[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 09:45.49 AM GMT ]
...இரண்டாம் பிரிவின் கீழான அறிவித்தல்கள் யாழ்ப்பாண தீபகற்பத்தின் வலிகாமம் வடக்கில் மரங்களில் ஒட்டப்பட்டிருந்தன. ஆச்சரியப்படும் விதமாகக் இக் காணிகளுக்கான உரிமையாளர்களை காண முடியவில்லையென்று இவ்வறிவித்தல் தெரிவிக்கின்றது.
இக் காணிகளின் உரிமையாளர்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்று கூறப்படும் சட்டத்துக்கு முரணான வலயங்களுக்கு அப்பால் அரசாங்கத்தினாலேயே நிர்வகிக்கப்படும் முகாம்களில் வாழுகின்றனர். அவர்கள் அங்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றனர்.
2006 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவினால் அவர்களுடைய இக் காணிகளுக்கான உறுதிப்பத்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும், கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கை பூர்த்தியாகவில்லை என்ற பொய்யான வாதத்தினால் அவர்கள் அங்கு சென்று மீளக் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
இது பொய்யான வாதமென்பது, எந்தக் காணிகளுக்கு உரிமையாளர்கள் செல்ல தடுக்கப்பட்டார்களோ அதே காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் செய்வதிலிருந்து தெளிவாக புலப்படுகிறது. தற்போது திடீரென்று அரசாங்கம் தனது உண்மையான முகத்தை காட்டிவிட்டது.
இக் காணிகள் கையகப்படுத்தப்பட்டு, வடக்கில் வாக்காளர்களாக மாறப்போகும் ஏனையவர்கள் அங்கு குடியிருப்பதற்காக அவர்களுக்கு வழங்கப்படும். இதே போன்ற அறிவித்தல்கள் கிளிநொச்சி மாவட்டத்திலும் விடுக்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில், இராணுவம் தனது நோக்கங்களுக்கு தேவையானதெனக் கருதும் காணிகள் அனைத்தையும் சுவீகரிக்குமாறு அறிவுறத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. காணி தொடர்பான பிரச்சனைகளை எப்போதும் தேசிய இனப் பிரச்சினையின் மையமாகத் திகழ்ந்து வருகின்றன.
கடந்த காலங்களில், அரசாங்கத்தினால் காணி அதிகாரங்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை வன்முறைக்கு வழி வகுத்ததோடு, சமூகங்களிடையே இன உறவு மோசமடைவதற்கும் காரணமாக அமைந்தது.
எனினும், யுத்தத்தை வெற்றிகொண்ட போதும், இலங்கை அரசாங்கம் சமாதானத்தை வென்றெடுப்பதற்காக இந்த வரலாற்றிலிருந்து படிப்பினைகளை கற்றுக் கொள்ள விருப்பமற்றதாக உள்ளதாகவே தோன்றுகிறது. அதற்கமைய, காணிகளை அபகரிக்கும் வரலாறு மீண்டும் தொடர்வதாகவே தோன்றுகிறது.
மனிதாபிமான நடவடிக்கை”ஒன்றின் மூலம் மீட்கப்பட்டவர்கள் என்று அரசாங்கம் கூறிக்கொள்ளும் வடக்கு கிழக்கு மக்கள் தமது காணிகள் அவற்றுடன் சேர்த்து அவர்தம் வாழ்வாதாரம், வாழ்க்கை முறை, பிறப்புரிமை ஆகியன எல்லாமே தங்களிடமிருந்து இதே இராணுவத்தினால் பறிக்கப்படுவதை காண்கின்றனர்.
வடக்கு கிழக்கில் இராணுவத்தினரால் காணி அபகரிக்கப்படும் பிரச்சினையானது, 2009ல் யுத்தம் முடிவுற்றதிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக எழுப்பி வரும் ஒன்றாகும். 2011 ஜுலையிலும் 2011 ஒக்டோபரிலும் நான் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த நிலவர அறிக்கைகள் அடங்கலாக மீண்டும் மீண்டும் பல தடவைகளில் நானே இப் பிரச்சினையை எழுப்பியிருக்கிறேன்.
எனினும், இப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இன்றுவரை அந்த காணி அபகரிப்பு தங்கு தடையின்றி தொடர்ந்த வண்ணம் உள்ளது. 2006ம் ஆண்டில், இலங்கையின் உயர் நீதிமன்றம், இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்று தனது ஒரு கட்டளையில் தீர்ப்பளித்தது.
மேலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2009 மே மாதம் 26 ஆம் திகதி ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூனுடன் சேர்ந்து வெளியிட்ட தனது கூட்டு அறிக்கையில், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த அனைவரையும் 2009ம் ஆண்டு முடிவடைவதற்குள் மீளக் குடியமர்த்துவதாக வாக்குறுதியளித்திருந்தார்.
இதன் பின்னர், வடக்கிலும் கிழக்கிலும் காணிகளில் இராணுவத்தினர் தங்கியிருப்பதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. எனினும், இவை அனைத்தும் அந்த நிலஅபகரிப்பை தடுத்து நிறுத்துவதற்கு எதுவும் செய்யவில்லை.
வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு சம்பவங்களின் எண்ணிக்கையில் ஒரு செங்குத்தான அதிகரிப்பினை அண்மைய வாரங்கள் கண்ணுற்றுள்ளன. கடந்த வாரம் வடக்கில் இராணுவத்தினால் காணிகள் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டங்கள் ஆரம்பிக்கும் தனது எண்ணத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்தது.
இக்காணி அபகரிப்புகளுக்கு எதிராக டீஎன்பிஎப் இனால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் கடந்த வாரம் நடத்தப்பட்டன. இக் கண்டனப் போராட்டங்களுக்கு மேலதிகமாக, தனியார் காணிகள் இராணுவத்தினால் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தனது எண்ணத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
இந் நில அபகரிப்புகள், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் கிளிநொச்சி ஆகியன உள்ளிட்ட வடக்கிலுள்ள பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளது. வடக்கிலுள்ள இராணுவத்தினர் தற்போது, தாம் கையகப்படுத்த நினைக்கும் காணிகளில் அதற்கான அறிவித்தல்களை காட்சிப்படுத்துகின்றனர்.
இக் காணிகளுள் பெரும்பாலானவை தனி நபர்களுக்குச் சொந்தமானவையாகும். சம்பந்தப்பட்ட காணிகளின் உரிமையை சட்டபூர்வமான அவர்களுக்கு வழங்கும் உரிய காணி உறுதிப் பத்திரங்களை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.
இராணுவத்தினர், பௌத்த துறவிகள் மற்றும் சிங்கள சிவில் உத்தியோகத்தர்கள் ஆகியோரினால் காணிகள் கையகப்படுத்தப்படும் ஏனைய சம்பவங்களும் அண்மைய வாரங்களில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளன.
இவ்வளவு பெருந்தொகையான தனியார் சொத்துக்கள் கையகப்படுத்தப்படுவது “இராணுவ நோக்கத்திற்காக” என்று கூறப்படுகிறது. இவ்வளவு பெருந்தொகையான காணிகளை இராணுவம் கையேற்க வேண்டி இருப்பது இதற்கு முன் நாம் அறிந்திராத ஒன்று.
2010ம் ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுள் ஒன்று, அப்போது “பாதுகாப்பு தேவைகளுக்காக” பயன்படுத்தப்பட்ட தனியார் காணிகளை விடுவிக்கக் கோருவதாகும்.
இயன்றவரை துரிதமாக சகல சிவில் நிர்வாகம் தொடர்பான செயல்பாடுகளிலிருந்தும் பாதுகாப்புப் படைகளை அரசாங்கம் நீக்கிக் கொள்ள வேண்டுமென்பது இன்னொரு பரிந்துரையாகும். இந்த அறிக்கை வெளியிடப்பட்ட போது, ஏனைய பல பரிந்துரைகளுடன் சேர்த்து இப் பரிந்துரைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றது.
