தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 30 mei 2013

பாராளுமன்றத்தில் காணி, காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆற்றிய உரை!


யாழ்.சாவகச்சேரியில் பொலிஸாரினால் விபச்சார விடுதி முற்றுகை! நான்கு பேர் கைது
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 08:00.36 AM GMT ]
யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு ஜோடிகள் சற்று முன்னர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள நிரோ தனியார் விடுதியியிலேயே தவறான நடத்தையில் ஈடுபட்ட இரண்டு பெண்களும் 2 ஆண்களும் கைது செய்யப்பட்டு யாழ்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவச்சேரி நகர சபை தலைவர் தேகசகாயம்பிள்ளை, நகர சபை உறுப்பினர் கிசோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவக இளைஞர் அணித் தலைவர் நிசாந்தன் ஆகியோர் இந்த விடுதியை முற்றுகையிட்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த விடுதியில் நடைபெற்ற விபச்சார நடவடிக்கை முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்த விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், விடுதி உரிமையாளருக்கும் பொலிஸாருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து இந்த விடுதியில் இருந்த இரண்டு ஜோடிகளை பொலிஸ் தங்கள் வாகனத்தில் கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களை பணத்திற்காக அழைத்து வந்த நுணாவிலைச் சேர்ந்த 23 வயதுடைய ஆணும் 41 வயதுடைய ஆணும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபப்ட்டுள்ளனர்.
அத்தோடு இந்த விடுதி சாவகச்சேரி நகர சபையின் அனுமதி இன்றி இயங்கியதாகவும் இதை சீல் வைப்பதற்குரிய நடவடிக்கையை சாவகச்சேரி நகர சபை எடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி நகர சபைத் தலைவர் தேவசகாயம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் காணி, காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஆற்றிய உரை
[ வியாழக்கிழமை, 30 மே 2013, 08:22.20 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் வடக்கு, கிழக்கில் இடம்பெறும் திட்டமிட்ட காணிப்பறிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை பின்வருமாறு:
கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே,
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின்கீழ் மக்களுக்குக் காணிகளை வழங்குதல் தொடர்பான இந்த விவாதத்தின்பொழுது பேசச் சந்தர்ப்பமளித்தமைக்கு நன்றி.
அரச காணிகளை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கின்ற விடயங்கள் தொடர்பாக இங்கு பேசிய அமைச்சர்களாலும் மற்றும் உறுப்பினர்களாலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், தமிழர்களுடைய பிரதேசங்களிலே அவர்கள் மீளக்குடியேற்றப்படாமல் அவர்களுடைய காணிகள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்படுகின்ற சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
அதாவது அவர்கள் தங்களுடைய சொந்த நிலங்களிலே வாழ முடியாமல் தடுக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் இருபது - இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக தங்களுடைய சொந்த நிலங்களிலே வாழ முடியாமல் அகதிகளாகவே வாழ்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு, கிழக்கு போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 9,995 குடும்பங்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்குப் போக முடியாமல் இருக்கின்றன. அவர்களுடைய ஓர் இலட்சத்து இரண்டாயிரத்து இருநூறு பரப்புக் காணிகள் இராணுவத் தேவைக்கெனக் கூறி, இன்று அதற்கான விளம்பரங்கள் ஒட்டப்பட்டிருப்பதை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
அந்த விளம்பரங்களிலே, வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு- தெல்லிப்பளை, வலிகாமம் கிழக்கு- கோப்பாய் ஆகிய பிரதேசச் செயலகப் பிரிவுகளில் வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு, கோப்பாய், தெல்லிப்பளை, காங்கேசன்துறை மேற்கு, காங்கேசன்துறை மத்தி, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, ஒட்டகப்புலம், வளலாய் எனும் கிராம அலுவலர் பகுதிகளின் வரைபடங்கள் மொத்தமாகக் காட்டப்பட்டு, இந்த இடங்களிலே காணிகள் தேவைப்படுவதற்குக் காரணமாக, "பாதுகாப்புப் பட்டாலியன் தலைமையகம் - யாழ்ப்பாணம், உயர் பாதுகாப்பு வலயப் பகுதி, பலாலி - காங்கேசன்துறை அமைந்துள்ள இடத்தை முறைப்படி கையளித்தல்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் காணி எடுத்தல் சட்டத்தின் அத்தியாயம் 460 (2) ஆம் பிரிவின்கீழ் யாழ்ப்பாண காணி சுவீகரிப்பு அதிகாரி ஏ. சிவசுவாமி அவர்களால் ஒட்டப்பட்டிருக்கின்றது.
சம்பந்தப்பட்ட இந்தக் காணி அறிவித்தல் ஊடாக கிட்டத்தட்ட பத்தாயிரம் குடும்பங்கள் இன்று தெருவுக்கு வந்திருக்கின்றன. இன்று இலங்கையிலே ஒரே தடவையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒரு நீதிமன்றத்தை நாடி தங்களுடைய இருப்பிடங்களுக்குச் செல்ல விடுமாறு வழக்குத் தாக்கல் செய்கின்றார்கள் என்றால், இந்த நாட்டிலே அவர்களுக்கு என்ன ஜனநாயக உரிமை இருக்கின்றது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்.
அதேபோல வடமராட்சி கிழக்கிலே கிட்டத்தட்ட 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை இராணுவத் தேவைகளுக்காக அரசு சுவீகரிக்க முனைகின்றது.
யாழ்.மாவட்டத்தின் தீவுப் பகுதியிலே மண்டைதீவு எனப்படும் ஓர் அழகான பிரதேசம் இருக்கின்றது. அந்தப் பிரதேசத்தில் நல்ல நீர் வளத்தையும் பயிர்ச்செய்கைக்கேற்ற சிவப்பு  - செம்பாட்டு - மண் தோட்டங்களையும் கொண்ட கிட்டத்தட்ட 600 ஏக்கர் காணிகளைக் கடற்படை தன்வசப்படுத்தியிருக்கின்றது.
22 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து வாழ்ந்த அங்குள்ள மக்கள் தங்களுடைய அந்தச் சொந்த மண்ணுக்குப் போக முடியாமல் நிர்க்கதியாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதேபோல யாழ்ப்பாணம் வலி. தென் மேற்கு செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வகையிலும் பல காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்றன.
கிளிநொச்சி மாவட்டம்
இதன் தொடர்ச்சியாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரவிப்பாஞ்சான், மருதநகர், இரணைதீவு போன்ற பெரிய கிராமங்கள் முழுமையாக இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருப்பதுடன், அந்தக் கிராமங்களின் முழு நிலங்களையும் இராணுவத் தேவைகளுக்கெனச் சுவீகரித்திருக்கின்றார்கள்.
நேற்றைய தினம்கூட கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கண்டாவளை பிரதேசச் செயலகப் பிரிவின் 54ஆம் பிரிவான தர்மபுரம் மேற்கு கிராம சேவகர் பிரிவிலுள்ள தர்மபுரம் கிராமத்தில்  தர்மபுரம் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்குப் பகுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட அறுபது ஏக்கர் காணிகளைச் சுவீகரிப்பதற்காக கிளிநொச்சி காணி சுவீகரிப்பு அலுவலரால் அங்கு அறிவித்தல் ஒட்டப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் அவர்களுடைய நிலங்கள் மிகவும் பரவலாகப் பறிக்கப்படுகின்றன. இதன் நோக்கம் என்ன? இந்த மக்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்குப் போக முடியாமல், சொந்த இடங்களிலே வாழ முடியாமல் இன்றும் அகதிகளாக இருக்கின்ற இந்த நிர்ப்பந்தமான சூழல் இந்த நாட்டிலே ஏற்பட்டிருப்பது ஏன்? என்பதை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வவுனியா மாவட்டம்
வவுனியா மாவட்டத்திலே ஒலுமடு, கொக்கச்சான்குளம், கருங்காலிக்குளம், கருவேப்பம்குளம், பட்டிக்குடியிருப்பு, வெடிவைத்தகல் போன்ற இடங்களில் தமிழர்களுடைய நிலங்கள் முழுமையாக இராணுவத் தேவைகளுக்கென்ற பேரில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதற்காகப் பறிக்கப்பட்டிருக்கின்றன. மன்னார் மாவட்டத்தில் முசலி, மாந்தை, மடு, தள்ளாடி, முள்ளிக்குளம், ஆட்காட்டிவெளி, வெள்ளாங்குளம், அடம்பன் போன்ற இடங்களில் ஐயாயிரம் சிங்கள மக்களின் குடியேற்றங்களுக்காக காணிகளைப் பறிப்பதாக அரசு அறிவித்தல்களை வழங்கியிருக்கின்றது. 
முல்லைத்தீவு மாவட்டம்
இதேபோல, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கேப்பாப்புலவு என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அங்கு குடியேறவிடாமல் தடுக்கப்பட்டு, சீனியாமோட்டை என்ற பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
மணலாறு பிரதேசத்திலுள்ள கந்தசாமிமலை, எரிந்தகாடு, முந்திரிகைக்குளம், அக்கரைவெளி, மாரியாமுனை, நித்தகக்குளம், இலந்தைமுனை, வத்தாமடு, மணற்கேணி, சாம்பன்குளம், ஆமையன்குளம், சின்னக்குளம், பறையனாறு, ஆலங்குளம், சிலோன் தியேட்டர், புலிபாய்ந்தகல், புளியமுனை, நாயடிச்சமுறிப்பு, வண்ணாங்குளம், ஊரடித்தகுளம், தட்டாமனைக்குளம், பனையாண்டான்குளம், கூவாவடிக்குளம், கூமாவடிக்கண்டல், சலாத்துவெளி, கிடங்குமடுக்குடா போன்ற தமிழர்களுடைய பாரம்பரிய கிராமங்களில் அந்த மக்கள் குடியேற்றம் செய்யப்படாமல், அந்த இடங்களிலுள்ள காணிகள் முழுமையாக அரசினால் பறிக்கப்பட்டு, அவை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
அண்மையிலே ஜனாதிபதி அவர்களால் அந்த மக்களுக்கு அந்தக் காணிகளுக்கான உரித்துகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் இந்த மாவட்டங்களில் மிகவும் மோசமான, இக்கட்டான ஒரு சூழலை சந்தித்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொக்கட்டிச்சோலை, கச்சைக்கொடி சுவாமிமலை, புளுக்குணாவை தமிழ்க் கிராமம் மற்றும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இருபத்தையாயிரம் ஏக்கர் காணிகள் - அதிலும் கூடுதலாக மாடு மேய்ப்பதற்கான தரவை நிலங்கள் - இராணுவத் தேவைக்கும் குடியிருப்புக்குமென எடுக்கப்பட்டிருக்கின்றன.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மேய்ச்சல் நிலங்கள், கிரான் பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் வாகரை, வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தமிழ் மக்களுடைய காணிகள் என்பன அடாத்தாக அரசினால் எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த இடங்களிலே இருக்கமுடியாதவாறு அந்த மக்கள் தடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
திருகோணமலை மாவட்டம்
2006ஆம் ஆண்டிலே திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூரில் இடம்பெயர்ந்த 5,500 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் மணற்சேனை, கிளிவெட்டி, பட்டித்திடல், கட்டைப்பறிச்சான் போன்ற இடங்களில் இன்றுவரை அகதி முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இதனைவிட, அரசினால் திருகோணமலை மாவட்டத்தில் பன்குளம், தம்பலகாமம் போன்ற இடங்களில் 'அரச ஊழியர் குடியிருப்பு' என்ற பெயரில் சிங்களக் குடியேற்றங்கள் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு தமிழ் மக்களுடைய வாழ்விடங்களில் அவர்கள் வாழ முடியாதவாறு தடுக்கப்படுவதோடு, அவர்களுடைய நிலங்களும் பாரியளவில் பறிக்கப்பட்டு வருகின்றன.
கோயில்காணிகளைப் பறித்தல்
இதனைவிட மிக மோசமான நிகழ்வுகள் கிளிநொச்சி மண்ணிலே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒருபுறம் அரசாங்கம் காணிகளை எடுக்கின்றது. இன்னொரு புறத்திலே தென்பகுதியிலிருந்து வருகின்ற சிங்கள சமூகத்தைச் சேர்ந்த பலம் வாய்ந்தவர்கள், இராணுவ, பொலிஸ் பலத்தை வைத்துக்கொண்டு, கிளிநொச்சி மண்ணிலே 60 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்ற உதிரவேங்கை வைரவர் ஆலயத்துக்கு சொந்தமான காணியை அடாத்தாகப் பறித்திருக்கிறார்கள்.
இது தொடர்பாக நான் கிளிநொச்சி பொலிஸ் நிலையம், கிளிநொச்சி உதவி அரசாங்க அதிபர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியும்கூட அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆலய நிர்வாகத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் ஒரு தற்காலிக ஆணையை மட்டும் பிறப்பித்திருக்கிறது. இந்த நிலைமைகள் அந்த மண்ணிலே பாரியளவில் அந்த மக்களுடைய காணிகளை பறிப்பதிலும் அவர்களை அந்த இடங்களுக்கு போகவிடாமல் தடுப்பதிலும் பாரிய செல்வாக்கைச் செலுத்தியிருக்கின்றன.
கிளிநொச்சி மாவட்ட நெற்செய்கை
அத்தோடு, கிளிநொச்சி மாவட்டத்திலிருக்கின்ற 15,564 குடும்பங்கள் இரணைமடு தண்ணீரை மொத்தமாகப் பெற்று 56,193 ஏக்கர் நிலத்தில் இவ்வாண்டு காலபோக நெற்செய்கையை மேற்கொண்டன. இதில் 8,516 குடும்பங்களின் 27,851 ஏக்கர் நிலம் நூறு சதவீத பாதிப்பைக் கண்டுள்ளது.
அந்த அழிவின் பெறுமதி பதின்மூன்று கோடியே இருபது இலட்சத்து பன்னிரண்டாயிரத்து நானூறு ரூபாய். அதாவது, கிட்டத்தட்ட 132 மில்லியன் ரூபாய் என அரச நெல் சந்தைப்படுத்தும் சபையின் விலைமதிப்பீட்டின்படி கணக்கிடப்பட்டுள்ளது.
இது, கிளிநொச்சி மாவட்டத்தில் நெற்செய்கையில் ஈடுபட்ட அரைவாசிக்கும் மேற்பட்ட குடும்பங்களும் நெற்செய்கை நிலங்களும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது.
2008 - 2009 இல் 'சமாதானத்துக்கான போர்' என்ற பெயரில் வன்னி மக்கள்மீது அரசு மேற்கொண்ட யுத்தம் காரணமாக விவசாயிகள் தங்களுடைய உழவு இயந்திரங்கள், வாகனங்கள், வீடுகள் போன்ற சொத்துக்களை முழுமையாக இழந்திருந்தனர்.
