தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 april 2015

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த தேசிய அரசாங்கத்தின் தேவை அவசியம்: துரைராஜசிங்கம்

நேபாள நாட்டு மக்களுக்கு இதய வலியோடு எழுதும் மடல்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 06:01.01 AM GMT ]
நேபாள நாட்டு மக்களுக்கு இதய வலியோடு எழும் மடல் இது. உலகில் ஒரேயொரு இந்து நாடு என்ற பெருமைக்குரிய நேபாள நாட்டில் நடந்த பெரும் துயர் அறிந்து ஈழத் தமிழ் மக்களாகிய நாம் தாளாத வேதனை கொள்கிறோம்.
இழப்புகளின் துயரம் எத்தகையது என்பதை கணப்பொழுதும் அனுபவித்து வரும் ஈழத் தமிழ் மக்கள், உங்களுக்கு ஏற்பட்ட இழப்பின் கொடூரம் கண்டு கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.
இயற்கையின் சீற்றத்தால் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இழந்து தவிக்கும் உங்களின் அவலநிலையை அந்த இறைவன் ஆற்றுப்படுத்த வேண்டும் என இந்நேரத்தில் உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட மரணம் என்பதற்கு அப்பால் அநாதரவாகிப் போன குழந்தைகள், விதவைகளாகிப் போன பெண்கள், அங்கவீனமானவர்கள் என்ற மிகப் பெரியதொரு பட்டியலையும் நிலநடுக்கம் தந்துவிட்டுப் போயிருக்கும்.
என்ன செய்வது! இனத்தால், மதத்தால், மொழியால், நிறத்தால் மனித சமூகம் பேதமைப்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி அழித்து மனித வாழ்வை அர்த்தமற்றதாக்கி வருகின்ற துயர் மாறாத நிலையில், இயற்கையும் தனது பங்கிற்கு அமைதியான உங்கள் நேபாள நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி  நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இரையாக்கியதுடன் தேசத்தையும் நாசமாக்கியுள்ளது.
ஓ! அன்புக்குரிய நேபாள நாட்டு மக்களே! நாங்கள் ஈழத் தமிழர்கள். வாழத் துடித்து எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அப்பாவிகள்.
வன்னியில் எம் இனம் கொன்றொழிக்கப்பட்ட போது, சர்வதேசமே எங்களைக் காப்பாற்று என்று கையேந்தி மன்றாடியும் காப்பாற்றுவார் இன்றி துடிதுடித்துப் பலியாகிப் போன இனத்தின் எச்சங்கள் நாங்கள்.
உலகில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக சர்வதேசம் ஒன்று கூடி அமைத்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனினால் கைவிடப்பட்ட இனம்.
வாலியை வதம் செய்த இராமராக இந்தியா செயற்பட்ட போதும் இராமரை நம்பியிருந்த வாலி போல இந்தியாவை நம்பியிருந்த ஏழையினம் உங்கள் துயர் கண்டு இன்று கலங்குகிறது.
உயிரிழப்பின் வலிமை மிகவும் கொடுமையானது. கடவுளே! எப்படித்தான் நீங்கள் தாங்கப் போகிறீர்கள் என்ற ஏக்கம் இழப்பால் தவிக்கும் எங்கள் இதயத்தை கடுமையாகத் தாக்குகிறது.
உங்கள் இழப்பின் துயரில் எங்கள் கண்ணீரும் கலந்து கொள்கிறது. நாட்டில் வாழ உரிமையில்லாத ஓர் இனத்தின் கண்ணீர்தான் அந்த இனம் தரக்கூடிய அதி உயர்ந்த உதவி என்பதை இந்த நேரத்தில் சொல்லும்போது எங்கள் கண்கள் கலங்குகின்றன.
இது உங்கள் துயருக்காக அல்ல, எங்களுக்கென்று ஒரு நாடு இருந்திருந்தால் நாங்களும் உங்கள் துயர் துடைக்க விமானத்தில் உதவிப் பொருட்கள் அனுப்பியிருப்போம். என்ன உதவி தேவை என்று கேட்டிருப்போம்.
என்ன செய்வது எந்த வாகனம் வந்தாலும் என்ன தருவார் என்று ஏங்கும் அளவில் எங்கள் நிலைமை இருப்பதை நினைத்த போது கண்கள் கலங்கின.


தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த தேசிய அரசாங்கத்தின் தேவை அவசியம்: துரைராஜசிங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 06:12.32 AM GMT ]
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தக் கூடிய பாரம்பரிய பிரதேசங்களை அங்கீகரிக்கக் கூடிய ஒரு தீர்வை நோக்கி நாங்கள் செல்வதற்கு தேசிய அரசாங்கத்தின் தேவை மிக அவசியம் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களுக்கிடையிலான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ந.சிவனடியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“1949ஆம் ஆண்டு எமது மலையக தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்ட போது இந்த நாட்டிலே தமிழர்கள் தங்களை தனியாக அடையாளப்படுத்திக் கொண்டு வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இந்த நாட்டிலே நாம் தமிழர்களாக வாழ வேண்டும் என்றால் நம்முடைய அடையாங்களைப் பேணிக் கொண்டு ஒரு தலைமையின் கீழ் ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல செய்தியைச் எமக்கு உரைத்தவர் தந்தை செல்வா தான்.
அவருடைய செயற்பாட்டின் காரணமாக தாக் வடக்கு கிழக்கில் உள்ள நாம் தமிழர் என்ற அடையாளத்துடன் வாழ்கின்றோம்.
தந்தை செல்வாவும் அரசாங்கத்தில் கைகோர்த்து, பதவிகளை பெற்றிருந்தால், சித்தாண்டி திருத்தலத்திலே முருகன் இருப்பாரா என, தமிழரசுக் கட்சி என்ன செய்தது என்று கேட்கும் அன்பர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வெறுமனே ஆட்சியாளர்களுடன் சேர்ந்து கொண்டு அபிவிருத்தி என்று பேசிக் கொண்டிருந்தால் தமிழினம் நிலைத்திருக்குமா அல்லது, எமது பிள்ளைகள் தமிழிலே அச்சடித்த புத்தங்களில் பாடங்களைப் படித்திருக்க  தான் முடியுமா? எங்களுடைய நீதி மன்றங்களிலே தமிழ் மொழியிலே பதிவேடுகள் வைத்திருக்க முடியுமா? நிருவாக மொழி தமிழாக இருந்திருக்க மாட்டாது என்று சிந்தித்து பார்க்கவேண்டும்.
தமிழின் அடையாளங்களை காப்பாற்றி நம்மை தமிழர்களாக மாற்றியிருக்கும் தமிழரசுக் கட்சி, தந்தை செல்வா எமக்கு தந்த சொத்து அதனை நாம் காப்பாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இந்த நாட்டிலே தற்போது வித்தியாசமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. 1957, 1967ஆம் ஆண்டுகளில் இவ்வாறான சூழல் ஏற்பட்டது. டட்லி செல்வா ஒப்பந்தம் ஏற்பட்ட பின் அமைக்கப்பட்ட தேசிய அரசில் தமிழரசுக் கட்சியும் இணைந்து செயற்பட்ட காரணத்தால் மாவட்ட சபைகளுக்கு ஒத்த நிருவாக சபை உருவாக்கப்பட்டன.
அதற்குப் பிந்திய காலங்கள் சற்று வேறுபட்ட காலங்களாக மாறி ஒரு வீர யுகம் உருவாகியது. இந்து சமுத்திர பிராந்தியத்தில் அன்று ஏற்பட்ட சூழல் இந்தியா தன்னை நிலை நிறுத்த நினைத்தது.
இளைஞர்களை கையொடுத்து உயர்த்தினாரகள். அதன் காரணமாக எம்மில்  பாரிய மாற்றம் ஏற்படுத்தியிருக்க முடியும் ஆனால் எமது துர்ப்பாக்கிய சூழல் அன்னை இந்திரா கொல்லப்பட்டார்.
எம்முடைய பிரச்சினையை தெரியாத ராஜூவ் காந்தி ஆட்சிப் பீடம் ஏறியதும் எல்லா சூழலும் மாறியது. 2001ம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதும் உலக அரசியலின் சூழல் வேறுவிதமாக மாறியது உண்ணதமான போராட்டங்கள் பயங்கரவாத சாயல் பூசப்பட்டது.
எம்முடைய வீரர்கள் சரியான முறையில் அரசியலை நடத்த முடியாதவர்களாக காணப்பட்டார்கள். எமது வீரர்களின் பலத்தைக் கண்டு உலகமே வியர்ந்தது அவர்களை ஒரு வழிக்கு கொண்டு வருவதற்கு அவர்களை அழிப்பதே ஒரே வழி என நினைத்தார்கள், இந்த விடயம் இங்கிருந்த ராஜபக்ச அரசுக்கு சாதகமாகிவிட்டது.
வெறும் துப்பாக்கியை வைத்துக்கொண்டிருந்த இராணுவத்தினருக்கு ஆயுதங்களை வழங்கி எமது உடன் பிறப்புக்களை துடிக்கத் துடிக்க கொன்றார்கள். பல்குழல் தாக்குதல்கள் மூலம் ஒரு இலட்சத்து 48 ஆயிரம் பொது மக்களை ஒரிரு நாட்களுக்குள் கொன்று குவித்தார்கள்.
2009ஆண்டு மே மாதம் எமது வீர யுகம் முடிவுற்றது. அன்று முதல் அழிந்தது தமிழினம் அழிந்தது தமிழினத்தினுடைய உணர்ச்சி இனி முழு நாட்டுக்கும் நான் தான் ராஜா என ஒரு பெரியவர் புறப்பட்டார்.
அந்த பெரியவருக்கு எரிகின்ற வீட்டுக்குள் இருந்து நெருப்பள்ளி கொடுக்க தம்பிகள் இங்கிருந்தார்கள்.
உள்ளே இருந்து ஓட்டைகள் போட்டு கப்பலை கவிழ்த்து விட்டு அங்கு வந்த மிதவைக் கப்பலிலே ஏறி வந்த ராஜாவுடன் சேர்ந்தவர்கள் எங்களை பல காலம் முகம் காட்ட முடியாமல் தடுத்து வைத்தார்கள். வடக்கிலே ஏற்கனவே நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றியிருந்த போதிலும் அது கைவிலங்கு இடப்பட்ட ஆட்சியாக காணப்பட்டது.
ஆனால் தை மாதம் 8ம் திகதிக்கு பின்பு நடந்த ஆட்சி மாற்றத்தின் காரணமாக அனைத்தும் மாறியுள்ளது. ஆட்சி மாற்றத்தின் பின்பு கிழக்கிலே என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என சிலர் பேசித் திரிகிறார்கள்.
சம்பூரில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த 5000 ஏக்கர் காணியை அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்த இராணுவ அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். ஆட்சி மாற்றத்தின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றிணைந்த தேசிய அரசு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் அமைச்சு பதவி கிடைத்ததிலிருந்து மூன்று மாவட்டத்திற்கும் சென்று பல அணைகள், வாய்கால்கள், வயல்களைப் பார்வையிட்டு விவசாய செய்கை மேம்படுத்த என்ன நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறோம்.
உறுகாமம் குளத்திலிருந்து வரும் நீரை பூமாசோலை பகுதியில் மறிப்பதன் காரணமாக சின்வெளி,சின்னானம்வெளி போன்ற பிரதேசங்கள் பாதிக்கப்படுகின்றன. கிரான்புல் அணையினை கட்டுவதன் மூலம் வேறு இடங்களிலிலிருந்து வரும் நீரினை நம்பியிருக்கும் அவசியம் காணப்படாது.
எமது பிரதேச கிணறுகளிலும் நீர் பற்றாக்குறை காணப்படாது. ஜூன் மாதம் சித்தாண்டி கோழித் தீன் தொழில்சாலை இயங்க நடவடிக்கை யெடுத்துள்ளோம்.
அதன் மூலம் இந்த பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்படும். மண்டூரில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள பண்ணையை மீண்டும் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தும்பங்கேணியில் பால் சேகரிப்பு நிலையத்தை மீண்டும் இயங்கச் செய்து யோக்கட் தயாரிக்க கூடிய வசதிகள் ஏற்படுத்தப்படுத்திக் கொடுக்கப்படும்.
இதைப் போன்று திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளோம். ஆட்சி மாற்றத்தை நாங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் .
தெற்கிலே இருக்கின்ற நல்ல சக்திகளை ஒன்று திரட்ட வேண்டும், வருகின்ற பொதுத் தேர்தலிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கை ஓங்கவேண்டும் அவ்வாறு ஓங்குகின்ற போது வடக்கு கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கை ஓங்கி நிற்க வேண்டும்.
அதன் மூலம் இன்னுமொரு தேசிய அரசாங்கம் ஏற்படும் இந்த தேசிய அரசாங்கத்தின் மூலம் எங்களுடைய தேசிய பிரச்சினையை உறுதிப்படுத்தக் கூடியவர்களாகவிருப்போம். எனவே தெற்கிலே இருக்கக் கூடிய நிதான சக்திகளுக்கு நாங்கள் ஆதரவு வழங்க வேண்டும்.
தமிழர்கள் எந்த காலத்திலும் தேசிய இனம் என்ற இலக்கை விட்டு மாறமாட்டார்கள் என்ற ரீதியில் நாங்கள் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேச்சல் தரை காணிப்பங்கீடு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
மேய்ச்சல் தரைக் காணி பங்கீடு மற்றும் கமநல கால்நடை அமைப்புகளுடனான விசேட கலந்துரையாடல் நிகழ்வு வாகரை பிரதேச செயலகத்தில் நேற்று  இடம்பெற்றது.
வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்து கொண்டதுடன்,
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், வாகரை பிரதேச உதவி திட்டமிடல் அதிகாரி எஸ்.கங்காதரன், மற்றும் அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பாகவும், அதனை பங்கீடு தொடர்பாகவும், கால் நடை பண்ணையாளர் சங்க பதிவுகள், காட்டு யானை வேலி, குளங்கள் புனரமைப்பு போன்ற அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றி, கமநல அமைப்புகள், கால்நடை வளர்ப்பாளர்கள் போன்றோரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆரயயப்பட்டதுடன்,
இது தொடர்பில் அதிகாரிகளின் கருத்துக்களும் கேட்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது. இங்கு அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் இங்கு இடம்பெற்ற நிகழ்வுகள் சட்டத்திற்கு புறம்பாகவே இடம்பெற்றன. சட்டத்திற்கு உட்பட்டு உரிய விடயங்கள் உரிய முறையில் கையாளப்படவில்லை.
ஆட்சியில் இருப்பவர்களின் விருப்பத்தின் பேரில் அவரவர்க்கு உரியவர்களுக்கு சலுகைகளும் இதர விடயங்கள் வழங்கப்பட்டன.
ஆனால் அவ்வாறான நிலை தற்போது இல்லை. அந்த நிலை தொடர்ந்தும் இருத்தல் கூடாது இதனை அதிகாரிகளும் மக்களும் மனதில் நிறுத்தி செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjxzA.html

Geen opmerkingen:

Een reactie posten