[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 12:20.02 PM GMT ]
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாராளுமன்றத்துக்கு வெளியிலும் உள்ளேயும் நடத்தப்பட்ட போராட்டங்கள் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
இந்தளவுக்கும் சம்பிக்க ரணவக்க, 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை போட்டியிட வைப்பதிலும், போட்டியில் வெற்றி பெற வைத்ததிலும் முக்கிய பங்காற்றியவர்.
அதுபோலவே, அவரைப் பதவியிலிருந்து இறக்கி, மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாகப் பதவியில் அமர்த்துவதிலும் சம்பிக்க ரணவக்கவின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது.
ஆனால், இப்போது அவர் தான், 'மஹிந்த ராஜபக்ச ஒன்றும் கடவுள் இல்லை' என்று கூறியிருக்கிறார்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைக்கு மஹிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு தெரிவிக்கப்பட்ட தேவையற்ற எதிர்ப்புகள் குறித்தே அவரை இத்தகைய கருத்தை வெளியிடத் தோன்றியிருக்கிறது.
இந்தளவுக்கும், சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி தேர்தல் காலத்தில், மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக எந்த விசாரணைகளை நடத்தவும் அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார்.
இருந்தாலும், குற்றச்சாட்டு ஒன்று வரும்போது, அதற்கு முகம் கொடுப்பதற்குப் பதிலாக, மஹிந்த ராஜபக்ச குறுக்குவழியில் அதனைத் தவிர்க்க முனைவது தான், சம்பிக்க ரணவக்கவை ஆத்திரம் கொள்ள வைத்திருக்கிறது.
சட்டத்தின் முன்பாக அனைவரும் சமமானவர்கள். குற்றச்சாட்டு ஒன்றிலிருந்து விலக்குரிமை பெறுவதற்கு மஹிந்த ராஜபக்ச ஒன்றும் ஜனாதிபதியல்ல. முன்னாள் ஜனாதிபதி தான்.
அவருக்கு மட்டும் எந்த விதிவிலக்கும் இருக்க முடியாது என்பது சம்பிக்க ரணவக்க மட்டுமன்றி, அரச தரப்பிலுள்ள எல்லோரதும் கருத்தாக வெளிப்பட்டுள்ளது.
நடுநிலையாக உள்ள தரப்பினரும் கூட மஹிந்த ராஜபக்ச குற்றச்சாட்டுத் தொடர்பாக விசாரணைக்கு முகம் கொடுத்து, அது பொய்யானது என்று நிரூபிக்க முயற்சிக்கலாம் என்று தான் எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், எதிர்க்கட்சியிலுள்ள, மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால், இந்த விசாரணை அழைப்பை பொறுத்துக் கொள்ள முடியாமல் போனது.
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராகவோ, கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராகவோ, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் நாட் டில் இரத்த ஆறு ஓடும்' என்று எச்சரித்தார் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே.
மற்றொரு மூத்த அமைச்சரான பந்துல குணவர்தன, 'போரை முடித்து வைத்த முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக எப்படி அழைப்பாணை அனுப்ப முடியும், அவரை எவ்வாறு விசாரிக்க முடியும்'? என்று கேள்வி எழுப்பினார்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது, ஆட்சியிலிருக்கும் போது எதைச் செய்திருந்தாலும், அதற்காக ராஜபக்ச குடும்பத்தினர் தண்டிக்கப்படவோ விசாரிக்கப்படவோ கூடாது என்ற உறுதியில் அவர்கள் இருப்பது புலப்படுகிறது.
போரை முடிவுக்குக் கொண்டு வந்த விவகாரம் வேறு, போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர் என்பதற்காக அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தையும், நாட்டின் சட்டங்கள் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அயோக்கியத்தனமான அரசியல் தீர்மானம்.
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒரு வாக்குமூலம் பெறுவதற்கே எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்களில் இறங்கிய அவரது ஆதரவாளர்கள், சட்ட ரீதியாக அவர் குற்றவாளியாக காணப்பட்டு, தண்டிக்கப்படும் நிலை ஒன்று ஏற்பட்டால், எவ்வாறு செயற்படுவார்கள் என்று யோசித்துப் பார்க்கவே முடியவில்லை.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், பல தவறுகள் நடந்திருக்கின்றன. இதனை அவரே, ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் ஒத்துக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டிருந்தார்.
அவ்வாறிருக்க, மஹிந்த ராஜபக்சவோ அல்லது அவரது ஆதரவாளர்களோ குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் தயங்குவது மட்டும் ஏன் என்று புரியவில்லை.
குற்றம் செய்யாதவர்கள் விசாரணைக்கு முகம் கொடுத்து, தம்மை நிரபராதிகளாக நிரூபிக்க முடியும். அதற்கு மஹிந்த ராஜபக்ச தரப்பு மட்டும் ஏன் தயங்குகிறது என்பது தான் கேள்வியாக எழுப்பப்படுகிறது.
நாட்டுக்காக மின்சார நாற்காலியில் கூட அமரத் தயார் என்றவர், இந்த விசாரணைக்கு முகம் கொடுக்க மறுப்பது, அவரதும் அவரது தரப்பினரதும் இன்னொரு முகத்தை வெளிக்காட்டுகிறது.
மஹிந்த ராஜபக்சவும் சரி, கோத்தபாய ராஜபக்சவும் சரி, தாம் ஆட்சியில் இருந்த போது எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்று அறிக்கைகள், பேட்டிகளின் மூலம் திரும்பத் திரும்ப கூறிவருகின்றனர்.
வெறும் அறிக்கைகளின் ஊடாக மட்டும் அவர்கள் நாட்டு மக்களை நம்பவைக்க முடியாது. ஏனென்றால், அவர்களின் கடந்த ஆட்சி அந்தளவுக்கு மோசமானதாக அமைந்திருந்தது. அதனை நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் நேரடியாகவே அனுபவித்தவர்கள்.
அவர்கள் மத்தியில், தாம் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க வேண்டுமானால், இவர்கள் நிச்சயம் அக்கினிப் பிரவேசம் செய்தேயாக வேண்டும். அதாவது விசாரணைகளில் நிரபராதியாக நிரூபித்து வெளிவர வேண்டும்.
அதனைச் செய்யாமல், குறுக்குவழியில் செல்லவே மஹிந்த ராஜபக்ச தரப்பினர் முனைகின்றனர்.
பாராளுமன்றத்திலும், வெளியிலும், போராட்டங்களை நடத்தி அழுத்தங்களைக் கொடுத்ததும், லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு பணிப்பாளருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரைப் பதவி நீக்க கோருவதும், ஆட்சி அதிகாரத்தை முடக்கி வைப்பதுவும், விசாரணையில் இருந்து தப்பிப்பதற்கான குறுக்குவழி மூலோபாயங்களாகும்.
ஆனால், அது நெடுநாளைக்கு மஹிந்த ராஜபக்ச தரப்பினரைக் காப்பாற்றப் போவதில்லை.
இந்தக் கட்டத்தில் இன்னொரு கேள்வியும் எழுந்திருக்கிறது.
போரின் போது நடந்த மீறல்கள் தொடர்பாக நம்பகமான உள்நாட்டு விசாரணை நடத்துவதாக உறுதியளித்திருக்கிறது அரசாங்கம்.
போருக்குத் தலைமை தாங்கியவர்- வழிநடத்தியவர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்சவும், கோத்தபாய ராஜபக்சவும், இந்த விசாரணையில் தவிர்க்கப்பட முடியாதவர்களாக இருப்பர்.
அவ்வாறானதொரு நிலையில், அவர்களை விசாரிப்பது எந்தளவுக்கு குதிரைக் கொம்பான விடயமாக இருக்கப் போகிறது என்பது இப்போதே சர்வதேச சமூகத்துக்குப் புரிந்திருக்கும்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழுவைப் போன்று போர்க்குற்ற விசாரணைக் குழு அவரது வீட்டுக்கே சென்று விசாரணை நடத்த முடியாது.
அது நம்பகமானதாகவோ நடுநிலையானதாகவோ, வெளிப்படைத் தன்மையானதாகவோ இருக்காது.
அப்போதும் இப்படியொரு நிலை ஏற்பட்டால், சர்வதேச சமூகம் அந்த விசாரணையை ஏற்றுக் கொள்ளுமா என்ற கேள்வியும் இருக்கிறது.
விசாரணைக்கே இந்த நிலை என்றால், மஹிந்த ராஜபக்ச அல்லது கோத்தாபய ராஜபக்ச மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் நிலை ஒன்று ஏற்பட்டால், தண்டனையை செயற்படுத்தும் சூழல் ஒன்று இருக்குமா என்றும் தெரியவில்லை.
இத்தகைய கேள்விகள் தமிழ்மக்களிடம் மட்டும் இருந்து எழவில்லை. சர்வதேச சமூகத்திடமும் இதே சந்தேகம் எழுந்திருக்கும்.
ராஜபக்ச குடும்பத்தினரை, குற்றச்சாட்டுகள், விசாரணைகள், தண்டனைகளுக்கு அப்பாற்பட்டவர்களாகப் பார்க்கின்ற, போற்றுகின்ற நிலை மாற்றப்படாது போனால், மீண்டும் இலங்கை சர்வதேச அழுத்தங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் நிலையே ஏற்படும்.
மஹிந்த ராஜபக்சவுக்கோ, கோத்தபாய ராஜபக்சவுக்கோ எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கையை எவராலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இரத்த ஆறு என்பது மிகமோசமாக வன்முறையைத் தூண்டும் செயல். யாருடைய இரத்தம் ஓடப் போகிறது? அவ்வாறு செய்யப் போகிறவர்கள் யார்? இந்தக் கேள்விகள் எல்லாம், கடந்த கால ஆட்சியின் கொடூரத்தையே நினைவுபடுத்துகின்றன.
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக சட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்கு, அவர் நியாயமான ஒத்துழைப்பைக் கொடுப்பதே, அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களை தொடர்ந்தும் அவரது பக்கம் நிற்க உதவும்.
மாறாக, குற்றச்சாட்டுகளைக் கண்டு ஓடுபவராகவோ, ஒதுங்குபவராகவோ இருந்தால், இன்னும் இன்னும் சந்தேகங்கள் தான் தலைதூக்கும். அது அவரது இரண்டாவது அரசியல் பிரவேசத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏனென்றால் மஹிந்த ராஜபக்சவின் முன்னைய ஆட்சிக்காலத்தை மக்கள் இன்னமும் மறக்கவில்லை.
சத்ரியன்
http://www.tamilwin.com/show-RUmtyERaSUjv7G.html
தமிழர்களின் எதிர்பார்ப்பு இலவுகாத்த கிளியின் கதையாகிவிடக் கூடாது!
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஏப்ரல் 2015, 12:09.47 PM GMT ]
கடந்த ஒருவார காலமாகவே அரசியலில் அடுத்து என்ன நடக்குமென்ற கேள்வி மக்களை வெகுவாகக் குடைந்து கொண்டிருந்தது.
ஒருபுறம் 19வது திருத்தச் சட்டத்திற்கு என்ன நடக்குமென்ற கேள்வியும் மறுபுறம் மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைத்த விவகாரமும் நாட்டில் மக்கள் மத்தியில் அடுத்து என்ன நடக்க போகின்றது என்ற ஒருவித அங்கலாய்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கடந்த 20ம் திகதி மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைப்பு விடுத்தமையைக் கண்டித்து கடும் எதிர்ப்பு நடிவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனால் சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. அதுமாத்திரமன்றி சில கோரிக்கைகளை முன்வைத்து அதனை நிறைவேற்றும் வரை தாம் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கூறி இரவிரவாகப் பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தனர்.
பாராளுமன்ற வரலாற்றிலேயே சபை நடுவே சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் விடிய விடிய எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டமை இதுவே முதற்தடவை. பாராளுமன்ற உறுப்பினர்களின் இத்தகைய நடவடிக்கையை மக்கள் மிகுந்த வெறுப்புடனேயே பார்த்தனர்.
இந்நிலையில் 19ஆவது திருத்தச்சட்டம் எப்படியாவது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு.
அந்த வகையில் பாராளுமன்ற அமர்வும், சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது திருத்தம் மீதான விவாதமும் நாளை 27ம் திகதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே 19வது திருத்தச்சட்டம் கடந்த திங்கட்கிழமை 20ம் திகதி விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிரும் புதிருமான நடவடிக்கைகளால் அது ஒத்தி வைக்கப்பட்டது.
நாட்டினதும் மக்களினதும் நலன்கருதி 19வது திருத்தச்சட்ட மூலத்தை நிறைவேற்ற வேண்டுமென மதத்தலைவர்கள் உட்படப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த 19வது திருத்தச்சட்டம் என்னவெனில்,
தகவல் அறியும் உரிமையை மக்களுக்கு வழங்குவது,
ஜனாதிபதியின் அமைச்சரவை சம்பந்தப்பட்ட அதிகாரங்களைப் பிரதமருக்கு வழங்குவது,
ஜனாதிபதியின் செயல்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைக் கோப்பிடுவது,
ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது,
ஆணைக்குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் நீதியரசர்களை நியமிக்கும் போது பலதரப்பு பிரதிநிதித்துவத்தைக் கொண்ட பாராளுமன்ற சபையின் தீர்மானங்களால் ஜனாதிபதி கட்டுப்படுவது
ஜனாதிபதியின் அமைச்சரவை சம்பந்தப்பட்ட அதிகாரங்களைப் பிரதமருக்கு வழங்குவது,
ஜனாதிபதியின் செயல்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குகளைக் கோப்பிடுவது,
ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவது,
ஆணைக்குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் நீதியரசர்களை நியமிக்கும் போது பலதரப்பு பிரதிநிதித்துவத்தைக் கொண்ட பாராளுமன்ற சபையின் தீர்மானங்களால் ஜனாதிபதி கட்டுப்படுவது
போன்ற நல்லாட்சியின் பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில் ஒருவரிடம் அதிகாரம் செறிந்திருக்காமல் அதனை மட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
அதேவேளை, இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது.
அந்தவகையில் 19வது திருத்த சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொண்டு இதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஆதரவு வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நூறுநாள் வேலைத் திட்டம் நிறைவடைந்ததை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு வியாழனன்று ஆற்றிய உரையில் அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது எமக்கு கிடைத்த வரலாற்று ரீதியான ஒரு சந்தர்ப்பம். எனவே இதற்கு ஆதரவு வழங்கினால் வரலாற்று ரீதியான கௌரவத்தை அது உங்களுக்கு வழங்கும்" என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்த பங்காளியாகுங்கள் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஒருவராக அவரது உரை அமைந்திருந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர்.
தனது உரையில், 100 நாள் வேலைத் திட்டத்தில் பொருளாதாரம், அரசியல், அபிவிருத்தி, சர்வதேச தொடர்புகள் உள்ளிட்ட பல விடயங்களில் கால் பதித்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஜனநாயக, உரிமையின் பரிணாமத்தையும் புரட்சியையும் உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியில் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் சுதந்திரமாக செயற்பட்டனர். சட்டமா அதிபருக்கு கூட தனது கடமையைச் செய்ய சுதந்திரம் இருக்கவில்லை.
நாம் சட்டத்தின் ஆட்சியை பலப்படுத்தியுள்ளோம். சுதந்திரத்துக்கும் ஜனநாயகத்துக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்தது. அத்துடன் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் நாம் உரிய கரிசனை கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் மீதான விமர்சனங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதாவது, நான் பலமான தலைவரல்ல என சிலர் கூறுகின்றனர். அதற்குக் காரணம், இந்த 100 நாட்களில் நான் எனது நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தவில்லை. இந்த அதிகாரங்களை நீக்குவதற்கே நான் தெரிவு செய்யப்பட்டேன் என்றும் ஜனாதிபதி மிகுந்த தன்னடக்கத்துடன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தேசிய ஒற்றுமை, நல்லிணக்கத்தின் அவசியம் தொடர்பிலும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, சிலர் இணையதளங்கள் ஊடாக பொய்யான தகவல்களை பரப்பி ஊடக சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துவதுவதாகவும் தனது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இராணுவத்தினரால் வடபகுதியில் கைப்பற்றப்பட்ட தனியார் காணிகளை மீண்டும் புலிகளுக்கு வழங்குவதாக விஷமத்தனமாக முடுக்கி விடப்பட்டிருக்கும் பிரசாரங்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யுத்தம் நடைபெற்றபோது படையினர் வடக்கில் மட்டுமன்றி கொழும்பிலும் தனியார் காணிகளை பயன்படுத்தினர். அவற்றை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்குவது தவறாகுமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறெனினும், இந்த 100 நாள் திட்டத்தில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள் சாத்தியமான அளவு நிறைவேற்றப்படவில்லை என்பதும் பெரும்பான்மை சிங்கள மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகிவிட நேரிடுமென்ற அச்சம் காரணமாக எதனையும் முழுமையாக நிறைவேற்ற அரசாங்கம் தயக்கம் காட்டுவதாகவும் தமிழ் பேசும் மக்கள் விசனம் கொண்டுள்ளனர்.
அதேவேளை, புதிய அரசாங்கத்தின் தர்மசங்கடமான நிலை மையை கருத்திற்கொண்டு மிகுந்த விட்டுக்கொடுப்புகளுடன் நல்லாட்சிக்கான ஒத்துழைப்பை தமிழ் மக்கள் வழங்கி வருகின்றனர்.
இதனை ஜனாதிபதி, பிரதமர் உட்பட புதிய அரசின் முக்கியஸ்தர்கள் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
புதிய அரசாங்கம் தன்னை சகல வழிகளிலும் ஸ்திரப்படுத்திக் கொண்டு தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரத் தீர்வை பெற்று கொடுக்கும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் தமிழ் மக்கள் காணப்படுகின்றனர்.
தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்பு இலவுகாத்த கிளியின் கதையாக மாறிவிடக் கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும் என்பதை நினைவுப்படுத்த விரும்புகின்றோம்.
http://www.tamilwin.com/show-RUmtyERaSUjv7E.html
Geen opmerkingen:
Een reactie posten