தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 12 april 2015

ஒருபோதும் எமது இலட்சியத்தில் இருந்து மாறப்போவதில்லை: துரைராஜசிங்கம்



நிரந்தர நியமனம் வழங்குங்கள்: யாழ் சுகாதார தொண்டர்கள் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015, 11:04.43 AM GMT ]
தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு வலியுறுத்தி யாழில் சில சுகாதார தொண்டர்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு சட்டத்தின் போது கடமையாற்றிய தமக்கான நிரந்தர நியமனம் கிடைக்காமல் போனமைக்கு யாழ்.பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனே காரணம் என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
16 வருடங்களாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய தமக்கு இதுவரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனவும், அண்மையில் வடமாகாண சபையினால் வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் வீட்டில் இருந்தவர்களுக்கும் ஒருநாள் கடமையாற்றாதவர்களுக்கும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் தமக்கு மாத்திரம் இன்னும் நிரந்தர நியமனம் வழங்காமல் யாழ் பிராந்திய சுகாதார பணிமனை அசமந்த போக்கில் செயற்படுகின்றது என குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் 16 வருடங்கள் தம்மை ஏமாற்றியது போதும் என்றும், தாமும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டால் மாத்திரமா, நிரந்தர நியமனம் வழங்குவீர்கள் என பொறிக்கப்பட்ட வாசகங்களை கைகளில் ஏந்தியவாறு கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு, மற்றும் யுத்தத்தின் போது, டெங்கு, மலேரியா, கர்ப்பவதிகளுக்கான கடமைகளை செய்த தாம் இன்று அதிகாரிகளினால் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.



சுன்னாகம் நிலத்தடி நீரும் ஆய்வுகளும்! வதந்திகளுக்குச் செவிசாய்க்காது எமது நீர்வளத்தை நாமே சீர் செய்வோம்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015, 11:46.49 AM GMT ]
சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய்க் கலப்புச் சம்பந்தமாகப் பல்வேறுபட்ட வதந்திகள் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றன. எமது சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் சில படித்த மனிதர்களினால் திட்டமிடப்பட்ட வகையில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
தங்களைச் சமூக அக்கறை கொண்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் இவர்களால் இதுவரையில் எந்த விதமான வெளிப்படையான ஆராய்ச்சிகளோ அல்லது மாசுபடுத்தப்பட்ட நீரை சுத்தம் செய்யும் முறை சம்பந்தமான ஆராய்ச்சிகளோ முன்னெடுக்கப்படாத நிலையில் சரியான முறையில் பரிசோதனைகளைச் செய்து வெளிவரும் முடிவுகளைப் பிழையென வாதிட்டு அதனைப் பிழையான வழியில் மக்களிடம் திணிக்க முயற்சிக்கின்றனர்.
சில விசமிகள் தாங்கள் எதிர்பார்க்கும் முடிவுகள் பரிசோதனை முடிவாக வராத பட்சத்தில் பரிசோதனை முடிவுகளை எடுத்த வாக்கிலேயே பிழை என்று கூறுவதும் கூறப்பட்ட முடிவுகளைத் திரிபுபடுத்தி மக்கள் மத்தியில் பரப்பியும் வருகின்றனர்.
இவர்களது ஒரே நோக்;கம் வடமாகாணசபையால் முன்னெடுக்கப்படும் எந்த விதமான ஆய்வுகளையும் நிராகரிப்பதாகவே இருக்கிறது.
வடமாகாணசபையால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் முதற்கட்டப் பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்ட உடனேயே இவர்களது அறிக்கைகள் பரிசோதனை முடிவுகளுக்கு எதிராகவும் பல்வேறு கோணங்களில் அதனைத் திரிபுபடுத்தியும் வெளிவர ஆரம்பித்து விட்டன.
அந்த வகையில் மக்களின்; சிந்தனைக்குச் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.
• ஒரு பரிசோதனை முடிவைப் பிழையென வாதிடும் இவர்கள் செய்யப்பட்ட பரிசோதனை முறையை ஆராய்ந்தார்களா?
• பரிசோதனை செய்யப்பட்ட கருவியின் அளவிடும் கூர்மையை (accuracy) அறிந்தார்களா?
• நிலத்தடி நீரில் பெற்றோலிய எண்ணெய் கலப்பு ஏற்பட்டால் மேற்கொள்ளப்படும் முதற்கட்ட ஆய்வுகளைப் பற்றித் தெரிந்து கொண்டார்களா?
• பரிசோதனையின் முதற்கட்ட ஆய்வில் வெளியிடப்பட்ட முடிவைத் திரிபுபடுத்திக் கூறுவதன் நோக்கம் என்ன?
• இவர்கள் பரிசோதனை மேற்கொண்டதாகக் கூறும் ஆய்வுகூடங்களின் முடிவை ஏற்றுகொள்ளும் இவர்கள் மற்றைய ஆய்வுகூடங்களின் முடிவை முற்றுமுழுதாக மறுப்பது ஏன்?
• வடமாகாணசபை நொதேண் பவர் நிறுவனத்துடன் இணைந்து செயற்;படுகின்றது எனப் பொய் கூறும் இவர்கள் தண்ணீர்ப் போத்தல் விற்கும் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களா?
• பரிசோதனை முடிவு பிழை எனக் கூறும் இவர்கள் ஏன் வேறு ஒரு சரியான சாத்தியமான பரிசோதனை முறையைக் கூறவில்லை?
நிலத்தடிநீரில் எண்ணெய்க் கழிவு தொடர்பாக நேரில் அறிந்து கொள்வதற்காக அண்மையில் யாழ்ப்பாணம் சென்று பல தரப்பினரையும் சந்தித்திருந்தேன். அதன் அடிப்படையில், வடமாகாணசபை நியமித்த நிபுணர்குழுவால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்டப் பரிசோதனை சம்பந்தமான விரிவான விளக்கத்தை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
சுன்னாகம் நிலத்தடி நீரில் சில பகுதிகளில் பெற்றோலியக் கழிவு எண்ணெய் கலந்தமை எல்லோரும் அறிந்த விடயமே.இதுவரை மேற்கொள்ளப்பட்ட உலக ஆராய்ச்சிகளின்படி பெற்றோலிய எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்திருப்பின் ஏற்பட்டுள்ள பாதிப்பை அளவிடுவதற்கு முதலில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் BTEX & PAHs  பதார்த்தங்களைக் கண்டறிவதற்கே. ((BTEX- பென்சீன், தொலுயீன், எதெயில் பென்சீன், சைலீன், PAHs- Polycyclic Aromatic hydrocarbons). வடமாகாண நிபுணர் குழுவால் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு BTEX பதார்த்தங்களின் செறிவை கண்டறிவதற்கே.
புலம்பெயர் உறவுகளின் நன்கொடையால் அமெரிக்காவில் இருந்து (BTEX அளவிடுவதற்காகக் கொண்டுவரப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கருவியின் பெயர் FROG 4000. இரசாயன மூலங்களின் பகுப்பாய்வுகளில் 30 வருடத்திற்கும் மேற்பட்ட அனுபவமுள்ள புலம்பெயர் எம் உறவுகளில் ஒருவர் அமெரிக்கா சென்று அக்கருவியை செயன்முறைப்படுத்துவது சம்பந்தமாக பயிற்சி பெற்று வந்து முதற்கட்ட பரிசோதனைகளை மேற்கொண்டார்.
தேர்வு செய்யப்பட்ட 40 கிணறுகளில்இருந்து நீர் மாதிரிகள் சுத்திகரிக்கப்பட்ட போத்தல்களில் பெறப்பட்டு உடனடியாகவே தொண்டைமானாறு நீரியல் ஆய்வு மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அன்றைய தினமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைகளின் ஆரம்பத்திலும் ஒவ்வொரு 5 நீர் மாதிரிகளின் பரிசோதனைகளின் பின்பும் கருவியின் பரிசோதனை முடிவை மீள் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இரண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்;பட்டன.
1. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட BTEX இன் செறிவு அறியப்பட்ட(standard sample) நீர்மாதிரியின் பரிசோதனை. (40ppb)
2. வடிகட்டப்பட்ட கொதிநீராவியின் (distilled water) நீர்மாதிரியின் பரிசோதனை (zero ppb)
இவ்வாறாக மிகவும் கவனமாகவும் சரியான முறையிலும் அனுபவம் மிக்க ஒருவராலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவே நிபுணர் குழுவால் அறிவிக்கப்பட்டது. நீரில் உள்ள ஆபத்தான உலோகங்களைக் கண்டறியும் செயன்முறையை செய்யக்கூடிய வசதி தற்போது வடமாகாண நீரியல் ஆய்வு மையத்தில் இல்லை.
இதன் காரணமாக மேற்குறிப்பிட்;ட 40 கிணறுகளில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகள் கொழும்பில் உள்ள கைத்தொழில் தொழில்நுட்ப ஆய்வகத்தில் (ITI) கொடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அதன் பரிசோதனை முடிவு ஆபத்தான உலோக மூலங்கள் ;(heavy metals), இல்லை என்றே குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வுகளின் அடிப்டையிலேயே பரிசோதிக்கப்பட்ட எந்தவொரு நீர்மாதிரியிலும் BTEX உடைய அளவுகள் சர்வதேச நியம அளவுக்கு மேற்பட்டு இருக்கவில்லை, மாறாக 85 சதவீதமான மாதிரிகளில் முற்றாக இல்லாமலும் 15 சதவீதமான மாதிரிகளில் நியம அளவிலும் 200 மடங்கு குறைவான அளவிலும் காணப்பட்டது என்றும் ஆபத்தான உலோக மூலங்கள் இல்லை என்றும் சொல்லப்பட்டது.
இங்கு யாரும் பெற்றோலிய எண்ணெய் கலப்பு இல்லை என்று கூறவில்லை. ஆனால்,சில பொறுப்பு வாய்ந்த படித்த மனிதர்கள் திரிவுபடுத்தி எண்ணெய் கலப்பே இல்லை என்று நிபுணர் குழு கூறியதாகக் கூறிவருகின்றனர்.
பெற்றோலியத்தில் உள்ள அல்க்கேன்கள் (Alkanes) பற்றி பல்வேறுபட்ட கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில் உலக ஆராய்ச்சிகளின் படி கூறப்பட்டுள்ள சில தகவல்களை இங்கே குறிப்பிடப்படுவது பொருத்தமானதாக இருக்கும்.
சூழல் சார்பாகவோ அல்லது நீர் சார்ந்த நச்சுவியல் சார்பாகவோ பிரதியீடு செய்யப்படாத அல்க்கேன்கள் பொதுவாக நச்சுத்தன்மை உடையனவாகக் கொள்ளப்படுவது இல்லை. (உலக ஆராய்ச்சியிலிருந்து) ‘’Related to environmental or aquatic toxicology, (unsubstituted) alkanes are generally not of much toxicological concern’’ [ROY J. IRWIN, NATIONAL PARK SERVICE, 1997]
மாசுபட்ட நீரில் உள்ள மொத்த ஓயில் கிறீஸ் அளவைக் கண்டறிவதற்கே இதுவரையான காலப்பகுதியில் பல்வேறுபட்ட அமைப்புகளால் பல்வேறுபட்ட ஆய்வுகூடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுவொரு சரியான அணுகுமுறையா என்று உற்றுநோக்க வேண்டியுள்ளது. பெற்றோலிய கழிவு எண்ணையால் பாதிக்கப்பட்ட நீர் மற்றும் நிலம் சம்மந்தமாக அமெரிக்காவில் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்த prof.Roy Irwin இன் கருத்துக்கள் சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
• எண்ணெய் அல்லது பெற்றோலிய ஐதரோகாபன்கள் நீரில் கலந்திருப்பின் அதனை ஆய்வு செய்வதற்குநீரில் இருக்கும் ஓயில் கிறீஸ் அளவை ஒரு அளவீடாகப் பயன்படுத்த முடியாது.
Oil and grease should not be used as a measure for most oil pollution studies or other studies where petroleum hydrocarbons are the main concern (Roy Irwin, National Park Service, 1997)
• மாசுபட்ட நீரின் நச்சுதன்மையை ஆராய்வதற்கு நீரில் இருக்கும் ஓயில் கிறீஸ் அளவை ஒரு பிரதான அளவீடாகக் கொள்வது ஒரு பொருத்தமற்ற முறையென்று பல நிபுணர்கள் கருதுகிறார்கள்
In general, oil and grease is an inappropriate measurewhen considering hazard, toxicity, or risk. There aresome clearly wrong ways to go about it, and using oil andgrease as a primary measure is one of ways many riskexperts would consider inappropriate. However, definingclearly right ways is more difficult. Petroleumcontamination is usually typified by complex mixtures ofPAHs, alkyl PAHs and BTEX compounds. Perhaps the most unambiguous thing that can be said about such complex mixtures is that they are often hazardous in many ways, including carcinogenicity and phototoxicity. (James Huckins, National Biological Survey/USGS, and Roy Irwin, National Park Service, 1996)
பெற்றோலிய எண்ணெய் கலப்பின் ஆபத்தான நச்சுத்தன்மையை ஆராய்வதற்குச் சிக்கலான மூலக்கூறுகளின் குழுமங்களான BTEX   &  PAHs ஐயும் அளவீடு செய்வதே முதற்கட்ட ஆய்விற்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
அடுத்தகட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் ஏனைய பெற்றோலிய மூலங்கள் மாசுபடுத்தப்பட்ட நீரில் எந்த அளவுகளில் உள்ளன என்றும் அதன் ஆபத்தின் தன்மைபற்றியும் அறியப்படும். ஒரு குறுகிய காலத்தில் அனைத்து வகையான மூலங்களையும் மாசுக்களையும் பரிசோதனை செய்வது என்பது இயலாத காரியமே.
பெற்றோலியக்கழிவு எண்ணெய் கலப்பினால் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் நீரினைப் பூரண ஆய்விற்கு உட்படுத்துவதற்காக உலக தரத்தில் அங்கிகரிக்கப்பட்ட ஆய்வு கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாசுபட்ட நீரினை சுத்திகரிக்கும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளன. எந்தவொரு ஆய்வையும் பூரணமாக உடனடியாக செய்துவிட முடியாது என்பதை நாம் அறிவோம்.
பல்வேறு நாடுகளில் இருந்து சேவை அடிப்படையில் யாழ்ப்பாணத்துக்கு வருபவர்களும் உள்நாட்டில் விசேட நிபுணத்துவம் பெற்றவர்களும் தொடர்ச்சியான ஆய்வுகளில் ஈடுபட்டே வருகின்றனர்.
இவர்களின் ஒரே நோக்கம் பாதிக்கப்பட்ட நிலத்தடி நீரின் பாதிப்பை அளவீடு செய்வதும் பொருத்தமான தீர்வை கொடுப்பதுமே. வடமாகாணசபை இவர்களுக்குப் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.
எம்மால் தேர்வு செய்யப்பட்ட முதல் மாகாண சபையே எமது மக்களுக்கு எதிராகச் செயலாற்றாது என்ற பூரண நம்பிக்கையோடு தனிநபர்களின் வதந்திகளுக்குச் செவிசாய்க்காது எமது நீர் வளத்தை நாமே சீர்செய்வோம் என்ற உறுதியோடு பயணிப்போம்.
நடராசா ஸ்ரீபிரகாஸ்
சுற்றாடல் பொறியியலாளர் 



ஒருபோதும் எமது இலட்சியத்தில் இருந்து மாறப்போவதில்லை: துரைராஜசிங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015, 12:00.24 PM GMT ]
நாம் ஒருபோதும் எமது இலட்சியத்தில் இருந்து மாறப்போவதும் இல்லை. எமதுஉரிமைகளில் மாற்றம் ஏற்படவிடப்போவதும் இல்லை. எமதுசிறுவர்கள் இன்னும் இன்னும் இந்த அரசியல் சுழலுக்குள் மாட்டிக் கொள்ளாத வகையில் எமது முன்னெடுப்புகள் அமையும் என கிழக்குமாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். 
நேற்றைய தினம் குறுமன்வெளி சிக்கன கூட்டுறவுச் சேமிப்பு சங்கத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுப் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
இந்த சமுதாயம் பல்வேறு விதமான சிக்கல்கள் போராட்டங்களுக்குள் சிக்கியுள்ளது. இதில் வல்லமை இருந்தால் தான் எதிர்த்து நிற்கமுடியும்.நாமும் இந்த உலகத்தில் நல்ல வீணைகளாகத் தான் படைக்கப்பட்டவர்கள் வல்லமையோடு வாழவேண்டியவர்கள் அவ்வாறான வல்லமையை தோற்றுவிக்க வேண்டும்.
எமது வல்லமையை தோற்றுவிக்கும் அம்சத்தில் இவ்வாறான கூட்டுறவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றின் தொனிப்பொருளாக இருப்பது “சிறுதுளி பெருவெள்ளம்” என்பதே.
இவற்றின் மூலம் எமது வல்லமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
எமது சமூகத்தவர்கள் ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ளவேண்டும் எமது சமூகத்தின் மத்தியில் குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் நல்ல சிந்தனைகளை விதைக்க வேண்டும்.
நாம் எவருடைய பொருளையும் நியாயம் இல்லாமல் எடுத்துக் கொள்ளகூடாது. எமக்கு ஏற்படும் துன்பங்களை அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறான செய்தியைச் சொல்லுவதாக கூட்டுறவு அமைகின்றது.நாம் யாரையும் ஏமாற்றத் தேவையில்லை எமது உழைப்பினை சிறிது சிறிதாக சேமித்து வாழவேண்டும்.
எமது நாட்டில் குறிப்பாக எமது மாகாணத்தில் மிகவும் பிரச்சினையாகவுள்ள திணைக்களம் இந்த கூட்டுறவுதிணைக்களம். இதில் நான் எனது காலடியைப் பதித்து இருக்கின்றேன். இதனை எவ்வாறு நிமிர்த்தி எடுப்பது என நான் பல்வேறு விதமாக சிந்தித்து வருகின்றேன்.
கூட்டுறவு திணைக்களம் தொடர்பாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்தும் வருகின்றேன். இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற கூட்டுறவு அதிகாரிகள் மூவர் கொண்ட ஒரு குழுவினை நியமித்துள்ளோம்.
அதுபோல் கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காகவும் குழுவினை நியமித்துள்ளோம்.என்னைப் பொருத்தமட்டில் திணைக்களம் ஒழுங்கின்மையால் தான் இந்த கூட்டுறவுசங்கங்களின் செயற்பாடுகளில் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
எல்லா வகையான அமைப்புகளுக்கும் தேவையான ஒன்றாக நிகழ்ச்சி நிரல்ப் படுத்தல் என்பது தேவையான அம்சமாக இருக்கின்றது.
நாம் தற்போது கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது அரை ஆண்டு ஆட்சிக் காலத்திலேயே பதவிகளைப் பொறுப்பேற்றுள்ளோம்.இதில் நாம் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பது தொடர்பில் தீர்மானிப்பதற்கே ஒரு மாத காலங்கள் இழுபறி எடுத்துவிட்டன.
இதன் பின் மக்களின் ஆணையைப் பெற்று நாம் தற்போது பொறுப்பிற்கு வந்துள்ளோம்.எமக்கு இன்னும் மிகுதி இருப்பதே இரு ஆண்டுகள் தான். அதுவும் அரசியல் சூழ்நிலையைப் பொறுத்தே இருக்கின்றது. அதற்கிடையில் நாம் எம்மாலான சேவைகளை எமது மக்களுக்கு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
நமதுநாட்டில் இன்னும் குடியேற்ற நாட்டு பழக்க வழக்கங்களே காணப்படுகின்றன. அதிகாரம் உள்ளவர்கள் என்கின்ற நிலையை ஒவ்வொருவரும் பெற்று சில வேளைகளில் அது அவர்களுக்கு தலைக்கனத்தினை ஏற்படுத்திவிடுகின்றது.
இந்த மமதை இருந்தால் எந்தவொரு அமைப்பும் சமூகமும் முன்னேற முடியாது. எனவே ஒருவர் இன்னொருவர் மீது அதிகாரம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும்.
எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொருத்தமட்டில் மக்கள் தொண்டர்கள் என்றால், நாம் அவர்களுக்கும் தொண்டு செய்பவர்களாக தொண்டர்களுக்கும் தொண்டர்களாகவே இருக்கின்றோம்.
எல்லோருடனும் கலந்து பேசிவிட்டுக் கொடுப்புடன் இருக்கும் பட்சத்திலேயே கூட்டுறவுத் தோற்றுவிக்கப்படும். விட்டுக் கொடுப்பு இல்லாவிட்டால் அங்கு சமாதானம் இருக்காது.
நாம் சென்ற அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு இணங்கவில்லை ஏனெனில் அவர்கள் எம்மில் இருந்து தூரம் நின்றார்கள் ஆனால் தற்போது நிலை அவ்வாறு இல்லை.
நாம் எமது உரிமைகளை உருவி உருவித் தான் எடுக்கவேண்டும் அனைத்தையும் கொத்தாக எடுக்க முயல்வோமானால் விளைவுகள் எமக்கு சாதகமாக இல்லாமலும் போய்விடும்.
நாம் மிகவும் பக்குமாக உணர்ந்து செயற்பட வேண்டும். நிலைமைகளை அவதானமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதுபோல் எமது பயணம் எப்போதும் எமது உரிமையை நோக்கியே செல்லவேண்டும்.
வைத்தால் குடுமி இல்லையெனில் மொட்டை என்ற ரீதியில் எமது உரிமைகளை நூறு வீதம் முழுமையாகப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
ஆடுகின்ற மாட்டை ஆடிக் கறக்கவேண்டும் என்பார்கள் அதுபோல் எமது அடுத்த பக்கத்தில் இருக்கும் பேரினவாதத்தின் சக்தியைக் குறைத்து அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதில் தோன்றாத வண்ணமும் நாம் வென்றுவிட்டோம் என்ற மமதை எமக்கும் தோன்றாத வண்ணமும் இருவரும் கைகுலுக்கும் நிலையில் எமது உரிமையை வென்றெடுக்க வேண்டும்.
அரசியலில் வெற்றி தோல்வி இருக்க கூடாது. விட்டுக் கொடுப்புடன் அதுவும் எமது அடிப்படையை மாற்றதாவிட்டுக் கொடுப்புடன் செயற்படவேண்டும் ஒருபோதும் எமது இலட்சியங்கள் மாறுவதில்லை.
காலத்திற்கு ஏற்றவாறு நாம் செல்லும் பாதைமாறினாலும் எமது இலட்சிய நோக்கம் ஒன்றாகவே இருக்கும். எமது வரலாற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரே இலட்சியத்துடனேயே நகர்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் எவரும் ஒருபோதும் அதிகார மமதைக்கு ஆளாகமாட்டார்கள் எமக்கு கிடைக்கப்பெறும் அதிகாரங்கள் மக்களுக்கான சேவைகளாகவே இருக்கும்.
நாம் ஒருபோதும் எமது இலட்சியத்தில் இருந்து மாறப் போவதும் இல்லை. எமது உரிமைகளில் மாற்றம் ஏற்படவிடப்போவதும் இல்லை. எமதுசிறுவர்கள் இன்னும் இன்னும் இந்த அரசியல் சுழலுக்குள் மாட்டிக் கொள்ளத வகையில் எமது முன்னெடுப்புகள் அமையும்.
எமது மக்களை சிக்கல்களுக்குள் வீழ்த்தாமல் கபடத்தனம் இல்லாத அரசியலை மேற்கொண்டு எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக உழைப்போம் என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyESWSUkw2I.html

Geen opmerkingen:

Een reactie posten