், எமது பிரஜைகள், எமது கிராமத்தவர்கள், எமது சுற்றத்தார் இவர்களுக்கு இன்னும் எவ்வளவு தூரத்துக்கு நாங்கள் உதவிகளை வேண்டி நிற்கின்றோம் என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சான்றாகும்.
முல்லைத்தீவு மாவட்டம் இறுதி யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாவட்டமாகும். யுத்தத்தில் மாத்திரம் அல்ல, யுத்தத்துக்கு முன்பும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாவட்டம்.
செல்வபுரம் கிராமம் யுத்தத்தினாலும், சுனாமியினாலும் அறுநூறு பேரை இழந்த கிராமம். இந்த கிராம மக்கள் இந்த மண்ணுக்கு இந்த மாவட்டத்துக்கு ஆரம்ப காலங்களில் செய்த உயிர்த்தியாகங்கள் என்றும் வீண்போகக்கூடாது.
இந்த குழந்தைகளின் எதிர்காலம் என்பது சரியான முறையில் திட்டமிட்டு முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறுபட்ட உதவிகள் தன்னார்வ அமைப்புகளாலும், தனிநபர்களாலும் செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த ஐந்து வருட காலத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு வவுனியா மாவட்டங்களில் இயன்றவரையான உதவிகள் இந்த மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் தொண்டு நிறுவனங்களை தடை செய்து, அவர்களை வெளியேற்றி எமது மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்க முடியாத சூழ்நிலையில், புலம்பெயர்ந்து இருக்கும் தமிழ் மக்கள் இரவு பகல் பார்க்காமல் மிக குளிர் பிரதேசங்களில் தமது உழைப்பின் ஒரு பகுதியை தங்களுக்கு தந்துதவிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு மிகமிக நன்றிக் கடன் பட்டவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.
அவர்களின் உதவிகளின் முக்கிய நோக்கமெல்லாம் எமது குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த மண்ணில் தலைநிமிர்ந்து வாழ வேண்டும். யுத்தத்தில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாக இருக்கலாம்.
ஆனால் இந்த மண்ணில் நிலத்தில் நாங்கள் மீண்டும் தலைநிமிர்ந்து தமிழ் மக்களாக வாழ வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன.
பல அமைப்புகள் இத்தகைய உதவிகளை செய்து வருகின்றன. விதவைகளின் வாழ்வாதாரங்கள், அவர்கள் தமது சொந்த காலில் நிற்க வேண்டிய தேவைகள், குழந்தைகளின் கற்றல் நடவடிக்கைகள் அறிந்து இவற்றுக்கு தொடர்ச்சியான உதவிகள் தேவைப்படுகின்றன.
எமது குழந்தைகளுக்கு இன்னும் என்னென்ன வேண்டுமென்று தேவையறிந்து அவர்கள் தமது சொந்த காலில் நிற்கும் வரை அவர்களுக்கு உதவிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும். நாம் கையேந்துபவர்களாக தொடர்ந்தும் இருக்கக்கூடாது.
எந்த காலகட்டத்திலும் நாம் அவ்வாறு கையேந்தி வாழ்ந்தவர்கள் அல்லர். எமது சொந்த உழைப்பில் வாழ்ந்தவர்கள். அது விவசாயமாக இருக்கலாம். கடல் வளமாக இருக்கலாம். நாம் ஏனையவர்களுக்கு கொடுத்து வாழ்ந்தவர்களே தவிர, ஏனையவர்களிடம் இரந்து வாழ்ந்தவர்கள் அல்லர்.
நாங்கள் இந்த மண்ணில் மீண்டும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும். இது உங்களுடைய சொந்த பூமி. இப்பூமி நீண்ட வரலாற்றை கொண்டது. பண்டாரவன்னியன் வாழ்ந்த பிரதேசம். உங்களுடைய வரலாறு இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல.
ஆயிரம் ஆயிரம் வரலாறுகள் வன்னி தமிழ் மக்களுக்கு உண்டு. அவ்வாறான சூழலில் இந்த மண்ணில் நாங்கள் தமிழர்களாக தலைநிமிர்ந்து வாழ வேண்டியவர்களாக வாழ வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUhq2.html
ஐ.நா விசாரணை குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்கவும்! வைகோ தலைமையில் நாளை ஆர்ப்பாட்டம்
[ திங்கட்கிழமை, 08 செப்ரெம்பர் 2014, 03:35.53 PM GMT ]
இலங்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை இந்தியாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
சென்னையில் இந்த ஆர்ப்பாட்டம் நாளை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் வை.கோபாலசுவாமி தலைமை தாங்கவுள்ளார்.
இலங்கைக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ளும் சர்வதேச விசாரணைக்குழு, இந்தியாவில் தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொள்ள இந்தியா அனுமதிக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகள் சபையில் மஹிந்த ராஜபக்சவை உரையாற்ற அனுமதிக்கக்கூடாது.
இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும்.
தனியான தமிழீழம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன்வைக்கப்படவுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyJTcKUhq4.html

Geen opmerkingen:

Een reactie posten