[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 06:07.03 AM GMT ]
களஞ்சியசாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் முடியும் வரையிலும் அந்த பகுதி தடை செய்யப்பட்ட வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
பொலிஸ் மற்றும் துறைமுக பாதுகாப்பு பிரிவினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் கடந்த 24 ஆம் திகதி திடீர் தீ விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
முதலாம் கட்ட ஈழப் போர்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2013, 04:57.11 AM GMT ]
1983ம் ஆண்டு யூலை மாதம் தொடக்கம் 2009 மே மாதம் வரையிலான 26 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் ஐந்து கட்டப் போர்களை எதிர்கொண்டனா்.
இவற்றில் நான்கு கட்ட ஈழப் போர்கள் இலங்கை இராணுவத்துடன் நடத்தப்பட்டவை. ஒன்று இந்திய அமைதிப்படையினருடன் நடத்தப்பட்ட போர்.
கடந்த வாரம் குறிப்பிட்டபடியான விடுதலைப் புலிகளின் தரப்பு இழப்புகள் இந்த ஐந்து கட்டப் போர்களிலும் ஏற்பட்டவை தான்.
முதற்கட்டப் போர் அதாவது ஈழப்போர் 1. திருநெல்வேலியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கி இந்தியப் படைகளின் வருகையுடன் முடிவுக்கு வந்தது.
இராணுவத் தலைமையகத்தின் தகவல்களின்படி 1983 யூலை 23ம் திகதி தொடக்கம் 1987 யூலை 30ம் திகதி வரையிலான நான்கு ஆண்டுகளிலும் இலங்கை இராணுவத்தின் தரப்பில் கொல்லப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 933 பேராவா். இவா்களில் 52 பேர் அதிகாரிகள்.
ஒரு அதிகாரியும் 4 படையினருமாக 5 இராணுவத்தினா் இந்தக் காலகட்டத்தில் காணாமல் போயினர்.
6 அதிகாரிகளும் 152 படையினருமாக மொத்தம் 158 இராணுவத்தினா் இந்தப் போரில் காயமடைந்தனா்.
முதலாம் கட்ட ஈழப் போரில் கடற்படையினா் தரப்பில் 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 8 பேர் காயமடைந்தனா்.
இந்தக் காலகட்டத்தில் விமானப்படையின் தரப்பில் 52 பேர் கொல்லப்பட்டனா். மேலும் 14 பேர் காயமடைந்தனா்.
ஈழப்போர் 1ல் முப்படையினா் தரப்பிலும் கொல்லப்பட்டவா்கள் மற்றும் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை 1031 ஆகும்.
போரில் காணாமல் போனவா்களையும் இறந்து போனவா்களின் கணக்கில் சேர்த்து விட்டதாக சில மாதங்களுக்கு முன்னா் பாதுகாப்புச் செயலா் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
இந்தக் காலகட்டத்தில் காயமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 180 பேராகும். இது இராணுவத் தலைமையகம் அண்மையில் ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய அதிகாரபூர்வ கணக்கு.
முதலாம் கட்ட ஈழப்போரில் கொல்லப்பட்ட முப்படையினரையும் விட காயமடைந்தவா்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதை அவதானிக்கலாம்.
ஈழப்போர் 1ல் நடந்த முக்கியமானதொரு சமரான ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கையின் போது மட்டும் 33 படையினா் கொல்லப்பட்டு 200ற்கும் அதிகமான இராணுவத்தினா் காயமடைந்தனா். அப்படியிருக்கும்போது ஒட்டுமொத்த நான்கு ஆண்டுப் போரிலும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதைக் காணலாம்.
பொதுவாக நவீன காலப் போர்களில் கொல்லப்படுபவா்களை விட காயமடைபவா்களே அதிகமாக இருப்பர்.
போர்களில் அதிக மரணங்கள் ஏற்படுவது போதிய மருத்துவ வசதியின்மையால் தான். நவீன மருத்துவ வசதிகள் உள்ளதால் தற்காலப் போர்களில் காயமடையும் படையினா் மரணமாவது குறைவு.
முதலாவது கட்ட ஈழப்போரின் கணக்கு அதற்கு மாறாக இருந்தது.
காரணம் அதில் காயமடைந்தவா்கள் என்று படைத் தலைமையகத்தினால் குறிப்பிடப்பட்டது, சாதாரணமாக காயமடைந்தவா்களின் எண்ணிக்கையல்ல.
போரில் காயமடைந்து நிரந்தரமாகவே உடல் உறுப்புகளை இழந்தவா்கள்.
இந்தக் காலகட்டத்தில் மோசமாகக் காயமடைந்து உயிருக்குப் போராடியவர்களாகவே இருந்தாலும் அவா்கள் உயிர் தப்பி மீண்டிருந்தால் அதை கணக்கில் சோ்க்கவில்லை.
உதாரணத்துக்கு ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கை மூலம் வடமராட்சி கைப்பற்றப்பட்ட பின்னா் 1987 யூன் 6ம் திகதி அங்கு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஒரு கிரனெட் தாக்குதலில் 1வது கஜபா ரெஜிமென்டில் மேஜா் கோத்தபாய ராஜபக்சவின் உதவியாளராக இருந்த சிரேஸ்ட அதிகாரியொருவா் காயமடைந்தார்.
அவா் இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றியவா்.
மீண்டும் போர்முனைக்குத் திரும்பிய அவா் முதலாம் கட்ட ஈழப்போரில் காயமடைந்தவா்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
முதலாம் கட்ட ஈழப்போரில் படுகாயமடைந்து நிரந்தர பாதிப்புகளின்றி உயிர் தப்பியவா்கள் காயமடைந்தவா்களின் கணக்கில் சோ்க்கப்படவில்லை.
அதேவேளை முதலாம் கட்ட ஈழப்போரைப் பொறுத்தவரையில் காயமடைந்த இராணுவத்தினரில் 90 சதவீதமானவா்கள் கண்ணிவெடியில் சிக்கியே காயமடைந்துள்ளதாக இராணுவத் தலைமையக அறிக்கை கூறுகிறது.
அப்போது விடுதலைப் புலிகள் நேரடிச் சண்டைகளில் அதிகம் ஈடுபட்டதில்லை.
பெரும்பாலும் கெரில்லாப் போர்முறையே அவா்களால் கையாளப்பட்டது.
யாழ். குடாநாட்டில் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்த படையினரை வழிமறித்து நடத்திய சண்டைகளில் கூட கண்ணிவெடிகளே அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.
குறைந்தளவு ஆளணியே புலிகளிடம் இருந்தாலும் அவா்களிடம் நேரடிச் சண்டைகளுக்குரிய போர்க்கருவிகள் இல்லாததாலும் கண்ணிவெடிகளே பிரதான ஆயுதமாக இருந்தன.
எனினும் வடமராட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த் தாக்குதலை கிட்டத்தட்ட கைகலப்பு நிலைச் சண்டையை இராணுவத்தினா் எதிர்கொண்டனர்.
ஒபரேசன் லிபரேசன் நடவடிக்கையே இலங்கை இராணுவத்தின் முதலாவதும் பாரியதுமான பிரிகேட் நிலையிலான படையினா் ஈடுபடுத்தப்பட்ட சமராகும்.
இதில் இராணுவத்தின் இரண்டு பிரிகேட்கள் பங்கேற்றிருந்தன.
தொண்டைமானாறு, வல்வெட்டித்துறைப் பகுதிகளில் திறக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் பிரதான வாய் இருமுனைகளில் விரிந்திருந்தது.
முதலாவது தொண்டைமானாறு பருத்தித்துறை கடற்கரை வீதியை மையப்படுத்தியிருந்தது. இந்த முனையில் முன்னேறிய பிரிகேட்டுக்கு கேணல் விஜய விமலரட்ண தலைமை தாங்கியிருந்தார்.
மேஜர் கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான 1வது கஜபா மற்றும் லெப்.கேணல் விபுல் பொடேஜு தலைமையிலான 1வது கெமுனுவோச் ஆகிய பற்றாலியன்கள் இந்த பிரிகேட்டில் இடம்பெற்றிருந்தன.
வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி வழியாக பருத்தித்துறை நோக்கி முன்னேறிய இந்தப் படைப்பிரிவு தொண்டைமானாறில் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது.
இரண்டாவது பிரிகேட்டுக்கு பிரிகேடியா் டென்சில் கொப்பேகடுவ தலைமை தாங்கியிருந்தார்.
தொண்டைமானாறு- துன்னாலை வீதியை மையப்படுத்தி முன்னேறிய இந்தப் படைப்பிரிவு பெரும்பாலும் வெட்டவெளியான பகுதிகள் வழியாக நகா்ந்து நெல்லியடியைக் கைப்பற்றியதால் அதிக எதிர்ப்பையோ சேதங்களையோ சந்திக்கவில்லை.
இந்தப் பிரிகேட்டில் கேணல் சதீஸ் ஜெயசுந்தர தலைமையிலான 2வது கஜபா மற்றும் லெப்.கேணல் நாரத விக்கிரமரத்ன தலைமையிலான 1வது இலகு காவலாற்படை என்பன இடம்பெற்றிருந்தன.
விடுதலைப் புலிகள் ஒரு கைகலப்பு நிலைச் சண்டையை நடத்திய முதற் பெரும் சமராக இந்தச் சமரே இருந்தது.
கிட்டத்தட்ட ஒப்பரேசன் லிபரேசனுடன் முதற்கட்ட ஈழப்போர் முடிந்து போனதால் அதற்கு அப்பால் அத்தகைய தீவிர நேரடிச் சண்டைகள் இடம்பெறவில்லை.
எனவே தான் இராணுவத்தினா் தரப்பில் அதிகளவானோர் கொல்லப்பட, கண்ணிவெடிகளே காரணமாக இருந்தன.
முதலாவது கட்ட ஈழப் போரைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகளே அதிகளவிலான சண்டைகள் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தாலும் இந்தக் காலகட்டத்தில் இடம்பெற்ற எல்லாத் தாக்குதல்களும் அவா்களால் செய்யப்பட்டதல்ல.
அப்போது வடக்கு கிழக்கில் பல்வேறு இயக்கங்கள் செயற்பட்டன.
எனினும் ஒருசிலவே தாக்குதல் நடத்தும் ஆற்றலைப் பெற்றிருந்தன.
விடுதலைப் புலிகள் தவிர, அப்போது புளொட், ஈ.பி.ஆா்.எல்.எவ்., ரெலோ போன்ற இயக்கங்களும் தாக்குதல்களை நடத்தியிருந்தன.
படையினா் கொல்லப்பட்ட தாக்குதல்களுக்கு அவையும் பொறுப்பாக இருந்தன.
எனவே முதற்கட்டப் போரில் இராணுவத் தலைமையகத் தகவல்களின்படி கொல்லப்பட்டதாகக் கருதப்படும் 1031 படையினரும் விடுதலைப் புலிகளால் தான் கொல்லப்பட்டனா் என்று கூறமுடியாது.
அதில் ஏனைய இயக்கங்களுக்கும் பங்கு உள்ளது. ஆனால் அது மிகச் சிறியது.
இந்த முதற்கட்ட ஈழப்போரில் விடுதலைப் புலிகள் தரப்பில் அல்லது தமிழ் இயக்கங்களின் தரப்பில் கொல்லப்பட்டவா்களின் சரியான எண்ணிக்கையோ காயமடைந்தவா்களின் விபரங்களோ எங்குமே பதிவில் கிடையாது.
இந்திய அமைதிப்படை வந்த பின்னா் விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அதுவரை தம்மில் 630 பேர் வரை மரணமானதாக கூறியிருந்ததாக ஞாபகம்.
எனினும் சரியான துல்லியமான கணக்கு அதுவாக இருந்திருக்க வாய்ப்பில்லை.
பின்னா் புலிகள் வெளியிட்ட மாவீரா் பட்டியலில் 1986ம் ஆண்டுவரை 574 பேரும், 1987ல் 518 பேரும் கொல்லப்பட்டதாகக் கூறியிருந்தனா்.
இதில் 1987 யூலை மாதம் வரையிலான கணக்கே முதற்கட்டப் போருக்குரியது.
அதைவிட விடுதலைப் புலிகள் 1987ல் வெளியிட்ட கணக்கில் ரெலோ, ஈரோஸ் போன்ற இயக்கங்களின் சார்பில் உயிரிழந்தவா்களை சோ்த்திருக்கவில்லை.
ஆனால் 2007ல் வெளியிட்ட தகவல்களில் அதுவும் சோ்க்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும் முதற்கட்ட ஈழப்போரில் விடுதலைப் புலிகள் தரப்பில் 700 வரையானவா்கள் மரணமாகியிருக்க வாயப்புகள் உள்ளன.
அதேவேளை, ஏனைய இயக்கங்களின் சார்பில் இந்தக் காலகட்டங்களில் படையினருடன் மோதி இறந்தவா்களின் எந்தப் பதிவுகளும் எந்த இயக்கத்திடமும் இருக்கவில்லை.
புலிகள் தவிர்ந்த அமைப்புகள் அத்தகைய ஆவணங்களைப் பேணத் தவறியதும் புலிகளால் அந்த அமைப்புகள் 1986ற்கு முன்னரே தடை செய்யப்பட்டு விட்டதும் அதற்கு முக்கிய காரணம்.
எவ்வாறாயினும் முதற்கட்ட ஈழப்போரில் இலங்கை இராணுவத்துக்கும் அதை எதிர்த்துப் போரிட்ட தமிழ் இயக்கங்களுக்கும் இடையிலான இறப்பு விகிதம் சராசரியாக 1ற்கு 1 என்ற அளவிலேயே இருந்தது.
இந்தவகையில் பார்த்தால் முதற்கட்ட ஈழப் போர் யாருமே வெற்றிக்கு உரிமை கோர முடியாமலேயே முடிந்து போனது.
எவ்வாறாயினும் இறுதிக் கட்டத்தில் வடமராட்சியைக் கைப்பற்றிய நிலையில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் தாக்குதலைத் தொடங்கத் தயார் நிலையில் இருந்தபோது தான் இந்தியா தலையிட்டு தமது வெற்றியைத் தடுத்து விட்டதாக இலங்கை இராணுவத் தரப்பு கூறியது.
இந்தியா தலையிட்டிருக்காது போனால் அப்போதே புலிகளை அழித்திருக்கலாம் என்றும் இராணுவ அதிகாரிகள் பலரும் 2009ற்குப் பின்னர் செய்திகள் வெளியிட்டனா்.
யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் இலங்கை இராணுவத்தின் தாக்குதல் திட்டம் என்ன,அதை இந்தியா எவ்வாறு தடுத்தது, இந்திய புலிகள் போர் பற்றிய அலசலுடன் அடுத்த வாரம் சந்திக்கலாம்.
சுபத்ரா
Geen opmerkingen:
Een reactie posten