தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 mei 2013

பாலூட்டும் தாய்மார்களும் மின்னேரியா இராணுவ முகாமுக்கு அழைப்பு- குழந்தைகள் பரிதவிக்கின்றனர்-பா.அரியநேத்திரன்


அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் சென்றடைந்தனர்
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 04:58.17 AM GMT ]
அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்ற 30 மீனவர்கள் நேற்று ராமேஸ்வரம்  சென்றடைந்தனர்.
குறித்த மீனவர்களின் உறவினர்கள் அவர்களை ராமேஸ்வரம் இறங்குதுறையில் சென்று வரவேற்றுள்ளனர்.
ராமேஸ்வரத்திலிருந்து ஏப்.6ம் திகதி காலை 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1200க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
தனுஷ்கோடி - தலைமன்னார் கடலில் அன்றிரவு 8 மணியளவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அந்தோணி அடிமை,
தேவதாஸ், புவனேந்திரன், மார்ட்டின், ஆரோக்கிய குரூஸ் ஆகியோரது படகுகளில் இருந்த 30 மீனவர்களை பிடித்து மன்னார் சிறையில் அடைத்தனர்.
4 முறை காவல் நீட்டிக்கப்பட்டது. அவர்களை விடுவிக்க ராமேஸ்வரத்தில் போராட்டங்கள் நடந்தன.
இந்நிலையில், 5வது முறையாக மே 20ம் திகதி வரை மீனவர்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டது.
மத்திய அரசின் நடவடிக்கையால் மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு, மன்னார் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று நீதிபதி ஆனந்தி கனகராஜ், 30 பேரையும், 5 படகுகளையும் விடுவித்து உத்தரவிட்டார்.
இதையடுத்து இலங்கை கடற்படையினர் அவர்களை கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்தனர்.
நேற்றிரவு 8 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடைந்தனர். மீனவர்களிடம் மீன்துறை மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

பாலூட்டும் தாய்மார்களும் மின்னேரியா இராணுவ முகாமுக்கு அழைப்பு- குழந்தைகள் பரிதவிக்கின்றனர்-பா.அரியநேத்திரன்
[ வியாழக்கிழமை, 09 மே 2013, 05:34.49 AM GMT ]
பட்டதாரி பயிலுனர்களாக கடமையாற்றும் பாலூட்டும் தாய்மார்களை கூட மின்னேரியா இராணுவ முகாமில் நடக்கவிருக்கும் பயிற்சி நிகழ்வுக்கு வருமாறு வற்புறுத்தி அழைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பலர் தன்னிடம் புகார் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் பொருளாதார அமைச்சின் கீழ் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்ட அனைவரையும் மின்னேரியா இராணுவ முகாமிற்கு வருமாறு அரசாங்கம் அழைத்துள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இது குறித்து மேலும் கூறுகையில்,
மின்னேரியாவில் உள்ள இராணுவ பயிற்சி முகாமுக்கு பட்டதாரி பயிலுனர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதாக கூறி தங்களுடைய பிள்ளைகள், கணவன்மார், மனைவிமார் என அனைவரையும் அரசாங்கம் அழைத்துச் சென்றுள்ளதாக பலர் என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பலர் கைக்குழந்தைகளை உடைய தாய்மார்கள் என்பதுடன் பலர் நோயாளிகளாகவும் உள்ளனர்.
இவர்கள் இந்த இராணுவ பயிற்சிக்குறிய உடல், உளத் தகுதிகளை கொண்டிருக்கவில்லை இவர்களுடைய குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டிருப்பதாக பெற்றோர் என்னிடம் தெரிவித்துள்ளனர்.
அரசாங்க உத்தியோகத்தர் பதவிகளுக்காக ஆட்சேர்க்கப்பட்ட இவர்களை மின்னேரியா இராணுவ முகாமில் வைத்து பயிற்சியளிக்க வேண்டிய தேவை ஒன்றுமில்லை.
இவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டுமானால் ஒரு பொது இடத்திலோ அல்லது குறிப்பிட்ட பிரதேச செயலகத்திலோ பயிற்றுவிப்பாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்க முடியும்.
ஆனால் மின்னேரியா இராணுவ பயிற்சி முகாமில் இவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கடந்த காலங்களில் பல்கலைகழக மாணவர்களையும் அரசாங்கம் தலைமைத்துவ பயிற்சி என்ற பெயரில் துன்புறுத்தியிருந்தது. அப்போது பல பெண் மாணவர்கள் கை, கால் முறிந்து நோய்வாய்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் அரசாங்கம் வயது வேறுபாடின்றி இவ்வாறான இராணுவ பயிற்சிகளை வழங்குவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
குறிப்பாக பல பெண்களை மின்னேரியா இராணுவ முகாமிற்குள் அழைத்துச் சென்று அவர்களுக்கு பயிற்சி வழங்குவதாக கூறுவதை எமது தமிழ் சமூகமோ, அல்லது பெற்றோர்களோ ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால் இப் பயிற்சிக்கு செல்லாவிட்டால் தங்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்களாம் என்ற பயத்தின் காரணமாகவே கைக்குழந்தைகளையும் தங்களது குடும்பத்தையும் விட்டு விட்டு 18 நாட்கள் தங்கியிருந்து பயிற்சி பெறுவதற்காக இவர்கள் சென்றுள்ளார்கள்.
எனவே தொடர்ச்சியாக மின்னேரியா இராணுவ முகாமில் பட்டதாரி பயிலுனர்களுக்கான இராணுவ பயிற்சி வழங்கப்படவுள்ளதால் இந்த பயிற்சிகளை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதுடன் கடுமையான பயிற்சிகளை வழங்குவதையும் அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும் எனக் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten