தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 mei 2013

சிறிலங்காவுக்கான 450 மில்லியன் ரூபா நிதியுதவியை விலக்கிக் கொண்டது அமெரிக்கா


சிறிலங்காவின் நீதித்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நன்கொடையை அமெரிக்கா திரும்பப் பெற்றுள்ளது.
சிறிலங்காவின் நீதி அமைச்சு அல்லது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயற்திறனின்மை மற்றும் அலட்சியம் காரணமாகவே அமெரிக்கா இந்த நிதியை மீளப்பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் நீதித்துறையை தரமுயர்த்தும் நோக்கில், சட்டரீதியான தாமதங்களை தவிர்க்கும் வகையில், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்காகவே இந்த நன்கொடையை அமெரிக்கா வழங்கியது.
சிறிலங்கா அரசாங்க அதிகாரிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வரமுடியாத நிலையிலேயே அமெரிக்கா இந்த நிதியுதவியை திரும்பப் பெற்றுள்ளது.
நன்கொடை திரும்பப் பெறப்பட்டுள்ளதை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிதியுதவியின் மூலம் சிறிலங்காவின் நீதித்துறையை தரமுயர்த்துவம் வகையில், நீதிமன்றச் செயற்பாடுகளை கணினி மயப்படுத்துவது, நீதிபதிகளுக்கு தீர்ப்புகளை எழுதுவது குறித்த பயிற்சிகளை வழங்கல், நீதிபதிகளுக்கு காணொலிக் கலந்துரையாடல் வசதிகளை ஏற்படுத்தல் போன்ற திட்டங்களை நடைமுறைத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இதன்படி நீதிபதிகள் கொழும்புக்கு செல்வதை தவிர்ப்பதற்காக காலி, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மூன்று நிலையங்களை அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அத்துடன் மரபணு ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு வசதிகளை அறிமுகப்படுத்தும் வகையில் அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தை தரமுயர்த்தவும் திட்டமிடப்பட்டிருந்தது.
சிறிலங்காவில் அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் வசதிக் குறைபாடுகளால் பெருமளவு குற்றவியல் வழக்குகள் தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறிலங்கா நிதீபதிகளுக்கு அமெரிக்காவில் நீதித்துறை அனுபவங்களைப் பெற்றுக் கொடுப்பதும் இந்தத் திட்டத்தில் உள்ளடங்கியுள்ளது.
அமெரிக்க நிதியுதவி திரும்பப் பெறப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள சிறிலங்கா நீதியமைச்சின் செயலர் கமலினி டி சில்வா, அந்த நிதியுதவி மீள முறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீதித்துறை செயற்பாடுகளுக்காக ஒதுங்கப்பட்ட அந்த நிதி, நீதித்துறை மற்றும் நீதித்துறை சாராத பயிற்சி மற்றும் ஏனைய திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சுக்கான நிதியுதவியாக இருந்தாலும், இதனைப் பெறுவது குறித்த பேச்சுக்களை சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சே மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவுக்கான நன்கொடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள அமெரிக்கத் தூதரகம், அது மீளமுறைப்படுத்தப்படுவதற்கு எந்த சாத்தியமும் இல்லை என்றும் கூறியுள்ளது.
எதிர்காலத்தில் இத்தகைய நன்கொடைகள் குறித்து அனுமானிக்க முடியாது என்றும் அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten