இலங்கையின் அரசியல் களம் தற்போது புதிய பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் அது தன்னுடைய சிங்கள பௌத்த பேரினவாத தன்மையை முன்னிறுத்தியே நகர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆம்! தேர்தலில் தோல்வியடைந்த மகிந்த ராஜபக்ஷ தன்னை தோற்கடித்தது தமிழர்கள் என்று அம்பாந்தோட்டையில் வைத்து கண்கலங்கி மனம்வருந்தி மக்கள் முன் புலம்பியது ஒன்றும் சாதாரண விடயமன்று.
அது அரசியல் பின்புலம். அந்த பின்புலத்தை புரிந்து கொள்ள வேண்டுமாயின் இலங்கையில் பௌத்தம் எவ்வாறு இத்துனை தூரம் வளர்ந்தது அது எவ்வாறு அரசு ஆணையைப் பெற்றது, பௌத்தத்தை எப்படி மதவாதமாக இனவாதமாக பயன்படுத்த தொடங்கினார்கள் என்பதனை வரலாற்றுப் பின்புலத்தோடு பார்க்க வேண்டும்.
இலங்கையில் தேவநம்பியதீஸன் காலத்தில் மகிந்த தேரரால் பௌத்தம் மிகிந்தலைக் குன்றில் வைத்து போதிக்கப்பட்டது. அன்று போதிக்கப்பட்ட பௌத்தம் இன்று நின்று பல உயிர்களை தின்றுகொண்டிருக்கின்றது.
தேவநம்பிய தீஸனின் அரண்மனையில் அன்று மகிந்த தேரர் ஆற்றிய உரையானது பல தசாப்த காலங்களாக இலங்கை மண்ணில் அரசாணையைப் பெறும் சாதனமாக பயன்படுத்திக்கொள்ளும் நிலையினை அவதானித்துக்கொள்ளலாம்.
கலிங்க தேசத்தின் அசோக சக்கரவர்த்தியின் புதல்வனாக சொல்லப்படும் மகிந்த தேரர் இலங்கைக்கு பௌத்தம் பரப்ப வந்ததோடு பிக்குனி சங்கமித்தாவும் வெள்ளரசு மரத்தோடு இலங்கை நோக்கி வந்தார், பௌத்தம் பரவ சேவையாற்றினார்.
இது பௌத்தத்தின் வருகைக்கான சிறு விளக்கம் என்றால் இலங்கை பௌத்த புனித பூமி என்று மஹாநாம தேரர் என்னும் பிக்கு செய்தவினை என்று சொன்னால் மிகையாகாது.
மஹாவிகாரையின் தேரரான மஹாநாம தேரர் இலங்கை வரலாற்றைக்கூறும் மகாவம்சத்தை படைத்தார். அடிப்படையில் பாளி மொழியில் எழுதப்பட்ட இந்நூல் பௌத்தத்தை முதன்மைப்படுத்தி பேசுகின்றது.
பௌத்தமே இலங்கையை ஆள வேண்டும் என்றும் திராவிடத் தமிழன் அழிக்கப்படவேண்டும் என்றும் மகாவம்சம் கூறுகின்றதாயின் அதனைப் பின்பற்றும் ஆட்சியாளர்கள், தன் குடிமக்களை கருவறுப்பதற்கே பௌத்தத்தை கையிலெடுத்து கொள்கையாக்கி பயன்படுத்துகின்றார்கள்.
மகாவம்சம் இலங்கை வரலாற்றை கூறும் நூல் என்று கூறுவதை விட பௌத்தத்தை போதிக்கின்றது, மனித இனத்தை அழிக்க வழி சொல்லுகின்ற நூல் என்று சொன்னால் அது மிகையானதல்ல. துட்டகைமுனுவை முதன்மைப்படுத்தியிருக்கும் மகாவம்சம் துட்டகைமுனுவின் தாய் கண்ட கனவை அழகாக கூறுகின்றது.
வடக்கே இருக்கும் எல்லாள மன்னனின் படைத்தளபதிகளில் ஒருவனது தலை அறுக்கப்பட்டு ரத்தத்தினை குடிக்க வேண்டும் என்று கூறும் போதும் 1000 பிக்குகளுக்கு அனுராதபுரத்தில் வைத்து தானம் வழங்க வேண்டும் என்றும் கனவை விபரிக்கும் இந்நூல் பௌத்தம், துட்டகைமுனு பற்றியும் சிறப்பாக கூறுகின்றது.
உறங்கிக்கொண்டிருந்த சிறுவனான துட்டகைமுனு கால் கைகளை நீட்டி நிம்மதியாக உறங்க வேண்டுமாயின் தலைக்கு மேலே உள்ள தமிழர்கள் கொல்லப்பட வேண்டும், எமது தேசம்(சிங்கள தேசம்) பெருக வேண்டும் என்று கூறுவதனூடாக கடும் இனவாத தீயோடு வரலாற்றை எழுதியிருக்கின்றார் மஹாநாமதேரர்..
இதுவே இன்று வரை நிலைத்திருந்து இலங்கை என்னும் நாடு படுகுழிக்குள் சென்று கொண்டிருக்க காரணமாகின்றது.
தோல்வியை தழுவி சொந்த ஊர் நோக்கி சென்ற முன்னாள் அதிபர் மகிந்தர் கை நழுவிப்போன தனது ஆட்சி அதிகாரங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் மஹாநாமதேரர் விதைத்த இன, மதவாத தீயை கையில் எடுத்தால் வெற்றிக் கனியைப் பறிக்கலாம் என்று துணிந்து விட்டார்.
