தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 28 april 2015

முல்லைத்தீவில் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட வளங்கள் வீணடிப்பு! போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அவதி

அரசியல் அமைப்பு பேரவையில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க ஆளும் கட்சி இணக்கம்!
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 01:25.49 PM GMT ]
அரசியல் அமைப்பு பேரவையில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்க ஆளும் கட்சி இணக்கம் தெரிவித்துள்ளது.
பிரதமருக்கு மேலதிகமாக நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவையில் நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
19ம் திருத்தச் சட்டத்தில் அரசியல் அமைப்பு பேரவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரிக்கை!
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 02:03.17 PM GMT ]
கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் தர்மரெட்னம் சிவராம் மற்றும் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நடேசன் ஆகியோரின் கொலைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என மட்டு. மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் இன்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊடகவியலாளர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதேபோன்று மற்றுமொரு ஊடகவியலாளர் நடேசன் அவர்களும் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்த ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பில் இதுவரையில் பூர்வாங்க விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. இந்த இரு ஊடகவியலாளர்களும் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
புதிய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தினை பாதுகாப்பதாக கூறிக்கொண்டிருந்தாலும் கடந்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.
வடகிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக பலர் இந்த நாட்டினை விட்டு வெளியேறிச் செல்லும் சூழல் ஏற்பட்டது.அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக அதிகளவான ஊடகவியலாளர்கள் வெளியேறிச் சென்றனர்.
அவ்வாறு வெளியேறிச் சென்ற ஊடகவியலாளர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான எந்தவிதமான நடவடிக்கையினையும் புதிய அரசாங்கம் மேற்கொள்ளவில்லையென்பதும் கவலைக்குரியதாகவே உள்ளது.
வெளியேறிச் சென்ற ஊடகவியலாளர்கள் இந்த நாட்டுக்கு திரும்பி வரும் சூழ்நிலையேற்பட வேண்டுமானால் இங்கு ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டது மற்றும் அச்சுறுத்தல் செய்யப்பட்டது தொடர்பில் பூரண விசாரணை நடாத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் புதிய அரசாங்கத்துக்கு அழுத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.
இதேபோன்று ஊடகவியலாளர் சுகிர்தகுமார் திருகோணமலையில் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வைத்து சுட்;டுக்கொல்லப்பட்டார்.
எனவே தமிழ் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் மற்றும் உயர் அச்சுறுத்தல்கள் தொடர்பில் பூரண விசாரணை நடாத்தப்படவேண்டும் என்று ஊடகவியலாளர் த.சிவராம் நினைவு கூரப்படும் இந்த வேளையில் அரசாங்கத்தினை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிநிற்கின்றது.

முல்லைத்தீவில் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட வளங்கள் வீணடிப்பு! போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அவதி
[ செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2015, 02:27.53 PM GMT ]
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்ட 80 வீதமான வளங்கள் வீணடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அடிப்படை வசதிகளுக்காக சமகாலத்திலும் போராடிக் கொண்டிருப்பதாக அம்மாவட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மக்கள் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.
இது குறித்து மக்கள் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்- முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பிரிவினையை வளர்க்கும் எண்ணத்தோடு இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக,  சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அவ்வாறான எண்ணம் இல்லை. இந்நிலையில் போருக்குப் பின்னர் இந்திய வீட்டுத்திட்டம் முதன் முதலாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுக்காக வழங்கப்பட்டன.
ஹிக்கிராபுரம், நீராவிப்பிட்டி கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளில் இவ்வாறு வழங்கப்பட்டன. இந்த வீட்டுத்திட்டம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக என அடையாளப்படுத்தப்பட்டு வந்தபோதும் குறித்த வீட்டுத்திட்டத்தில் பயன் பெற்றுக் கொண்ட பலர் முன்னதாகவே வேறு பகுதிகளில் வீடுகளை வைத்திருக்கும் முஸ்லிம் மக்களே.
இதனை விட பொதுக் கிணறுகள், வீதிகள், மின்சாரம், மலசலகூடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
ஆனால் அவ்வாறு வசதிகளுடன் வழங்கப்பட்ட வீடுகளில் 50 வீதமான வீடுகள் பூட்டப்பட்டும் வீட்டுத்திட்டம் பெற்றுக் கொண்டவரால் விற்கப்பட்டும் உள்ளது.
இதனை மாவட்டச் செயலரிடமோ, அரசாங்க அதிபரிடமோ சுட்டிக்காட்டினால் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை ஆனால் போருக்குள் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு புள்ளித்திட்டம், நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக சமுர்த்தி பெறும் பயணாளிகள் தொடர்பாக மாவட்டத்தில் 5 தடவைகள் மீளாய்வு செய்யப்பட்டது. இதில் மேற்படி இரு முஸ்லிம் கிராமங்களிலும் எவ்விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் மற்றய பகுதிகளில் அதிகளவானவர்கள் விலக்கப்பட்டிருக்கின்றார்கள்.
மேலும் மின்சாரம், வீதி என சகல வசதிகளும் உள்ள அந்தப் பகுதிக்கு இன்றுவரையில் மண்ணெண்ணை மானியம் நிறுத்தப்படாமல் தொடர்ந்தும் விநியோகிக்கப்படுகின்றது. ஆனால் மற்றய பகுதிகளில் மானியமும் இல்லை. மின்சாரமும் இல்லை. என்ற நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே இந்த விடயம் தொடர்பாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலர் ஆகியோர் அக்கறையற்றிருப்பதாகவும் முஸ்லிம் மக்களுக்கு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் பயன்பெறுபவர்களுக்கு வழங்குங்கள். எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyERcSUjx2G.html

Geen opmerkingen:

Een reactie posten