19ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது!
19ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. 17ம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை இரத்து செய்யும் வகையில் 19ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ரத்து செய்வது அநீதியானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் எனவும், 19ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் கூட்டணி சேராது எனவும், தனித்து தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.சில கடும்போக்குவாத சக்திகளின் தேவையற்ற அடக்குமுறைகள் குறித்து முஸ்லிம்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ள போதிலும், காவல்துறையினர் அதனை கவனத்திற்கொள்ளத் தவறியுள்ளதாக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வருவோருக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்!
தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வருவோருக்கும் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படும் அகதி முகாம்களில் 100,000 இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடக்கைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் அனைவருக்கும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட வேண்டுமென கோரியுள்ளனர்.
குறிப்பாக அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் வாழ்ந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கும் வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்ப வாய்ப்பளிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten