தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 mei 2013

எங்களது தமிழர்களை நாங்கள் எப்படியாவது வாழவைக்க வேண்டும்!- பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்


இலங்கை பாராளுமன்ற அமர்வுகளை அகன்ற திரையில் நேரடி ஒளிபரப்ப ஏற்பாடு
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 01:45.05 AM GMT ]
இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களை பொதுமக்களுக்கு நேரடியாக தொலைக்காட்சி மூலம் அஞ்சல் செய்யும் திட்டத்தின் முன்னோடியாக கோட்டை பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகில் உள்ள ஜயந்திபுரவில் ஒரு பாரிய அகலத் திரையை அமைத்து பாராளுமன்ற நிகழ்வுகளை அஞ்சல் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்திற்கு வரும் கார்கள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பகுதியிலேயே இந்த அகலத்திரை அமைக்கப்பட உள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி சேவைகள் மூலம் நேரடியாக அஞ்சல் செய்வதை ஆதரித்து வருகிறார்.
அவர் இந்த அகலத் திரையை பொருத்தவிருக்கும் பகுதிக்கு நேற்று முன்தினம் சென்று பார்வையிட்டார். இதற்கான செலவை ஒரு கையடக்கத் தொலைபேசி நிறுவனம் பொறுப்பேற்கவுள்ளது.
இதேவேளையில் உப சபாநாயகர் சந்திமா வீரக்கொடி பாராளுமன்றத்தில் அங்கத்தும் வகிக்கும் சகல கட்சிகளும் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியில் பாராளுமன்ற நிகழ்வுகளை நேரடியாக அஞ்சல் செய்வதற்கு முன்கூட்டியே வானொலி மூலம் இப்பணி ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதுபற்றி தகவல் தெரிவித்த சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வா பாராளுமன்ற நிகழ்வுகளை நேரடியாக அஞ்சல் செய்வதில் சில சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் அவை குறித்து யோசனை செய்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதம கொரடா ஜோன் அமரதுங்க தமது கட்சி இந்த யோசனையை ஆதரிக்கிறது என்றும், இதன் மூலம் மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் எவ்விதம் செயற்படுகிறார்கள் என்பதை மக்கள் கண்டறிய முடியும் என்றும் தெரிவித்தார்.
பிரதி சபாநாயகர் சந்திமா வீரக்கொடி தொடர்ந்தும் தகவல் தருகையில்,
இந்திய பாராளுமன்றம் மற்றும் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் நிகழ்வுகள் இவ்விதம் நேரடியாக ஒலிபரப்பப்படுகின்றன என்பதை தங்கள் அதிகாரிகள் அவதானித்து கற்றறிந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்தியாவில் 2 வெவ்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகள் 2004ம் ஆண்டு முதல் இந்திய பாராளுமன்ற கீழ் சபையான லோக் சபா மற்றும் மேல் சபையான ராஜசபா நிகழ்வுகளை அஞ்சல் செய்து வருவதாக அவர் கூறினார்.
எங்களது தமிழர்களை நாங்கள் எப்படியாவது வாழவைக்க வேண்டும்!- பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
[ திங்கட்கிழமை, 13 மே 2013, 01:10.53 AM GMT ]
30வருடமாக யுத்தம் செய்தோம், எல்லைகளுக்காக போராடினோம், அழிந்தோம், முடியவில்லை.மாற்றத்தினை ஏற்படுத்தினோம். தமிழர்களின் இருப்பை காப்பாற்றக்கூடிய விடயங்களான பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரண்டையும் தக்க வைக்கின்ற போதே தமிழர்களின் இருப்பு காப்பாற்றப்படும் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
பட்டிருப்பு புளுடயமன்ட் விளையாட்டுக்கத்தின் விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பட்டிருப்பு தனிதமிழ் தொகுதியாகும்.இது எமக்கு பெருமையான விடயம். யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் பல அபிவிருத்திகளை நாங்கள் கண்டு வருகின்றோம்.இன்று இளைஞர் யுவதிகள் சுதந்திரமாக விளையாடி மகிழ்ந்து, தமது கல்வி நடவடிக்கைகளை சிறப்பான முறையில் கற்று பெருமை சேர்ப்பவர்களாக இருக்கின்றீர்கள்.
இது யுத்த காலமாக இருக்குமானால் இந்த இளைஞர் யுவதிகளை பாத்திருக்க முடியாது. அச்சம் பயத்தின் கீழ் அன்னியப்பட்ட நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்தோம்.
ஆனால் இன்று மாற்றம் கொண்டு வரப்பட்டு கட்டம் கட்டமாக மாற்றத்தினை கொண்டு வந்து கொண்டிருக்கின்றோம். இன்று பல்லாயிரக்கணக்கான மில்லியன் ரூபாக்களை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பெற்றுக் கொடுத்துள்ளேன். பட்டிருப்பு பாடசாலையின் கட்டிடத்துக்காக 20 மில்லின் ரூபா நிதியை பெற்றுக் கொடுத்துள்ளேன். இரண்டு மாடிக் கட்டிடம் அமைப்பதற்காக அந்த நிதியொதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று படுவான்கரை மற்றும் இப்பிரதேச மக்களின் முதுகெலும்பாக இருக்கும் களுவாஞ்சிகுடி வைத்தியசாலை சுமார் 450 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான நிதியை பெற்றுக் கொடுத்துள்ளேன். அடுத்தமாதம் அதன் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதேபோன்று இந்த விளையாட்டு மைதானத்தினையும் பூர்த்திசெய்து தருவேன் என்ற உறுதிமொழியை உங்களுக்கு அளிக்கின்றேன்.
இன்று பட்டிருப்பு தேசிய பாடசாலை மாவட்டத்தில் சிறந்த பாடசாலையாக வளர்ந்துவருகின்றது.பரீட்சை பெறுபேறுகள் திருப்பதியளிப்பதாகவுள்ளது. அதற்காக பாடசாலை சமூகத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரைக்கும் கல்வியை நோக்காகக்கொண்டே எனது செயற்றிட்டங்களை மேற்கொண்டுவருகின்றேன்.குறுகிய காலத்துக்குள் பாரிய அபிவிருத்திகளை நாங்கள் காணலாம்.தற்கால இளைஞர்களுக்கு சகல வளங்களும் கிடைக்கப் பெறுகின்றன.இதனை பயன்படுத்தி சிறந்த கல்விமான்களாக வரவேண்டும்.
30வருடமாக யுத்தம் செய்தோம், எல்லைகளுக்காக போராடினோம்,அழிந்தோம், முடியவில்லை.மாற்றத்தினை ஏற்படுத்தினோம். தமிழர்களின் இருப்பை காப்பாற்றக்கூடிய விடயம் இரண்டு உள்ளது.ஒன்று பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்,கல்வியை கட்டியெழுப்ப வேண்டும். இரண்டையும் தக்க வைக்கின்ற போதே தமிழர்களின் இருப்பு காப்பாற்றப்படும்.இதில் எவரும் குறுக்கிடமுடியாது.
கடந்த காலத்தில் அமைச்சரவையின் செயலாளர்களில் அதிகமானவர்கள் தமிழர்களாக இருந்தனர். 30வருடங்களுக்கு முன்னர் இதுதான் நிலைமை.திறைசேரியில் கூட உயர் பதவிகளில் தமிழர்களே இருந்தனர்.
யுத்தம் காரணமாக தமிழ் புத்திஜீவிகள் வெளியேறியமை, கல்வியை சிறந்தமுறையில் கற்க முடியாமை. இதனால் தான் இன்று நிலைமை மாற்றமடைந்துள்ளது. இன்று இரண்டு தமிழர்களே அமைச்சின் செயலாளர்களாக உள்ளனர். அந்தளவுக்கு எமது கல்விநிலை பின்தள்ளப்பட்டுள்ளது. அதற்கு காரணம் யுத்தமாகும்.
ஆனால் இன்று சிறந்த கல்வியை கற்று சமவுரிமையான வாய்ப்புகளை பெறுவதற்கு எமது கல்விமான்களுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்கு அரசாங்கம் ஒருபோதும் தடையில்லை. அதனை ஜனாதிபதியும் என்னிடம் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எமது மக்களுக்கு வளங்களைக் கொண்டு வருவதற்கே அரசில் இணைந்துள்ளோம். எங்கு வளம் இருக்கின்றதோ அங்கேயே நாங்கள் இருக்க வேண்டும். வளத்தினை கொண்டு வருவதற்காகவே நாங்கள் அரசாங்கத்தில் இருப்பதன் நோக்கமாகும். அது சிலவேளைகளில் மாற்றமடையலாம். எங்களது தமிழர்களை நாங்கள் எப்படியாவது வாழவைக்க வேண்டும்.

Geen opmerkingen:

Een reactie posten