தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

தட்டுத்தடுமாறி ஜனாதிபதியின் காலில் விழுந்தார் விநாயகமூர்த்தி எம்.பி

கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நாளை அடையாள பணி இடைநிறுத்தம்
[ புதன்கிழமை, 29 மே 2013, 01:49.39 PM GMT ]
கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நாளை வியாழக்கிழமை உபவேந்தரின் நடவடிக்கைகளைக் கண்டித்து அடையாள பணி இடைநிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாகத் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்படப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அடையாள பணி இடைநிறுத்தம் என்ற அந்தத் துண்டப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“சுய மரியாதையும் சுய கௌரவமும் எல்லோருக்குமுள்ள பொதுவான உரிமை.
எமது கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர் ஒருவரின் சுய மரியாதையைச் சிதைத்து அவரது உரிமையை மீறும் வண்ணம் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் செயற்பட்டமைக்கு எதிராக நாம் இந்தப் பணி இடைநிறுத்தத்தை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
எமது உறுப்பினர் ஒருவரை ஏப்ரல் 18 அம் திகதி வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு வரவழைத்த உபவேந்தர் “முறையற்ற வார்த்தைகளால் பேசி சீறிச் சினந்ததுடன் அவரை வேலையிலிருந்து விலகிக் கொள்ளும்படியும் இல்லையெனில், இடைநிறுத்தப்படுவாய் எனக்கூறியதோடு, ஆசிரியர் சங்கத்துடனும் பீடாதிபதியுடனும் சக ஆசிரியர்களுடனும் சேர்ந்து செயற்பட வேண்டாம்” எனவும் பயமுறுத்தி அவரை மன உபாதைக்கு உள்ளாக்கியிருக்கின்றார்.
இதன் பின்னர் அந்த உறுப்பினர் மருத்துவ சிகிச்சை பெறவேண்டியதுடன் மனவிரக்தி நிலைக்கும் தள்ளப்பட்டிருக்கின்றார். இந்தச் செயல் ஒருவரின் சுயமரியாதையை கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. இத்தகைய செயற்பாட்டை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மருத்துவ பீட மாணவர்கள் தன்னிடம் செய்த முறைப்பாடு தொடர்பாக தான் அந்த உறுப்பினரை அழைப்பித்து கற்பித்தலைத் திருத்திக் கொள்ளாவிட்டால் வேலையை விட்டு விலக்க நேரிடும் என எச்சரித்ததாக ஆசிரியர்களுடனான கூட்டத்தில் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.
துறைத் தலைவர், பீடாதிபதி, பீட அவை, மாணவ ஆலோசகர்கள் என பல மட்டங்கள் இருக்கும்போது, மாணவர்கள், ஒரு ஆசிரியர் தொடர்பாக தன்னிடம் முறைப்பாடு செய்தனர் என உபவேந்தர் கூறுவது நம்ப முடியாததாகவும், வேதனைக்குரியதாகவும், வெட்கத்துக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் உள்ளது.
இந்த விடயத்தில் உபவேந்தர் அனைத்து அவைகளையும் மீறி ஒரு தனி நபராகச் செயற்பட்டுள்ளார்.
அதேநேரம் உபவேந்தருக்குச் சார்பான கடிதமொன்றில் சம்பந்தப்பட்ட உபவேந்தரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்ட ஆசிரியர் கையொப்பமிடவில்லை என்றும் அதுவே உபவேந்தரின் சீற்றத்திற்குக் காரணம் என்றும் கருதப்படுகின்றது.
உபவேந்தருக்குச் சார்பான சம்பந்தப்பட்ட கடிதமொன்றில் கையொப்பமிட்ட ஏனைய ஆசிரியர்களுக்கு உப வேந்தர் அந்தக் கூட்டத்தில் நன்றி தெரிவித்துள்ளது யாவரும் அறிந்ததே.
இதற்கு முன்னரும் உபவேந்தர் தனியொரு நபராகச் செயற்பட்ட சந்தர்ப்பங்களில் நாங்கள் பொறுமையாக இருந்துள்ளோம். உதாரணமாக, தன்னை அவமதித்ததாகக் கூறி 25 வினாடிகள் மாத்திரம் செல்போனில் கதைத்த எமது அங்கத்தவர் ஒருவரை வேலையிலிருந்து இடைநிறுத்தம் செய்தது, இது விடயமாக கலந்துரையாடச் சென்ற எமது ஆசிரியர் சங்கக் குழுவினரை ஏற்க மறுத்தது,
கூட்டமொன்றின்போது எமது அங்கத்தினர்கள் சிலரை 'பிரதேச வாதிகள்' எனக்கூறி வேதனைக்குள்ளாக்கியது, சங்க செயலாளரை வேலையை விட்டுத் தூக்குவேன் எனப் பயமுறுத்தியது.
இப்படிப் பல சந்தர்ப்பங்களில் 'தூக்குவதும்' 'இடைநிறுத்துவதும்' உபவேந்தரின் பொழுது போக்காகி விட்டது. இத்தகைய அதிகார மமதை பிடித்த கலாசாரத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எல்லா ஊழியர்களுக்கும் சுயமரியாதை உண்டு. அதனை மறுக்கவோ குறைக்கவோ எவருக்கும் உரிமை இல்லை.
இந்த அடையாள வேலை நிறுத்தப் போராட்டமானது அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் பொதுவானது என்பதே யதார்த்தமாகும்' என்று அந்தப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தட்டுத்தடுமாறி ஜனாதிபதியின் காலில் விழுந்தார் விநாயகமூர்த்தி எம்.பி
[ புதன்கிழமை, 29 மே 2013, 01:38.36 PM GMT ]
கொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி.
கடந்தவார இறுதியில் கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த சுவாரசியமான சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:
நீதியசரர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் புதல்வரின் திருமணம் கடந்தவார இறுதியில் கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார். அத்துடன் அங்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் என பெருமளவானோர் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
மணமக்கள் ஜனாதிபதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஆசியை வழங்கிய பின்னர் ஜனாதிபதி திரும்பிய போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியின் காலடியில் விழுந்தார்.
உடனே எல்லோரும் விநாயமூர்த்தியும் ஜனாதிபதியின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார் என்று எண்ணினர். ஆயினும் நடந்தது அது வல்ல. மணமக்களை வாழ்த்துவதற்குச் சென்ற விநாயகமூர்த்தி தட்டுத்தடுமாறி ஜனாதிபதியின் காலடியில் விழுந்துவிட்டார்.
உடனே அங்கிருந்த ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் அவரை தூக்கிவிட உதவினர். ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியை தூக்குவதற்காக கையை நீட்டினார். அதற்குள் விநாயகமூர்த்தி சமாளித்துக் கொண்டு தானே எழும்பி நின்றார்.

Geen opmerkingen:

Een reactie posten