சவூதியில் மட்டக்களப்பு பெண் மரணம் - பிரதேச செயலக அபிவிருத்தி குழுத் தலைவராக தமிழரை நியமிக்கப்பட வேண்டும்!- இரா.துரைரெட்ணம்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 07:14.47 AM GMT ]
சவூதி அரேபியாவின் மதீனா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த பணிப் பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் ஹிதாயத் நகரைச் சேர்ந்த வெள்ளக்குட்டி முஹைதீன் ஜனூபா (வயது 39) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது வீட்டு எஜமானியுடன் திருமண வைபவமொன்றிற்கு கடந்த வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தபோதே இந்த வாகன விபத்து இடம்பெற்றதென்று தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக விபத்தில் மரணமடைந்தவரின் சகோதரி வெள்ளக்குட்டி முஹைதீன் ஹஸீனா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வாகன விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்ணின் வீட்டு எஜமானியும் அவரது 3 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர்.
மண்முனைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழுத் தலைவராக தமிழரை நியமிக்கப்பட வேண்டும்!- இரா.துரைரெட்ணம்
பெரும்பான்மையாக தமிழர் வாழும் மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலக அபிவிருத்தி குழுத் தலைவராக தமிழரை நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணத்தினால் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் கிழக்கு மாகாண ஆளுனருக்கும் மாகாண சபை உறுப்பினர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
இந்த பிரதேசம் 27 கிராம சேவையாளர் பிரிவுகளையும் 50 கிராமங்களையும் உள்ளடக்கியது. 2,081 முஸ்லிம் குடும்பங்களையும் 8, 150 தமிழ் குடும்பங்களையும் இப்பிரதேசம் உள்ளடக்கியுள்ளது. இப்பிரதேச செயலகப்பிரிவில் அதிகாரமிக்க அரசியல்வாதிகளால், பல முரண்பாடுகள் அரசியல் இலாபம் கருதி திட்டமிட்டவாறு தோற்றுவிக்கப்படுகின்றன.
இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் காரணங்கள் சான்றாகின்றன.
1)அதிகாரமுள்ள அரசியல்வாதிகளால் அரசாங்கத்தினதும், நிதி நிறுவனங்களிளனதும் நிதியை ஒதுக்கீடு செய்யும்போது தமிழ்ச்சமூகம் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.
2)காணிக் கையாளுகையில் அரசகாணிகளையும், தனியாருக்குச் சொந்தமான வெற்றுக்காணிகளையும் கையாளும்போது இன ரீதியான முறுகல் நிiலையை ஆளும்ஆட்சி அதிகாரமுள்ளவர்கள் தங்கள் நலன்கருதி தோற்றுவிக்கின்றனர்.
3)அரச பலத்தையும் அதிகாரத்தையும், வைத்துக்கொண்டு ஒரு பக்கச்சார்பான முடிவுகளை தனிச்சையாக மேற்கொள்வதனால் இன ரீதியான முறுகல்நிலை தோற்றுவிக்கப்படுகின்றது.
4)மண்முனைப்பற்று பிரதேச சபை, பிரதேச செயலக நிருவாக எல்லைக்குள் காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி பிரதேச செயலகம் அத்துமீறி பல விடயங்களில் தலையிடுவதால் நிருவாகரீதியாக பல முரண்பாடுகள் தோற்று விக்கப்படுகின்றன.
5)குறிப்பிட்ட சில மாதங்களாக ஆரையம்பதி பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகிய இரு பகுதிகளிலும் நடந்து வருகின்ற முரண்பாடுகள் காரணமாக இங்கு தமிழ் சமூகத்திற்கு சேவையாற்றிய நல்லதொரு அதிகாரி முறைகேடான முறையில் பழிவாங்கும் நோக்குடன் இடமாற்ற முயற்சிக்கு உட்பட்டிருக்கின்றார்.
கடந்த காலத்தில் திரைமறைவில் தமிழ் சமூகத்திற்கு பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறியுள்ளது. இனிமேலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு, தமிழர் ஒருவரை அபிவிருத்திதிக்குழு தலைவராக நியமிக்க வேண்டும்.
அல்லது இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் தலைவர்களாக நியமித்து எதிர்காலத்தில் இரு இனங்களுக்கும் இடையில் முரண்பாடு தோன்றாமல் வாழ்வதற்கு மத்திய அரசு வழிவகுக்க வேண்டும்.
இரண்டு சமூகமும் வாழ்கின்ற இப்பிரதேசத்திற்கு முஸ்லிம் ஒருவரை தலைவராக நியமித்து இன முரண்பாடுகளை தோற்றுவித்து இப்பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையில் திரைமறைவில் திட்டமிட்டு மத்திய அரசு ஈடுபடுவதன் மூலம் இன வன்முறையை தூண்டிவிட்டு அரசியல் இலாபம் கருதி, குளிர்காய முனைப்பு காட்டி நிற்போதோடு அல்லாமல் இனங்களுக்கிடையே பிரித்தாளும் தந்திரத்தை கையாள்வதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ளவேண்டும்.
முஸ்லிம் சமூகத்திற்கு முஸ்லிம் தலைவர்கள் எவ்வாறு தலைமை தாங்குகின்றார்களோ அவ்வாறே தமிழ் சமூகத்திற்கு தமிழ்த் தலைவர்கள் தலைமை தாங்க வேண்டும் இது இனவாதமல்ல இது தமிழ் மக்களின் உரிமையாகும்' என்றார்.
இராணுவத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையான பாதுகாப்பினை பெற முடியும் என்கிறார் கே.பி.
[ ஞாயிற்றுக்கிழமை, 12 மே 2013, 07:46.42 AM GMT ]
பாதிப்படைந்த பிரதேசங்களில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் மூலம் மக்கள் உண்மையான பாதுகாப்பினை பெற முடியும் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் வெளிவுறவு பொறுப்பாளர் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
எனினும் இராணுவத்தின் எண்ணிக்கையினை குறைத்து, சிவில் நிர்வாகத்தை அதிக அளவில் அறிமுகப்படுத்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை கிளிநொச்சியில் உள்ள செஞ்சோலை சிறுவர் காப்பக நிலையத்தில் உள்ள தனது காரியாலயத்தில் வைத்து ஹிந்து செய்தித்தாளுக்கு அவர் தெரிவித்துள்ளர்.
கல்வி அறிவின் முக்கியத்துவம் தற்போது தனக்கு நன்கு புரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்திற்கு அமைய தாம் முன்னர் செயல்பட்டிருந்தால், தனது நிலைமை நன்கு மேம்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக பாதிப்படைந்த நிலையில் இந்த நிலையத்தில் உள்ள சிறார்களின் கல்விக்கு தாம் முக்கியத்துவம் அளிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு புலம்பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவியில் இயங்கும் இந்த செஞ்சோலை சிறுவர் காப்பகத்தில் தற்போது 60 பேர் தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தால் பாதிப்படைந்த சிறார்களை அரசியல் காரணங்களுக்காக உணர்ச்சியைத் தூண்டக்கூடிய செயற்பாடுகளை சம்பந்தபட்டவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் குமரன் பத்மநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten