தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி யையும் விசாரணைக்கு அழைப்பு


கிளி. மாவட்ட தமிழரசுக் கட்சி செயலாளர் பசுபதிப்பிள்ளை மீதும் 3 மணி நேரமாக விசாரணை!
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 06:37.29 AM GMT ]
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் செயலாளரும் ஓய்வுநிலைக் கிராம அலுவலருமான சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் நேற்று  ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை பயங்கரவாதக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வவுனியாவிற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் இறங்கப் போகிறீரா? எனவும் முன்னர் விடுதலைப்புலிகளுக்கு உதவி செய்துள்ளீர், இப்போது ஏன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து வேலை செய்கிறீர்?” என அதட்டும் வகையில் விசாரணை செய்துள்ளனர்.
தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஜனநாயக அரசியலில் ஈடுபட்டால் மீண்டும் மீண்டும் விசாரணைகளிற்கு வரவேண்டியிருக்கும். இது இத்துடன் முடிந்து விட்டதாகக் கருத வேண்டாம் என சொல்லியனுப்பியுள்ளார்கள்.
அண்மைக் காலமாகக் கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவப் புலனாய்வாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கு எடுப்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைக் கைது செய்வது,விசாரணைக்கென அழைப்பது, அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.
இதே போன்று, முன்னாள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட ஓய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜாவும் கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி உதய பெரேராவால் இரணைமடு தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டு “தேர்தலில் ஈடுபடப் போகிறீர்களா” என விசாரிக்கப்பட்டுள்ளார்.
கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சேதுபதி அவர்களும் வவுனியா பயங்கரவாதக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்கம் ஜனநாயக ரீதியில் இந்த நாட்டில் நடக்கக் கூடாது என்பதில் அரசு முழுக் கவனம் செலுத்தி வருவதையே இச் செயற்பாடுகள் காட்டுவதாகக் கிளிநொச்சி மக்கள் கவலை கொண்டுள்ளனர்.
அப்பாத்துரை விநாயகமூர்த்தி எம்.பி யையும் விசாரணைக்கு அழைப்பு
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 06:25.41 AM GMT ]
பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸ் நிலையத்திற்கு கடந்த 25ம் திகதி விசாரணைக்கு வருமாறு தன்னை அழைத்ததாகவும் அவர் கூறினார்.
உடல் நலக்குறைவு காரணமாக தன்னால் அன்றைய தினம் விசாரணைக்கு செல்ல முடியவில்லை எனவும் எதிர்வரும் ஜுன் மாதம் இந்த விசாரணைக்கு வருவதாக தான் கூறியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten