19ற்கு ஸ்ரீ.சு.கவின் ஒத்துழைப்பை பெற்று தருவதாக ஜனாதிபதி பிரதமரிடம் உறுதி: அதை காலால் இழுக்கும் சட்டமா அதிபர்
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 10:42.09 AM GMT ]
சிங்கள இணையத்தளமொன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்போது தேசிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட பங்காளி கட்சியாகும்.
அத்துடன் தேர்தல் முறைமையை மாற்றும் 20வது அரசியலமைப்பு ஸ்ரீ.சு.கட்சியினால் தயாரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொகுதிவாரி முறைமையின் ஊடாக 165 ஆசனங்களும், விகிதாசார முறைமையின்படி 60 ஆசனங்களும், தேசிய பட்டியலில் 25 ஆசனங்களும் என மொத்தமாக 250 ஆசனங்கள் பெறும் புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்தும் நோக்கில் 20வது அரசியலமைப்பு 19வது அரசியலமைப்பு சமர்பிக்கப்படும் போது சமர்பிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
மார்க்கோ கொள்கை
எவ்வாறாயினும் புதிய தேர்தல் முறை தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கடந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது பூரண அறிக்கையொன்றை முன்வைத்திருந்தார்.
ஜாதிக ஹெல உறுமயவின் அத்துரலிய ரத்தின தேரர், லிபரல் கட்சியின் ரஜீவ விஜேசிங்க, ஆகியோர் அவ் அறிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.
கூட்டத்தின் இறுதியில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து தீர்மானமொன்றை மேற்கொள்வார்கள் என தெரிவித்தார்.
சிறுபான்மை கட்சி தலைவர்களை அடிப்படையாக கொள்ளாமல், பிரயோஜனமில்லாத, தன்மையற்ற யோசனைகளை கொண்டு வருதலானது தீர்மானங்களை மேற்கொள்ளும் போது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டில் வெகு விரைவாக தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டு வர முடியாதென்பதே தேர்தல்கள் ஆணையாளரின் கருத்தாக காணப்படுகின்றது.
ஜனநாயக நாட்டில் புதிய தேர்தல் முறைமையொன்றை மக்களுக்கு அறிமுகப்படுத்தல் குறைந்த பட்சம் ஒரு வருட காலப்பகுதியாவது தேவை என தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர், தனது திணைக்கள அதிகாரிகளுக்கு கூட தேர்தல் முறைமை குறித்து தெளிவுபடுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் தேவைப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் இனவெறி போக்கிற்கு மக்கள் எதிர்ப்பு
இதற்கமைய 19வது அரசியலமைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ள கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத சில அரசியலமைப்புக்களை செயற்குழு கூட்டத்தின் போது கொண்டு வருவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கம் கொண்டுவரவுள்ள உத்தேச திருத்தங்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் காலால் இழுக்கும் நிலைமை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய சட்டமா அதிபர் யுவன்ஜன வனசுந்தர விஜயதிலக அரசியலமைப்பு தொடர்பில் எவ்வித புரிந்துணர்வும் இல்லாத நபர்.
அவர் சிவில் சட்டம் தொடர்பிலேயே அறிந்து வைத்துள்ளார்.
அப்படியெனில் அவருக்கு அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திலுள்ள வேறு அதிகாரிகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன், அதற்காக பிரதி சொலிஸிடர் ஜெனரல் இந்திக்கா தேமுனி மற்றும் மெரின்புள்ளே ஆகியோரை தெரிவு செய்துள்ளார்.
இவர்கள் இருவருமே இனவாதிகள். யுவன்ஜன வெளிநாட்டு பெண்ணொருவரை திருமணம் முடித்துள்ளதினால் அதை மூடிமறைப்பதற்காக தான் ஒரு இனப்பற்றாளர் என்பதை வெளிக்காட்டும் நோக்கில் சென்று தானாகவே இனவாதி கும்பலுக்குள் விழுந்து விட்டார்.
இந்நிலையில் 19வது அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வரும் நோக்கில் முன்வைக்கப்பட்ட சட்டதிருத்தங்கள் தொடர்பில் உச்சநீதிமன்ற கொள்கைக்கு அப்பால் சென்று இனவாத பரிந்துரைகளை முன்வைத்து மக்கள் எதிர்பார்த்த வண்ணம் ஒரு நபரை மையப்படுத்தும் நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கும், ஆணைக்குழுவிற்கும் வழங்கும் நடவடிக்கையின் போது காலால் இழுக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
கூடா நட்பு கேடாய் முடியும்!
[ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2015, 02:25.24 PM GMT ]
மார்ச்சில் வெளிவர வேண்டிய ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை செப்டம்பருக்குத் தள்ளிப் போடப்பட்டது தமிழினத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய தோல்வி. வழக்கம்போல, இந்தியாவின் துரோகத்துக்குத்தான் இதிலும் பிரதான பங்கு.
உள்ளக விசாரணையைத் தொடங்கிவிடுவதாக இலங்கை கொடுத்த வாக்குறுதியை நம்பி, வாய்தா வாங்கிக் கொடுத்தது இந்தியா. கொல்லப்பட்ட எம் உறவுகளுக்கு நியாயம் கிடைப்பதைக்கூட தாமதப்படுத்தும் அந்தத் துரோகம், இங்கிருந்துதான் அமெரிக்காவுக்குப் போனது. இப்போது, சீனா இருக்கும் தைரியத்தில், இந்தியாவுக்கும் பெப்பே அமெரிக்காவுக்கும் பெப்பே என்கிறது இலங்கை.
இலங்கை தன்னைத்தானே விசாரித்துக் கொள்வதாகச் சொல்வது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து என்பதை அண்மையில் இலங்கை போயிருந்த ஐ.நா.பிரதிநிதி கிரெய்ப் பகிரங்கமாகவே பேசியிருந்தார்.
இலங்கை நியமித்த ஆணைக் குழுக்கள் பயனற்றவை என்பதாலேயே தமிழ்மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் - என்று அவர் சொன்னதைக் கூட இலங்கை பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.
சர்வதேச விசாரணை தேவையில்லை என்பதை ஐ.நா.விடம் தெளிவாகத் தெரிவித்துவிட்டோம் என்று திமிரோடு பேசுகிறார் இலங்கை வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அஜித் பெரேரா.
நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணைதான் தேவை - என்பதை, சம்பந்தன்கள் சுமந்திரன்கள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் விக்னேஸ்வரன் தெளிவாகத் தெரிவித்திருப்பது ஒன்றுதான் இப்போதைக்கு இலங்கையின் ஒற்றைத் தலைவலி.
இலங்கை என்பது, ஒரு மண்ணுளிப் பாம்பு. இரண்டு பக்கம் இருக்கிற தலையும் வேறுவேறு மாதிரி ஆடுகிறது. அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஜூன் மாதம் உள்ளக விசாரணை தொடங்கும் என்று உறுதியாகத் தெரிவித்து ஒருமாதம் கூட ஆகவில்லை.
அதற்குள் தோசையைத் திருப்பிப் போடுகிறார் பெரேரா. "செப்டம்பருக்கு முன் உள்ளக விசாரணையைத் தொடங்க முடியாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் அவர். அவர்களது விசாரணை என்ன லட்சணத்தில் இருக்கும் - என்பதைத்தான் செப்டம்பரில் ஐ.நா.வுக்குத் தெரிவிப்பார்களாம்!
கொல்லப்பட்ட எங்கள் ஒன்றரை லட்சம் உறவுகளுக்குத் துரோகம் செய்திருக்கும் இந்தியா, இலங்கையின் இந்த பம்மாத்து வேலை பற்றிப் பேசும் என்று நினைக்கிறீர்களா? மூச்சே விடாது.
வேறு எதற்குத்தான் மூச்சு விடுகிறது மோடியின் பரிவாரம் - என்று கேட்கிறீர்களா... நீங்கள் சொல்வதும் உண்மைதான்! அத்வானியே மூச்சு பேச்சின்றி இருக்கிற நிலையில், மற்றவர்கள் எந்த மூலை?
சேசாலம் வனத்தில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நம் ஒவ்வொருவரையும் உலுக்கியிருக்கிற நிலையிலும், நமக்காக நாமே தான் பேசவேண்டியிருக்கிறது.
ஆடு மாடுகளுக்காகப் பேச ஒரு மேனகா இருக்கிறார். பசுமாடுகளுக்காகப் பரிந்து பேச, பிணந்தின்னும் அகோரிகளிலிருந்து எத்தனையோ சாமியார்கள் இருக்கிறார்கள். தமிழர்களுக்காகப் பேசத்தான் இந்தப் பூமிப்பந்தில் ஒருவரும் இல்லை.
"அப்படியென்றால் மற்ற உயிரினங்கள் குறித்து உங்களுக்குக் கவலையேயில்லையா" என்று யாராவது கேட்டால், "தமிழர்கள் பற்றி கவலைப்பட உங்களுக்கு நேரமில்லை என்றால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட எங்களுக்கும் நேரமில்லை" என்று சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருங்கள்.
வெங்கையா நாயுடு என்றொரு அமைச்சர் இருக்கிறார், மோடி அமைச்சரவையில்! மன்மோகன்சிங் நடந்து போகும்போது அவரது நிழல் போன்று பின்தொடர்ந்து கொண்டிருந்த புதுவை நா.சா.மாதிரி, மோடிக்குப் பக்கவாட்டில் நாயுடு நடந்துபோவதை அடிக்கடி பார்க்க முடிகிறது.
இருவருக்கும் இருக்கிற வித்தியாசம் ஒன்றே ஒன்றுதான்! நா.சா. அகமும் முகமும் மலர நடப்பார், நாயுடு பயந்து பயந்து நடக்கிறார். அவ்வளவுதான்!
சேசாசலம் படுகொலைகள் பற்றி கேட்ட பத்திரிகையாளர்களிடம் கூட பயந்துபயந்துதான் பேசியிருக்கிறார் நாயுடு. கூடவே, 'மத்திய அமைச்சர் என்பதால் இதற்குமேல் பேசமுடியாது' என்கிற பில்டப் வேறு!
சேசாசலத்திலிருந்து செம்மரக் கட்டைகள் எப்படி சீனாவுக்கும் ஜப்பானுக்கும் மியான்மருக்கும் போகின்றன என்பதைப் பற்றி ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொரு மாதிரி எழுதுகிறது. வேதாரண்யம் அருகில் இருக்கும் கோடியக்கரைக்குக் கொண்டுபோகப்பட்டு, அங்கிருந்து இலங்கை வழியாக சீனாவுக்குப் போவதாக ஒரு தகவல். சேசாசலத்திலிருந்து சென்னை செங்குன்றம் வழியாக கடற்கரையைச் சென்றடைவதாக இன்னொரு தகவல்.
மும்பை அல்லது டெல்லிக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து கப்பல் அல்லது விமானங்கள் மூலம் அனுப்பப்படுவதாக வேறொரு தகவல் தெரிவிக்கிறது.
இதையெல்லாம் திருவாளர் வெங்கையா நாயுடுவுக்காக நான் எழுதவில்லை. சேசாசலம் சம்பவம் தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்கிற சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் பொன்னாருக்காகத்தான் எழுதுகிறேன் இதை!
தான் எந்தத் துறைக்கு அமைச்சர் என்பதையே மறந்துவிடுகிறார் பொன்னார். தமிழகத்தின் கோடியக்கரைக்கோ சென்னைக்கோ ஆந்திரத்திலிருந்து செம்மரங்களை எடுத்துவர பாதாள சுரங்கப்பாதை எதுவும் இல்லை என்று உறுதியாக நம்புகிறேன் நான்.
(அப்படி ஏதாவது இருந்தால் இதுபற்றி பொன்னாரை நாம் கேட்கமுடியாதுதான்!) சாலைகள் வழியாகத்தான் அவை எடுத்துவரப்பட வேண்டும். இதுதொடர்பாக சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் என்கிற முறையில் பொன்னார் ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிப்பது நல்லது.
ஒரு பொறுப்பான அமைச்சர் எப்படி இருக்கவேண்டும் என்பதை ஆந்திர முதலமைச்சருக்கு எடுத்துச் சொல்ல பொன்னார் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். திருடனைப் பிடிக்க வேண்டிய ஏட்டு ஏகாம்பரமும் கூட்டத்துடன் சேர்ந்து 'திருடன்' 'திருடன்' என்று கத்தினால் எப்படி?
அப்பாவிக் கூலித் தொழிலாளர்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதும், செம்மரக் கடத்தல் மூலம் கொழுப்பவர்கள் சாலைகள் வழியாக சர்வசாதாரணமாக செம்மரங்களைக் கொண்டு செல்ல முடிவதும் தொடருமென்றால், வேறு துறை எதையாவது மோடியிடம் கேட்டு வாங்கிக் கொள்வது பொன்னாருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது!
சென்னைத் துறைமுகம் சரக்குப் போக்குவரத்தில் அசுர வளர்ச்சி கண்டிருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
சென்னைத் துறைமுகம் சரக்குப் போக்குவரத்தில் அசுர வளர்ச்சி கண்டிருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
140 மில்லியன் டன் இலக்குடன் முன்னேறிச் செல்கிறதாம்! கன்டெய்னர் போக்குவரத்தில் ஏற்கெனவே உலக அளவில் 86வது இடம் சென்னைக்கு! கூடியவிரைவில் 50வது இடத்துக்குள் போய்விடும் என்று நினைக்கிறேன்.
இந்த வளர்ச்சி குறித்து மகிழ்ச்சியடையலாம்தான்! என்றாலும், சென்னை வழியாக வெளியே போகிற பொருட்கள் மீதும் பெட்டகங்கள் மீதும் தீவிரப் பார்வை தேவை.
செங்குன்றம் வழியாக வருகிறது சேசாலம் செம்மரம் என்றவுடன் பயம் வருகிறது. செங்குன்றத்திலிருந்து ஆறாவது மைலில் துறைமுகத்தை நோக்கித் திரும்புகிறது சாலை. செம்மரம் துறைமுகத்துக்குப் போகிறதா, அல்லது வேறெங்காவது போகிறதா என்பதை உற்றுக்கவனிக்க வேண்டியது அவசியம்.
சென்னைத் துறைமுகத்தில் 24 மணி நேர சுங்கச் சோதனை வசதி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவ்வளவு வசதி இருந்தால், ஒரே ஒரு துண்டுக்கட்டை கூட உள்ளே நுழைந்துவிடாமல் பார்த்துக் கொள்வது சுலபம்.
1881ம் ஆண்டிலிருந்து செயல்படுகிற சென்னைத் துறைமுகத்துக்கு இப்போது 135 வயது. வங்காள விரிகுடாவிலேயே மிகப் பெரிய துறைமுகம், இந்தியாவில் மும்பையை அடுத்து இரண்டாவது பெரிய துறைமுகம், இந்தியத் துறைமுகங்களில் 3வது பழமையான துறைமுகம் - என்கிற பெருமையெல்லாம் போதாதென்று, 'தென்னிந்தியாவின் நுழைவாயில்' - என்கிற பழம்பெரும் அடையாளம் வேறு!
இந்தப் பாரம்பரிய பெருமைக்கு செம்மரக் கடத்தல் மாஃபியாக்கள் கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிடக் கூடாது.
சேசாலம் காடுகளுக்குள் செம்மரம் வெட்ட வந்தார்கள் - என்று சொல்லி மேலும் இருபது தமிழரையோ இருநூறு தமிழரையோ பேருந்துகளிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி கையைக் காலைக் கட்டிச் சுட்டுக் கொல்லலாம்..... அவர்கள் வெட்டியதாகச் சொல்லும் செம்மரங்களை மட்டும் பாதுகாப்பாக பத்திரமாக சாலைகள் வழியாக அனுப்பி வைக்கலாம்.... அரசின் கொள்கை நல்லாயிருக்குல்ல!
செம்மரக் கடத்தலில் 3 பாயிண்ட் தான் மெயின் பாயிண்ட் என்பதை, சேசாசலம் தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து படிக்கிற எவராலும் புரிந்துகொள்ள முடியும்.
1. ஆந்திர காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு மாமூல் கொடுக்காமல் செம்மரத்தின் மீது கை வைக்க எவராலும் முடியாது.
2. வெட்டப்பட்ட செம்மரம் சாலைகள் வழியாக எடுத்துச் செல்லப் படுகிறது என்றால், சாலைப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு நிச்சயமாக இதில் தொடர்பிருக்க வேண்டும்.
3. கப்பல் மூலமோ விமானம் மூலமோ செம்மரத்தை எடுத்துச் செல்ல முடிகிறதென்றால், துறைமுகங்களிலும் விமான நிலையங்களிலும் உள்கை இல்லாமல் அது சாத்தியமில்லை.
இந்த மூன்றிலும் கிடுக்கிப்பிடி போட்டால் போதும்... செம்மரக் கடத்தல்காரர்களின் அடிமடியில் கைவைத்துவிடலாம். இதைச் செய்யாமல், 20 அப்பாவிகளைப் படுகொலை செய்வதன்மூலம் சட்டத்தைக் காப்பாற்றிவிட்டதாகக் காட்டிக்கொள்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
வெளிநாட்டுக்கு செம்மரம் கடத்தப்படுவதைத் தடுக்கமுடியாதாம்.... அப்பாவித் தமிழர்களை மட்டும் கொக்கு சுடுவது மாதிரி சுட்டுத் தள்ளுவார்களாம்...... இதைப்பற்றிக் கேட்டால், 'மத்திய அமைச்சர் என்பதால் ஒரு அளவுக்கு மேல் பேசமுடியாது' என்கிறார் வெங்கையா நாயுடு.
சீனர்களுக்குத்தான் செம்மரக் கடத்தலில் பெரும்பங்கு இருக்கிறது என்று தொடர்ந்து செய்தி வருகிறது. சீனா இந்தியாவின் நட்பு நாடல்ல! ஆனால், சீனாவின் நண்பனான இலங்கை இந்தியாவின் நட்பு நாடு. செம்மரக் கடத்தலின் ஒருபகுதி, இந்தியாவிலிருந்து இலங்கை, இலங்கையிலிருந்து சீனா - என்று இலங்கையை மையமாக வைத்தே நடப்பது தெரிந்தும், பகைவனின் நண்பன் தனக்கும் நண்பனென்பதால், நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது இந்தியா. கூடா நட்பு கேடாய் முடியும் - என்பதை அது உணரவேண்டும்.
செம்மரக் கடத்தலில் சீனர்களின் கை இருப்பது, தேசத்தின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் எழுப்புகிறது. ஆந்திரத்தையும் தமிழகத்தையும் மையமாகக் கொண்டு, பல்லாயிரம் மைல் தொலைவிலிருந்தே, சீனர்களால் செம்மரக் கடத்தலை தங்குதடையில்லாமல் இயக்க முடிகிறது என்றால், இருக்கிற இடத்தில் இருந்துகொண்டே தமிழக மண்ணில் அவர்களால் வேறென்னவெல்லாம் செய்ய முடியும் என்கிற அச்சம் எழுகிறது நமக்கு!
சென்ற தீபாவளியின்போது, சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளையே வாங்கும்படியும், சட்ட விரோத சீன வெடிகளை வாங்க வேண்டாம் என்றும் தமிழகத்திலுள்ள வணிகர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்தன.
அப்போதே, சீன வெடிகள் எப்படி இங்கே கொண்டுவரப்படுகின்றன என்கிற கேள்வி எழுந்தது. இங்கிருந்து செம்மரம் சீனாவுக்குப் போக முடியுமென்றால், அங்கிருந்து வெடியோ வெடிகுண்டோ இங்கே வரமுடியாதா என்ன?
விடுதலைப் புலிகள் வலுவாக இருந்தவரைதான் தமிழகக் கடற்கரை பாதுகாப்பாக இருந்தது. 2009ம் ஆண்டிலிருந்தே, சிங்களக் கடற்படைக் கப்பல்களில் சீனர்களையும் பார்க்க முடிந்ததாகத் தகவல்.
2012ல், தலைமன்னார் டவர் தெரிகிற தனுஷ்கோடியின் கடைசி நுனியில் உணர்வெழுச்சியுடன் நின்றுகொண்டிருந்தபோது, உடன் வந்த நண்பர்கள் உடைந்த மதுபாட்டில்களைக் காட்டினார்கள். இலங்கைக் கடற்படைப் படகுகளில் வருகிற சீனர்களும் சிங்களர்களும் இரவில் அந்த முனையில் இறங்கி குடித்துவிட்டுப் போவதாகச் சொன்னார்கள் அந்த நண்பர்கள்.
தமிழகக் கடற்கரை வரை சீனா வந்துவிட்டதை அப்போது உணர்ந்தேன். இந்தியாவுக்கு ஆபத்து நெருங்குகிறதே என்று நான் கவலைப்படவில்லை. சீனாவைக் காட்டிக் காட்டியே இந்தியாவை பிளாக்மெயில் செய்து, எம் இனம் படுகொலை செய்யப்பட்டதை மூடிமறைக்கிற முயற்சியில் இந்தியாவையும் கூட்டாளியாக ஆக்கிக்கொண்டிருக்கிற இலங்கையின் கேவலமான ராஜதந்திரத்தையும், அதைக்கூட உணராத இந்தியாவின் முட்டாள்தனத்தையும் எண்ணித்தான் கவலைப்பட்டேன்.
இந்த ஆபத்து குறித்து ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தவர், வடமாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன். இந்தியாவின் வாலில் வந்து சீனா அமர்ந்துகொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கூடங்குளம் அணு உலை வரை சீனா நெருங்கிவிட்டதைக் கோடிட்டுக் காட்டினார். விக்னேஸ்வரன் என்கிற மதிநுட்பம் வாய்ந்த ஒருவரின் எச்சரிக்கையெல்லாம் இங்கேயிருக்கிற அதிமேதாவிகளின் காதில் ஏறுமா என்ன?
தமிழகத்தின் வாலில் வலம் வந்துகொண்டிருந்த சீனா, தமிழகத்தின் தலைநகரிலும் உலா வரமுடியும் என்பது செம்மரக் கடத்தல் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
தன்பலம் என்ன என்பதை இப்போதாவது காட்டவேண்டாமா இந்தியா? சீனாவைக் காட்டி பிளாக் மெயில் செய்யும் இலங்கையின் தலையில் நாலு தட்டு தட்டி, செம்மரக் கடத்தலில் அதன் பங்கு என்ன என்பதை விசாரிக்க வேண்டாமா? இதற்குப் பிறகு கூடவா இந்தியா என்கிற 120 கோடி மக்களின் நாடு ஏமாளியாகவே இருப்பது!
புகழேந்தி தங்கராஜ்
http://www.tamilwin.com/show-RUmtyESaSUjo5G.html
Geen opmerkingen:
Een reactie posten