2010 இல் மீள்குடியேறிய பின் வங்கிகளிலும் தனியார் நிறுவனங்களிலும் கடன்பெற்ற விவசாயிகள் தங்கள் விவசாயமும் அழிந்த நிலையில் இன்று விரக்தியின் விளிம்பில் உள்ளார்கள். 2012ஆம் ஆண்டு சிறுபோகச் செய்கையின்போது கிளிநொச்சி மாவட்டத்தில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட 1,879 குடும்பங்களின் 3,906 ஏக்கர்  நிலம் வரட்சி காரணமாக ஏற்கெனவே அழிவடைந்திருந்தது. அதற்கு இதுவரை எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.
குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை, முரசுமோட்டை, பன்னங்கண்டி, ஊரியான், கோரக்கன்கட்டு போன்ற கிராமங்களிலுள்ள நெற்செய்கை நிலங்கள் கடந்த காலபோகத்தின்போது நூறு சதவீத அழிவைக் கண்டன. பூநகரி பிரதேசம், பரந்தன், புளியம்பொக்கணை, கல்மடுநகர், இராமநாதபுரம், வட்டக்கச்சி, அக்கராயன், ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம், முறிப்பு, உருத்திரபுரம் மற்றும் கிளிநொச்சிப்புற வயல் நிலங்களும் அழிவடைந்துள்ளன.
ஆனால், அரசாங்கத்தினால் இவ்விவசாயிகளுக்கு இதுவரையில் எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை. இவ்வாண்டு சில விவசாயிகள் கூடுதலான வயல்நிலங்களில் விதைத்திருப்பதாகக் கூறி, அவர்கள் சிறுபோகம் செய்த 1,500 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்களுக்கு வலுக்கட்டாயமாக மருந்து அடித்து, அங்குள்ள பயிர்களை அழிப்பதற்கான முயற்சிகள் கிளிநொச்சி அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏற்கெனவே கடந்த சிறுபோக நெற்செய்கையில் ஏற்பட்ட அழிவுக்கு நிவாரணம் வழங்காமலும் காலபோகத்தின்பொழுது 132 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியை அந்த மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கமுடியாமலும் இருக்கின்ற இந்த அரசாங்க அதிபர், இப்பொழுது அந்த மக்களின் விதைக்கப்பட்ட வயல்களை அழிப்பதற்குக் கங்கணம்கட்டி நிற்பது அந்த மக்களுக்கு மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொலனறுவை மற்றும் அனுராதபுர மாவட்ட மக்களுக்கு கடந்த காலபோகத்தின்பொழுது வயல்களில் ஏற்பட்ட அழிவுக்குரிய நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடைய முயற்சியின்மையின் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு எவ்விதமான நிவாரணமும் வழங்கப்படவில்லை.
நான் இது தொடர்பாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பஷில் ராஜபக்ஷ அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். அக்கடிதத்துக்கு இதுவரையில் எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இவ்வாறுதான் அந்த மண்ணிலே மிக மோசமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்பதையும் இச்சந்தர்ப்பத்திலே நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோகம்
இதைவிட, கடந்த 2013.05.14ஆந் திகதி செவ்வாய்க்கிழமை வவுனியா மாவட்டத்திலுள்ள நெடுங்கேணியில் அமைந்திருக்கும் சேனைப்புலவு உமையம்மாள் வித்தியாலயத்தில் தரம் 1இல் கல்வி கற்கும் 2007ஆம் ஆண்டு ஜனவரியில் பிறந்த 7 வயதுச் சிறுமி மதியம் 1.45 மணிக்கு பாடசாலை விட்டுச் செல்லும்பொழுது பற்றைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த 7 வயதுச் சிறுமி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார். எதிர்காலம் எவ்வாறு அமையும் எனச் சொல்ல முடியாத நிலையில் அந்தச் சிறுமியின் நிலைமை காணப்படுகின்றது.
அதேபோன்று நேற்று முன்தினம், 2013.05.20ஆந் திகதி திங்கட்கிழமை காலை 7.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உடையார் கட்டு மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர் தரத்தில் கல்வி கற்கும் சிறுமியை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் வீதியில் மறித்து பற்றைக்குள் இழுத்துச்சென்றிருக்கிறார். அவ்வேளையில் அவர் கூக்குரலிட்டதால் அயலில் இருந்தவர்களின் உதவியுடன் அவர் காப்பாற்றப்பட்டிருக்கின்றார்.  
வறுமையின் கோரம்
இதைவிட, வவுனியா மாவட்டத்திலுள்ள தாண்டிக்குளத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு கோரச் சம்பவம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். தனது மூன்று பெண் குழந்தைகளைக் கிணற்றிலே போட்டுத் தாயும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். நிதர்சிகா-வயது ஒன்று, சன்சிகா-வயது இரண்டு, லதுர்சிகா-வயது ஆறு ஆகிய மூன்று பெண் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.
வறுமைதான் இவர்களின் இறப்புக்கு அடிப்படைக் காரணம் என்பதை இச்சம்பவம் புலப்படுத்தியிருக்கின்றது. காரணம், இந்தத் தாய் உதவி அரசாங்க அதிபர், நன்னடத்தை உத்தியோகத்தர், அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள் ஆகியோரிடம் பல தடவை நடையோ நடையாக அலைந்துசென்று உதவி கோரியிருக்கிறார்.
ஆனால், இப்பொழுது அவருடைய வறுமைநிலை மறைக்கப்பட்டு, மனநோயாளி என்ற பெயர் சூட்டப்பட்டு, அவர் மனநோயாளிகள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அநியாயமாக மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 
தமிழர்களின் தொடர் உயிரிழப்புக்கள் – தற்கொலைகள்
இப்பொழுதெல்லாம் எமது நாட்டிலே காலையிலே பத்திரிகையை எடுத்தால், பரவலாக தூக்கிலே தொங்கியவர்கள் பற்றிய செய்தியையும், கிணற்றிலே வீழ்ந்து உயிரிழந்தவர்கள் பற்றிய செய்தியையும், தற்கொலை செய்தவர்கள் பற்றிய செய்தியையும்தான் நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
யாழ்ப்பாணத்திலே ஒரேநாளில் இரண்டு பெண்கள் தூக்கில் தொங்கியிருக்கிறார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் தூக்கில் தொங்கியிருக்கிறான்.  மட்டக்களப்பிலே தாய் தந்தையரை பிள்ளைகளே வெட்டுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து இத்தகைய சம்பவங்கள் தொடர்பான செய்திகள் வெளிவந்தாலும் வடக்கு, கிழக்கிலேதான் இவை  மிக மோசமாக இடம்பெறுகின்றன. இதற்கு  அடிப்படைக் காரணங்கள் பல இருக்கின்றன. ஏனெனில், எமது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களுடைய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. அவர்களுடைய கலாசாரம் சீரழிக்கப்படுகின்றது. அவர்களுடைய வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டிருக்கிறது.
தமிழர்களுக்கான ஒரு வாழ்வியல் ஆதாரம் எதுவும் இல்லை. வடக்கு, கிழக்குப்  பகுதிகளிலே குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து அம்பாறை வரைக்கும்  தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களிலே அவர்கள் தொழில் செய்து வாழக்கூடிய வகையில் ஒரு தொழிற்சாலை அமைப்போ அன்றி வேறு எந்த நடவடிக்கையுமோ கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அரசினால் மேற்கொள்ளப்படவில்லை.
காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஏற்கெனவே இருந்த வட்டக்கச்சி அரசினர் விவசாயப்பண்ணை, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவை ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வழங்கிய நிறுவனங்களாகும். இன்று அப்பிரதேசங்களிலுள்ள மக்கள் வேலையற்ற நிலையில் அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டின்கீழ் இந்தப் பிரதேசங்களை வைத்திருந்தபொழுதுகூட தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினூடாக வட்டக்கச்சி அரசினர் விவசாயப்பண்ணை, ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனம் என்பன இயங்கிவந்தன. அந்தக் காலகட்டத்தில் எட்டாம் வகுப்புப் படித்தவர்களிலிருந்து பட்டதாரிகள் வரையிலும் அனைவருக்குமே அவர்களால் வேலைவாய்ப்புக்கள் அளிக்கப்பட்டிருந்தன. அப்பிரதேசங்களிலுள்ள மக்கள் இவ்வாறு பட்டினியால் சாகடிக்கப்படவில்லை, அன்றி இவ்வாறு  தற்கொலை செய்துகொள்ளவில்லை.
கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு - structural genocide
ஆனால், இன்று இவை நடைபெறுவதற்கான காரணங்களை நாங்கள் கண்டறியவேண்டும். உண்மையிலே ஏன், தமிழர் பிரதேசங்களில் இன்று இவை பாரியளவில் இடம்பெறுகின்றன? காரணம், தமிழர்களுடைய நிலங்கள் பறிக்கப்படுகின்றன; அவர்கள் தங்களுடைய சொந்த நிலங்களிலே குடியேறி வாழ முடியாமல் இருக்கின்றது.
அவர்கள் பொருளாதார ரீதியாக உழைக்க முடியாமல் இருக்கின்றார்கள்; எங்கு பார்த்தாலும் இராணுவப் பிரசன்னம்; இராணுவப் புலனாய்வாளர்களின் பின்தொடரல் அவர்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் இராணுவச் செயற்பாட்டுக்குள்ளும் அடக்கப்படுகின்றார்கள் அவர்களால் பேச முடியவில்லை ஜனநாயகம் மறுக்கப்பட்டிருக்கின்றது.
ஆகவே, இந்த நிலையில் தமிழர்களுடைய வாழ்க்கை என்பது கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கின்றது. அவர்கள் மரணத்தை நோக்கித் தள்ளப்படுகின்றார்கள் என்பதைத்தான் இது தெளிவாகக் காட்டுகின்றது. இதுகூட கட்டமைக்கப்பட்ட ஓர் இன அழிப்பு நடவடிக்கை - structural genocide என்ற அடிப்படையில்தான் பல ஆய்வாளர்களால் நோக்கப்படுகின்றது.
ஏனென்றால், அவர்களுடைய காணிகள் பறிக்கப்பட்டு, அவர்களுடைய மொழியுரிமையும் பறிக்கப்படுகிறது. குறிப்பாக, நான்  ஓர் அச்சகக் கூட்டுத்தாபனத்தின் அறிக்கையில் பார்த்தேன், "இலங்கை இச்சக நிறுவனம்" என்று அச்சிட்டிருக்கின்றார்கள். இங்கு மொழிகூட சாகடிக்கப்படுகின்றது. ஆகவே, மொழியை இழந்து வருகின்றான் தமிழன் தன் இனத்தை இழந்து வருகிறான். தன்னுடைய கலாசாரத்தை இழந்து வருகின்றான்.
தன்னுடைய பண்பாட்டை இழந்து வருகின்றான், தன்னுடைய வாழ்வியல் உரிமையை இழந்து வருகின்றான், பொருளாதார ரீதியான இருப்பை இழந்து வருகின்றான். ஆகவே, படிப்படியாக ஓர் இனத்தை அழிப்பதற்கான - structural genocide - கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்குள் தமிழர்கள் தள்ளப்பட்டுச் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதையே இந்த நாட்டின் தற்போதைய நிலைமை தெளிவுபடுத்துகின்றது.
இதிலிருந்து நாங்கள் விடுபடவேண்டுமானால், இந்த நாட்டில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வு வழங்கப்படவேண்டும். அந்தத் தீர்வுக்கான பாதையாக, ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுடைய மரபுவழித் தாயக மண்ணிலே சுயநிர்ணய உரிமையுடன் கூடிய, நீடித்து நிலைக்கக்கூடிய ஓர் அரசியல் சீர்திருத்தத்தை - ஓர் அரசியல் தீர்வை - முன்வைக்க வேண்டும். அவ்வாறு ஒரு தீர்வு முன்வைக்கப்படாதவரை அவர்கள் இந்த மண்ணிலே மெல்ல மெல்லச் சாகடிக்கப்படுவார்கள் என்பதைத்தான் இந்த நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.
அரசியல் சீர்திருத்தங்களினாலோ பொருளாதார அபிவிருத்திகளினாலோ இட்டு நிரப்பிவிட முடியாத அதலபாதாளமான வேறுபாடு சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் உள்ளது" என்று இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர் ஸ்தானிகர் ஜே. என். டிக்சிற் அவர்கள் தனது பிரபல்யமிக்க “Assignment Colombo” என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையில் இட்டு நிரப்பிவிட முடியாத  அந்த அதலபாதாளமான வேறுபாடு முள்ளிவாய்க்கால் படுகொலைமூலம் மேலும் ஆழமாகியும் அகலமாகியும் இருக்கின்றது என்பதை நாங்கள் இந்த இடத்திலே புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால், ஏற்கெனவே 140,000க்கும் மேற்பட்ட மக்கள் முள்ளிவாய்க்காலிலே கொல்லப்பட்டும் காணாமல்போயும் இருக்கின்றார்கள். 1956ஆம் ஆண்டு கந்தளாயில் 156 விவசாயிகள் கொல்லப்பட்டதிலிருந்து, 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை வரைக்கும் கிட்டத்தட்ட இலங்கையிலே மூன்று இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
44,000க்கும் மேற்பட்ட போராளிகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற இன அழிப்பைத் தொடர்ந்து, இப்பொழுது தமிழர்கள் வேறுவகையில் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த வகையில் முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது சிங்கள - தமிழ் மக்களை மேலும் இரு துருவங்களாக்கியுள்ளது. மேலும், இதில் அவர்கள் பெற்றுள்ள பொய்யான இராணுவ வெற்றியைவிட, மெய்யான அரசியல் வெற்றி மிகவும் பெரியது.
ஏனென்றால், அண்மையில்கூட இலங்கையின் ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் உட்பட அனைவரும் தமிழர்களை வென்றதற்காக - முள்ளிவாய்க்காலிலே மக்களைக் கொன்றதற்காக - காலி முகத்திடலிலே ஒரு பெரிய கொண்டாட்டத்தை நடத்தினார்கள். அதேநேரம் ஆயிரமாயிரம் தமிழர்கள் தமது கண்களிலிருந்து கண்ணீர் வடித்தபடி, தங்களுடைய உறவுகளுக்காக விளக்கேந்தி நின்றார்கள்.
அதைவிட, பலர் இன்று சிறையிலே செத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் சிறையிலே போதைப்பொருள் விற்பவர்களோடு சேர்க்கப்பட்டு, நாளாந்தம் அசெளகரியங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
காணாமல்போனவர்களுக்கு இந்த நாட்டிலே இன்னும் ஒரு முடிவு சொல்லப்படவில்லை. அவர்களுடைய நிலை என்ன என்பதைச் சொல்வதற்குப் பதிலாக, "யாரும் காணமல் போகவில்லை" என்று சொல்லப்படுகின்ற பதில்கள்தான் வந்துகொண்டிருக்கின்றன. ஆதாரங்களோடு அவர்களைக் கையளித்த மனைவிமார், தந்தைமார், தாய்மார் இன்றும் கண்ணீரோடு இருக்கின்றார்கள்.
எத்தனையோ குழந்தைகள் தங்களுடைய தாய், தந்தை, சகோதரர்களை எண்ணி, இப்பொழுதும் அவர்களுடைய வருகைக்காக காத்திருக்கின்றார்கள். குறிப்பாக, "வட மாகாண சபை தேர்தல் நடைபெற்றால், அதில் முன்னாள் போராளிகள் போட்டியிட விரும்புகின்றார்கள்" என அமைச்சர் மாண்புமிகு சந்திரசிறி கஜதீர அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். இது வரவேற்கத்தக்க விடயம்.
ஆனால், வடக்கு, கிழக்கிலே கண்ணீரோடு வாழுகின்ற எத்தனையோ போராளிகளுடைய குடும்பங்கள் தங்களுடைய தந்தையின் வருகைக்காக, தங்களுடைய தாயின் வருகைக்காக, தங்களுடைய சகோதரன் மற்றும் பிள்ளையின் வருகைக்காக காத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய பிள்ளைகள் சிறையிலே வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் போராளிகளையும் இந்த அரசாங்கம் ஏன் விடுதலை செய்யக்கூடாது? அவர்களை விடுதலை செய்து, ஒரு நல்ல நிலையை ஏன் உருவாக்கக்கூடாது? புரிந்துணர்வுக்கான இத்தகைய நிலைமைகளை இந்த அரசாங்கத்தால் ஏற்படுத்த முடியாதிருப்பது ஏன்? என்பவைதான் எங்கள் முன் இருக்கின்ற பாரிய கேள்விகள்.
இந்த வகையில், முள்ளிவாய்க்கால் படுகொலையை ஒரு தற்செயலான செயலான நிகழ்வாகப் பார்க்காமல், தமிழ் மக்களைக் கொன்று குவிக்க வேண்டுமென்ற சிங்களத் தலைவர்களின் ஓர் எண்ணத்தின் வெளிப்பாடாகவே நாங்கள் பார்க்க வேண்டியிருக்கின்றது. சிங்கள மக்கள் மத்தியில் ஒரு நீதிவானும் இல்லையா என்று கேட்கும் அளவுக்கு இன்று நிலைமை மாறிக் கொண்டிருக்கின்றது.
1956ஆம் ஆண்டு இதே பாராளுமன்றத்தில் "இரண்டு மொழிகள் எனில் ஒரு நாடு ஒரு மொழி எனில் இரண்டு நாடுகள்" என்று கொல்வின் ஆர்.டீ. சில்வா அவர்கள் சொன்னார். அந்தத் தீர்க்கதரிசனமான வார்த்தைகள் இன்றும்கூடப் பலரால் மீட்டுச் சொல்லப்படுகின்றன.
1926ஆம் ஆண்டிலே பண்டாரநாயக்க அவர்களால் தமிழர்களுக்கான ஒரு சமஷ்டி பற்றிப் பேசப்பட்டது. 1978ஆம் ஆண்டிலே ஜே.ஆர். ஜயவர்தன அவர்களால் தமிழர்களுக்கான ஒரு சமஷ்டி தீர்வு பற்றிப் பேசப்பட்டது. ஆனால், இன்று தமிழர்களுக்கான ஒரு தீர்வு என்பது தேவையற்ற ஒரு விடயமாகவும் அபிவிருத்திதான் அவர்கள் கேட்கின்ற ஒரு விடயம் போலவும் அரசால் பிரசாரம் செய்யப்படுகின்றது.
ஆகவே, இந்த நிலைமைகளில் இருந்து அரசு மாற வேண்டும். சரியான புரிந்துணர்வு - reconciliation - ஏற்படுத்தப்பட வேண்டும். மக்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டுமானால், முதலில் அரசாங்கத்திடமிருந்தும் சிங்கள மக்களிடமிருந்தும்தான் அது வரவேண்டும். அதனை இந்த அரசாங்கம்தான் செய்ய வேண்டும்.
தமிழ் மக்களிடமிருந்து - அடக்கப்பட்ட, அழிக்கப்பட்ட இனத்திடமிருந்து - எவ்வாறு அது உருவாகும் என்பதை நீங்கள் உங்களையே கேட்டுப் பார்க்க வேண்டும். அரச பலத்தைப் பயன்படுத்தியும் எத்தனையோ வகையான உபாயங்களைக் கையாண்டும் முள்ளிவாய்க்கால் படுகொலையை மூடிமறைக்க அரசு எடுத்த அனைத்துப் பிரயத்தனங்களும் தகரத் தொடங்கியிருப்பதை அண்மைக்கால நிகழ்வுகள் எங்களுக்குக் காட்டி நிற்கின்றன.
புலம் பெயர் தமிழர்களின் பலம்
இந்தப் பூமிப் பந்தில் பலம் பொருந்திய இரு diaspora கள் இருக்கின்றன. ஒன்று யூத diaspora, இரண்டாவது தமிழ் diaspora. இன்று தமிழ் diaspora உலகத்திலே ஒரு பாரிய செல்வாக்கைப் பெற்றிருக்கின்றது.
அண்மையில்கூட அமெரிக்காவிலே ஓர் இலட்சத்து பத்தாயிரம் diaspora தமிழர்கள் சேர்ந்து தங்களுடைய ஒரு முரசறைவைச் செய்திருக்கின்றார்கள். ஆகவே, தமிழர்கள் ஒரு பலம் பொருந்திய நிலையில் இருக்கின்றார்கள். நேற்று இருந்த நிலை இன்று இல்லை என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது வரலாறு நேற்று இருந்ததுபோல இன்று இல்லை. இன்று இருப்பதுபோல நாளை இருக்காது.
நாம் நேற்று இருந்ததை விடவும் இன்று அதிக அங்கீகாரம் உள்ளவர்களாக இருக்கின்றோம். இன்று இருப்பதை விடவும் நாளை பலம் பொருந்தியவர்களாக இருப்போம். நேற்று இருந்த சர்வதேச உறவுநிலை மாறி இன்று எமக்குச் சாதகமான சர்வதேச உறவுநிலை தோன்றியுள்ளது. இந்தியாவுடனான எமது உறவில் அதிக மாற்றங்கள் தென்படத் தொடங்கியுள்ளன.
விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் வரலாற்று நிர்ப்பந்தங்களின் நிமித்தம், ஈழத் தமிழருக்குச் சாதகமான உலக நிலை தோன்றக்கூடிய சரியான ஒரு பாதையை தற்போதைய சூழல்கள் காட்டி நிற்கின்றன.
ஆகவே, "வெறும் பொருளாதார அபிவிருத்திகளினால் தமிழினத்துக்கும் சிங்கள இனத்துக்குமிடையிலான இடைவெளியை இட்டு நிரப்பிவிட முடியாது" என திரு. டிக்சிற் தனது நூலில் கூறியவாறு, தமிழர்களுக்கான ஒரு பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் என்பது தீர்வாக அமையாது, அபிவிருத்திகள் பற்றிப் பேசுவது இனப் பிரச்சினைக்கான தீர்வு என்று ஆகிவிடாது.
இந்த அபிவிருத்தி பற்றிய விடயங்களை இன்னொரு விதமாகப் பார்த்தால் அது சிங்களமயமாக்கலுக்கான அபிவிருத்தி என்றே தமிழ் மக்களால் உணரப்படுகின்றது. அதாவது அது தமிழ் தேசிய வளர்ச்சிக்கு எதிரானது. எனவே, தமிழ் மக்களுக்கு முக்கியமானது வரவு செலவுத் திட்டமும் அதில் சொல்லப்படும் அபிவிருத்திகள் பற்றிய விடயங்களுமல்ல.
இன்று எமது இனம் மிகவும் கடினமான நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தில் உள்ளது. உலகில் எந்தவோர் இனமும் சந்தித்திராத பல சரிவுகளையும் பல திருப்பங்களையும் பல நெருக்கடிகளையும் கண்ட தமிழினம், தன் பலத்துக்கு மிஞ்சிய பாரிய சக்திகளை எல்லாம் எதிர்கொண்டு வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்கச் சக்திகளோடும் போராடியிருக்கின்றது.
இன்றும் நம்பிக்கைத் துரோகங்களையும் பெரும் நாசச் செயல்களையும் தமிழ்த் தேசிய இனத்துக்கு எதிராகப் பின்னப்படும் எண்ணற்ற சதிவலைகளையும் சந்திக்கின்றது. ஆயுத வன்முறையைக்கூட தமிழர்கள் விரும்பித் தெரிவுசெய்யவில்லை.
வரலாறுதான் அவர்களிடம் ஆயுதத்தைக் கையளித்திருந்தது. இந்நிலையில் எமது மக்களது அரசியல் அபிலாஷைகளையும் ஆழமான திருப்பங்களையும் புரிந்து, வரலாற்றின் அனுபவங்களைப் பாடமாகக்கொண்டு, தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு கெளரவமான, நீதியான, நீடித்து நிலைக்கக்கூடிய, நியாயபூர்வமான தீர்வு ஒன்று வழங்கப்படாவிட்டால் வரலாறு தான் விரும்பும் திசையில் இலங்கையை இட்டுச் செல்லும் என்பது வருகின்ற காலத்தை ஒத்ததாக அமையும் எனக் கூறி, எனது உரையை நிறைவு செய்கின்றேன்.

Geen opmerkingen:

Een reactie posten