தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 27 april 2015

சிங்களம் சர்வதேசத்தோடு போராட தொடங்கிவிட்டது.... அப்போ தமிழர்கள்?

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்னும் பழமொழி தமிழ் மக்கள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒன்று. இது நமது நாட்டின் அரசியலிலும், விடுதலைப் போராட்டத்திலும் சரியாக பொருந்திப்போனதொன்று.
இப்போது அதே பழமொழி இலங்கை அரசியலுக்கு நன்றாக பொருந்துகின்றது. ஆம் இலங்கை அரசியல் தற்பொழுது எப்படி நகர்ந்து கொண்டிருக்கின்றது? யார் அரசாங்கம்? யார் எதிர்க்கட்சி? என்று சாதாரண பாமர குடிமகனிடம் கேட்டால் விழிபிதுங்கி நிற்பான். இதுவே இன்றைய நிலை.

ஆனால் இதுவொன்றும் இலங்கை அரசியலில் புதிதானதல்ல. இலங்கை பூகோள ரீதியில் முக்கியத்துவம் பெற்று விளங்குகின்ற நாடு ஆகையால் இலங்கை தேசத்தை தமது கைகளுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஏகாதிபத்தியவாதிகளின் கனவு.

இலங்கை மீது 1505ம் ஆண்டு போர்தொடுத்த போர்த்துக் கேயர்களாலும், அவர்களைத் தொடர்ந்து வந்த ஒல்லாந்தர்களாலும், இலங்கையின் கரையோரப்பகுதிகளை கைப்பற்ற முடிந்ததே தவிர இலங்கையின் சிங்களவர்களின் கேந்திர முக்கியத்துவமாகவும், பௌத்தத்தின் கோட்டையாகவும் விளங்கிய மலையகமான கண்டியை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.
கைப்பற்ற முடியவில்லை என்பதற்காக ஐரோப்பியர்கள் சும்மாயிருந்துவிடவில்லை, அடிக்கடி மலையத்திற்கு போர் தொடுத்தனர். ஆனால் மலையகச் சிங்களவர்களின் ஒற்றுமையும், நேர்த்தியான ஒழுங்கமைக்கபட்ட திட்டமிட்ட மரபுவழித்தாக்குதல்களாலும் ஐரோப்பியர்களை நெருங்க விடாமல் செய்தனர்.
இது அவர்களின் இராச்சியத்தை பாதுகாத்து வைக்க உதவியது.
ஆனால் காலம் ஒன்றும் ஒரே மாதிரி இருப்பதில்லை. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் வரிசையில் அடுத்து இலங்கையை தமதாக்கி ஆசியாவையும் தமது காலனித்துவத்தின் கீழ்கொண்டு வந்து வளங்களை சுரண்டுவதையும், கிறிஸ்தவ மதத்தை பரப்புவதையும் இலக்காக கொண்ட பிரித்தானியர்கள் முதலில் இலங்கையின் கரையோரப்பகுதிகளை கைப்பற்றினர். அது அவர்களுக்கு இலகுவான ஒன்றாகவும் இருந்தது.

ஏனெனில் இலங்கையின் கரையோரப்பகுதிகளில் நிலவிய ஆட்சியாளர்களின் ஒற்றுமையீனமே இதற்கு முதன்மையான காரணங்களாக இருந்தது. இந்த நிலையில் முன்னைய ஐரோப்பியர்களைப் போன்று பிரித்தானியர்களும் கண்டியை கைப்பற்ற துடித்தனர். ஆனால் சிங்கள மன்னர்களின் மரபு வழிப்போராட்டத்தில் பலர் மடிந்தே போயினர்.

இருந்த போதிலும், கண்டியில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஒரே வழி போராட்டக்குழுக்களை வளைத்துப்போடுவதும், ஒற்றர்களை நியமிப்பதுமே. இது மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க,1815ம் ஆண்டு வீழ்ந்தது பிரித்தானியர்களின் கரங்களில். அன்றைய தினம் இலங்கையின் வரலாறு மாற்றியமைக்கப்பட்டது.

புலிகளின் கோட்டையாக மிளிர்ந்த வன்னிப் பெருநிலப் பரப்பு வீழ்ந்த போது எப்படி ஒரு சோர்வை தமிழர்கள் சந்தித்தார்களோ அதைப்போன்றதொரு சோர்வை அன்று சிங்களவர்கள் சந்தித்தார்கள். அன்றே அதாவது 1815ம் ஆண்டு இலங்கை முழுவதும் ஒரு இலங்கையாக மாற்றப்பட்டது. அதற்குப் பின்னர் பிரித்தானியர்களுக்கு இலங்கை எங்கும் சென்று வர சுலபமாகவும் இருந்தது.
இது ஒரு புறமிருக்க,1833ம் ஆண்டு இலங்கையின் இன்னொரு விடயத்தை தலைகீழாக மாற்றினார்கள் பிரித்தானியர்கள். அதாவது 1833ம் ஆண்டு கோல்புரூக் கமரோன் யாப்பு அறிமுகப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் வாக்குரிமைகள் கிடைத்தன என்பது ஒருபுறமிருக்க, இலங்கை நாடு முழுவதும் ஒரே நிர்வாக அலகாக்கப்பட்டது.

தமது நிர்வாக சுலபத்திற்காகவும், நிதி வீண்விரையத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் பிரித்தானியர்கள் இவ்வாறு செய்தார்களாயினும், அதுவே தமிழர்களுக்கு ஒரு தனித்துவம் இல்லாமல் போகவும், பிற்காலத்தில் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தவும் வழியமைத்தது. இது ஒருவகையான வரலாறு.
ஏனெனில் வரலாற்றை மறந்துவிட்டு ஒரு இனமோ,நாடோ வளர்ச்சிப்பாதையை நோக்கி நகரமுடியாது. அன்று யாழ்ப்பாண இராச்சியத்தில் ஒற்றுமையும் பலமும் இருந்திருந்திருந்தால் போர்த்துக்கேயர்கள் உள் நுழைந்திருக்க முடியாமல் போயிருக்கும் என்பதைப்போல சிங்கள போராட்டக்காரங்கள் தங்கள் இனத்தின் மீது அக்கறை கொண்டிருந்திருந்தால் வெற்றி சிங்கள கண்டியின் மீதிருந்திருக்கும். இருப்பினும் எல்லாமே நாசமாய் போனதே தவிர வேறொன்றுமில்லை.

இது வரலாற்றின் முன்னைய நிகழ்வுகள். இதை அப்படியே புலியழிப்புக்கும் மேற்குலகம் பயன்படுத்தியது. அதை முடித்த மேற்குலகம் மகிந்த ராஜபக்‌ஷவையும் சரிக்க திட்டம் தீட்டியது. பழைய திட்டங்கள் தான் அவர்களுக்குள்ளேயே ஆட்களை தெரிவு செய்தல், வீழ்த்துதல், தம்மைப் பலப்படுத்துதல். இந்த நிலைமையில் தற்பொழுது இலங்கை அரசியலை சற்று உற்று நோக்க வேண்டியிருக்கின்றது.

அமெரிக்காவின் தில்லுமுள்ளுக்கள் எல்லாம் தன்னை இந்துமாக்கடலில் நிலைநிறுத்த என்னென்னவோ எல்லாம் செய்கின்றது. இது இலங்கை நாட்டில் இருக்கும் அத்தனை இனங்களுக்கும் பாதிப்பானது. அதற்காக மகிந்தவை மீண்டும் அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று இவ்விடத்தில் நாம் குறிப்பிடவில்லை.
தற்பொழுது சிங்களக்கட்சிகளையும், அவர்களின் அரசியல் முன்னெடுப்பையும் கவனித்துப்பார்த்தால், இனவாதம் பேசி அரசியலை முன்னெடுக்க ஒரு தரப்பும், அரசியலில் வாழ்வா சாவா என்று இன்னொரு தரப்பும் இருக்கின்றது. தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது என்ன நோக்கம் என்று எல்லாம் சிந்தித்தால், நடக்க இருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் எந்தக்கட்சியும் பலமான பெரும்பான்மையை பெறும் என்பது சந்தேகமே.

ஏனெனில் ஐக்கிய மக்கள் சுதத்திரக்கட்சி பிரிந்து கிடக்கின்றது. அதில் பாதிப்பேர் மைத்திரி ஆதரவு, மீதிப்பேர் மகிந்தவுக்கான ஆதரவு, இடையில் ஜே.வி.பி. பிளவுபட்டு சோமவன்ச புதிய கட்சி ஆரம்பிக்கப்போவதாக தகவல்,
இன்னொரு பக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ரணிலும், மகிந்தவும் தனியான கட்சி ஆரம்பிப்பதாக செய்திகள், கோத்தபாய அரசியலுக்கு புகுந்து கொள்ளப்போவதாக அறிவிப்பு என்று அத்தனையும் பார்த்தால் சிங்களம் இப்பொழுது இரண்டு படவில்லை அது பல கூறாகப்பிரிந்து போய்க்கிடக்கின்றது என்றே சொல்லலாம்.

இது சிங்கள இனத்திற்கு அவ்வளவு நல்ல சகுனமாக தெரியவில்லை. இந்த நிலையை சிங்கள புத்திஜீவிகள் தொடர அனுமதிக்கமாட்டார்கள் என்றே தோன்றுகின்றது.

இந்த நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தை முடித்து பேசிய ஜனாதிபதி மைத்திரி சிறிபால சேன தாம் இலங்கை மீதிருந்த சர்வதேச அழுத்தத்தை குறைத்துள்ளதாக கூறியுள்ளதோடு இலங்கை மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் கருத்தானது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை விசாரிக்கும் சர்வதேசத்தின் முடிவில் தாம் மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாக தெளிவாக தெரிவித்துவிட்டார்.
இன்னும் தெளிவா குறிப்பிட்டால் நாங்கள் மகிந்தவையும், தேசிய இராணுவ வீரர்களையும் காப்பாற்றியிருக்கின்றோம் என்பதே அதன் பொருள். அப்படியாயின் தமிழர்களின் நிலை என்ன?

நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் சிங்களக்கட்சிகள் பல களத்தில் இறங்க முடிவு பண்ணியிருக்கின்றன. பெரிய பெரிய தலைகள் எல்லாமே வேறு வேறு கட்சியில் குதிக்கப்போகின்றார்கள்.

இவ்விடத்தில் தான் தமிழ்த் தலைமைகள் ஒன்றை தெளிவாக புரிந்து கொண்டு ஓரணியில் செயலாற்ற முன்வர வேண்டும். இலங்கையின் எல்லாப்பகுதிகளிலும் இருக்கும் தமிழ் பேசக்கூடிய அதாவது தமிழ், முஸ்லிம் கட்சிகள் தமக்குள் உடன்பட்டு தேர்தலில் சிறுபான்மை இனத்தவர்களின் வாக்குகளை சேகரித்து ஒரு பலமான எதிரணியாக மாறவேண்டும்.

இல்லையாயின் தமிழ் முஸ்லிம் மக்களின் கணிசமான வாக்குகள் சிங்களக் கட்சிகளுக்கும் தாரைவார்க்கப்படும் ஆபத்து இங்கே உண்டு. இன்று சிங்களக் கட்சிகள் பிரிந்து பிரிந்து நிற்கலாம், ஆனால் நாளை அவர்கள் ஒன்றிணைய மாட்டார்கள் என்று சொல்லமுடியாது. இப்பொழுதே மைத்திரி சொல்வது போல நான் மகிந்தவோடு இணைந்து செலாற்ற தயாராகவே இருக்கின்றேன் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இது தொடா்பாக தமிழர்களும் முஸ்லிம்களும் சிந்திக்க வேண்டும்.

இனி சர்வதேச சமூகத்திற்கு இலங்கை சிறுபான்மையினர் தேவையில்லை. அவர்களின் பிரச்சினைகளை கையிலெடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு தேவை இலங்கையில் இருந்து சீனாவை வெளியேற்றுவது. அது நடந்து முடிந்துவிட்டது.

மைத்திரி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதையும் பெரிதாக செய்யப்போவதில்லை. செய்வதாக பாசாங்கு காட்டி சர்வதேசத்திடம் இருந்து இலங்கை மீது வரக்கூடிய அழுத்தங்களை இல்லாமல் காலத்தை கடத்தப்போகின்றது.

இனித்தமிழர் தரப்பு சரியாக சிந்தித்துக்கொள்ளட்டும். இவர்கள் எதிர்த்து நின்று கேள்வி கேட்டுப் பெற்றுக்கொள்ள புலிகள் போன்று பலமானவர்களும் அல்ல, திடமானவர்களும் அல்ல. புலிகள் பலமாக இருந்த போது சர்வதேசம் வன்னிக்கு விரைந்தது. ஆனால் இன்று தமிழர்கள் பலமான ஒரு தரப்பன்று.

பேரம் பேசும் நிலைக்கு இவர்களிடம் சக்தியில்லை. ஆகையால் தேர்தல் களத்தையும் அரசியல் நிலவரத்தையும் புரிந்து கொண்டு ஒன்றுபடுவது தமிழர்களுக்கும் தமிழர் அரசியலுக்கும் நல்லது. இதைவிடுத்து அடுத்த தேர்தலில் எப்படி சீட்டுப்பிடிச்சு பார்லிமென்ட் போய் பேசுவது என்று போட்டி போட்டால் தமிழர்களை நீங்களும் அழிக்க தொடங்கிவிட்டீர்கள் என்பது வரலாறாகி விடும்.

சிந்தித்து செயலாற்றுங்கள்
சிங்களம் சர்வதேசத்தோடு
போராடத் தொடங்கிவிட்டது.
நீங்கள் சிங்களத்தோடு
பேரம் பேச பலத்தை பெருக்குங்கள்.
இதைவிட சொல்வற்கொன்றுமில்லை
சிந்தித்து செயலாற்றுங்கள்.






எஸ்.பி.தாஸ் 

http://www.tamilwin.com/show-RUmtyERbSUjw6I.html

Geen opmerkingen:

Een reactie posten