தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 19 april 2015

100 நாள் நிறைவு: இவ்வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்! அரசியல் அவதானிகள் எதிர்வு கூறல்

அவசர தேர்தல் முறை மாற்றம் தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு செய்யப்படும் துரோகம்: மனோ கணேசன்
[ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015, 08:10.46 AM GMT ]
இந்நாட்டில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தேவை பட்டியலில் முன்னுரிமை கொண்ட விடயம் அல்ல என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
உண்மையில் இது அதிகமாக தேவைப்பட்டது சில பெரும்பான்மை கட்சிகளுக்கும், சில பெரும்பான்மை சமூக அமைப்புகளுக்குமே. இதை நாம் புரிந்துக்கொண்டு, தேச நலன் கருதியும், ஐக்கியம் கருதியும் விட்டுக்கொடுப்புகளுடன் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க நாம் உடன்பட்டோம்.
இவ்விதம் புதிய ஜனாதிபதியையும், புதிய பிரதமரையும், புதிய அரசாங்கத்தையும் உருவாக்க பெரிதும் துணை வந்த எமக்கு இன்று துரோகம் இழைக்க பெரும்பான்மை கட்சிகளில் இருக்கின்ற சில சக்திகள் திட்டமிடுகின்றன என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, 
தேர்தல் முறை மாற்றத்தை சட்டமூலமாக அவசர, அவசரமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அனுமதியளிக்க முடியாது. இந்த அவசரம் இன்று அரசில் இணைந்துக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரிவிற்கே இருக்கின்றது.
இது தொடர்பில் ஒரு அமைச்சரவை ஆவணத்தை இவர்கள் அமைச்சரவையில் சமர்பிக்க முயல்கிறார்கள். இதை அமைச்சரவை ஏற்றுக்கொள்ள கூடாது.
இதை அமைச்சரவையில் உள்ள சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் தலைவர்களும், தமிழ், முஸ்லிம் அமைச்சர்களும் வலியுறுத்த வேண்டும்.
நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு பம்பலப்பிட்டி மரீன் டிரைவ் "தி ஓசன் கொழும்பு" விருந்தகத்தில் கூடவுள்ள சிறு கட்சிகளின் கலந்துரையாடலில் இது தொடர்பாக விரிவாக ஆராய்ந்து எமது ஒருமித்த முடிவையும், அடுத்த கட்ட நடவடிக்கையும் தீர்மானிக்க திட்டமிட்டுள்ளோம்.
எமது ஒருமித்த தீர்மானத்தை நாம் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அறிவிப்போம். இந்த விடயத்தில் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு நியாயத்தை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் இருக்கின்றது.
இது தொடர்பில் தேவை ஏற்படும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம்.  எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எதேச்சதிகாரமான தேர்தல் முறை மாற்றத்துக்கு நாம் உடன் பட முடியாது. நீண்டகாலத்துக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர்தல்முறை மாற்றத்துக்கு நாம் உடன்பட்டால், அது இந்நாட்டு தமிழ்பேசும் மக்களின் எதிர்காலத்தையே அழித்து, ஒழித்து விடும்.
எமக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடும். எனவே இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொளும்படி அனைத்து சிறு கட்சிகளையும், பெரும்பான்மை கட்சிகளில் இருக்கின்ற தமிழ், முஸ்லிம் பிரமுகர்களையும் நாம் அழைக்கின்றோம்.
இது தொடர்பில் தற்போது சிங்கள மொழி ஊடகங்கள் கூடிய அக்கறை காட்டுகின்றன. அதேபோல் தமிழ் ஊடகங்களும் அதிகூடிய அக்கறையை காட்டிட வேண்டும் எனவும் கோருகின்றோம் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyEScSUjp5I.html

19ம் 20ம் திருத்தச் சட்டங்கள் ஒன்றாக சமர்ப்பிக்கப்பட வேண்டும்: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
[ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015, 11:48.19 AM GMT ]
19ம் மற்றும் 20ம் திருத்தச் சட்டங்கள் ஒன்றாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சிகள் இணக்கப்பாட்டை எட்டியுள்ளன.
இதன்படி குறித்த இரண்டு திருத்தச் சட்டங்களும் ஒன்றாக சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப்பட உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் இவ்வாறு தீர்மானித்துள்ளன.
இந்த தீர்மானத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இணங்கியுள்ளார் என கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றினால் அளிக்கப்பட்ட சட்ட விளக்கம் மற்றும் அதன் பின்னர் செய்யப்பட்ட திருத்தங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கிய ஒர் ஆவணமொன்று அனைத்து நடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண முதல்வர் எமக்காக நேரம் ஒதுக்கவில்லை: மருத்துவ சங்கத் தலைவர் குற்றச்சாட்டு
[ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015, 11:56.23 AM GMT ]
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு குறித்து வடக்கு மாகாண முதலமைச்சரை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாட சந்தர்ப்பம் கேட்டோம் ஆனால் அவர் நீண்ட நாள்களாகியும் பதில் தரவில்லை என யாழ் மருத்துவ சங்கத்தின் தலைவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார்.
சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலந்துள்ளமை சம்பந்தமான ஆவணப்பட இறுவட்டு வெளியிடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் சிறப்புரையாற்றும் போதே மருத்துவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது, வலிகாமத்தில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பது சம்பந்தமாக நாம் பல்வேறு தரப்பினரதும் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தோம். இதுகுறித்து வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் அறிவித்தோம். அத்துடன் அவரை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடவும் நேரம் கேட்டு கடிதம் எழுதியிருந்தோம்.
நாம் கடிதம் அனுப்பி பல மாதங்கள் கடந்த நிலையிலும் அவர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி நேரம் ஒதுக்குவதாக முதலமைச்சரின் செயலாளர் எமக்கு அறிவித்தார்.
ஆனால் நாம் இந்திய பிரதமர் வரும் நிலையில் இது சாத்தியப்படுமா என்று கேள்வி எழுப்பிய போது, அது சாத்தியப்படும் என செயலாளர் தொவித்தார். இறுதி நிமிடத்தில் அந்தச் சந்திப்பையும் ரத்து செய்தனர். நாம் இன்றுவரை இந்தக் கலந்துரையாடலுக்கான நேரம் ஒதுக்கி தரப்படும் என எதிர்பார்த்து இருக்கின்றோம் என தெரிவித்தார்.

முன்னாள் போராளியான ஆசிரியரை காணவில்லை: மனைவி பொலிஸில் முறைப்பாடு
[ சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2015, 12:12.25 PM GMT ]
வடக்கு ஏழாலை பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளியைக் காணவில்லை என அவரது மனைவி இன்று சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மகாதேவன் மணிவண்னண் என்ற முன்னாள் போராளியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லையென காணாமல்போனவரின் மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் யாழ். இந்துக்கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி வருகிறார் எனவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் சுன்னாகம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

100 நாள் நிறைவு: இவ்வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்! அரசியல் அவதானிகள் எதிர்வு கூறல்
[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015, 12:01.18 AM GMT ]
இலங்கை அரசியல் வரலாற்றில் பலவிதமான அதிரடியான மாற்றங்கள் நிகழக்கூடிய வாரமாக இவ்வாரம் அமையவுள்ளதாக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் அடங்கிய நூறு நாள் வேலைத்திட்டத்தின் முடிவு நாளும் இவ் வாரத்திற்குள் வருகிறது.
அத்துடன் பாராளுமன்றத்தில் 19வது மற்றும் 20வது திருத்தச் சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்படுமா? அல்லது பிற்போடப்படுமா? அல்லது சமர்ப்பிக்கப்பட்டு அதனை அங்கீகரிப்பதில் இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்படுமா? எனும் கேள்விகளுக்கும் இவ்வாரம் தீர்வு கிடைக்கவுள்ள அதேவேளை பாராளுமன்றம் இவ்வாரம் அதாவது 23ம் திகதி நள்ளிரவு கலைக்கப்படலாம் எனும் தகவல்களும் அரசியல் உயர் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்த சகலவிதமான இழுபறிகளுக்கும் இவ்வாரம் தீர்வு கிடைக்கும். அதிலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அனைவரதும் சுயரூபங்கள் வெளிச்சத்திற்கு வரும். அதன் பின்னர் பொதுத் தேர்தலில் மக்கள் தாம் விரும்பும் தமது தலைமையைத் தேர்ந்தெடுப்பர் எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் 19வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் மிகவும் உறுதியாகவுள்ளனர். எனினும் அதனை நிறைவேற்றுவதில் குழப்பங்களை உண்டு பண்ணுவதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பது மஹிந்த தரப்பின் நிலைப்பாடாக உள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஆளும் கட்சியினர் 20ம் மற்றும் 21ம் திகதிகளில் 19 மற்றும் 20ம் திருத்தச் சட்டத்தை சமர்ப்பிக்க தீர்மானித்திருந்தனர். எனினும், 19வது திருத்தச் சட்டத்தை சமர்ப்பிக்க எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை எனவும், 19வது திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்படுவதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
19ம், 20ம் திருத்தங்கள் சமகாலத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பிடிவாதமாக உள்ளனர். மஹிந்தவின் மீள் எழுச்சி பற்றிய சிக்கல்களால் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை அதிருப்தியடைய வைக்க விரும்பாத ஜனாதிபதி மைத்திரியும், இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் 19வது திருத்தத்தை நிறைவேற்ற ஐ.தே.கவிற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
திங்கட்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் 19வது திருத்தம் குறித்த விவாதத்திற்கு சபை நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டு, நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரு நாட்களும் விவாதத்தை நடத்தி முடித்துவிட்டு வாக்கெடுப்பிற்கு விடப்படாமல் பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கவும், அதற்கிடையில் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்பட்டதன் பின்னர் இரண்டையும் ஒரே நாளில் நிறைவேற்ற பிரதான கட்சிகள் இரண்டும் கலந்துரையாடி இணக்கம் கண்டிருப்பதாக அறியவருகிறது.
பெரும்பாலும் ஏப்ரல் 28ம் திகதிக்கு முன்னர் இரண்டையும் நிறைவேற்றிக்கொண்டதன் பின்னர் மே மாதம் முதல் வாரமளவில் நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடிய சாத்தியம் தென்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கூட்டமொன்று நாளை 20ம் திகதி நடைபெறவுள்ளது. பிரதமரும் கட்சியின் தேசிய தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப் பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப் பட்டுள்ளனர். அலரிமாளிகையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
எனினும் 19வது திருத்தச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் நடக்குமாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பவை பழையபடி கடும் போட்டியை எதிர்கொள்ளும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்தவரை ஜனாதிபதி மைத்திரி ஒரு சுமுகமான அரசாட்சியை செய்துவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாகவுள்ளார். இதனை அவர் வெளிப்படையாகக் கூறத் தவறினாலும் உள்ளூர தனது ஆதரவாளர்களூடாக தனது நோக்கை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் பத்தொன்பதாவது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவது என்பது ஜனாதிபதி மைத்திரிக்கு இருக்கக்கூடிய பெரும் சவாலாகும். 
http://www.tamilwin.com/show-RUmtyESdSUjqyG.html

Geen opmerkingen:

Een reactie posten