இதுபோன்ற இவ்வறிக்கையின் சிறந்த பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்குப் பதிலாக,; பல தலைமுறைகளாக இக் காணிகளில் வாழ்ந்துவரும் மக்களுக்கு சொந்தமான மேலும் அதிகளவான தனியார் காணிகளையும் கையகப்படுத்துவதற்கு தற்போது அரசாங்கம் இராணுவத்திற்கு இடமளித்து வருகிறது.
எந்தவித தெளிவான காரணங்களும் இன்றி இவ்வளவு பெருந்தொகையான காணிகள் சுவீகரிக்கப்படுவது (சிங்களவர்களை) குடியேற்றுதல் எனும் பாரதூரமான கவலையை ஏற்படுத்துகின்றது. வடக்கு கிழக்கில் எல்லா சமூகங்களையும் சார்ந்த மக்கள் மிகவும் வரவேற்கப்படுவார்கள் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் தெளிவுபடுத்தியுள்ளது.
எனினும், சிங்களக் குடியேற்றம் என்ற நடைமுறையின் மூலம் ஒரு குறிப்பிட்ட பகுதியின் மக்கள் இனப்பரம்பலை மாற்றியமைப்பதற்காக வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இது ஒரு தீவிரமான கவலை தரும் விடயமாக தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்துள்ளது.
அத்தகைய கவலைகள், வடக்கு கிழக்கில் தமிழ் பெயர்களைக் கொண்ட பல்வேறு தெருக்களும் கிராமங்களும் பெயர் மாற்றப்பட்டு அவற்றுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்படும் சம்பவங்கள் பற்றிய அறிக்கைகளிலிருந்து உறுதி செய்யப்படுகிறது.
2009ம் ஆண்டிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக எழுப்பி வரும் இன்னொரு தீவிர கவலை தரும் விடயம் என்னவெனில், இந்து வணக்க ஸ்தலங்கள் பல அழிக்கப்படுவதும் புதிய பௌத்த கோயில்கள் பெருமெடுப்பில் பரவி வருவதுமாகும்.
வடக்கு கிழக்கில் உள்ள கலாசார, இனத்துவ, மற்றும் சமய ஆக்க அமைவை மாற்றுவதிலும் மேலாதிக்க கலாசாரத்தை இப் பகுதிகளில் பலவந்தமாகத் திணிப்பதிலும் அரசாங்கமும் இராணுவமும் இடையறாது ஈடுபட்டுள்ளன.
காணி அபகரிப்பும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் குடியேற்றங்களும் வடக்கு கிழக்கின் மக்கள் தொகை இனப்பரம்பலை மாற்றியமைப்பதற்கான தெளிவான முயற்சிகளாகும். அத்தகைய முயற்சிகள் தமிழ் மக்களின் அரசியல் செல்வாக்கினை குழி தேண்டிப் புதைப்பதை நோக்கமாகக் கொண்டவையாகும்.
இந்தக் கவலை, இவ்வருடம் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள வடமாகாண தேர்தலோடு மேலும் தீவிரமானதாக மாறுகிறது. யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து “சிறுபான்மையினர் என்று எவரும் இருக்க மாட்டார்கள்” என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியது இந்தச் சூழ்நிலையில் புதியதொரு அர்த்தத்தை கொண்டிருக்கிறது.
அத்தகைய கொள்கைகளும் செயல்களும் நல்லிணக்கத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தீவிரமான தாக்கங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறியுள்ளது. தாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து விட்டோமென்றும் தற்போது சமாதானமும் நல்லிணக்கமும் நிறைந்த யுகமொன்றை கொண்டுவந்து விட்டதாகவும் அரசாங்கம் அறிவிக்கின்றது.
எனினும், இந்தப் பந்திகளிலும் வேறு இடங்களிலும் நான் மீண்டும் மீண்டும் கூறியிருப்பது போல் மக்கள் தமக்குச் சொந்தமான வீடுகளுக்கும் காணிகளுக்கும் செல்ல விடாது தடுக்கப்படும் போது நல்லிணக்கம் வரப் போவதில்லை. உண்மையான நல்லிணக்கத்திற்கு சமூகங்களிடையே அருகிப்போய் விட்ட நம்பிக்கையும் ஒற்றுமையும் மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமது தலைக்கு மேல் கூரையொன்றில்லாது தவிக்கின்றபோது அவர்களது காணிகளையும் வாழ்வாதாரங்களையும் ஏனைய சமூகங்களைச் சார்ந்தவர்கள் பறித்துக் கொள்வதை அவர்கள் பார்த்தால் நல்லிணக்கம் ஏற்படப் பபோவதில்லை. இது நல்லினக்கத்தை மேலும் தொலை தூரத்தற்கு தள்ளிவிடவே செய்யும்.
இராணுவத்தினால் காணி கையகப்படுத்தப்படுவதும் வடக்கு கிழக்கில் குடியேற்றவாதம் தொடர்பான நடவடிக்கைகளும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களின் ஓர் அங்கமாகும். இத் தாக்குதல்கள் இலங்கை அரசாங்கத்தின் முனைப்பான ஆதரவோடும் அங்கீகாரத்தோடும் ஒத்துழைப்போடும் தெளிவாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
இவை தமிழ் மக்கள் அவர்தம் அரசியல் அபிலாசைகளை ஒடுக்குவதற்கும் அவற்றுக்காக துன்புறுத்தப்படுவதற்குமான பயனற்ற மற்றும் எதிர்விளைவு கொண்ட பல முயற்சிகளின் ஓர் அங்கமாகும். துமிழ் மக்களுக்கு எதிராக ஏவி விடப்படும் இந்த வன்முறைச் செயல்களை உடனடியாக நிறுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
கடந்த காலத்தில் நிகழ்ந்தவைகள் மீண்டும் நிகழாது தடுப்பதற்காக இலங்கை காத்தரபூர்வமானதும் நேர்மையானதுமான நல்லிணக்க நடைமுறையொன்றை துரிதமாக ஆரம்பிக்க வேண்டும். காணி அபகரிப்புகளும் குடியேற்றங்களும் அத்தகையதொரு நடைமுறையை தடுக்கவே உதவும்.
எம் ஏ சுமந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
பாராளுமன்ற உறுப்பினர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
வடக்கில் தீவிரமடையும் நில அபகரிப்பு!- இதயச்சந்திரன்
[ செவ்வாய்க்கிழமை, 30 ஏப்ரல் 2013, 05:34.50 PM GMT ]
மே 2009 இற்குப் பின்னர் வட -கிழக்கிலுள்ள 7000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் படையினர் நிலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
ஏறத்தாள 2500 சைவக் கோவில்களும் 400 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களும் அழிக்கப்பட்ட அதேவேளை ,அவற்றை மறுபடியும் நிர்மாணிப்பதற்கு படைத்தரப்பு அனுமதியளிக்க மறுப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
ஆனாலும் வடக்கில் வீசும் வசந்தம்,புத்தர் சிலைகளையும், பௌத்த கோபுரங்களையும் அரசின் அனுமதியோடு அழைத்து வருகிறது.
கனகராயன் குளத்தில் பௌத்த தூபிகளும், கிளிநொச்சியில் தியானத்தில் ஆழ்ந்துள்ள பிரமாண்டமான புத்தர் சிலையும், திருக்கேதீஸ்வர ஆலயத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் மகாதோட்ட ரஜ மகா விகாரையும் தோன்றியுள்ளன. மூதூரில் காளிக்கும் இடமில்லை. கோணேசர் கோட்டை வாசலில் காவலுக்கு இருந்த பிள்ளையாரை கடலில் வீசிய பழைய நினைவுகள்தான் மீண்டெழுந்து வருகின்றது.
