தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 april 2015

மைத்திரியை வலுப்படுத்தும் மேற்கு நாடுகள்!



புதிய அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் முடிவடைவதற்கு முதல்நாளான கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் தூதுவர்கள் சந்தித்துப் பேசியிருந்தனர்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக இருந்த மிச்சேல் ஜே சிசன் ஐநாவுக்கான துணைத் தூதுவராக நியமிக்கப்பட்ட பின்னர் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் நிர்வாகப் பொறுப்பை மூத்த இராஜதந்திரியான அன்ட்ரூ மான் வகித்து வருகிறார்.
அவரும், பிரித்தானிய தூதரகத்தின் பிரதித் தூதுவராக உள்ள லோறா டேவிஸ்,  ஜேர்மன் தூதுவர் ஜேர்ஜன் மோர்ஹாட் ஆகியோருமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
100 நாட்களை புதிய அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளதற்கு பாராட்டுத் தெரிவிக்கும் சந்திப்பாக மட்டும் இதனை கருதுவதற்கில்லை.
மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையிலும், பசில் ராஜபக்சவிடம், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை நடத்திக் கொண்டிருந்து போதும் தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
அதைவிட மகிந்த ராஜபக்சவை விசாரணைக்கு அழைப்பு விடுத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றத்திலும், வெளியிலும் போராட்டங்கள் நடத்தப்பட்ட சூழலிலும், 19 வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் புதிய அரசாங்கம் திணறிக் கொண்டிருந்த நிலையிலும் தான் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
அரசாங்கம் ஒரு பக்கத்தில் எதிர்க்கட்சியின் அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்த நிலையில், இன்னொரு பக்கத்தில் முன்னைய ஆட்சியின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்து, நகர்வுகளை மேற்கொண்டிருந்த நிலையில் தான், இந்தச் சந்திப்பு நடந்தேறியிருந்தது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் தாமும் இணைந்து நிற்கிறோம் என்று காட்டிக்கொள்வதற்கு, மேற்கு நாடுகள் இந்தச் சந்திப்பை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தியிருக்கலாம்.
தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருக்காத சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தைக் குழப்ப முற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் உள்நாட்டில் பல நிர்வாகச் செயற்பாடுகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட முடியாமல் முடங்கிப் போகும் ஆபத்து தோன்றியுள்ள நிலையில் மேற்குலகத் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட ஆதரவாகவும் இதனைக் கருதலாம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எல்லா வழிகளிலும் உதவுவதில் அமெரிக்கா முன்னின்று வருகிறது. ஜெனிவாவின் அழுத்தங்களில் இருந்து காப்பாற்றியது தொடக்கம், தற்போதைய அரசாங்கத்தை பல்வேறு சிக்கல்களில் இருந்தும் மீட்டு வருகிறது அமெரிக்கா.
திறைசேரியினால் கடன்பெறக்கூடிய தொகையை 400 பில்லியன் டொலர்களால் அதிகரிப்பதற்கு அனுமதி கோரி பாராளுமன்றத்தில் அரசாங்கம் கொண்டுவந்த சட்ட மூலத்தை எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு தோற்கடித்த பின்னர் நிதி நெருக்கடி ஒன்றை அரசாங்கம் எதிர்கொள்ளும் ஆபத்து தோன்றியிருக்கிறது.
இதையடுத்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்று பேச்சுகளை நடத்தியிருக்கிறார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் உள்ளிட்ட பலருடனும் பேசிய அவர், சர்வதேச நாணய நிதியம், உலகவங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
இது இலங்கைக்கு ஏற்படக்கூடிய நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஒரு நகர்வாகும். அமெரிக்காவும் இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஏனென்றால் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு இன்னும் அதிகரித்திருக்கிறது.
பாகிஸ்தானின் குவடார் துறைமுகத்தை சீனா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கின்ற நிலையில், பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கிட்டத்தட்ட 43 பில்லியன் டொலரை அங்கு முதலீடு செய்ய முன்வந்துள்ளார்.
இந்தநிலையில் இந்தியப் பெருங்கடலில் சீனாவுக்கு எதிரான அரணை அமைப்பதற்கு இலங்கையில் தற்போதைய அரசாங்கம் நீடித்து நிலைப்பது அமெரிக்காவுக்கு அவசியமாகத் தேவைப்படுகிறது.
கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த அமெரிக்க பதில் தூதுவர் அன்ட்ரூ மான், இலங்கைக்கான உதவிகளை அமெரிக்கா அதிகரிக்கும் என்று தெரிவித்திருந்தார். அது மட்டுமன்றி அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் வருகையுடன் இலங்கை - அமெரிக்க இருதரப்பு உறவுகள் இன்னும் பலமடையும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போதைய கட்டத்தில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
100 நாள் செயற்திட்டத்தின் முடிவில் ஏப்ரல் 23ம் திகதி பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தப் போவதாக முன்னரே அரசாங்கம் கூறியிருந்தது.
ஆனால் எதிர்க்கட்சியினர் ஏற்படுத்திய குழப்பங்களால் மிக முக்கியமன 19வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தக் கட்டத்தில் தான் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் பயணம் அடுத்த மாதம் முதல் வாரம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பயணத்தின் மூலம், அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவே தெரிகிறது.
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் அமெரிக்கா பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிட்ட கருத்துக்களில் இருந்து முன்னைய அரசாங்கத்தை அது எந்தளவுக்கு வெறுத்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.
எனவே புதிய அரசாங்கத்தை எப்படியாவது காப்பாற்றுவதற்கு அமெரிக்கா முன்னுரிமை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை இலங்கையில் சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் போன்றவை மீள நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகிறது.
சுதந்திரமான ஆணைக்குழுக்களை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதும் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு. ஆனால் புதிய அரசாங்கம் ஜனநாயகத்தை உருவாக்குதல், சட்டத்தின் ஆட்சியை ஏற்படுத்தல் போன்றவற்றை நிறைவேற்றுவது ஆகிய விடயங்களில் ஓரளவுக்கு வெற்றி பெற்றுள்ள போதிலும், சுதந்திர ஆணைக்குழுக்களை உருவாக்குதல் உள்ளிட்ட அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளது.
இந்தக் கட்டத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்துவதா அல்லது இழுத்தடித்தாவது அரசியலமைப்புத் திருத்தங்களை நிறைவேற்றுவதா என்ற குழப்பம் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டிருக்கிறது.
இந்தக் கட்டத்தில் தான் அடுத்த மாதம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியின் பயணம் இடம்பெறவுள்ளது.
அந்தப் பயணம் எதிர்க்கட்சியினருக்கு ஒரு எச்சரிக்கையைக் கொடுப்பதாகவே இருக்கும். அமெரிக்க பதில் தூதுவர் அன்ட்ரூ மான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது இன்னொன்றையும் குறிப்பிட்டிருக்கிறார்.
லஞ்ச ஊழல் மோசடிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உதவும் என்பதே அது. அதாவது முன்னைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைக்கு உதவுவதில் அமெரிக்கா முக்கிய பங்காற்றி வருகிறது.
முன்னைய ஆட்சியின் முக்கிய பிரமுகர்களின் அமெரிக்கா அழுத்தங்களைக் கொடுத்தால் அவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அல்லது புதிய அரசின் மீதான அழுத்தங்களை குறைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். பசில் ராஜபக்ச நாடு திரும்பியது கூட அமெரிக்க அழுத்தங்களினால் தான் சாத்தியமாகியிருக்கலாம்.
அதுபேலவே வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள நிதியை வெளியே கொண்டு வர அமெரிக்காவும் உதவ முனைந்தால், அது முன்னைய ஆட்சியாளர்களை இக்கட்டான நிலைக்குள் தள்ளிவிடும் . அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் அத்தகைய நிலையைத் தவிர்ப்பதற்கு புதிய அரசின் மீதான அழுத்தங்களை எதிர்க்கட்சியினர் குறைத்துக் கொள்ள நேரிடலாம்.
அதுமட்டுமன்றி, அமெரிக்க இராஜாங்கச் செயலரின் பயணம் முடியும் வரை பாராளுமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை என்றும் அரசாங்கம் கூறியிருக்கிறது.
எனவே புதிய அரசாங்கத்தின் எதிர்காலம் என்பது தனியே, ஆளும் கட்சியினதோ எதிர்க்கட்சியினதோ கைகளில் மட்டும் தங்கியிருக்கிறது என்று கருத முடியவில்லை.
அதற்கும் அப்பால் இலங்கைக்கு வெளியில் உள்ள புறச்சக்திகளும் இலங்கையின் அரசியல் நிலையை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கின்றன என்பதே உண்மை.
ஹரிகரன்

http://www.tamilwin.com/show-RUmtyERaSUjv2C.html

Geen opmerkingen:

Een reactie posten