தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 mei 2013

ஜோர்தானில் இலங்கைப் பெண் சுடப்பட்டதற்கு விசாரணை மேற்கொள்ளுமாறு யோகேஸ்வரன் எம்.பி கோரிக்கை!

காந்திமதியின் மரணத்திற்கு ஜோர்தான் அரசாங்கம் நீதியான தீர்ப்பை வழங்க வேண்டும்: தாய் பிரதேச செயலருக்கு மகஜர்
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 01:55.43 PM GMT ]
ஜோர்தான் நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகக் கூறப்படும் வாழைச்சேனை கறுவாக்கேணியைச் சேர்ந்த நாகேந்திரன் காந்திமதியின் மரணம் தொடர்பில் ஜோர்தான் அரசாங்கம் நீதியான தீர்ப்பை வழங்க வேண்டும் என்று இவரது தாயார் நாகேந்திரன் மங்களேஸ்வரி பிரதேச செயலாளருக்கு இன்று கையளித்துள்ள மகஜரில் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கறுவாக்கேணி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் காந்திமதி (வயது 21) என்பவரே ஜோர்தான் நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் ஜோர்தான் நாட்டின் இலங்கைக்கான தூதரகத்திற்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைக்கும் முகமாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.ரீ.தினேஸிடம் இந்த மகஜரை கையளித்துள்ளார்.
ஜோர்தான் நாட்டில் துப்பாக்கி சூட்டில் பலியானதாகக் கூறப்படும் நாகேந்திரன் காந்திமதியின் மரணத்தை கண்டித்து கறுவாக்கேணி பகுதியிலிருந்து பொதுமக்களுடன் ஊர்வலமாகச் சென்றே இந்த மகஜரை மரணமாக பெண்ணின் தாயார் நாகேந்திரன் மங்களேஸ்வரி கையளித்துள்ளார்.
இந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எனது இரண்டாவது மகளாகிய நாகேந்திரன் காந்திமதி கடந்த 2010ம் ஆண்டு ஜோர்தான் நாட்டுக்கு பணிப்பெண்ணாக தொழில் பெற்றுச் சென்றார்.
கடந்த 2013.05.08ம் திகதி துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக தூதரகத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது. அத்துடன் அவரது சடலம் இந்த மாதம் 25ம் திகதி எமக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும் எப்படி? யாரால்? ஏன்? சுடப்பட்டார் என்பது பற்றி அறியத்தரவில்லை.
ஏழைகளாகிய எமது பொருளாதாரக் கஷ்டம் காரணமாகவே பணிப்பெண்ணாக அவர் தொழில் செய்யச் சென்று இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார். எனவே எனது மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஜோர்தான் நாட்டு அரசாங்கம் நீதியான தீர்ப்பை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோர்தான் நாட்டில் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாகக் கூறப்படும் இந்தப் பெண்ணின் சடலம் வாழைச்சேனை கறுவாக்கேணி இந்து மயானத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜோர்தானில் இலங்கைப் பெண் சுடப்பட்டதற்கு விசாரணை மேற்கொள்ளுமாறு யோகேஸ்வரன் எம்.பி கோரிக்கை!
[ திங்கட்கிழமை, 27 மே 2013, 12:32.08 PM GMT ]
ஜோர்தான் நாட்டில் நாகேஸ்வரி காந்திமதி என்ற இலங்கைப் பெண் சுடப்பட்டதற்கு விசாரணை மேற்கொள்ளுமாறும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்குமாறும் கோரி சீ.யோகேஸ்வரன் பா.உ. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேராவுக்கு தொலைநகல் மூலம் அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இது தொடா்பாக அனுப்பி வைத்துள்ள அவசர மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேசத்தின் கறுவாக்கேணி கிராம அதிகாரி பிரிவில் வசித்த நாகேஸ்வரி காந்திமதி என்பவர் (கடவுச் சீட்டு இலக்கம் N4074616)  பணிப்பெண்ணாக வேலைக்கு ஜோர்தான் நாட்டுக்கு சென்றவர் 2013.05.06ம் திகதியன்று சுடப்பட்டதாக கூறப்பட்டு 2013.05.25ம் திகதியன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து அவரது பூதவுடல் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவரது இறப்பு துப்பாக்கி ரவை நெஞ்சில் பட்டு இரத்தம் வெளியேறியதால் மரணம் என குறிக்கப்பட்டுள்ளது.
எனவே இவ்விடயமாக இவரின் பெற்றோர் சடலத்தை பொறுப்பேற்கும் முன் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இவரது பெற்றோர்கள் மிக வறிய குடும்பத்தினரும், கல்வி ரீதியில் குறைந்த தகமை கொண்டவர்களும் ஆகும்.
ஆகவே தயவு செய்து இவ்விடயமாக பூரண விசாரணையை ஜோர்தான் தூதரகம் மூலம் மேற்கொண்டு யார் இவரை சுட்டார் என்பதை வெளிப்படுத்துவதுடன், அவருக்கு தகுந்த தண்டணை கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்வது மிகவும் வறுமை காரணமாக ஜோர்தானுக்கு பணிப்பெண்ணாக சென்ற நாகேந்திரன் காந்திமதி என்பவரின் குடும்பத்தாருக்கு உரிய நஷ்ட ஈட்டை பெற்றுக் கொடுக்க முன்வருமாறு அன்பாக வேண்டுகின்றேன்.
பதிலை அன்புடன் எதிர்பார்க்கின்றேன் என அந்த மகஜரில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

அந்த மகஜரோடு இவரது இறப்பு சார்பாக ஜோர்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்கள் உட்பட்ட சகல விபரங்களும் அடங்கலாக அனுப்பி வைக்கப்பட்டது.
அத்துடன் இவ்விடயமாக அமைச்சின் பிரத்தியேக செயலாளர் எம்.சோமசுந்தரம் என்பவருடனும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்லும் பணிப்பெண்கள் சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் அமைச்சின் பிரத்தியேக செயலாளர் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் தொலைபேசியின் வாயிலாக பேசியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten