[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 12:37.51 AM GMT ]
புலிகளின் கொலைப் பட்டியலில் அவர் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் அங்கிருந்து தப்பினார். எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த சூழலில் அவரைச் சென்னையில் சந்தித்த ஜூனியர் விகடன் நிருபருக்கு அவர் வழங்கிய செவ்வி வருமாறு,
இத்தனை ஆண்டுகள் எங்கேதான் இருந்தீர்கள்?
11 வருடங்கள் ராஜஸ்தானிலும் பத்து வருடங்கள் டெல்லியிலும் இருந்தேன். இலங்கையில் இருந்திருந்தால் இப்போது நான் இருந்திருக்க மாட்டேன். ராஜீவ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக இருந்ததால், என்னைக் கொல்வதும் இந்தியாவை அடிப்பதும் ஒன்று என புலிகள் கருதினார்கள். தலைமறைவாக இருந்ததில் எந்தத் தவறுமில்லை. அது என்னுடைய விருப்பமும்கூட. இந்தியாவின் பாதுகாப்பில் இருந்ததைப் பெருமையாகதான் கருதுகிறேன்.
நான்கு சுவற்றுக்குள் இத்தனை ஆண்டுகளை எப்படி கடந்தீர்கள்?
அதுவும் ஐந்தாறு ஆண்டுகளுக்குதான். அப்போது தொழில்கூட செய்ய முடியாத சூழல். அதனால் டெல்லி பல்கலைக்கழத்தில் சட்டம் படித்தேன். நான் படிக்கப் போனதுகூட பாதுகாப்புத் துறை தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு நாளும் சட்டக் கல்லூரிக்குப் போய் வந்தேன். இந்த காலத்தில் இந்திய மற்றும் உலக பொருளாதாரத்தைப் படித்தேன். அதுபற்றி 'நாடுகளுடைய பொருளாதார கணக்கு’ என்ற புத்தகத்தையும் எழுதினேன். 2009-ம் ஆண்டுக்குப் பிறகு சூழல் மாறிவிட்டது.
புலிகள் வீழ்ச்சிக்குக் காரணம்?
அரசியல் இல்லாத ஆயுதம்தான் அவர்களை அழித்தது. வெறுமனே ஆயுதங்களை மட்டுமே நம்பி விட்டார்கள். உலக அரசியல் மாற்றங்கள், இந்திய உபகண்டத்தில் நடந்த அரசியல் போக்குகள், உறவுகள் ஆகியவற்றைப் புலிகள் சரியாகக் கணக்கிட்டிருந்தால், அதற்குத் தக்கப்படி தங்களையும் மாற்றியமைத்து கொண்டிருந்தால் தமிழர்களுக்குப் பெரும் நன்மையை செய்திருக்க முடியும்.
பிரபாகரன் மரணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
யுத்தம் தவிர வேறு ஒன்றுக்கும் புலிகள் தயாராக இல்லை. தமிழர்களுக்குக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் பிரபாகரன் கிடைக்கவிடாமல் செய்து, 'தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தருவேன்’ என்ற நம்பிக்கையை ஊட்டினார். கடைசியில் எதையும் செய்து கொடுக்காமல் போய்விட்டார். தமிழ் மக்கள் நம்பியதற்குப் பிறகும் கடைசியில் அறுவடை ஒன்றுமில்லாமல் போய்விட்டது.
நல்ல உழவனுக்கு அழகு எவ்வளவு அறுவடை செய்தான் என்பதுதான். எவ்வளவு திறமையாக உழுதான் என்பது அல்ல. உழுததற்கும் மேலும் உழுது ஒரு நெல் மணியையும் எடுக்க முடியவில்லை என்றால் என்ன பயன்?
இந்தியா ஆதரவோடுதானே இலங்கை இறுதியுத்தம் நடைபெற்றது?