இப்போது மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டு வரும் மகிந்தர் இன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் அனுதாப அலைகளை ஏற்படுத்த உலாவருகின்றார்.
இவர் ஒருபுறமிருக்க அவரின் தம்பியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் இருந்த கோத்தபாய ராஜபக்ஷ இப்போது அரசியல் களம் புகுந்து கொள்ளப்போவதாக பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அண்ணனின் ஆட்சியில் ஒரு அரச அதிகாரியாக இருந்து கொண்டு அரசியல் பேசிய ஒரே அதிகாரி கோத்தபாய தான். தம்பியே அண்ணன் அண்ணனே தம்பி.
மகிந்தர் ஜனாதிபதி என்றால் கோத்தபாய பிரதி ஜனாதிபதியாக இருந்தார். ஆனால் உத்தியோகபற்றற்ற முறையில். தம்பியைக் கேட்காமல் எந்த முடிவையும் மகிந்தர் எடுத்ததும் இல்லை காய் நகர்த்தியதும் இல்லை. அப்படியொரு பாசப்பிணைப்பு இருவருக்கும். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது மகிந்தர் கோத்தபாய இருவருக்கும் நன்றாக பொருந்தும். ஆனால் இறுதியாக 2015 தை 8ம் திகதி தம்பியின் நரித்தந்திரங்கள் எல்லாம் சிதைந்து போக ஆட்சியை இழந்தார் மகிந்தர். இதை மகிந்தர் மனம் உடைந்து நான் தோற்றுப்போக நீதான் காரணம் என்று சொன்னதும் நினைவிருக்கலாம். இப்படி அண்ணன் தம்பி பாசப்பினைப்பு ஒன்றும் சாதாரணமானதல்ல.
அண்ணன் அரசியல் ஓடம் செலுத்த ஓடத்திற்கு தடையாக வருபவர்களை வெட்டி வேட்டையாடி தடைநீக்கியவர்தான் இந்த கோத்தா. வெள்ளை வான், கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, ஆவா குரூப், க்ரீஸ் பூதம், அவுஸ்ரேலியாவிற்கு தமிழ் இளைஞர்களை அனுப்புவதாக பணம் பெற்றுக்கொண்டது, தமிழ் முஸ்லிம் வர்த்தகர்களை அடக்கி கப்பம் பெற்றது என்று தமிழ் சினிமா பாணியில் ஒரு வகை கலாச்சாரத்தை ஏற்படுத்திய அற்புத வில்லன் இந்த கோத்தா.
இலங்கை அரசியலில் கோத்தாவிற்கு நிகர் கோத்தா தான். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை.
தற்கால அரசியல் நிலவரப்படி நோக்கினால் நமக்கு நினைவில் வருவதெல்லாம் தமிழீழத் தேசிய தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைத் துளிகள் தான். நமது போராட்ட வடிவம் மாறலாம். ஆனால் போராட்டம் ஓயப்போவதில்லை என்பது.
அதை நன்றாக உள்வாங்கிய மகிந்தரும் கோத்தாவும் தங்கள் போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். அண்ணன் பிரதமர் ஆகவேண்டும் இல்லையேல் தனது அரசியல் பிரவேசம் அண்ணனுக்கு அரசியல் உயிர்ப்பூட்ட வேண்டும் என்று தொடங்கியிருக்கின்றார் கோத்தா.
எதுவாயினும் 19வது திருத்தச்சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமருக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டால் அது இலங்கையின் புதிய அரசியல் களத்தை திறக்கும். இந்த நிலையிலேயே தான் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதாக கூறிக்கொண்டிருக்கின்றார் மகிந்தர்.
பிரதமர் ஆகும் கனவு இப்போது மகிந்தருக்கு! அரசியலில் இறங்கி அண்ணனுக்கு பக்கபலமாய் துதிபாட கோத்தா! இந்த கனவை நிறைவேற்ற வேண்டுமாயின் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதம் கிழறப்படவேண்டும்.உசுப்பேத்தப்படவேண்டும்.
தனக்கு கிடைத்திருக்கும் 58லட்சம் வாக்குகளை நினைத்து புளகாங்கிதம் கொள்ளும் மகிந்தர் அதனை இன்னமும் பெருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டித்திரிகின்றார். அதற்கு தம்பி வலுச்சேர்க்க தொடங்கியிருக்கின்றார். இந்த கூட்டணிக்கு ஆதரவாக பக்கபலமாக இராணுவத்தரப்பிலும் பலர் உள்ளனர்.
எதுவாயினும் அரசாங்கம் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்று அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கும் நிலையிலும் மகிந்தருக்கான ஆதரவு அலைகள் பெருகிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
மீண்டுமோர் மகிந்த கோத்தா இராஐ்ஐியம் மலருமாயின் 2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்த காலத்தில் இராணுவத்தினர் சொன்ன வார்த்தைகள் நமக்கு ஞாபகத்திற்கு வந்து கொள்கின்றன. எங்களுக்கு கைகள் தான் கட்டப்பட்டிருக்கின்ற. கண்கள் கட்டப்படவில்லை. இந்த வார்த்தைகள் இப்போது ஞாபகத்தில் வரும் பொழுது அரசியல் களம் மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அரசியல் ஆடுகளம் சூடான பாதையில் அடுத்தடுத்த வாரங்களில் பயணிக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்.10 ஆண்டுகால அண்ணன் தம்பி ஆட்சி மீண்டும் மலருமா? என்று.
எஸ்.பி.தாஸ்
Puvithas4@Gmail.com
Puvithas4@Gmail.com
http://www.tamilwin.com/show-RUmtyESZSUjozG.html
Geen opmerkingen:
Een reactie posten