இலங்கையின் எதிர்கால அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும்!- செல்வம் எம்.பி.
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 09:42.34 AM GMT ]
நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் “விடுதலை இல்லம்”; பொதுமக்கள் தொடர்பகம் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு பல துன்பங்களை கடந்த காலத்தில் சந்தித்தது.கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு பாலமாக அமைந்தார்கள். விடுதலைப் புலிகள் இதற்கு உரம் சேர்த்தார்கள், அங்கீகரித்தார்கள். அதன் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் சக்தியாக உருவானது.
அந்தவேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை தக்க வைப்பதற்காக தங்களது உயிரை, தங்களது குடும்பங்களை, தங்களது எதிர்கால வாழ்க்கையினை துச்சமென நினைத்தவர்களே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாக, உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான பாரத்தினை, சுமையினை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலையில் சுமந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொண்டுள்ள சூழ்நிலையில், கடந்த அரசாங்கத்துடன் பேசுகின்ற,பேசுமுடித்த,பேசி முறிந்த சந்தர்ப்பங்களும் இருந்தன.
இன அழிப்பு உள்ள வரை. இந்த ஆட்சியில் இருக்கும் வரை ஐ.நா.தீர்மானம் ஒன்றை கொண்டுவரும்போது எங்களை அழித்தவர்கள், தண்டிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பினை ஜனாதிபதி மூலம் எங்கள் மக்கள் வழங்கியிருந்தனர். முன்னாள் ஜனாதிபதி செய்த அட்டுழியங்களுக்கு மக்கள் நல்ல தீர்ப்பினை வழங்கினர்.
புதிய அரசாங்கத்துக்கு எமது ஆதரவினை தெரிவித்துள்ளோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நல்லவராக இருக்கலாம். ஆனால் இனத்துவேசத்தினை கக்குகின்றவர்கள் இன்னும் தென்னிலங்கையில் இருந்துகொண்டுள்ளனர்.
தமிழனத்தினை அழிப்பதற்கும் ஒழிப்பதற்கும் ஓரங்கட்டுவதற்குமாக இன்று தென்னிலங்கையில் சிலர் செயற்பட்டு வருகின்றனர். அற்ப எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குவதற்கே எதிர்க்கின்றனர். முன்னாள் அமைச்சர் தினேஸ் குணவர்த்தனா போன்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விடுதலைப் புலிகளின் வாரிசுகள் என்றே சொல்லுகின்றனர்.இன துவேசத்தினை கக்குகின்றனர்.
தமிழர்களுக்கே இந்த அரசு பல விடயங்களை செய்வதாக கூறுகின்றனர். ஆனால் இந்த அரசாங்கம் எதனையும் தமிழர்களுக்கு செய்யவில்லை. இன்று இராணுவம் அபகரித்த நிலங்களை வைத்துக்கொண்டே இருக்கின்றது.நிலங்களை வழங்குவதாக கூறிக்கொண்டுதான் உள்ளனர்.
ஜனாதிபதியின் சிந்தனை நல்லதாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இனவாதிகள் அனுமதிக்கமாட்டார்கள். இதனை இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேசத்துக்கு உரத்து சொல்லும் அளவுக்கு செயற்பாடுகள் நடைபெற்றுள்ளன.
இந்த அரசாங்கத்தினை ஆதரித்ததன் அடிப்படையில். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சனம் செய்வதற்கு பலர் முளைத்துள்ளனர்.ஒரு சிலரின் விமர்சனங்கள் தமிழ் தேசியத்தினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினையும் பலவீனமடையச் செய்யாது.
தனிப்பட்டவர்களின் கருத்துகளை வைத்துக்கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சிக்கின்றவர்கள் இன்று மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக களம் அமைக்கின்றார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினை வைத்து நாங்கள் விலை பேச நினைத்திருந்தால், தமிழ் மக்களை விலைபேசியிருந்தால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் நாங்கள் இராஜபோக வாழ்க்கை வாழ்ந்திருப்போம்.
நாங்கள் இறந்திருக்க மாட்டோம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் சோரம் போகவில்லை. எவ்வளவோ இன்னல்கள், எவ்வளவோ கோடிக்கணக்கான அழைப்புகள் வந்தது. அமைச்சுகள் எல்லாம் எங்களை தேடிவந்தது.
ஆனால் நாங்கள் இன்றும் எங்கள் தேசியம், மக்களின் விடுதலையினைப் பெறவேண்டும் என்ற அபிலாசைகளுடனேயே தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள அனைத்து மட்ட உறுப்பினர்களும் செயற்பட்டு வருகின்றோம்.
தமிழ் மக்களின் விடுதலை என்பது ஆயுத போராட்டத்துக்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் இந்த அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றினாலும் ஆதரவு வழங்கினாலும் தென்னிலங்கை இனவாதிகள் தமிழ் தேசிய இனத்துக்கு எதனையும் தரமாட்டார்கள்.
மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் தமிழ் தேசிய இனமாகிய நாங்கள் இங்கு எதனையும் பெறமுடியாது எங்களை பிரிந்து சென்று வாழ அனுமதியுங்கள் என்று சர்வதேச சமூகத்திடம் கோரும் பணிகளை நாங்கள் இன்று முன்னெடுத்து வருகின்றோம்.
இன்று பலர் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சனம் செய்கின்றனர். இன்று விமர்சனம் செய்பவர்கள் ஓடி ஒழித்துவிட்டு எங்கேயோ இருந்துவிட்டு வந்து விமர்சனம் செய்கின்றனர். தமிழ் மக்களின் சக்தியாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிரச்சினைகள் உள்ளன. ஆனால் கொள்கையினை விட்டுக் கொடுக்கவில்லை. நாங்கள் கருத்து முரண்பாடுகளை கொண்டுள்ளோம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைத்துச் செல்லவில்லை. ஆனால் எங்கள் சக்தியை தென்னிலங்கைக்கு ஜனாதிபதி தேர்தல் மூலம் கூறியுள்ளோம்.
அதேபோன்று எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனங்கள் அதிகரிக்கப்படும் போது எதிர்காலத்தில் உருவாகும் அரசாங்கத்தினை நிர்ணயிக்கும் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும்.
இனிவரும் காலங்களில் எந்த அரசாங்கமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெறமுடியாது. கடந்த அரசாங்கம் கட்சிகளை விலைக்கு வாங்கி உடைத்துதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்றது.
இனிவரும் அரசாங்கத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த எந்த கட்சியாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெறமுடியாது. அன்று அதனை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருக்கும். அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினை தமிழ் மக்கள் வலுவாக்க வேண்டும்.
இன்று பலபேர் அணி திரள்கின்றனர். முன்னர் வெற்றிலைக்கட்சியை சேர்ந்தவர்கள் குடைபிடித்தனர். இன்று ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் குடைபிடிக்கின்றனர். மக்களின் தேவையினை வைத்துக்கொண்டு மக்களுக்குள் ஊடுருவி வாக்குகளை பிரிக்க முனைகின்றனர். சில தமிழ் கட்சிகளும் மக்களின் வாக்குகளை பிரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தவறுகள் இல்லையென்று நான் கூறவில்லை. அதற்காக அதனை பலவீனப்படுத்தும் அளவிக்கு இருக்ககூடாது. நாங்கள் பதிவினை நோக்கி செல்லவேண்டும் என்ற விமர்சனங்கள் எல்லாம் வருகின்றது. அதற்கான நிலை நிச்சயமாக ஏற்படும். அதற்கு முன்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற அடிப்படையில் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளோம்.
அடுத்தவாரத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். உடனடியாக பதிவு என்பது சாத்தியமற்ற விடயம். ஏனென்றால் முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று உள்ளுராட்சி மன்றம் நீதிமன்றில் வழக்கு உள்ளது. புதிய பதிவுகள் செய்யமுடியாது.
இராணுமும் முப்படைகளும் இன்று அரசாங்கத்துடன் இணைந்து வாழும் தன்மை இருக்கவில்லை. புதிய அரசாங்கத்திடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு சில கோரிக்கைகளை விடுத்தது.
நிலங்களை விடுவித்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல், இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை உடனடியாக நடைபெறவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்த போது அதனை இன்று அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களும் அரசை ஆதரிக்கும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் விடுதலைப் புலிகளுக்கு ஈழத்தினை கொடுக்கின்ற வகையில் இ;நத அரசாங்கம் செயற்படுவதாக கூறி இனவாதத்தினை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
சிங்களத்தின் பெரும்பான்மையான அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கான தீர்வினையோ எந்த சலுகையினையோ வழங்க அனுமதிக்க மாட்டார்கள் என்பது புதிய அரசாங்கம் வந்த பின்னரும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே சர்வதேசத்தின் ஆணையை பெறுவதற்கான வலு எங்களுக்கு கிடைத்துள்ளது.
போராட்டங்களில் சந்தித்த இழப்புக்களின் வலிகளை நாம் இன்றும் மறக்கவில்லை: கே.வி.தவராசா
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 10:11.18 AM GMT ]
ஆயுத வழி மற்றும் அமைதி வழி போராட்டங்களில் பல இழப்புக்களை சந்தித்த நாம் இந்த இழப்புக்களின் வலியை இன்றும் மறக்கவில்லை,அதனால் நாம் அதிகம் பேசவேண்டிய அவசியமில்லை என கொழும்புக்கிளை தமிழரசு கட்சி தலைவர் கே.வி.தவராசா தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சி கொழும்பு கிளை நடாத்திய தந்தை செல்வாவின் நினைவு பேருரை நேற்று பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா முன்னிலையில் தமிழ் அரசு கட்சியின் கொழும்புக்கிளை தலைவர் கே.வி.தவராசா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதி கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க யுத்தம் இல்லை என்பது சமாதானமாகிவிடாது என்னும் தொனிப்பொருளில் தந்தை செல்வாவின் 38 ஆவது நினைவுப் பேருரையாற்றியிருந்தார்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன மற்றும் தூதுவராலயங்களின் தூதுவர்கள் ஏனைய கட்சிகளின் கட்சி உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் கல்வியியலாளர்கள் கட்சியின் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து தலைமையுரை நிகழ்த்திய கே.வி.தவராசா,
இன்று அரசியல் சூழலை நன்கறிந்து கொண்டு காலத்தின் தேவைக்கேற்ப அதனை சரியான பாதையில் கொண்டு சென்று மக்களின் துயர்துடைக்கும் உயர்ந்த பணியை தலைவர் சம்பந்தனும், மாவையும், செய்து கொண்டு வருகின்றார்கள்.
அரசியல் என்பது உணர்வின்படி நோக்கக்கூடியதொன்றல்ல அதனை அறிவின்படி நோக்கவேண்டியதொன்றாகும் எனவும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyERaSUjv6C.html
Geen opmerkingen:
Een reactie posten