தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 31 mei 2013

வாகன விபத்தில் மட்டும் 21 பேர் உயிரிழப்பு- பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 110 பேர் கைது (யாழ். செய்திகள்)!

மனிதாபிமானமுள்ள மனிதர் கலாநிதி ஜயலத்தின் இழப்பு ஈடற்றது!- மாவை சேனாதிராசா இரங்கல்
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 07:03.53 AM GMT ]
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயலத் ஜயவர்த்தன காலமாகிவிட்டார் என்ற செய்தி மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. அவர் பாராளுமன்றத்திலிருந்த காலத்தில் நானும் அவருடன் மனம் திறந்து பேசிய சந்தர்ப்பங்கள் நினைவில் நிற்கின்றன.
ஒரு சிங்களக் குடிமகனாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினராகவும், ஒரு மருத்துவக் கலாநிதியாகவும் ஒரு நல்ல கிறிஸ்தவனாகவும் விளங்கிய பொழுதிலும், அவற்றிற்கு அப்பால் உயர்ந்த மனிதாபிமானமிக்க ஒரு மனிதராக அவர் சொல்லிலும் செயலிலும் நிரூபித்து நின்றவர் என்பதே எம் மனதில் நிலைகொண்டுள்ளது.
அவர் பாராளுமன்றத்திலும், வெளியிலும் தமிழ் மக்களுக்காகக் குரல் எழுப்பி வந்த ஒரு மனிதரை இழந்து விட்டோம். எப்பொழுதும் அவரைச் சந்திக்கின்ற பொழுது அவருக்கே இயல்பான புன்னகையுடன் கைகொடுத்து மகிழ்வதையும் மறக்கமுடியவில்லை.
ஜயலத் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த பொழுது அமைச்சர் என்பதற்கு அப்பால் ஒரு மனிதனாக நின்று செய்த மனிதாபிமானப் பணிகளைத் தமிழ் மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
சிங்களத் தீவிரவாதிகள், பேரினவாதிகள் மத்தியில் தமிழ் பேசும் மக்களின் சம உரிமை, அரசியல் உரிமைக்காகத் துணிந்து குரல்லெழுப்பிய ஒரு தலைவனாக விளங்கியவர்.
அவரின் நீதி நியாயத்தை மனிதாபிமானத்தை மக்கள் ஏற்றிருந்தனர்- ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றியையே பெற்றிருந்தார். தேர்தல் வெற்றிக்காக இனவாதம், பேரினவாதம் பேசவில்லை. அவர் ஒரு கிறிஸ்தவனாக இருந்தார் என்பதற்கு மேலாக மன்னார் மடுத்திருப்பதிக்கு, போர் நடைபெற்ற காலங்களிலும் கூட வருகை தந்து மக்களுடன் கலந்து நின்றவர்.
எல்லா மதங்களையும், மத நம்பிக்கைகளையும் மதித்து நின்ற ஒரு ஆன்மீக மனிதன் ஜயலத். மக்களின் மனித உரிமைகளுக்காகவும், மனிதாபிமானத்திற்காகவும் குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களின் மனிதஉரிமைகளுக்காகவும் பேசினார், போராடினார் என்றே கூறவேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளுக்காகவும் உலக பாராளுமன்ற ஒன்றியம் வரை சென்று வாதாடியவர் ஜயலத். மக்கள் எதிர் நோக்கும் அனைத்து பிரச்சினைகளிலும் அறிவு பூர்வமாக சிந்தித்தப்பேசும் ஆற்றல் கொண்டிருந்தமையை அனுபவ ரீதியாகப் பார்த்திருக்கின்றோம்.
அரச அடக்கு முறைகளுக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளுக்காகவும் பேசினார். செயல்பட்டார் என்பதற்காக அரச உளவுத்துறையினால் பலமுறை விசாரிக்கப்பட்ட பொழுதிலும் திடசங்கற்பத்தோடு தன் கொள்கைகளை முன்னெடுத்தச் செல்வதில் வெற்றி கண்டார்.
சிங்களபேரின வாதமும், பௌத்த மதவாதமும் தமிழ்த் தேசிய இனத்தை அழித்தவிடும் வகையில் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ள இன்றைய இலங்கைச் சூழலில் தமிழ் பேசும் மக்களின் நண்பன், ஒரு மனிதாபிமானியை இழந்திருப்பது மனிதாபிமானமுள்ள மக்களிற்கு ஓர் பேரிழப்பாகவே இருக்கும்.
ஜயலத்தின் இழப்பினால் துயருறும் அவர் குடும்பத்தினருக்கும், அன்புள்ள மக்களுக்கும், அவர் சார்ந்த கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைச் சமர்ப்பித்து நிற்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

வாகன விபத்தில் மட்டும் 21 பேர் உயிரிழப்பு- பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 110 பேர் கைது (யாழ். செய்திகள்)
[ வெள்ளிக்கிழமை, 31 மே 2013, 07:19.49 AM GMT ]
யாழ்.மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் வீதி விபத்துச் சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸ் தலைமையகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் 2012ம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் வீதி விபத்துக்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவற்றுடன் இந்த வருடத்தை ஒப்பிடுகையில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் ஜனவரி முதல் மே வரை 21 பேர் வாகன விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். அத்தோடு வாகனங்களில் செல்லும் போது தொலைபேசி பேசியவாறு சென்றவர்கள் மீது 314 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழி அனுமதிப்பத்திரம் இன்றி சென்ற வாகனங்கள் 378 மீத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் செல்லும் போது தலைக்கவசம் அணியாமல் சென்ற 1663 பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு குற்றப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
யாழில் விபத்துக்களைத் தடுப்பதற்கு பொலிஸார் விசேட பொறிமுறை ஒன்றை விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ். குடாநாட்டில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 110 பேர் கைது
யாழ்.குடாநாட்டில் பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 110 பேர் சென்ற வாரம் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்விதம் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழில் வீதிகளில் குழுக்களாக நின்று சண்டையிட்ட 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கசிப்பு உற்பத்தி செய்த 5பேர்,
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பபட்ட 23 பேர்,
சந்தேகத்தின் பேரில் 13 பேர்,
வாகன விபத்து 7 பேர்,
குடிபோதையில் வாகனம் செலுத்திய 4 பேர்,
கலகம் விளைவித்த 6 பேர்,
களவு 2 பேர் சிறு குற்றச் செயல்கள் தொடர்பில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் குற்றச் செயல்கள் அதிகரித்து செல்வதைத் தடுப்பதற்கு பொலிஸார் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் குற்றச் செயல்களை குறைவடைவதாக தெரியவில்லை எனக் கூறினார்

Geen opmerkingen:

Een reactie posten