கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் சுட்டுவிழுத்தப்பட்டதாக கூறப்படும் லயன் எயார் விமனத்தின் பாகங்கள் மீட்கப்பட்டபோது அவற்றோடு மீட்கப்பட்ட அடையாள அட்டைக்கு உரியவர் தற்போது யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் வசித்து வருவது தெரியவந்துள்ளது.
உயிரிளந்தவர் ஒருவருடைய அடையாள அட்டை என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்த போதும் அவர் உயிருடன் இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதக் குற்றத்தடுப்பு காவல்துறையினரால் குறித்த பெண் தற்போது கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி பலாலியில் இருந்து இரத்மலானை நோக்கி 42 பயணிகளுடனும் 8 விமானப்படைச் சிப்பாயுடனும் பயணித்த லயன் எயார் அன்ரனோவ் 24 ரக உள்ளுர் விமானம் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு இரணைத்தீவு கடற்பரப்பில் விழுந்து மூழ்கியதாக கூறப்பட்டது.
குறித்த விமானத்தின் பாகங்கள் மற்றும் கறுப்புப் பொட்டியினைத் தேடும் நடவடிக்கைகள் கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. பொலிஸ் மற்றும் மும்படைகளைச் சேர்ந்த 250 பேர் இத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த 4ஆம் திகதி மறுநாள் சனிக்கிழமை குறித்த விமானத்தின் ஒரு பகுதி மீட்கப்பட்டதாகவும், அப்பகுதிகளுடன் தங்க பல்லின் ஒருபகுதி, மனித எலும்புக்கூடுகள், ஆடைகள், தேசிய அடையாள அட்டைகள் போன்றன மீட்கப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக சிறிவர்தன தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் மேற்படிச் சம்பவத்தில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் 547642317 ஏ இலக்கம் கொண்ட அடையாள அட்டையின் உரிமையாளர் உயிருடன் இருப்பதாக தெரியவந்துள்ளது.

1995 ஆம் ஆண்டு சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலி பகுதியினைச் சேர்ந்த குணமணி கோவிந்தசாமி என்ற இந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆனது. ஆனதையடுத்து தனது பெயருடன் கணவர் பெயரை இணைத்து பதிவு செய்யும் நோக்கோடு குணமணி பாலசுப்பிரமணியம் என்று மாற்றம் செய்து கொள்வதற்கு அப்பகுதி கிரம சேவகர் ஊடாக ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த அவர் வன்னி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். சிறிது காலத்திற்கு பின்னர் அவருடைய தேசிய அடையாள அட்டை பெயர் மாற்றப்பட்டு அவருடைய சிறுப்பிட்டியில் உள்ள வீட்டு விலாசத்திற்கு வந்தடைந்துள்ளது.

தேசிய அடையாள அட்டை வந்த செய்தியை அவருடைய உறவினர்கள் வன்னிமாவட்டத்தில் இருந்த அவருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னி வரும் அயல் வீட்டு காரர் ஒருவரிடம் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்படி லயன் எயார் விமானத்தில் குறித்த பெண்ணின் அடையாள அட்டையினைக் அயல் வீட்டுக் காரர் கொண்டு சென்றுள்ளார். இதன் போதே குறித்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பெண்ணின் அடையாள அட்டை அவருடைய கையில் கிடைக்காமலே போய்விட்டது.

இதன் பிறகு வெளிநாட்டிற்கு செல்வதற்காக மீண்டும் அவர் ஒரு தேசிய அடையாள அட்டையினை பெற்றுக் கொண்டுள்ளார். அவ்வடையாள அட்டையும் இடைப்பட்ட காலத்திற்குள் தொலைந்துள்ளது.

இதனையடுத்து இறுதியாக கடந்த 2012 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 5 ஆம் திகதி 3 ஆவது தடவையாகவும் அவர் புதிய அடையாள அட்டையினை பெற்றுக் கொண்டுள்ளார்.
தமிழர்களை உயிரோடு புதைத்து மரணப் பதிவு வழங்கும் சிங்கள அரசு