[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 12:15.25 PM GMT ]
இவருக்கு நான் கடந்த மாதமே ஒரு பிரபல சிங்கள ஊடகம் மூலமாக ஒரு ஆலோசனை சொன்னேன். அதை மீண்டும் இப்போது சொல்கிறேன். கோத்தபாய ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினாராக பதவி ஏற்கட்டும். அதன் பிறகு பாதுகாப்பு அமைச்சர் ஆகட்டும்.
அரசியலமைப்பை திருத்தி உப ஜனாதிபதியாககூட ஆகட்டும். அதுபற்றி நாம் கவலைப்பட போவதில்லை. ஆனால் பாராளுமன்ற வாத விவாதங்களில் கலந்துகொண்டு பதில் சொல்லும் கடப்பாடு இல்லாத இடத்தில் இருந்துகொண்டு அவர் அரசியல் பேசி நாட்டை குழப்பக்கூடாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்பட கூடாது என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளது தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும்கூறியதாவது,
வரையறையுடன் கூடிய மட்டுப்படுத்தப்பட்ட காவல்துறை அதிகாரங்களே மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அரசியலமைப்பையும், அதில் உள்ள 13ம் திருத்தத்தையும் வாசித்தால் இந்த உண்மை விளங்கும். அதற்கு மேலாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரமும், பாராளுமன்றத்தின் மேலாதிக்கமும் இருக்கின்றன.
இந்த நிலையில், நாட்டின் அரசியலமைப்பை முறையாக வாசித்து புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு அல்லது வேண்டுமென்றே அதை திரித்து சொல்பவர்களுக்கு கௌதம புத்தனின் போதனைகள்தான் ஞானோதயம் தர வேண்டும்
உண்மையில் மாகாணசபை அதிகாரங்கள் போதாது என்று தமிழ் அரசியல் கட்சிகள் சொல்கின்றன. மாகாணசபைகளை ஒரு ஆரம்பமாக கூட ஏற்றுக்கொள்ள கூடாது என தமிழ் மக்கள் மத்தியில் ஒரு சாரார் கருதுகின்றார்கள்.
இந்நிலையில் இருப்பதையும் குறைக்கும் யோசனைகளை பகிரங்கமாக விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, குணதாச அமரசேகர, பொதுபல சேனாவின் ஞானசார கலபொட தேரர் ஆகியோருடன் சேர்ந்து கோதாபய ராஜபக்சவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
உண்மையில் இவர்கள் அனைவரையும் பின்னால் இருந்தபடி இவர்தான் தூண்டி விடுவதாக நாம் சந்தேகிக்கின்றோம்.
மக்களை பிழையாக வழி நடத்தும் இந்த முட்டாள்தனமான பிற்போக்கு கருத்துகளுக்கு நாம் பலமுறை பதில் சொல்லி விட்டோம். இந்த கருத்துகள்தான் நாட்டில் மீண்டும் பிரிவினைவாதம் தோன்ற காரணமாக அமைய போகின்றன.
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பிரிப்பதன் மூலமே நாட்டு பிரிவினையை தவிர்க்க முடியும் என்பது இந்த நாட்டின் வரலாறு எடுத்துக் காட்டும் படிப்பினை. அண்டை நாடு இந்தியாவின் வரலாற்றை பார்த்தும் இதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
வரலாற்றில் இருந்து பாடம் படிக்க முடியாத நபர்கள்தான், அதிகாரம் பகிர்வதை எதிர்க்கிறார்கள். இவர்கள்தான் இந்த நாட்டில் இன்று உண்மையான பிரிவினை வாதிகள்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு தனிப்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் இருக்கலாம். அதற்கான உரிமை அவருக்கு இருக்கின்றது. ஆனால் அவர் இன்று ஒரு அரசாங்க அதிகாரி. இந்த பதவி நிலையை மறந்துவிட்டு அவர் தொடர்ச்சியாக அரசியல் கருத்துகளை சொல்லிக்கொண்டே இருப்பது மக்களுக்கு தவறான செய்தியை வழங்குகிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் தேசிய பட்டியலில் தற்காலிகமாக பலர் இருக்கின்றார்கள். இவர்கள் ஒருவரது பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றுக்கொண்டு கோத்தபாய ராஜபக்ச பாராளுமன்றம் செல்ல வேண்டும் என நான் விரும்புகின்றேன்.
அவர் பாராளுமன்றம் வர வேண்டும் என நான் சொல்ல முடியாது. ஏனென்றால் நான் அங்கு இல்லை. இன்று பாராளுமன்றத்தில் சிறப்பான எம்பீக்கள் இருக்கின்றார்கள்.
பாராளுமன்றம் சென்று தனது இந்த கருத்துகளை கோத்தபாய ராஜபக்ச சொல்வாரானால், அவற்றுக்கு உரிய பதில்களை, அதிகார பகிர்வை ஆதரிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு வழங்குவார்கள்.
உண்மையில் கோத்தபாய ராஜபக்ச பாராளுமன்றம் சென்று பாதுகாப்பு அமைச்சையே பொறுப்பேற்று, பாதுகாப்பு அமைச்சராக முடியும். பாராளுமன்றத்தில் இந்த விவகாரம் பற்றிய வாதப்பிரதிவாதங்களில் பங்குபற்ற முடியும்.
இதை செய்யாமல் தான் மட்டுமே பங்குபற்றும் அரசாங்க ஊடகங்களில் தோன்றி கருத்துகள் கூறுவதையும், பாதுகாப்பு அமைச்சு நிகழ்வுகளில் அரசியல் கருத்துகளை சொல்வதையும் கோத்தபாய ராஜபக்ச நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறினார் மனோ கணேசன்.
மலையகத்திலும் காணி சுவீகரிப்பு தொடர்கிறதா?-மனோ கணேசன் கேள்வி
பயன்படுத்தப்படாத காணிகள் என்று சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
காணிகளை பெறுகின்ற வேலையற்ற இந்த இளைஞர்களுக்கு, இந்த காணிகளில் விவசாயம் செய்வதற்காக கடன் வழங்கவும், காணிகளில் பயிரிட நாற்றுகளை, விதைகளை வழங்கவும், உரவகைகளை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்கட்டமாக 100 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது.
இந்த தோட்டப்புற காணிகளையும், கடன் உதவிகளையும் பெறுகின்ற 12,500 வேலையற்ற இளைஞர்கள் பட்டியலில், வேலையற்ற தோட்டப்புற மலையக தமிழ் இளைஞர்கள் எத்தனை பேரின் பெயர்கள் இடம்பெறுகின்றன என்பதை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக தமிழ் அரசியல்வாதிகள் அறிவார்களா என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மலையகத்தில் உழைக்கும் மக்களின் இருப்பை இல்லாது ஒழிக்கும் இனவாத நோக்குடன் முன்னேடுக்கப்படும் எந்தவொரு காணி சுவீகரிப்பு நடவடிக்கையையும் ஜனநாயக மக்கள் முன்னணி, முற்போக்கு தோழமை கட்சிகளுடன் இணைந்து எதிர்த்து போராடும் என்றும் குறிப்பிட்டார்.
தோட்ட காணிகள் பகிர்ந்து அளிக்கப்படப்போகும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தாவது,
இன்று நாவலப்பிட்டி பஸ்பாகே கோறளைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட போகில் பாரண்டா தோட்ட குடியிருப்பில் வாழ்ந்துவரும் தோட்ட தொழிலார்களை அப்புறப்படுத்தி அந்த தோட்ட காணிகளை தனியாருக்கு வழங்கும் முயற்சிக்கு எதிராக தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி போராட தொடங்கிவிட்டார்கள்.
எனவே மலையக தோட்டப்புற காணிகளை மீளப்பெற்று அவற்றை, தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
1970 காலகட்டத்தில் மலையகத்தில் நடைபெற்ற காணி எதிர்ப்புக்கு எதிரான தோட்ட தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம்நடும் மீண்டும் இன்று மலையகத்தில் நடைபெற அரசாங்கம் வழி ஏற்படுத்துகின்றதா? நிதி அமைச்சில் இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற இது சம்பந்தமான உயர்மட்ட கூட்டத்துக்கு அரசில் உள்ள மலையக தமிழ் அமைச்சர்கள் அழைக்கப்பட்டார்களா?
தோட்டப்புறங்களிலும் காணியும், கடனும் பெறுவதற்கு தகுதிவாய்ந்த வேலையற்ற தமிழ் இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்பது அரசாங்க உயர்மட்டத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா?
இந்த காணிப்பகிர்வு - கடன் வழங்கல் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உடன்பாடு நிலவுகின்றதா? இதுபற்றி தாம் அறிந்துகொண்டுள்ள விபரங்களையும், தமது நிலைப்பாடுகளையும் அரசில் உள்ள மலையக கட்சிகள் மலையக இளைஞர்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க தயாரா? இந்த கேள்விகளுக்கான பதில்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இந்த தோட்ட காணிகள், வேலையற்ற இளைஞர்களுக்கு 30 வருட நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட உள்ளன. இந்த திட்டம் தொடர்பாக, தமக்கு இதுவரை அரசாங்கம் எதுவும் அறிவிக்கவில்லை என தோட்ட முகாமை நிறுவன சங்கத்தின் தலைவர் லலித் ஒபயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை, தோட்டங்களில் ஏற்கனவே தொழில் செய்து வாழும் தோட்ட தொழிலாளர்களுக்கும், காணிகளை பெறும் புதியவர்களுக்கும் இடையில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனவும் நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
அந்நிய செலவாணியை இந்நாட்டுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேல் அள்ளி வழங்கி வரும் மலையக தோட்ட தொழிற்துறையை உருவாக்கிய, மலையக தமிழ் பாட்டாளிகளை புறக்கணித்துவிட்டு இந்த திட்டம் நடைமுறையாக போகின்றதா? மலையக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ பலத்தை நுவரேலியா மாவட்டத்தில் வெட்டி குறைக்கும் முகமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றதா?
வடக்கில், கிழக்கில் நடைபெறும் காணி அபகரிப்புக்கு சமானமான மலையக காணி அபகரிப்பு இதுவா? 1970களில் இடம்பெற்ற அநீதியான மலையக காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகி சிவனு லட்சுமணனின் போராட்டத்தை மீண்டும் மலையகம் காணப்போகின்றதா? என்ற கேள்விகள் இன்று மலையக சிந்தனையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன என தெரிவித்தார்.
போராட்டத்தை திசை திருப்ப முனைகிறதா தமிழ்நாடு?
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 10:33.36 AM GMT ]
கடந்த வாரம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுநாள் உலகெங்கும் போலவே தமிழ்நாட்டிலும் அனுஸ்டிக்கப்பட்டது.
சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சியின் ஏற்பாட்டில் கடலூரில் ஒரு பேரணி மற்றும் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் ஜம்மு - காஸ்மீர் விடுதலை முன்னணியின் தலைவா் யாசின் மாலிக் கலந்து கொண்டிருந்தார்.
அவரது வருகையை அறிந்து கொண்ட தமிழ்நாடு அரசு அந்தப் பேரணிக்குத் தடை விதித்தது. ஆனாலும் தடையை மீறி பொதுக்கூட்டம் உள்ளக அரங்கில் நடத்தப்பட்டது.
அதில் ஜம்மு - காஸ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் பங்கேற்று உரையாற்றியிருந்தார். அதில் அவர் ஈழத் தமிழா்களின் போராட்டமும் காஸ்மீர் மக்களின் போராட்டமும் ஒரே வகையானது என்றும் அந்தப் போராட்டம் இன்னும் முடிந்து விடவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கடலூர் கூட்டத்தில் காஸ்மீா் பிரிவினைவாத அமைப்பின் தலைவா் பங்கேற்றது குறித்து காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனா்.
ஆனால் ஏனைய கட்சிகள் அந்த விடயத்தில் வாய் திறக்காமல் இருந்து கொண்டன. தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை நெடுங்காலமாகவே ஆதரிக்கும் பல கட்சிகள் அமைப்புகள் இருந்தாலும் அண்மைக்காலத்தில் தோற்றம் பெற்ற சீமான் தலைமையிலான நாம் தமிழா் கட்சி தாமே விடுதலைப்புலிகளின் மறுவடிவம் போன்று செயற்படத் தொடங்கியுள்ளது.
தொடக்கத்தில் தம்மை அரசியல் அமைப்பல்ல என்று கூறிவிட்டு, இப்போது ஆட்சியைப் பிடிக்கும் ஆவலில் தான் அரசியலுக்கு வந்ததாக கூறுகின்ற நிலைக்கு வந்திருக்கிறார் சீமான்.
யாசின் மாலிக்கை கடலூர் கூட்டத்துக்கு அழைத்து வந்து பேச வைத்ததன் மூலம் தமிழ்நாடு அரசுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் ஈழத்தமிழா்களின் போராட்டம் பற்றிய புதிய அச்சத்துக்கு விதை போடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழரின் ஆயுதவழிப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இராஜதந்திர வழிமுறையிலேயே அதுவும் இந்தியாவின் துணையுடன் தான் ஈழத்தமிழா்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற கருத்தும் நம்பிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
கடந்த காலங்களில் ஈழத்தமிழா்களின் போராட்டத்துக்கு இந்தியா பலவழிகளில் தடையாகவே இருந்தாலும் இந்தியாவை விலக்கியதாக ஒரு தீர்வு நடைமுறைச் சாத்தியமற்றது என்பது தமிழா்களால் வலுவாக உணரப்பட்டுள்ளது.
முன்னர் இந்தியாவை விலக்கி வைக்க முயன்ற விடுதலைப் புலிகள் கூட கடைசிக்காலகட்டத்தில் இந்தியாவின் தயவை நாடி நின்றனா் என்பதும் கவனத்துக்குரியது.
இத்தகைய நிலையில் ஈழத்தமிழருக்கு நியாயம் பெற்றுக் கொடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கான தமிழா் தரப்பின் முயற்சிகள் அரசியல் மட்டங்களில் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
இத்தகைய முயற்சிகள் ஒருபுறத்தில் நடந்துகொண்டிருக்கும் சூழலில் காஸ்மீர் விடுதலை இயக்கத்துக்கும் ஈழத்தமிழர் போராட்டத்துக்கும் முடிச்சுப் போடுவது எந்தளவுக்குச் சரியானது என்ற கேள்வி உள்ளது.
ஏனென்றால் இது இந்தியாவுக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான உறவுகளை சீரமைக்கும் வழிகளை அடைத்துவிடக் கூடியது. அது போலவே தமிழ்நாடு அரசும் எங்கோ வடக்கில் உள்ள ஒரு பிரிவினைவாத அமைப்பின் செயற்பாடுகளால் தனது மாநிலத்தில் வேண்டாத விளைவுகள் ஏற்படுவதை எதிர்கொள்ளத் தயாராக இருக்காது.
ஜம்மு - காஸ்மீர் விடுதலை முன்னணி இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாக இல்லாவிட்டாலும் அது ஒரு பிரிவினைவாத அமைப்பாக இந்தியாவை உடைப்பதற்கு செயற்படும் ஒரு அமைப்பாக பார்க்கப்படுகிறது.
அதற்கும் பாகிஸ்தானுக்கும் நெருக்கமான தொடர்புகள் உள்ளன என்பது ஒன்றும் இரகசியான விடயமல்ல. காஸ்மீர் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில், அங்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை மறுக்கவியலாத போதிலும் அந்தப் போராட்டத்தின் நியாயத் தன்மை மீது நிறையவே கேள்விகள் உள்ளன.
பாகிஸ்தானின் தூண்டுதல் இல்லாமல் அங்கு பிரிவினைக் கோரிக்கை எழுந்ததா என்பது முதல் விடயம்.
பாகிஸ்தான் தூண்டிவிட்டு ஆயுதங்களைக் கொடுத்து ஆட்களைப் பயிற்றுவித்தே காஸ்மீரில் ஒரு நிழல் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
காஸ்மீர் மக்கள் நடத்தும் போராட்டம் தமக்கென நாடு ஒன்றைப் பெறுவதற்கானது அல்ல. இந்தியாவை உடைத்து பாகிஸ்தானுடன் இணைந்து கொள்வதற்கானது.
காஸ்மீரிகள் தனிநாடு ஒன்றைக் கோரிப் போராட்டம் நடத்துவதானால் அதை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஸ்மீரிலும் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு நடத்தவில்லை.
இந்தியாவில் இருந்து காஸ்மீரைப் பிரிப்பதற்காக நடத்தப்படும் போராட்டத்தில் முழக்க முழுக்க பாகிஸ்தானின் தூண்டுதல் உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
விடுதலைப் புலிகள் இயக்கம் வளர்ச்சி பெற்ற போது அது இந்தியாவைப் பிளவுபடுத்தி விடும் என்ற அச்சம் இந்திய கொள்கை வகுப்பாளா்களுக்கு இருந்தது. அதாவது தமிழ்நாட்டில் பிரிவினையை உருவாக்கி விடுவார்கள் என்ற அச்சமே அது.
அதனால் தான் இந்தியா கடைசி வரை விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தவும் அழிக்கவும் கங்கணம் கட்டி நின்றது.
விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்னர் இத்தகைய அச்சம் மெல்ல மெல்ல இந்தியாவிடம் இருந்து கரையத் தொடங்கியுள்ள சூழலில் தான் காஸ்மீர் விடுதலை அமைப்பின் தலைவரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து புயலைக் கிளப்பி விட்டுள்ளார் சீமான்.
காஸ்மீரில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கவும் அவா்களின் போராட்டத்தை ஆதரிக்கவும் உரிமை உள்ளது என்று வலியுறுத்தும் சீமான் அதை ஏன் இவ்வளவு காலமும் செய்யாமல் இருந்தார்?
முள்ளிவாய்க்கால் நினைவுநாளைப் போலவே தனியான ஒரு நாளில் காஸ்மீரிகளுக்காக கூட்டத்தை நடத்தி அதில் யாசின் மாலிக்கை பேச வைத்திருந்தால் அதைப் பெரிதாக யாரும் அலட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட அவர் முற்பட்டுள்ளது தான் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. ஒரு காலத்தில் உலக விடுதலை அமைப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்து வலுவாகவே இருந்தது.
புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்றன பாலஸ்தீன விடுதலை அமைப்புகளுடனும், விடுதலைப் புலிகள் குர்திஸ் போராளிகள் உள்ளிட்டவற்றுடனும் தொட்புகளை வைத்திருந்தனா். ஆனால் இந்தியாவில் உள்ள அமைப்புகளுடன் இத்தகைய உறவுகளை அவா்கள் பேணுவதில் ஆர்வம் காட்டவில்லை.
அது இந்தியாவின் விரோதத்தை சம்பாதிக்க நேரிடும் என்பதனால் தான் அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டது. ஒரு கட்டத்துக்கு மேல் உலகளவில் விடுதலைப் போராட்ட அமைப்புகளுக்கு இடையிலான நெருக்கம் குறைந்து போனது.
உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு போர் பற்றிய அச்சமே அதற்குக் காரணம். அதேவேளை முள்ளிவாயக்காலில் ஆயிரக்கணக்கான தமிழா்கள் கொன்று குவிக்கப்பட்டபோது காஸ்மீரில் இருந்து எந்தவொரு எதிர்க்குரலும் வரவேயில்லை.
இத்தகையசூழலில் ஈழத்தமிழர்களுக்கான அஞ்சலி நிகழ்வுக்கு யாசின் மாலிக் அழைக்கப்பட்டுள்ளார். யாசின் மாலிக்கின் வருகை தமிழ்நாட்டில் பிரிவினைக்கான விதையைத் தூவிவிடுமோ என்ற கலக்கத்தை மத்திய மாநில அரசுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
காஸ்மீருக்கும் தமிழ்நாடு வழியாக ஈழத்தமிழருக்கும் தொடா்புகள் உருவாவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது. இத்தகைய கட்டத்தில் இந்தியா மீண்டும் ஈழத்தமிழரின் அரசியல் நலன்களுக்கு எதிராகத் திரும்புகின்ற நிலை ஏற்படக் கூடும்.
இலங்கையில் உள்ள தமிழர்கள் போதுமென்ற அளவுக்கு துயரங்களை அனுபவித்து விட்ட நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆதரவுடன் ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்த்துள்ள சூழலில் இந்த இணைப்பு முயற்சி அதையெல்லாம் தவிடு பொடியாக்கி விடக் கூடியது.
தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள் மேடையைக் கவர்வதற்காக பேசிய பேச்சுகளும் கூட ஈழத்தமிழரின் போராட்டத்தை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டன.
இப்போதும் கூட மதிமுக பொதுச் செயலர் வைகோ இந்தியா பல துண்டுகளாக உடையும் என்று தெரிவித்து வரும் கருத்தை இந்தியாவின் ஆளும் வர்க்கம் விடுதலைப் புலிகள் வழியாக ஊட்டப்பட்ட சித்தாந்தமாகவே பார்க்கின்றது.
இந்தியாவைப் பகைத்துக் கொண்டோ அதனைச் சபித்துக் கொண்டோ நிலையான தீர்வு ஒன்றை தமிழா்களால் எட்டிவிடமுடியாது. இந்தியாவைத் தந்திரமாகக் கையாளும் வித்தையை புலிகளும் சரி அவா்களின் தமிழ்நாட்டு ஆதரவாளர்களும் சரி கடைசி வரை புரிந்து கொள்ளவேயில்லை.
பலம்மிக்க நாடுகளின் ஆதரவை வென்றெடுப்பதுதான் தமிழர் தரப்பின் முன்னுள்ள பிரதானமான சவால் என்று நாடு கடந்த தமழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடந்த வாரம் தான் குறிப்பிட்டிருந்தார்.
அதேவேளை தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் மறுவடிவமாகத் தம்மை வர்ணித்துக் கொள்கின்றவர்கள் ஈழத்தமிழரின் போராட்டத்துக்கு திசை காட்டுபவா்களாக காட்டிக் கொள்கின்றவர்கள் அதற்கு முரணாகச் செயற்படுகின்றனர்.
இது ஈழத்தமிழரின் நியாயமான உரிமைப் போராட்டத்துக்கு சர்வதேச ஆதரவை வென்றெடுப்பதற்கான முயற்சிகளில் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடும். சீமான் போன்றவர்கள் இதையெல்லாம் தெரியாமல் செய்கின்றனரா அல்லது தெரிந்தே ஏதோவொரு நிகழ்சசி நிரலுக்கு உட்பட்டு செயற்படுகின்றனரா என்று கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது.
ஹரிகரன்
Geen opmerkingen:
Een reactie posten