ஆனாலும் கலாசார இன அழிப்பின் பல பரிமாணங்கள் , வட- கிழக்கு எங்கணும் 2009 இற்குப் பின்னர் தீவிரமடைவதையிட்டு மனித உரிமை குறித்து ஐ.நா வில் தீர்மானங்கள் கொண்டுவரும் மேற்குலகிற்குப் புரிவதில்லை.
கால அவகாசம் வழங்குவதால் தமிழ் பேசும் மக்களின் காணிகள் பறிபோவது குறித்து இவர்களுக்கு கவலை இல்லை.
இந்த வாரம் வடக்கிற்கு வசந்தப் பயணம் செய்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அதிகாரிகள் ,யாழ் நகரில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரையும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் ,கிளிநொச்சியில் சிறிதரனையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
வடமராட்சி கிழக்கில் 700 ஏக்கர் நிலமும், மண்டைதீவில் 600 ஏக்கர் நிலமும், கிளிநொச்சி உத்திர வேங்கை ஆலயக் காணியும் படையினரால் சுவீகரிக்கப்பட்ட விடயம் அமெரிக்க அதிகாரிகளுக்கு சொல்லப்பட்டது. இவைதவிர இரணைதீவு, பரவிப்பாஞ்சான், முல்லைத்தீவு, கேப்பாபுலவு மற்றும் வலிகாமம் ஆகிய பகுதிகளில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்கள் படையினருக்கு ஒதுக்கப்பட்ட விவகாரமும் சுட்டிக்காட்டப்பட்டது.
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில், கேப்பாபுலவு கிராமத்தில் 526 ஏக்கர் காணி படையினருக்குச் சுவீகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல்கள் அந்தப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ளன.
சாந்தபுரத்திலிருந்து தெல்லிப்பளை வரை எமது நிலம் எமக்கு வேண்டும் ' என்கிற முழக்கத்தோடு மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகின்றார்கள்.
உயர் பாதுகாப்பு வலயம் இராணுவ பிரதேசமாக மாற்றமடைவதற்கு எதிராக, கடந்த பெப்ரவரியில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு முன்பாக மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடாத்திய வேளை, மக்கள் விரோதக் கும்பலொன்று தாக்குதலில் ஈடுபட்டது. அதில் பொதுமக்களோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி, இடதுசாரிக்கட்சிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியும் கலந்து கொண்டது.
இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களை பொதுசனமும் கட்சிகளும் இணைந்து முன்னெடுக்கும்போது ,படைப்புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதை அவதானிக்கலாம்.
போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்களைப்புகைப்படம் எடுப்பது, ஒன்றுகூடும் இடத்திற்கு செல்ல விடாமல் தடுப்பது, ஆர்ர்ப்பாட்டம் முடிந்து வாகனங்களில் செல்வோர் மீது தாக்குதல் தொடுப்பது போன்ற பல ஒடுக்குமுறை வடிவங்கள் மக்களை நோக்கி பிரயோகிக்கப்படுகிறது.
இருப்பினும் நிலமிழந்த மக்கள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், வாழ்வதற்காகப் போராடும் முயற்சியினைக் கைவிடவில்லை. அவர்களை ஒன்றிணைத்து வெகுஜனப்போராடங்களை முன்னெடுக்கும் வகையில் பலமான அரசியல் தளம் ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பது காலத்தின் தேவையாக அமைகிறது.
மக்களிடையே சாதிய ,மத ரீதியான உள் முரண்பாடுகள் இருந்தாலும், பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் அனைத்து மக்களும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் அணி திரளவேண்டிய அவசியம் உணரப்படுகிறது.
மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழ்-முஸ்லிம் மக்களிடையே எவ்வாறு பகைமையுள்ள முரண்பாடுகளைத் தோற்றுவித்தது என்பது குறித்து ' தராக்கி' சிவராம் அவர்கள் முன்வைத்த ஆய்வுகளை, வடக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.'உயர் பாதுகாப்பு வலயம்' சட்டபூர்வமானதாக மாற்றப்படுகிறது என்பதுதான் இப்போதுள்ள தலையாய பிரச்சினை.
காணி சுவீகரிப்பு சட்டத்தின் 2 வது பிரிவின் கீழ், வலிகாமம் வடக்கு ( தெல்லிப்பழை), வலி.கிழக்கு ( கோப்பாய்) என்கிற இரு பிரதேசப் பிரிவிலுள்ள, மொத்தமாக 11 கிராம சேவகர் பிரிவுகளிலுள்ள பொது மக்களின் 6381 ஏக்கர் 38.91 பேர்ச் காணி அரசால் சுவீகரிக்கப்படுகிறது.
காணிக்கு உரிமை கோருவோரை அடையாளம் காண இயலாமல் இருப்பதால், இந்த உயர் பாதுகாப்பு வலயப் பகுதியையும் ( காங்கேசன் துறையும், பலாலியும்) ,யாழ்.பாதுகாப்பு பட்டாலியன் தலைமையகத்தையும் உத்தியோகபூர்மாகக் கையளிப்பதாகக் கூறும் அறிவித்தல் ஒன்றினை ,யாழ் மாவட்ட செயலகத்தைச் சேர்ந்த காணி சுவீகரிப்பு அதிகாரி எ.சிவசுவாமி விடுத்துள்ளார்.
தமது வாழ்விடங்களில் இருந்து 23 வருடங்களுக்கு முன்பாக ,வேரோடு பிடுங்கி எறியப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள்தான் இந்த இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்கள். பயிர் செய்கைக்கு உகந்த அற்புதமான செம்பாட்டு மண் இங்கு பரவிக் கிடக்கிறது. தாம் வாழ்ந்த மண்ணைக்கூட இம்மக்களால் தரிசிக்க முடியவில்லை.
அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவளித்த சனநாயக நாடுகளுக்கு, முகவரியிழந்த மக்களின் குரல் கேட்காதா?. மீள்குடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெறுகிறதென இன்னமும் பொய்யுரைக்கப் போகிறார்களா?. தீர்மானத்தால் விடியலின் வாசல்கள் திறக்கப்படுமென்று ,மர நிழல்களில் வாழும் துன்ப்பப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறப்போகிறார்களா?.
காணாமல் போகடிக்கப்பட்ட தமது பிள்ளைகளை, கணவன்மார்களை,சகோதர சகோதரிகளை தேடியலையும் உறவுகளுக்கு என்ன பதில் கூறப்போகிறது இந்த சர்வதேசம்!
முடிவின்றித் தொடரும் துயரங்களுக்கு மத்தியில், குடியிருந்த நிலமாவது கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், சிறுதுளி நம்பிக்கையோடு வாழும் தமிழ் மக்களுக்கு ,அடுத்தடுத்துவரும் காணி அபகரிப்பு சுவரொட்டிகள் அச்சத்தை ஊட்டுகின்றன.
ஒருவருக்கு 5 படையினர் என்கிற வகையில் ஏறத்தாள 31,000 இராணுவத்தினர் பூநகரியில் குவிக்கப்பட்டுள்ளனர். அதில் பூநகரியைச் சூழவுள்ள பள்ளிக்குடா, பல்லவராயன்கட்டு, மட்கும்பான், பொன்னாவெளி, அரசபுரம், மற்றும் முழங்காவில் உட்பட 800 ஏக்கரில் படையினர் நிலை கொண்டுள்ளனர்.
சுவீகரிக்கப்பட்ட நிலத்தில், சீன தேசத்தின் உதவியுடன் சர்வதேச விமான நிலையம் ஒன்றினை நிர்மாணிக்கும் திட்டம் அரசிற்கு இருக்கிறது.
காற்றாலை உடன் , சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் மையங்களை , மாதகல்லில் இருந்து காங்கேசன்துறை வரையான கடற்கரைப் பிரதேசத்தில் நிறுவிட, சீனத் தொடர்புடைய மலேசிய கார்பரேட் ஒன்றிக்கு குத்தகை அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் மாதகல்லில் இருந்து வெளியேறிய 279 குடும்பங்களின் நிலை குறித்து மனித உரிமைவாதிகள் கவலை கொள்வதுபோல் தெரியவில்லை.
'கண்ணி வெடி அபாயம்' என்கிற பதாகைகள் , திருவடிநிலை மக்களை குடியேற விடாமல் தடுக்கிறது. ஆனால் அதனை அண்டிய கடற்கரைப் பகுதிகள் புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இவைதவிர, உயர் பாதுகாப்பு வலயம் என்று குறிப்பிடப்பட்ட மயிலிட்டி, காங்கேசன்துறைப் பகுதிகளில் ,இரண்டு விடுமுறை விடுதிகள் (Holiday Resort) படையினரின் பயன்பாட்டிற்காக சனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.
அத்தோடு குடாநாட்டைத் துண்டாடும் வகையில், நீண்ட அணைகள் (BUND) வலி வடக்கில் கட்டப்படும் விசித்திரங்களையும் காணலாம். தொண்டமாணாறு செல்வச் சந்நிதி கோவிலில் இருந்து ஆரம்பிக்கும் அணை , ஓட்டகப்புலத்தை ஊடறுத்து பலாலி படைத்தளத்தை அண்டிய வசாவிளான் வரை நீண்டு செல்கிறது.
குரும்பசிட்டியில் ஆரம்பித்து கட்டுவன் மற்றும் தெல்லிப்பளையை கடந்து செல்லும் மற்றுமொரு அணை காங்கேசன்துறையில் சங்கமிப்பதாக வலி வடக்கு பிரதேச சபைத்தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன் கூறுகின்றார். இந்த அணை கட்டும் வேலைத்திட்டத்தின் ஊடாக 26 கிராம சேவைகள் பிரிவிற்கு உட்பட்ட நிலங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் நில அபகரிப்பிற்கு எதிரான கனதியான போராட்டங்கள், தேர்தல் அரசியலைக் குறிவைக்காமல் ,குடாநாட்டில் முன்னெடுக்கப்படும் நிலை தோன்றுவதைக் காணலாம்.தினசரி கூலியை 550 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென்கிற போராட்டங்களும் மலையகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு மனோ கணேசன் தாக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை வெளிநாட்டு முதலீடுகளை நாட்டிற்குள் வரவழைப்பதற்கு, தொம்சன் மதியுரைக் குழு என்கிற நிறுவனத்தின்உதவியை நாடியுள்ள அரசு, மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி விட்டது.
பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாக இருக்கிறதென நாட்டிற்கும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் பொய்யான நம்பிக்கைகளைக் கொடுக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் காப்ரால், மின்சாரக் கட்டண உயர்விற்கான காரணத்தை ஏன் கூறமுடியாமல் தவிக்கிறார் என்று ஐ.தே. கட்சியின் எம்பியும் பொருளியல் நிபுணருமாகிய கலாநிதி.ஹர்ஷா டி சில்வா கேள்வி எழுப்புவதில் நியாயம் உண்டு.
ஆட்சி அதிகார மையத்தில் பொருளாதாரச் சுனாமி அலை மேலெழும் அதேவேளை, வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடாத்த அரசு முன் வருகிறது. செப்டெம்பர் தேர்தலுக்கு முன்பாக காணிச் சுவீகரிப்புகள் தீவிரமடையும் என்று சொல்லப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten