தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

யாழ்.வரணியில் சட்டவிரோத மண் அகழ்வு! கிராமம் நீரில் மூழ்கும் அபாயம் !


விஷ ஜந்துக்களுடனும் யுத்த எச்சங்களுடனும் இத்தாவில் மக்களின் அவல வாழ்வு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 01:46.51 PM GMT ]
மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகும் நிலையில் அடிப்படை வசதிகள் கூட முழுமையாக ஏற்படுத்தித் தரப்படாத நிலையில் விஷ ஜந்துக்களுடனும், அகற்றப்படாத யுத்த எச்சங்களுடனும் அவல வாழ்வு வாழ்வதாக பளை - இத்தாவில் பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
1996ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக இத்தாவில் மக்கள் முழுமையாக வெளியேறினர். மீளவும் கடந்த 2012ம் ஆண்டு இவர்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.
தற்போது 160 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து இக்கிராமத்தில் வாழ்கின்றனர். அவர்களில் 100 குடும்பங்களுக்கு மட்டுமே அரைநிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகள் அரை நிரந்தர தகுதி கூட இல்லாதவை என மக்கள் சாடுகின்றனர். ஏனைய 60 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. தாமாக அமைத்துக் கொண்ட குடிசைகளில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
மலசல கூட வசதிகளும் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் மேம்படுத்திக் கொடுக்கப்படாமையினால் கிராமத்து மக்கள் பலரும் தமது வாழ்விடங்களுக்குத் திரும்பாமல் இன்னமும் வாடகை வீடுகளில் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதேபோல் இத்தாவில் பிரதேசத்திற்கான பாடசாலை யுத்தத்தினால் சேதமடைந்த நிலையில் தற்போது புதிய கட்டடமொன்றும், தற்காலிககடடடமொன்றும் அமைக்கப்பட்டு பாடசாலை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதுவே அயலிலுள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஒரே பாடசாலையாக உள்ளது. தற்போது இங்கு தரம் 11வரையான வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.
எனினும் தரம் 5வரையான வகுப்புக்களுக்கே ஆசிரியர் வளம் போதுமானதாக உள்ளது. ஏனைய 6 வகுப்புக்களுக்கு ஆசிரியர் வளம் போதுமானதாக இல்லை.
குறிப்பாக 10 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 3 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் க.பொ.த சாதாரணதரம் பயிலும் மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என பெற்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இத்தாவில் மக்கள் கோருகின்றனர். கடுமையான யுத்தம் இந்தப்பகுதியில் இடம்பெற்ற இக்கிராமத்திலிருந்த அனைத்து கிணறுகளும் இடிந்து அழிந்து போயுள்ளன. இதனால் குடிநீரை பெற்றுக் கொள்வதற்காக நாம் அயல் கிராமங்களுக்கு செல்லவேண்டியுள்ளது. இதனால் பல அசௌகரியங்களை சந்திக்கவேண்டியுள்ளது எனவும் இக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்தத்திற்கு முன்னர் இப்பகுதியில் இருந்த நிரந்தர வீடுகள் மற்றும் தென்னை உள்ளிட்ட பயன்தரு மரங்ககள் யுத்தத்தினால் பெருமளவில் அழிந்து போய்விட்டன.
இந்நிலையில் மிகமோசமான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தில் அடிப்படைவசதிகளை மேம்படுத்தி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலையினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். முழுமையாக வெடிபொருட்களை அகற்றி எமது பாதுகாப்பான வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இத்தாவில் பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


யாழ்.வரணியில் சட்டவிரோத மண் அகழ்வு! கிராமம் நீரில் மூழ்கும் அபாயம் ( யாழ் செய்தித் துளிகள்-3)
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 02:07.31 PM GMT ]
யாழ்ப்பாணம் வரணி, நாவற்காடு, வெங்கி ராயன் வயல்வெளிகளில் பெருமளவான பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பான வகையில் மண் அகழ்வு நடைபெறுகின்றது.
இப்பகுதியில் உள்ள வயல் நிலங்கள், வயல் வரம்புகள் முதலான வற்றில் உள்ள மண்களை வெட்டி ஏற்றி உழவு இயந்திரங்கள் மூலமாக வெளியிடங்களிற்குக் கொண்டு சென்று விற்பதனைக் காணமுடிகின்றது.
தொடர்ந்து இவ்வாறு மணல் அகழ்வதனால் கடல்நீர் வயல் நிலங்களிற்குள் உட்புகுந்து வயல் நிலங்கள் உவராக மாறும் அபாயம் உள்ளது.
மேலும் இவ் உழவு இயந்திரங்கள் இரவு வேளைகளிலும் அதிகாலை வேளைகளிலும் மணல் ஏற்றிக்கொண்டு மோட்டார் சைக்கிளின் துணையுடன் வீதியினைக் கடந்து செல்வதனைக் காணமுடிகின்றது.
எனவே சம்பந்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மணல் அகழ்வு நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
யாழில் மின்சாரசபை பொறுப்பற்ற பதில்!- பாவனையாளர் கடும் விசனம்
யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அமைந்துள்ள இலங்கை மின்சாரசபையின் பொறுப்பற்ற பதிலால் மின்பாவனையாளர்கள் விசனமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தெரியவருவதாவது,
நேற்று இரவு 8 மணியளவில் யாழ்ப்பாணம் குருசோ வீதி மற்றும் பழைய பூங்கா பகுதிகளுக்கான மின்விநியோகம் தடைப்பட்டது. வழமையாகவே மின்சாரம் தடைப்படுவது எனவும் ஒரு சில நிமிடங்களில் மீளவும் வந்து விடுமெனவும் அப்பகுதி மக்கள் காத்திருந்தனர்.
ஆனால் ஒரு மணிநேரம் சென்றும் மின்சாரம் வராததால், தொலைபேசி மூலமாக மின்சாரசபை அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது தற்போது எதுவும் செய்யமுடியாதெனவும் நாளை (இன்று) காலையே வந்து பார்க்கலாமென கூறி தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
எனினும் இவ்வூர் இளைஞர்கள் சிலர் நேரடியாக அலுவகத்திற்குச் சென்று கூறியபோதிலும், பதிலளித்தவர் எவ்வித பதிலும் கூறாமல் இருந்துள்ளார்.
இதனால் நேற்றிரவு முழுவதும் அப் பகுதி இருளில் மூழ்கிக்கிடந்தது. பொதுவாக மின்சாரசபை 24 மணிநேர அத்தியாவசிய சேவையாக உள்ள போதிலும் அதிகாரிகளின் பொறுப்பற்ற பதில்களாலும், நடவடிக்கைகள் இல்லாமையாலும் பாதிப்படைவது தாமேயென பாவனையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அக்ஷய திருதியை யாழில் கோலாகலம்
ஐஸ்வர்யம் தரும் அக்ஷய திருதியைத் திருநாளாகிய நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் நகைகளைக் கொள்வனவு செய்வதில் ஈடுபட்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சங்கநிதி, பதுமநிதி என்கிற ஐஸ்வர்ய நிதிக்கலசங்களைப் பெற்ற அக்ஷய திருதியை நன்நாளில் செய்யப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் அதிக பலன்களைத்தரும் என்பதும் அள்ள அள்ளக்குறையாத இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் எப்போதும் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பதும் இந்துக்களின் நம்பிக்கை.
இதனாலேயே இந்நாளில் தங்கம் வாங்குவதற்கு பலரும் முண்டியடிப்பதுண்டு. இந்தியாவிலும், இலங்கையிலும் நேற்றைய தினம் தங்க விற்பனை அமோகமாக நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் வர்த்தக நிலையங்களுக்கு விடுமுறைநாளாக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் எல்லா நகை வியாபாரநிலையங்களும் திறந்திருந்தன.
பெரும்பாலான நகை வியாபாரிகள் வாடிக்கையாளரைக் கவரும் வகையில் பல்வேறு பரிசுத்திட்டங்களையும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Geen opmerkingen:

Een reactie posten