யாரையும் புலிகள் விட்டு வைக்காததால் எல்லோரும் புலிகளை எதிரிகளாகக் கருதினார்கள். புலிகளின் ஊடாக, ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்த எல்லா நாடுகளும் முயற்சித்தன. அது பலன் அளிக்காததால் அத்தனை நாடுகளும், 'புலிகள் இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது’ என நினைத்து ஒன்றுபட்டுவிட்டன.
இலங்கையில் பிரச்சினை என்றால் அது இந்தியாவைத்தானே பாதிக்கும்? 'நாங்கள் பிரிவினைக்கு ஆதரவு அளிக்க மாட்டோம்’ என இந்திராவும் ராஜீவும் மீண்டும் மீண்டும் சொன்னார்கள். நாங்கள்தான் தவறாகக் கற்பனை செய்துகொண்டோம். இந்தியா கண்ணைக்கட்டி கையைப்பிடித்து தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தந்துவிடும் என்பது எங்களின் கற்பனை.
இறுதிப் போரின்போது 'எதிர்தாக்குதல் ஆயுதங்களை நாங்கள் வழங்கவில்லை. தற்காப்பு ஆயுதங்கள்தான் கொடுத்தோம்’ என்று இந்தியா சொன்னது. ஒன்றுமே கொடுக்காவிட்டால் இலங்கை அரசு, பாகிஸ்தானோடு அல்லது சீனாவோடு சேர்ந்திருக்கும்.
ஸ்ரீபெரும்புதூருக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் தொடர்பு உண்டுதானே?
முடிச்சு போடுவது தவறு. காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதை இது. ராஜீவ் கொலைக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் அறிவியல் பூர்வமாகப் பார்த்தால் சம்பந்தம் இல்லை.
ராஜீவ் கொலைக்குப் பிறகும்கூட இந்தியா உட்பட முக்கிய நாடுகள் எல்லாம் இலங்கைப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றன. நோர்வே எடுத்த முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்தது. புலிகள் எதற்கும் இடமளிக்கவில்லை. புலிகள் இருக்கும் வரையில் எந்த அரசியல் தீர்வையும் தொடங்கக்கூட முடியாது என்பதால் புலிகளை முடித்துவிட வேண்டும் என உலகம் முழுவதும் தீர்மானித்தன.
உலக நாடுகளின் ஆதரவு இல்லாமல் குறிப்பாக இந்தியாவின் ஆதரவு இல்லாமல் புலிகள், தாக்கு பிடிக்கவே முடியாது. புலிகள் வேறு இயக்கங்களை அழித்தார்கள். கொன்றார்கள். அதனால் ஏனைய இயக்கங்களும் புலிகளை அழிக்க ஒன்றாக இருந்தன. இப்படி பல காரணங்கள்தான் புலிகளை அழித்தது.
ராஜீவ் கொலையோடு முடிச்சு போடுவது சரியில்லை.
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUjx0.html
சிவராசனின் இரட்டை வேடம்! டெல்லி பத்திரிகையாளரின் பேட்டி.
[ சனிக்கிழமை, 06 செப்ரெம்பர் 2014, 01:11.58 AM GMT ]
இதோ பெரோஸ் அஹ்மத் பேசுகிறார்.
சிவராசன் ஏன் டெல்லி போனார்?
என்னுடைய வாதம், சிவராசன் சுயேட்சையாக செயல்பட்டு இருக்கலாம் என்பதுதான். இதனால்தான் அவர் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பவில்லை. உயிருக்கு பயந்துதான் அவர் போகவில்லை. டெல்லிக்கு போகக் காரணம் வேறு யாரோ அவருடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்திருந்துள்ளனர். யார் அது? இந்த கொலையில் இருவர் ஆதாயமடைந்தனர். ஒருவர் இலங்கை ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசா. மற்றொருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று இதனால்தான் சொல்கிறேன்.
ராஜீவை கொன்ற பின்னர் யார் பயனடைவார்கள்? ஒன்று அவரது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அல்லது அப்போது ஆட்சியில் இருப்பவர்கள். ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியை கொன்ற மனித வெடிகுண்டு தணு ராஜீவ் காந்தி அருகில் செல்ல அனுமதிக்கக் காரணமாக இருந்தவர்கள் யார்?
அவர் பல்வேறு தடைகளைத்தாண்டி ராஜீவ் காந்திக்கு மாலை அணிவிக்கச் செல்ல காரணமாக இருந்தது மறைந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினர். மரகதம் சந்திரசேகரும் அவருடைய மகள் லதா பிரியகுமாரும் இதில் முக்கியமானவர்கள். இவர்களோடு லதா கண்ணன் கோகிலா போன்றோர்களும் வந்துள்ளனர்.
ராஜீவ் பொதுக்கூட்ட மேடையில் ஏறுவதற்கு சற்றுமுன்புதான் கொல்லப்பட்டார். ஆனால், அவரோடு வந்த மரகதம் சந்திரசேகர், லதா பிரியகுமார், லலித் சந்திரசேகர் போன்றோர் ராஜீவ் காந்தியோடு உடன் வரவில்லை. அன்றைய தினம் இந்தப் பொதுக்கூட்டத்துக்குப் பின்னர் தரம் சந்த் ஜெயின் என்பவரது இடத்தில் ராஜீவ் காந்தியை தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்துள்ளது. ஆனால் அந்த இடத்தை ஆய்வு செய்த புலனாய்வுத் துறை அதை நிராகரித்தது. இப்படிப்பட்ட மோசமான ஏற்பாடுகளை யார் செய்தது?
மரகதம் சந்திரசேகர் குடும்பம் இந்திரா காந்தி குடும்பத்துக்கு வேண்டியவர்கள். மரகதம் சந்திரசேகர் மகன் லலித் சந்திரசேகரின் மனைவி சிங்களர். இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு சிவராசன் சுமார் ஐந்து லட்ச ரூபாயை லலித் சந்திரசேகருக்கு கொடுத்துள்ளார். நீதிபதி வர்மா கமிஷனும் சுப்பிரமணியன் சுவாமியும் இதைக் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்கள் மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினரை குற்றம்சாட்ட முயற்சிக்கவில்லை. 'அவர்கள் அப்பாவித்தனமாக உதவியிருக்கலாம்’ என்கின்றனர். சி.பி.ஐ-யின் முதன்மை புலன் விசாரணை அதிகாரியான கே.ரகோத்தமன் ஐந்து லட்ச ரூபாய் பொதுக்கூட்டத்துக்கு லலித் சந்திரசேகர் வாங்கியிருக்கலாம் என்கிறார். இவை அனைத்தும் சந்தேகத்தை அதிகமாகக் கிளப்பக் கூடியவை.
இந்தக் கொலையாளிகள் யார்?
இந்தக் கொலையாளிகள் யார்? கொலையாளிகள் குறித்த சந்தேகங்களைத் தெளிவு படுத்தவேண்டும். இவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்? இவர்களை அனுப்பியது எல்.டி.டி.இ-யை சேர்ந்தவர்கள்தானா என்பது முக்கியம். சிவராசன் எல்.டி.டி.இ இயக்கத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், இதற்கு முன்பு அவர் இருந்தது டெலோ. அந்த இயக்கம் அழிந்த பின்னர் இங்கு வந்துள்ளார். மிக முக்கிய சந்தேகம், சிவராசனின் இரட்டை வேடம். எல்.டி.டி.இ-யிலும் இருந்து கொண்டு மற்றவர்களுக்காகவும் செயல்பட்டு இருக்கலாம் என்கிற கோணம்தான் உறுதியாகத் தெரிகிறது.
சிறப்புப் புலனாய்வு பிரிவு தலைவர் டி.ஆர்.கார்த்திகேயன் குறிப்பிட்டபடி, இந்த ஆபரேஷனுக்கு மொத்தம் ஒன்பது பேர் படகில் வந்து கோடியக்கரையில் இறங்கினார்கள். சண்முகத்தின் வீட்டில் தங்கிவிட்டு வந்துள்ளனர். கடைசி வரை ஒன்றாக இருந்தவர்கள் சிவராசன், சுபா, தாணு, நேரு போன்றவர்கள். இதில் தாணு இறந்தவுடன் மற்ற மூன்று பேர்கள் ஒன்றாக இருந்தனர். ஆனால் ஆதிரை, விஜயானந்த், சிவரூபன், கனகசபாபதி ஆகியோரை இந்த ஆபரேஷனில் சிவராசன் நேரடியாகச் சேர்க்கவில்லை.
ஒருவரை ஜெய்ப்பூருக்கும் மற்றொருவரை போபாலுக்கும் வேறு சிலர் டெல்லிக்கும் சென்றனர். இவர்களுக்கு இந்தக் கொலையில் என்ன தொடர்பு? பொத்தம் பொதுவாக இவர்கள் எல்லாம் சதி திட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என்கிறது சி.பி.ஐ. ஆனால், சிவராசன் உபயோகித்தது இந்தியர்களை மட்டுமே. அவர்களில் நளினிக்கோ இறந்துபோன போட்டோகிராபர் ஹரிபாபுவுக்கோ சதித்திட்டம் பற்றி எதுவுமே முன்னமே தெரியவில்லை.
தாணு யார்?
ராஜீவைக் கொன்ற மனித வெடிகுண்டு தாணு யார்? இதிலும் தெளிவு இல்லை. கார்த்திகேயன் சொல்கிறார், 'தாணு எல்.டி.டி.இ என்பதற்கு ஒரு வீடியோ இருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு பெண் கொடியைப் பிடித்துச் செல்ல... அவர்தான் தாணு’ என்கிறார். தாணு இலங்கைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவரது மகள் என்று சொல்லப்பட்டது. இது குறித்து டி.ஆர். கார்த்திகேயன், 'தாணு, ராஜரத்தினத்தின் மகளாக இருப்பார் என்று கருதுகிறோம்’ என்கிறார்.
இந்து புரெண்ட்லைனில் ஒரு செய்தி வந்தது. இலங்கையிலிருந்து அதே ராஜரத்தினத்தின் நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு கருத்தைச் சொல்லியுள்ளார். 'எனக்கு ராஜரத்தினம் நெருங்கிய நண்பர். அவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு ஒரு மகன். அவர் ஜெர்மனியில் செட்டில் ஆகியுள்ளார். இரண்டாவது மனைவியையும் நான் இருக்கும் இடத்திலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளனர். நான் சென்று பார்த்தேன். இரண்டாவது மனைவியும் அவரது மத்திய தர வயதுடைய மகளும் இருந்தனர். இவருடைய இளைய மகள் இலங்கை இராணுவத்தினர் சண்டையில் இறந்து போயுள்ளார்’ என்கிறார்.
இப்படிப்பட்ட தகவல்களுக்கிடையே தாணு யார் என்பதை நிரூபிக்கப்படவில்லை. சிவராசன் ஒருவரைப் பற்றிதான் தெரிகிறது. இந்தப் பெண்கள் தாணு, சுபா யார் என்பதில் குழப்பம். சரியான ஆதாரங்கள் இல்லை.
பிரபாகரனுக்குத் தெரியுமா?
ஆரம்பக் கட்டத்தில் உள்ளவற்றைப் பார்க்கும் போது இவர்கள் பிரபாகரனுக்கு தெரிந்தே வந்தவர்களாக தெரிகிறது. சில தகவல் தொடர்புகள் இரகசிய சாம்பாஷணைகளில் தெரிகிறது. பின்னர் ஒருவேளை பிரபாகரனுக்கு தெரிந்து அவரே நினைத்திருந்தால் கூட அவரால் தடுக்க முடியாமல் போயிருக்கலாம் என்பதைதான் நான் உணர்கிறேன்.
1991 மார்ச் ஏப்ரலில் வந்த சிவராசன் டீம் பின்னர் எல்.டி.டி.இ சம்பந்தப்படாத நபர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தி வந்தது. சிவராசன் உபயோகித்து வந்த வயர்லெஸ் சாதனங்கள் எல்லாம் புலிகள் இயக்கத்துக்கு சம்பந்தப்பட்டவை அல்ல. எல்.டி.டி.இ உளவுத்துறை தலைவரான பொட்டு அம்மானின் டிரான்ஸ்மிட்டர் ஆப்ரேட்டர் சிவரூபன் சிவராசனோடு இருந்தார்.
ஆனால், அவரை சிவராசன் உபயோகிக்கவிலை. அவர் கண்ணிவெடியில் காலை இழந்ததால் செயற்கைக்கால் பொருத்த ஜெய்பூருக்கு சென்றுவிட்டார். இப்படி சிவராசன் யாரையும் உபயோகிக்கவில்லை. தனியாக அவர் வைத்திருந்த வயர்லெஸ் சாதனங்களைத்தான் உபயோகிக்கிறார். இதைவைத்து யாரோடு இவர்களுக்குத் தொடர்பு? இது குறித்து சி.பி.ஐ முழுமையாக விசாரிக்கவில்லை.
எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்?
இந்த ஒப்பந்த கொலைக்கு பிரேமதாசா காரணமாக இருந்திருக்கலாம். இலங்கை சிங்கள அரசின் இந்த சதித்திட்டத்தில் பிரபாகரனையே நாடியிருக்கலாமா அல்லது டெலோவிலிருந்து வந்த சிவராசனை மட்டும் பயன்படுத்தியிருக்கலாமா என்கிற சந்தேகம் வருகிறது.
சிவராசன் இலங்கை மின்சார வாரியத்தின் ஊழியர். இதற்கான அடையாள அட்டையும் உண்டு. ஆனால், சிவராசன் குரூப்புக்கு பின்னணியில் பிரேமதாசா இருந்திருந்தால் அவர் இலங்கைக்கோ, யாழ்ப்பாணத்துக்கோ சென்றிருக்க முடியும். இந்தியாவில் சுற்றிக்கொண்டுதான் வந்தார். தப்பி செல்லாததை வைத்தும் முடிவுக்கு வரமுடியாது. காரணம், பிரேமதாசா சாதாரணப்பட்டவர் அல்ல... தன்னுடைய அரசியல் எதிரியான இலங்கை அமைச்சர் லலித் அத்துலத்முதலி கொலை போன்ற விவகாரங்கள் இதற்கு உதாரணம். ஆனால், சி.பி.ஐ இந்தக் கோணத்தில் விசாரணையை நடத்தவில்லை.
வெளிநாட்டு பங்களிப்புகள்!
நான் என்னுடைய புத்தகத்துக்கு 'கி பிuரீமீ சிஷீஸ்மீக்ஷீuஜீ' என்றுதான் பெயர் வைக்க நினைத்தேன். ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தில் இந்தியாவில் எல்லா அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு 'கவர்-அப்’ செய்தனர். புலன் விசாரணையிலிருந்து சுப்ரீம் கோர்ட் வரை இது நடந்தது. அனைத்து உண்மைகளையும் குழப்பி, எல்லா சாட்சியங்களையும் அழித்து, இறுதியாக புலிகள்தான் இதற்குக் காரணம் என்கிற பிடிவாதமான முடிவை சி.பி.ஐ-யினர் கொடுத்தனர். ஆனால், எனக்கு எல்.டி.டி.இ-தான் காரணம் என்பது தெரியவில்லை.
ஒருவேளை எல்.டிடி.இ இதில் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அது பெரிய அளவில் இருந்திருக்காது என்று சொல்ல முடியும். எனக்குப் பல்வேறு இரகசியங்களை உடைத்தது தமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்த மோகன்தாஸ் எழுதிய நாவல்தான்!''
-அது அடுத்த இதழில் தொடரும்!
சென்ற வாரப் பேட்டி - ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை! புலிகளுக்கு சம்பந்தமே இல்லை! அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர்
http://www.tamilwin.com/show-RUmsyJTaKUjx1.html
Geen opmerkingen:
Een reactie posten