தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 29 mei 2013

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மனு தாக்கல்! நாளை விசாரணை?


இந்தியாவில் எந்த இடத்திலும் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 04:13.57 PM GMT ]
இலங்கை இராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட இராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்குத் தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாட்டோம் என்று நண்பர் ஏ.கே. அந்தோனி அவர்கள் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கை,
கேள்வி:-  தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, தமிழகத்தில் இலங்கை இராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க அனுமதிப்பது இல்லை என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ஏ.கே. அந்தோனி தஞ்சையில் கூறியிருக்கிறாரே?

பதில்:-  இலங்கை இராணுவத்தினருக்கு சில குறிப்பிட்ட இராணுவப் பயிற்சிகள் மட்டுமே இந்தியாவில் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களுக்குத் தமிழகத்தில் பயிற்சி அளிக்க மாட்டோம்  என்று நண்பர் ஏ.கே. அந்தோனி அவர்கள் தஞ்சையில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.
மத்திய அரசின் சார்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட செய்திதான் இது. ஆனால், இலங்கைத் தமிழர்களைக் கொல்வதற்குக் காரணமாக இருக்கும் இலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவிலே எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதுதான் தமிழகத்திலே உணர்வுள்ள தமிழர்களின் கோரிக்கை, வேண்டுகோள்.
இந்திய அரசிடம் நாம் பலமுறை அந்த வேண்டுகோளை விடுத்து விளக்கியுள்ளோம். இந்தியாவிலே இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி அளிக்கமாட்டோம் என்று இந்திய அரசின் சார்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்க அவர்களால் இயலவில்லை.
இலங்கையில் தமிழர் மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் இல்லை' என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனியே ஒருமுறை கூறியிருக்கிறார். இந்தியாவில் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்ட இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், 'இந்தியாவில் இலங்கை இராணுவத்தினருக்கு அளிக்கப்படும் பயிற்சியை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் எதிர்ப்பது பற்றிக் கவலையில்லை.
அந்த அரசியல்வாதிகள் எழுப்பும் விவகாரங்கள் வெறுப்புணர்வால் ஏற்பட்டவை  என்று கூறினார். அப்போதே அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் அந்தோனி, 'தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தெரிவித்த ஆட்சேபங்கள் வெறுப்புணர்வின் அடிப்படையில் எழுப்பப்பட்டவை என்று நான் கருதவில்லை.
இலங்கையில், அரசு சில நடவடிக்கைகளை எடுத்த போதிலும், இப்போதும் தமிழர்களுக்கான மறுவாழ்வுப் பணிகள் எதிர்பார்த்த அளவில் இல்லை. ஒருபுறம் தமிழகத்தின் உணர்வுகளையும் நாம் மதித்து நடந்து கொள்வோம். எனவே தமிழகப் பகுதிகளில் இராணுவப் பயிற்சி அளிக்காமல் தவிர்ப்போம்.
அதே சமயம் மற்றப் பகுதிகளில் உள்ள இராணுவ அமைப்புகளில் இலங்கை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்போம் என்று கூறினார். இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்பது அனைத்துத் தமிழர்களின் வேண்டுகோள்.
இந்த உண்மையை நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் புரிந்து கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டுமென்பதே மீண்டும் மீண்டும் நாம் விடுக்கின்ற கோரிக்கையாகும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி மனு தாக்கல்! நாளை விசாரணை?
[ செவ்வாய்க்கிழமை, 28 மே 2013, 11:59.58 PM GMT ]
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
வழக்கறிஞர் சாந்த குமார் என்பவர்  இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளில் ஒருவர், குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதித்திருக்கக் கூடாது என தற்போது கருத்து தெரிவித்துள்ளார். 
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரது கருத்து மாறியுள்ள நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்.
இந்த மறுவிசாரணை முடிவடையும் வரை இவ்வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை  நிறைவேற்ற தடை விதிக்க வேண்டும்.
மேலும் ராஜீவ் காந்தியின் கொலையை பின்னணியாக கொண்ட திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட தடையையும் நீக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். 
இந்த மனு  மீதான விசாரணை நாளை புதன்கிழமை  நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten