தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 april 2015

அமெரிக்காவின் கனவை தகர்த்தெறிகின்றார்களா ராஜபக்சாக்கள்?

உலகில் எந்த நாட்டில் என்ன நிகழ வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்கா திகழ்கின்றது.
இந்த நாட்டில் இன்னார் தான் ஆட்சியில் இருக்க வேண்டும், எம்மை பகைப்பவர்கள், எவராக இருந்தாலும் அவர் எந்த பலத்தைப் பெற்றிருந்தாலும் அவரின் செல்வாக்கை சரித்து தன் கொள்ளைக்கு அல்லது தனக்கு ஏற்றவனாய் ஒருத்தனை பதவியில் அமர்த்தும் சிந்தினையில் உள்ளவன் அமெரிக்க ஜனாதிபதி.
இதன் தாக்கத்தினை எகிப்திலும், லிபியாவிலும் காண முடிந்தது. இதன் அடுத்த அங்கமே இலங்கையில் ராஜபக்சாக்களை ஓரம் கட்டுதல். வீழ்த்துதல் என்னும் இராஜதந்திரம்.
தன் உலக வல்லரசை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், தன்னுடைய ஆதிக்கத்தை பரப்புவதற்காகவும் படாத பாடுபடுகின்றது அமெரிக்கா.
ஆசியாவில் தன் ஆதிக்கத்தை செலுத்துவதற்கு இலங்கையில் இரண்டு தரப்புக்கள் தடையாக இருந்தன.
ஒன்று தமிழீழ விடுதலைப் புலிகள்,
இரண்டாவது மகிந்த ராஜபக்ச அன்ட் கம்பனி,
ஆசியாவின் ஆதிக்கத்தை தனதாக்க வேண்டும் என்னும் அமெரிக்காவின் கனவிற்கு இலங்கை பெரியதோர் களமாக இருந்தது. இலங்கை நாட்டை தனதாக்கிக் கொண்டால், அல்லது தன்னுடைய சொல்லைக் கேட்க கூடிய அரசு ஆட்சியில் இருந்தால் ஆசியாவை ஆட்டம் காண வைக்க முடியும் என்பதில் அமெரிக்கா குறியாக இருந்தது.
ஆனால் இதற்கெல்லாம் ஆப்பாய் அமைந்தனர் இருவர். அந்த இருவரில் யாராவது ஒருவர் வளைந்தாலும் அமெரிக்காவின் கனவு பலித்திருந்திருக்கும்.
ஆனால் அதை அமெரிக்காவும் இந்தியாவும் 2015 தை 8ம் திகதியே சாதித்தனர். அதற்கு முன்னர் இலங்கையர்களிடம் அமெரிக்காவும், இந்தியாவும் தோற்றுப் போனது என்பது தான் உண்மை.
ஆரம்பத்தில் புலிகளை அழிக்கலாம் என்பதில் உறுதியாக இருந்தனர் உலகநாட்டுத் தலைவர்கள்.
ஆனால் புலிகளின் அசுர வளர்ச்சியும் அடுத்தடுத்த தாக்குதல்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைகளும், செயற்ப்பாடுகளும் அவர்களை சமாளிக்க முடியாத படியும், யுத்தத்தில் வெற்றி கொள்ளப்பட முடியாதவர்களாகவும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் உலக ஜனநாயகவாதிகள் என்று சொல்லுகின்ற அமெரிக்காவும் இந்தியாவும்,
புலிகளை சமாதான ஒப்பந்தத்திற்கு இழுத்து வந்து அவர்களின் முதுகெலும்பை உடைக்க திட்டம் வகுத்தனர் அதில் வெற்றியும் கண்டனர் 2009ல்.
ஆரம்ப காலங்களில் புலிகளுக்கு உதவுவதாக காட்டி இலங்கைக்குள் நுழைந்து கொள்ளலாம் அல்லது இலங்கை அரசியலை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை கருத்தில்கொண்டு அரசியல் காய் நகர்த்தல்களில் ஈடுபட்டனர் இந்த அமெரிக்காவும் இந்தியாவும்.
ஆனால் அதற்கு பிரபாகரன் உடன்படவில்லை என்பதை உணர்ந்து கொண்டு ஆயுதப் போராட்டக் குழுக்களுக்கிடையில் சண்டைகளை மூட்டிவிட்டு பிரபாகரனையே அழிக்கப் பார்த்தார்கள் ஜனநாயக நாட்டுத் தலைவர்கள். அந்த சூழ்ச்சித் திட்டங்களையும் முறியடித்தார்கள் புலிகள்.
புலிகளுக்கு தண்ணி காட்டுவதாக நினைத்து தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டவர் அண்டை நாட்டு பிரதமர் என்பதையும் நாம் இவ்விடத்தில் ஞாபகப்படுத்துகின்றோம்.
இவ்விதம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புலிகளின் செயற்பாடுகளை வெற்றி கொள்ள முடியாத தரப்புக்கள் எப்படியாவது இந்த சதுரங்க ஆட்டத்தில் இருந்து புலிகளையும்,பிரபாகரனையும் ஒதுக்க வேண்டும் என்பதன் விளைவை முள்ளிவாய்க்காலில் கண்டோம்.
உண்மையில் பிரபாகரனை வழிக்குக்கொண்டு வந்து சிறுபதவியைக் கொடுத்து தம்மை இங்கே நிலைப்படுத்தலாம் என்பது அவர்களின் கணக்காய் இருக்க, பிரபாகரன் இவர்களின் கணக்கிற்கு தண்ணி காட்டினார்.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் தம்மை தாமே ஆளும் உரிமை வேண்டும் என்பதில் சற்றும் விலகாதவராய் கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்றார் பிரபாகரன். இதுவே புலிகளை மக்கள் அதிகம் நேசிக்கவும் காரணமாய் அமைந்தது என்பது இன்னொரு உண்மை.
தம்மை பகைப்பவன் அல்லது ஒத்துழைக்காதவன் இந்தக்களத்தில் தேவையற்றவன் ஆகின்றான் என்பதால் சந்திரிக்காவின் ஆட்சியில் பிரதமராய் இருந்த ரணிலை ஜனாதிபதி ஆக்கினால் அமெரிக்க இந்திய ஏகாதிபத்தியங்களின் சொற்படி நடந்து கொள்வார் என்ற கணக்கை போட்டனர் அவர்கள்.
ஆனால் இந்தத் திட்டத்திற்கும் ஆப்பு வைத்தார் பிரபாகரன், 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றார். அதை தமிழ் மக்கள் ஏற்று புறக்கணித்தார்கள். அமெரிக்க, இந்தியாவின் கனவு தகர்ந்தது. புதிதகாக ஆடுகளத்தில் மகிந்தர் புகுந்தார்.
களத்தில் புகுந்த மகிந்தர் தன்னை ஆசியாவின் ஆச்சரியமான தலைவனாக காட்ட நினைத்தார். சிங்கள மக்கள் மத்தியில் நவீன துட்டகைமுனு என்று தன்னை காட்டிக் கொள்ள புலிகளையும் தமிழர்களையும் அடக்கினால் இது சாத்தியம் என்பதை செயற்படுத்த, 2002ல் ரணில் செய்த நரி ஒப்பந்தமும், லக்ஸ்மன் கதிர்காமரின் வெளிநாட்டுக் கொள்கைகளையும் பயன்படுத்தி புலிகளை இலகுவாக வெற்றி கொள்ள வழியமைத்தது.
புலிகளை அழிக்க கங்கணம் கட்டிய மகிந்தருக்கு இந்தியாவும் அமெரிக்காவும் காலில் சலங்கை கட்டிவிட்டது. ஆடி முடி தம்பி, இப்போதைக்கு உன் எல்லாத் திருகுதாளங்களுக்கும் நாங்கள் ஆமாம் போடுகின்றோம் என்பது போல.
அமெரிக்காவின் உதவி, இந்தியாவின் ஆயுதம். அப்பாடா என்று உச்சி குளிர்ந்த மகிந்த மூர்க்கத்தனமான போரை நடத்தினார். யுத்தத்தில் வெற்றி பெற்றார்.
யுத்தத்தில் பெற்ற வெற்றியை தக்கவைக்க வேண்டுமாயின் அமெரிக்காவையும் இந்தியாவையும் சற்று விலக்கி வைத்தாக வேண்டும் என்பது அவரின் அரசியல் ஆலோசகர்களின் ஆலோசனை. அதை ஏற்றார்.
அவர்களுக்கு தண்ணி காட்ட சீனா இந்த ஆட்டத்திற்குள் நுழைந்தால் நானே ஆசியாவின் ராஜா, மந்திரி என்பது நவீன துட்டகைமுனுவின் கனவு.
மீண்டும் குட்டித்தீவில் உள்ளவர்களிடம் தோற்றனர் வல்லரசர்கள். ஆத்திரம் தலைக்கேற மனிதவுரிமை மீறல்களை கையிலெடுத்தார்கள். இதிலும் தமிழர்களை பயன்படுத்தி மன்னிக்கவேண்டும் தமிழ் மக்களின் பிணங்களை கையிலெடுத்து போராடத் தொடங்கினர். என்ன செய்ய கொல்வதற்கு துணையாய் நின்றுவிட்டு கொலைகாரனை தூக்கில் போட, தண்டிக்க.
மூக்கில் விரல் வைத்தனர் தமிழர்கள். அமெரிக்காவும் இந்தியாவும் நமக்கு உறுதுனையாய் நிற்கின்றது என்று. ஆனால் அதுவும் பொய் என்றாகியது.
மகிந்தரும் சீனாவையும் ரஸ்யாவையும் இரண்டு பொக்கட்டுக்களுக்குள்ளும் வைத்துக்கொண்டு சண்டியன் கணக்காய் திமிர்ப்பேச்சு.
இதற்கு ஆப்பு மகிந்தவிடமே உண்டு என்பது தான் மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளர் நிறுத்தம், இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நடந்த ஒன்று. ஆனால் இந்த முறை போட்ட கணக்கு என்னமோ சரியாய் தான் அமைந்தது.
தன்னை வீழ்த்த இனி இன்னொருத்தன் பிறந்தால் தான் முடியும் என்று ஆசியாவின் ஆச்சரியம் பெற்ற மனிதனின் சாம்ராஐ்ஐியம் சரிந்தது. வீட்டுக்கு அனுப்பப்பட்டார். ஹம்பாந்தோட்டை சென்றார்.
ஆனால் அடிவாங்கிய பாம்பு சும்மாய் விடாது என்பது போல கொஞ்ச நாள் தான் ஓய்வெடுத்தார். மீண்டும் சதுரங்க வேட்டைக்கு திரும்பிவிட்டார்.
மகிந்த ராஜபக்ச இம்முறை புலிகளோடு போட்டி போடவில்லை. மைத்திரிபால சிறிசேனவோடும் போட்டி போடவில்லை. இந்தியாவோடும், அமெரிக்காவோடுமே போட்டி போட்டுள்ளார்.
இப்போது நடக்கும் அரசியல் ராஜபக்சாக்கள் எதிர் அமெரிக்க, இந்தியா. ஆடுகளத்தில் வெற்றி யாருக்கு?
அமெரிக்க சென்ற தம்பி பஸில் நாடு திரும்பினார். கைது செய்யப்படுவேன் என்று தெரிந்தும் அவர் திரும்பியிருக்கின்றார். நீ இங்கே வந்தால் கைது செய்யப்படுவாய் என்று சொன்னேன் பஸிலுக்கு என்று மகிந்த சொல்கின்றார்.
இது ஒருபுறமிருக்க, இங்கே இருக்கும் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படுவேன் என்று தெரிந்தும் நாட்டை விட்டு வெளியேறாமல் இருந்திருக்கின்றார்.
மீண்டும் இனவாதம் கருத்துக்கள், தம்பிகள் விசாரணைக்கு அழைப்பு, கைதுகள், கைதுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் எல்லாமே ராஜபக்சாக்களின் ஒழுங்கமைந்த திட்டமிட்ட செயற்பாடுகளினால் நடக்கின்றதா என்று சந்தேகிக்க தோன்றுகின்றது.
சிறுபான்மையினருக்கு நான் எதுவும் கொடுக்கவில்லை. புலிகள் பற்றி மகிந்த தரப்பு பேசுவது சுத்தப்பொய் என்று கூறுவதில் இருந்து புதிய அரசாங்கம் தத்தளித்துக் கொண்டிருப்பது புரிகின்றது.
அரசாங்கம் 19வது திருத்த சட்டம் உட்பட பல முக்கிய விடையங்களை நிறைவேற்றவும் முடியாமல் இருக்கும் போது, மகிந்த கூட்டணிகள் துளிர்விட்டு ஆவேசமாய் எழுந்துள்ளனர்.
இதற்கிடையில் 100 நாட்களை முடித்த புதிய ஜனாதிபதி அடிக்கடி சுகயீனமுற்று மருத்துவரை நாடுவதாக செய்திகள் வெளியாகின்றன.
மகிந்தரோ அதிகாரத்தில் இருக்கும் போது அதிகாரமற்றவர்களை துன்புறுத்தினால் அது நாளை அதிகாரமற்று இருக்கும் போது திருப்பி கிடைக்கும் என்று வேறு சொல்லிவிட்டார்.
மொத்தத்தில் தன்னுடையை இனவாத சிந்தனையை அள்ளிவீசி மொத்தமாக தனக்கு எதிராக திரண்டவர்களுக்கு ஆப்படிப்பதற்கான காலம் ராஜபக்சாக்களுக்கு கனிந்துள்ளதா?
இல்லை அமெரிக்காவும் இந்தியாவும் இவர்களை அடக்க மைத்திரி ரணிலுக்கு எனேர்ஜி குடுக்குமா என்பதை அடுத்தடுத்த வாரமளவில் தெரியவரும்…!
இப்போதைக்கு தமிழர்கள் பார்வையாளர்களாக மட்டும் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியது தான். இதற்குள் அவர்களுக்கு வேலையில்லை. தேவையில்லாமல் மூக்கை நுழைத்து குழப்பாமல் இருந்தாலே போதும்.
அதுவரைக்கும் தமிழர் அரசியல் தளத்தை சீர்திருத்துங்கள் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் புதிய களமாய் மாறப்போகின்றது.
இது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாம்.
எஸ்.பி.தாஸ்
Puvithas4@gmail.com

http://www.tamilwin.com/show-RUmtyERYSUjuzG.html

Geen opmerkingen:

Een reactie posten